முரளிதரன் என்னும் சிங்களத் தமிழன்

Posted: Friday, July 15, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
இலங்கைக்கு எதிராக செயல்படுவதா?- இங்கிலாந்து, ஆஸி.யில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு முரளிதரன் கண்டனம்! --> http://thatstamil.oneindia.in/news/2011/07/15/muralitharan-warns-oz-not-boycott-sl-series-aid0091.html


முரளிதரன் இப்படித்தான் பேச முடியும். மாற்றிப் பேசினால் தான் அது செய்தி.

முரளிதரன் ஈழத்தமிழன் கிடையாது. மலையகத் தமிழன். அதாவது இந்திய வம்சாவழித் தமிழன். இன்னும் சொல்லப் போனால் இந்தியத் தமிழன் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் முரளிதரனிடம் இந்திய குடியுரிமையும் உண்டு.

இலங்கையை பொறுத்தவரை தமிழர்களிடையே மூன்று பெரும் பிரிவுகள் நிலவுகிறது. ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள். இவர்களிடையே ஒற்றுமை கிடையாது. குறிப்பாக மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எப்போதும் நல்லுறவு இருந்தது கிடையாது.

ஈழப் போராட்டத்திற்கு உள்ள நியாயங்கள் அளவுக்கு மலையகத் தமிழர்களின் குடியுரிமை போராட்டத்திற்கும், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கும் உண்டு. அதுவும் ஒரு கண்ணீர் கதைதான். 1988 வரை அவர்களை இலங்கை குடி மக்களாகவே அந்த நாடு அங்கீகரிக்கவில்லை. உண்மையில் 6 இலட்சம் மலையகத் தமிழர்களை இந்தியா திரும்ப அழைத்துக் கொள்வதாக சாஸ்திரி-பண்டாரநாயகா இடையே ஒரு ஒப்ப்ந்தம் கூட கையெழுத்தானது. பின்னர் அது கைவிடப்பட்டு ஜெயவர்த்தனே காலத்தில் 1988-ல் தான் அவர்களுக்கு இலங்கை குடியுரிமை அளிக்கப்பட்டது.

இப்படி அவர்கள் தங்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதில் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் ஈழப் பிரச்னைகளைப் பற்றி அவர்கள் அக்கறை காட்டியதில்லை.
அவர்களை இலங்கைத் தமிழர்களாக ஈழத் தமிழர்கள் கருதியதுமில்லை. குடியேறிகள் என மட்டம் தட்டி பேசுவார்கள். ஈழப் போராட்டத்தில் ஏதேனும் பதட்டமான சூழல் என்றால் அதில் பங்குபெறாத மலைகத் தமிழர்கள் தான் முதலில் தாக்கப்படுவார்கள். இதனால் இவர்களிடயே ஒரு ஒட்டுதல் கிடையாது.

கண்டியில் அந்த மாதிரி ஒரு சமூகத்தில் பிறந்து வளர்ந்து, சிங்களவர்களால் போஷிக்கப்பட்டு, அரசின் சலுகைகளை பயன்படுத்திக் கொண்டு தன் முதலீடுகளை பெருக்கிக்கொண்ட முரளிதரனிடம் இருந்து வேறு என்ன மாதிரி நிலைப்பாட்டை எதிர்பார்க்க முடியும்?

இதில் ஆச்சரியமில்லை.
மேலும்...

பழைய பாடல் X புதிய பாடல்

Posted: Thursday, July 14, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments


i-love-music.jpg


பழைய பாடல் இனிதா, புதிய பாடல் இனிதா என்பது மாதிரியான ஒரு தலைப்பில் இன்று இரு கிளைமண்டுகள் சீரியஸாக விவாதித்துக்கொண்டு இருந்தனர். அலுவலகத்தில் அரசியல் பேசுவதில்லை, எந்த விவாதத்திலும் கலந்து கொள்வதில்லை, எதிலும் அபிப்ராயம் தெரிவிப்பதில்லை என்பதை சிரமப்பட்டு கடைபிடித்து வருகிறேன். அதனால் கண்டுகொள்ளவில்லை.

பழைய பாடலை ஏன் இவ்வளவு சிலாக்கிக்கிறோம்?

சில புதிய பாடல்களும் நன்றாகத் தானே இருக்கின்றன?

இப்படி பல கேள்விகள் எழுவதுண்டு.

உண்மையில் பழைய பாடல், புதிய பாடல் என்று ஒரு வித்தியாசமே இல்லை. இருப்பதெல்லாம் நல்ல பாடல்கள், மோசமான பாடல்கள் என்னும் இரு பிரிவுக்குள் அடங்கிவிடக் கூடியவை. அதற்கு கால பேத வர்த்தமானம் கிடையாது.

பழைய பாடல்களின் காலம் என்று நாம் போற்றும் 50-களில் இருந்து 80 வரையிலான காலகட்டத்திலும் மோசமான பாடல்கள் எண்ணிலடங்காமல் போடப்பட்டன. இன்றைய ’ஒமகஸீயா’ போன்ற அர்த்தமற்ற ஒலிக் குறிப்புகள் கொண்ட பாடல் வரிகள் ஐம்பதுகளிலேயே உண்டு. மந்திரிகுமாரியின் எனக்கு பிடித்த ‘மந்தாரைச் செடி ஓரம்’ பாடலில் அப்படிப்பட்ட ஓசைகள் பாடல் நெடுக தொடர்ந்து வரும். சிவாஜியின் பிரபலமான ‘திண்ணைப் பேச்சு வீரரிடம்..’ பாடலின் துள்ளலுக்கு டெம்போ ஏற்றுவதே அந்த ‘டகுடி டகுடி’ ஒலி எழுப்பல் தான்.

அன்றும் அதற்கு முந்தைய காலகட்ட பாடல்களையே பாராட்டிப் பேசி சமகால இசையை குறைகூறிய பெரிசுகள் நிச்சயம் இருந்திருப்பார்கள்.

அப்படியானால் அடிப்படையில் எதுதான் வித்தியாசம்?

எனக்குத் தோன்றுவது ‘ஜீவன்’ தான்.

பாடல் ஹிட் ஆவதை மட்டும் கொண்டு அதை சிறந்த பாடலாக வகைப்படுத்த முடியாது. இரண்டு நாட்களாக கோ படத்தில் சில பாடல்களை திரும்ப திரும்ப கேட்டு வந்தேன். முணுமுணுக்கவும் செய்துகொண்டிருந்தேன். ஆனால் இன்று அது போரடிக்கிறது. மீண்டும் பழைய பிடித்தமான பாடல்களுக்குத் திரும்பி விட்டேன். இது மாதிரி பட்டியல் போட்டால் எண்ணில் அடங்காது என்பது எல்லோருக்கும் தெரியும். இது நிச்சயமாக பொதுவான ஒரு அநுபவம் தான்.

இப்படி சலிப்பு ஏற்படுவது கடந்த பதினைந்து ஆண்டுகளாகத்தான் மிக அதிகம். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தின் இசை என் விருப்பத் தொகுப்புகளுக்குள் மிக அரிதாகவே ஒன்றிரண்டு என இடம்பெறுகின்றன. எஞ்சியவை ஆரம்ப ஈர்ப்பு முடிந்ததும் காணாமல் போய்விட்டன.

இசை என்பது கேட்பதற்கு என்பதிலிருந்து ஆடுவதற்கு என்றாகிவிட்டதால் தான் இசை ஜீவனற்றுப் போய்விட்டது என்று வைரமுத்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆடுவதற்காக போடப்படும் துள்ளல் இசைக்கு என்றுமே நிலைப்பேறு இருந்ததில்லை. ஐம்பதுகளில் வெளியான உத்தமபுத்திரனின் யாரடி நீ மோகினி பாடல் அளவுக்கு வேறு எந்தப் பாடலும் இன்று வரையில் ரசிகர்களை கிறுக்குப் பிடித்து ஆட வைத்ததில்லை என்றுச் சொல்லலாம். ஆனால் அதன் கிறுகிறுப்பு நிலைக்கவில்லை. ஆனால், அதே படத்தில் ஒலித்த ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்றும் இனியவையாக காலம் கடந்து நீடிக்கிறது.

ஆக, பழைய பாடல்கள் எல்லாம் இனிமையானவை என்றில்லை. இருவிதமான பாடல்கள் எல்லா காலகட்டங்களிலும் இருந்து வருகின்றன. எண்ணிக்கையின் மிகுதி குறைவை பொறுத்தே அந்தந்தக் காலகட்டங்கள் தரப்படுத்தலுக்கு உள்ளாகின்றன. அது தர்க்க ரீதியானதொரு மதிப்பீடாக மட்டுமே இருக்க முடியும்.
மேலும்...

தன் காசே தனக்குதவி

Posted: Wednesday, July 13, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
நாமக்கல்லைச் சுற்றி கடிகாரச் சுற்றில் சேலம், திருச்சி, கரூர் என்று சுற்றி விட்டு தற்சமயம் தாற்காலிகமாக இராசிபுரத்தில் பஸ் இறங்கி ஏறிக் கொண்டிருக்கிறேன். ஆனால் வேறு எங்கும் அதிகம் கண்டிராத ஒரு விஷயத்தை இந்த சிற்றூரில் அவதானிக்க முடிகிறது. ஆண்டகளூர் கேட்டில் டவுன் பஸ்ஸுக்காக நின்று கொண்டிருக்கும் போதும் சரி, ஊருக்குள் பழைய பஸ் ஸ்டாண்ட், கோர்ட், பொது மருத்துவமனைகளின் பக்கம் சுற்றும் போதும் சரி, ரத்தம் சுண்டிப் போய் நடக்க திராணியிழந்த வயோதிகர்கள் மிகப் பரிதாபமாக நம் முன்னால் வந்து பிச்சை கேட்கிறார்கள். பார்த்தாலே நெக்குருகுகிறது.


இவர்களுக்கு குறைந்தபட்சம் 60 வயதாவது இருக்கும். 30 வயது தொடக்கமே வயோதிகம் பற்றிய எண்ணங்களும் கவலைகளும் விட்டு விட்டு வரத் தொடங்கிவிடுகின்றன. இருந்தும், இறுதிகாலம் இப்படி பஸ் ஸ்டாண்ட் பிச்சைக்காரர்களாக அலைய விடுகிறது என்றால், இதிலிருந்து நம் வாழ்க்கைக்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன என்பது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.

என்னுடைய பழைய மேலாளர் இதைப்பற்றிய சிந்தனைகள் அதிகம் உடையவராக இருந்தார். குழு சந்திப்புகளில் பிஸினஸ் பற்றி பேசி முடிந்து, பேச்சு தனிப்பட்ட விசயங்களுக்கு வந்ததும் ஒவ்வொருவரின் சேமிப்பு திட்டங்கள், அவற்றின் செயற்பாடுகள் பற்றி அக்கறையாக விசாரிப்பார். எல்லோரையும் பென்சன் திட்டம் எதிலாவது சேரச்சொல்லி வலியுறுத்துவார்.

அவரிடம் அது பற்றி விரிவாக உரையாட எண்ணியிருந்து, விடுபட்டு, கடந்துச் சென்ற எத்தனையோ விஷயங்களில் அதுவும் ஒன்றாகிப் போனது.

முதுமையை உடலளவில், மனதளவில் மாத்திரமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் எதிர்கொள்ளத் தேவையான ஆயத்தங்கள் சம்பாதிக்க ஆரம்பித்த காலகட்டம் முதலே அவசியம் என்பதை கண்கூடான சில நிகழ்வுகள் உணர்த்துகின்றன. கண்முன் வராத துயரங்கள் எப்போதும் சொல்லித் தராத பாடங்களை தனக்குள் பொதித்துக் கொண்டுள்ளன என்பதை சிந்தித்து உணரலாம்.
மேலும்...

சமூகம்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
http://thatstamil.oneindia.in/news/2011/07/13/murder-recorded-in-cctv-camera-coimbatore-aid0128.html

யார் அடிபட்டாலும், மிதி பட்டாலும், கொலை பட்டாலும் அவனவனுக்கு அவனவன் வேலைதான் முக்கியம். இங்கே சமூக வாழ்க்கை முறை என்பதே மாயை. உண்மையைச் சொன்னால் மனிதம் செத்த மனிதர்கள் நாம்.

இந்த நாம் என்பது எப்போதும் பெரும்பான்மையை குறிக்கிறது. ஆகவே, நாம் என்றால் எல்லோருமா.. நல்லவர் சிலர் இன்னும் உளரே என்று நைச்சியம் பேசிக்கொண்டிருக்கக் கூடாது.


நமக்கு நம் வேலைதான் அதி முக்கியம். எவன் கண்ணெதிரே நாசமாய் போனாலும் நாம் போய் மாட்டிக்கொள்ள கூடாது. கையிலுள்ள பீஸா பார்சல் அப்புறம் வீணாகி விடாது?

அதைத் தின்ன பெண்டாட்டி காத்திருப்பாளே, அவளுக்கு அப்புறம் யார் சார் பதில் சொல்வது?..

இப்படி அவரவருக்கு ஆயிரம் வேலைகள்.

'இருக்கும் ஜனதொகையில் ஒன்று போகட்டுமே, இப்ப என்ன குறைஞ்சி போயிடும்?
'

'அது ஏன் சார் நீங்களா இருக்கக்கூடாது?'

'அதெப்படி, என் உயிர் எனக்கு முக்கியமாச்சே.. என்னை மாதிரி ஒரு குடும்பஸ்தனை ஓடி வந்து காப்பாற்றுவது இந்த சமூகத்தின் கடமை'

'அப்போ வெட்டு படுபவனும், விபத்தில் அடிபட்டு கிடக்கிறவனும் குடும்பஸ்தன் தானே?'

'அது அவன் கவலை சார்.. என் உயிர் பத்தி மட்டும் தான் நான் பேச முடியும்'

'சமூகம் ஓடி வந்து காப்பாத்தனும்னு சொன்னீங்களே.. அந்தச் சமூகம் யார் சார்? ஏதாவது திட பொருளா? உங்களை என்னை மாதிரி மனிதர்கள் தானே இந்த சமூகம்?'

'ஆமா.. ஆனா அதிலயும் மனுசங்க மத்தியில வித்தியாசம் இருக்கே.. வலிய போய் ஒரு பிரச்னையில மாட்டிக்கிட்டா யார் சார் போலீஸ் ஸ்டேசன், கோர்ட்டுன்னு அலையறது.. எனக்கு சக்தியில்ல..'

'அப்ப சமூகத்தின் மத்த மனுசங்களும் அப்படியே நினைச்சி ஒதுங்கி போயிட்டா, உங்க உயிர் போராடுறப்போ யார் சார் காப்பாதுவா?'

'உண்மை தான் சார். அப்படிப்பட்ட மிடில்கிளாஸ் அரையணா நாலணா ஆளுங்க மத்தியில மாட்டிக்கிட்டா காப்பாத்த நாதியில்லா சாக வேண்டியதுதான். வேற வழியில்ல'

'அப்ப நீங்க சொன்ன சமூகம் யாரைதான் சார் காப்பாத்தும்'

'அது மாயை சார். அதில இருக்க ஒண்ணு ரெண்டு நல்லவங்க ஓடி வந்து உதவுவதும், சட்டத்தை மதிச்சி நடப்பதும், மனசாட்சிக்கு உண்மையா இருப்பதும் பார்த்து அதைதான் 'கடவுள் இருக்காரு குமாரு..'ன்னு சொல்லிக்கறோம். அது ஒட்டு மொத்த சமூகத்தின் மனித நேயமா நம்பறோம். எல்லாம் மாயை'

'அப்போ உண்மையான சமூகம் தான் எது?'

'கொஞ்சம் வழி விடறீங்களா.. பார்சல் ஆறிட்டு இருக்கு.. அப்புறம் என் பொண்டாட்டிக்கு பதில் சொல்ல முடியாது..'

சமூகம் பேச்சை துண்டித்துக் கொண்டு விலகிச் சென்றது.
மேலும்...

குடிபோதையில் குற்றம்

Posted: Sunday, July 10, 2011 | Posted by no-nononsense | Labels: , 0 comments
ம். துப்பாக்கி இருந்தால் மனித மனம் குரங்கு போல என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு ஒரு உதாரணம். அதுவும் குடி போதையில் --> http://thatstamil.oneindia.in/news/2011/07/10/i-shot-dilshan-his-repeated-trespassing-army-officer-aid0136.html

உண்மை.

குடிபோதையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது என்னிடம் ஒரு டாக்டர் - வயதில் பெரியவர், “குடிபோதைல தப்பு நடந்து போச்சின்னு சொல்றானுங்களே.. எவனையாவது குடிபோதையில பீய தின்னச் சொல்லேன் பாப்போம்.. அப்ப மட்டும் எப்படி சரியாக தின்னக்கூடாதுன்னு புத்தி வேலை செய்யுது.. எல்லாம் வெறும் சாக்கு, என்ன பண்றோம்னு தெரிஞ்சிதான் பண்ணுறானுங்க. ஒரு base level conscious எப்பவும் இருக்கும்”, என்று சொன்னார்.

அது என்னை அன்று சிந்திக்க வைத்தது.

நானும் குடித்திருக்கிறேன். அதீத போதை அளவுக்கு (இதை ஃப்ளாட் ஆகும் அளவுக்கு என்றுச் சொல்லலாமா?) இன்னும் சென்றதில்லை. ஆனால் போதையின் போது ஒரு மாதிரி அதீத தன்னம்பிக்கை, எடுத்தெறிந்து பேசும் ஒருவித செறுக்கு ஏற்படுவதை உணர முடிகிறது. அதற்கு மேல் மனதில் முன்திட்டம் இல்லாமல் குடிபோதையில் கற்பழிப்பு, கொலையெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கிறேன்.

போதை பயம் போக்குகிறது. எனினும், அதற்குப் பிறகு நடக்கும் செயலுக்கான திட்டத்தை புத்தி தான் வகுக்கிறது. அதனால் குடிபோதையில் நடந்து போச்சு என்பது மனோரீதியில் பொய்யான வாதம் என்றே எனக்குத் தோன்றுகிறது.

இதை கொஞ்சம் psychological ஆக பார்க்க வேண்டியுள்ளது.... குடிபோதையில் conscious வுடன் தவறு நடக்கிறது என்ற வாதத்தை ஒத்து கொள்ள முடியாது. ஏன் என்றால் நான் அடிக்கடி செய்திகளில் படிக்கும் விஷயங்களில் ஒன்று..குடிபோதையில் கணவன் மனைவியை கொன்றான்....இதை அவனால் குடிக்காமலே செய்ய முடியும் ஆனால் ..போதையின் அளவு அதிகமாபோரதல அவன் கண்ட்ரோல் அவனிடம் இல்லை. ..அவன் அடிக்கும் அடியின் அளவு அவனுக்கு தெரியாது ...அடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாமே தவிர...கொல்லவேண்டும் என்று இருப்பதாக சொல்ல முடியவில்லை.

உன் அளவுக்கு உன்னால் செருக்குடன் பேசவோ பழகவோ முடிகிறது.. குடித்திருந்தால்..

ஆனால் உண்மையாலுமே அதே போன்று normal ஆகவே அப்டிஇருக்கும் ஒருவன் குடித்தால் இன்னும் vulgar ஆக தான் போவான் என்று நினைக்கிறன்..

இந்த விவாதம் சில மாதங்கள் முன்பே எழுந்திருந்தால் நீ இந்தியாவில் இருந்த சமயத்தில் ‘அதீத குடிபோதையில் மெய் மறக்கிறதா’ என்பதை நாம் நடைமுறையிலேயே பரீட்சித்து பார்த்திருந்திருக்கலாம் :-)

இதை நீ குறிப்பிட்டதுள்ள போல சற்று மனோரீதியாக ஆராய்வோம்.

Conscious என்பது தன்னுணர்வு நிலை. அந்தத் தன்னுணர்வு நிலையை தியானம் ‘ஜாக்ரத்’ என்கிறது. அதற்கு அடுத்த நிலை ‘ஸ்வப்னம்’. இது போல் இன்னும் இரண்டு நிலைகள் உள்ளன. இறுதி நிலை துரியம் எனப்படும் ஆழ் மனது. குடிபோதை என்பது ஜாக்ரத்தும் இல்லை; ஸ்வப்னமும் இல்லை என்றால், அது நிச்சயம் இரண்டுக்கும் இடைப்பட்ட, இரண்டும் கலந்த ஒரு நிலையாகத்தான் இருக்க வேண்டும். அதற்கு தனிப் பெயர் இருக்கிறதா என்பதெல்லாம் அந்தத் துறை நூல்களையும், அறிஞர்களையும் கலந்தாய்வ் செய்ய வேண்டிய விஷயங்கள்.

ஆனால், நமக்கு வேண்டிய கருத்து இது conscious - unconscious இரண்டுக்கும் இடைப்ப sub-conscious ஆக ஏன் இருக்கக் கூடாது என்பதுதான். ஏன் இருக்கக் கூடாது என்பது கூட இல்லை, அதுதான் குடிபோதை என்பதுதான் என் நிலைப்பாடு.

Sub-conscious mind என்றால் என்ன.. “Of or concerning the part of the mind of which one is not fully aware but which influences one's actions and feelings” - என்கிறது அகராதி விளக்கம். இதன்படி, ஒருவனுக்கு முழுமையான உணர்வு நிலை இல்லை, ஆனால் அந்தப் பகுதி விழிப்புணர்வு அவனுடைய உணர்ச்சிகளிலும், செயல்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதாகிறது.

அப்படியானால் அந்த மாதிரி ஆதிக்கம் செலுத்தும் மனோநிலையில் அவனுடைய விழிப்பு நிலையின் தன்மையில் தான் செய்வது இன்னது என்பது குறித்த அறிதல் இருக்கிறதா என்பதுதான் கேள்வியாக மறுபடியும் எழுகிறது.

குடிபோதை என்பது Sub-conscious mind என்பதை இறுதி செய்து கொண்டால், Sub-conscious mind-ன் நடக்கும் செயல்கள் மீதான மனதின் கட்டுப்பாடு மற்றும் அதன் செயல்பாடு பற்றி நினைவாற்றல் சேமிப்பு இரண்டும் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும் என்று கருதுகிறேன்.

(தொடர்கிறேன்..)
மேலும்...

இந்தியா என்னும் குப்பைக் கூடை

Posted: Saturday, July 2, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஜெமோவின் கீழ்கண்ட பதிவை முன்வைத்து:

ஜெமோவின் கருத்துக்கள் முக்கியமானவை. இ
து ஊடகங்களால் முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்னை.

அணு ஆயுத கழிவுகள், கனரக தொழிற்சாலை கழிவு பொருட்கள், கைவிடப்பட்ட கப்பல்கள் ஆகியவைகளுடன் எங்கேயோ, எவனோ தின்று போட்ட எச்சக்கழிவு பிளாஸ்டிக் குப்பைகளும் இன்று இங்கே ‘இறக்குமதி’ செய்யப்பட்டு வாழ்நிலம் குப்பை காடாக்கப்படுகிறது என்னும் செய்தி உண்மையிலேயே வருத்தமளிக்கிறது.

இந்த மாதிரி வாழ்வாதார பிரச்னைகளை விட்டு விட்டு ஜெயலலிதாவின் படத்தை அரசு அலுவலகத்தில் மாட்டவில்லை என்று இங்கே மக்கள் பிரதிநிதிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதை விட்டால் சோனியா காந்தியை விமர்சித்து விட்டதற்காக தீக்குளிக்கிறார்கள். போராட்டம் என்ற சொல்லுக்கு உள்ள மரியாதை சீரழிந்து விட்டது.

நாமக்கல் பகுதியிலும் கோழிப்பண்ணை, மருத்துவமனை கழிவு பொருட்கள் புறநகர் பகுதிகளிலுள்ள புறம்போக்கு நிலங்களில் ஆள் அரவமற்ற நேரங்களில் வண்டி வண்டியாக கொட்டப்பட்டன. செத்த கோழிகளும், ரத்தக்கறை படிந்த பேண்டேஜ் துணிகளும் கடும் வீச்சத்தை கிளப்பி வந்தன. சில காலமாக அந்த புகார் இல்லாமல் இருக்கிறது.

மேலும்...

குழலும் யாழும் குரலினில் தொனிக்க

Posted: Wednesday, June 29, 2011 | Posted by no-nononsense | Labels: , 0 comments
இன்று மாலை பேருந்தில் ஏறியமர்ந்ததும் மூளையின் ஏதோ ஒரு நியூரானில் சேமிக்கப்பட்டிருந்த இந்தப் பாடலின் ஞாபகத்திற்கு உயிர் வந்துவிட்டது. அப்போதிருந்து முணுமுணுத்துக் கொண்டு இருக்கிறேன்.

யேசுதாஸின் குரல் ஒரு அமானுஷ்யம் போல மனதிற்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

வீடு வந்து அடங்கியதும் இணையத்தில் கிடைக்கிறதா என தேடிப்பார்தேன். இந்த இணையத் தொடர்புதான் எத்தனை அற்புதமான சாதனம்! யாரோ ஓர் அன்பர் வலையேற்றி வைத்திருந்த பாடல் கேட்கக் கிடைத்தது. இதோ கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

“குழலும் யாழும் குரலினில் தொனிக்க
கும்பிடும் வேளையிலே
மழலை யேசுவை மடியில் சுமந்து
மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா
வருவாளே!”

http://www.youtube.com/watch?v=c9P-G0ICzbE

திருச்சி வானொலி நிலையத்தின் காலை 6 மணி பக்திமாலையில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்ட இந்தப் பாடல் போல இன்னும் பல பாடல்கள் நினைவில் நீங்கா இடம் பிடித்தவையாக உள்ளன. ஏசு, அரவிந்தர்-அன்னை, அல்லா என்று பல கடவுள்கள் குறித்தும் பாடப்பட்ட அவைகளின் இசையமைப்பும், வரிகளும் என் உணர்வுகளில் கலந்தவை. இன்று போல எப்போதாவது அவைகள் ஞாபகத்திற்கு மீளும் போது உடன் பால்யத்தின் நினைவுகளையும் சுமந்து வந்து நெஞ்சில் பாரம் ஏற்றி வைத்துவிடுகின்றன.

“மலர் போல மலர்கின்றன் மணம் வேண்டும் தாயே
பலர் போற்றிப் பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும் அன்னையே
வணங்கினோம் உன்னையே”

கங்கை அமரனின் குரலில் ஒலிக்கும் இப்பாடல் சில நாட்களுக்கு முன்னால் ஒரு நள்ளிரவு வேளையில் என்னை தாலாட்டிக்கொண்டிருந்தது. உடன் துண்டு துண்டாய் அக்காலத்தின் அதிகாலைப் பொழுதின் மிச்சம் மீதியான சில நினைவுகளும்...

இவைகள் ஒரு நீண்ட பட்டியலின் இரு உதாரணங்கள் மட்டுமே. இவைகளை நான் வானொலியில் கேட்டது தவிர்த்து வேறு எங்குமே கேட்டதில்லை. இதுபோல் டி.எம்.எஸ்ஸின் பல முருகன் பக்தி பாடல்களும் உள்ளம் உருக வைக்கின்றன. ஏகாந்தமாக வீற்றிருந்து அவற்றைக் கேட்கும் பொழுதுகளில் ஏதோ ஒரு கரம் என் உள்ளங்கையை அழுத்திப் பிடித்து ஆறுதல் சொல்வது போலவே இருக்கிறது. சில நொடிகளாகவது பழைய வீட்டின் சிதிலமடைந்த தாழ்வாரத்தின் கட்டிலில் கண்ணை கசக்கி படுத்துக் கிடந்து பழைய வாழ்க்கையை வாழ்கிறேன்.

உண்மையில் இவைகளில் மனம் லயிக்கக் காரணம் இப்பாடல்கள் தானா? இல்லை, இவைகளில் ஊறிக் கிடக்கும் பால்யத்தின் வாசனையா? சொல்லத் தெரியவில்லை. அனுபவிக்க முடிகிற எல்லாவற்றையும் விவரித்துவிட முடிந்துவிட்டால் மொழியின் தேவை என்றோ முடிந்து போயிருக்கும்.
மேலும்...