Showing posts with label குறுவுரை. Show all posts
Showing posts with label குறுவுரை. Show all posts

சிற்சில குறிப்புகள் (7)

Posted: Tuesday, October 12, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
துரோகி என்று ஒரு படத்தின் டிவிடியை அண்டை வீட்டுக்காரர் வலிய வந்து பார்க்க கொடுத்து சென்றிருக்கிறார். இப்படி இவர் கொடுத்தே அநேகமாக அண்மை காலத்தில் வந்த எல்லா படங்களையும் பார்க்க வைத்துவிட்டார். இதன் பின்னாலுள்ளது நல்நோக்கமா அல்லது யாம் பெற்ற இன்ப உள்நோக்கமா என்பது பற்றி ஒரு சம்சயம்!

*

ஹோமோசெக்ஸ், ஓரல்செக்ஸ் மாதிரி அதென்ன பெயர் வைத்திருக்கிறான் சென்செக்ஸ் என்று — என்று இன்று ஒருவர் சீரியஸாக கேட்டார். ரொம்ப 'சிரி'யஸ் ஆகிவிட்டேன். :D

*

தம் இஷ்டப்படி நள்ளிரவில் தொழில்முறை பணிகளை வைத்துக்கொள்ள முடிபவர்கள் பூர்வஜென்ம புண்ணியாத்மாக்கள்! ஓசைகளற்ற அமைதியும் யாருமற்ற தனிமையும் பிக்கல்களற்ற கவனகுவிப்பும், செய்யும் வேலை மீதான ஆர்வத்தை தக்கவைக்கின்றன. இதே பகற்பொழுதாயின் எல்லாம் பாழாய் போகும்!

*

காதல் அணுக்கள் பாடலை விஸூவலாக பார்த்ததில் இருந்து மிகவும் பிடித்து போய்விட்டது. அடிக்கடி பார்க்கிறேன். இது ரஹ்மான் எஃப்க்டா? ஷங்கர் எஃப்க்டா?

இசை என்பது செவிநுகர் ரசனை என்பதை சினிமா பாடல்கள் சில சமயம் பொய்யாக்கி விடுகின்றன.

*

//அன்பார்ந்த தமிழீழ மக்களே, அன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே//
இரண்டுக்கும் இடையே உள்ள அர்த்த வேறுபாட்டில்தான் ஈழத்துயருக்கான விடை எங்கோ ஒளிந்து கொண்டிருந்தது. இன்று அதுவும் இல்லை. :(

http://viduthalaipulikal.net/index.php?option=com_content&view=article&id=57:tamileela-women-day-2010&catid=28:report&Itemid=2

*

இப்போதெல்லாம் டெண்டுல்கர் ஏதாவது ரெக்கார்டு செய்தால், அதை மௌனமாக மட்டுமே அனுசரிக்க முடிகிறது. அவர் ஆர்பரிப்பான பாராட்டுதல்களின் எல்லைகளை அநேகமாக கடந்து விட்டார்.

*

ஏதேது செய்திடுமோ பாவி விதி ஏதேது செய்திடுமோ
ஏதேது செய்து எனை மோசஞ் செய்யுமோ
மாதவஞ் செய்து மனுவாகச் செய்யுமோ (ஏதேது)
சற்று நல்லறிவற்று மாடாகச் செய்யுமோ
சாகாவரம் பெற்று காடேகச் செய்யுமோ
கற்றறி மூடர்கட் கீடாகச் செய்யுமோ
கற்பின் குணங்குடி வீடாகச் செய்யுமோ (ஏதேது)

- குணங்குடியார்

http://nanjilnadan.wordpress.com/2010/07/24/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D10%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/
மேலும்...

சிற்சில குறிப்புகள் (6)

Posted: Thursday, September 23, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
Dabangg பற்றி படிக்க ஆரம்பித்து அங்கேயிருந்து சல்மானை படிக்க போய் Hum aapke hain koun -ல் வந்து நிற்கிறேன். 1994-ல் சேலம் பிரகாஷ் தியேட்டரில் அப்படத்தை பார்த்த நினைவும், ஒரு மாத காலத்திற்கு ராம்லக்ஷ்மண் இசையில் திளைத்த ஞாபகமும் வந்து நனவிடையில் தோய வைத்து விட்டது. இப்போதே அந்த பாடல்களை கேட்டாக வேண்டும்போல் உள்ளது. இன்றைய இரவுக்கான இசை முடிவாகி விட்டது. 

*

நாம் நம்மை ஐரோப்பியர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டு வருந்துவது எப்போதும் தவறு. காரணம் நாம் அவர்களை விட எல்லா அம்சங்களிலும் ஒரு நூற்றாண்டு பின்தங்கியே முன்னேறி வருகிறோம். அதனால் நாம் எதிர்பார்க்கும் மாறுதல்கள் அடுத்த நூற்றாண்டில் ஒருவேளை வரலாம். அல்லது இன்னும் காலம் ஆகலாம். 

எல்லா சிஸ்டமும் மாறுவதற்கான அடிப்படை முதலில் மனிதனின் குறைந்த பட்ச அடிப்படை பொதுபுத்தியில் மாற்றம். அதாவது common sense-ல் மாற்றம்.  அது எவ்வளவு விரைவில் நடக்க இருக்கிறதோ அவ்வளவு விரைவில் நாம் எதிர்பார்க்கும் நல்மாற்றங்கள் மற்ற விஷயங்களிலும் ஏற்படும்.

*

இன்று ட்விட்டரில் பரவிய கில்லாடி ஜாவா ஸ்கிரிப்ட் வைரஸ் போல கூகுள் குரூப்புக்கும் ஒரு வைரஸை எழுதப்பட்டால் நல்லது. ஆனால் ட்விட்டர் வைரஸ் கொண்டுபோய் சப்பானிய போர்ன் தளத்தில் விட்ட மாதிரி இல்லாமல் சவீதா அண்ணி மாதியான ஏதாவது கூர்மூக்கு சுரோணித தளத்தில் சேர்ப்பிக்க வேண்டும். மூக்கிலும் நாக்கிலும் சப்பை எமக்கு முக்காலும் ஆகாது :-)
மேலும்...

சிற்சில குறிப்புகள் (5)

Posted: Sunday, August 29, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஈழ நண்பர் ஒருவருடன் போர்முனையில் தற்கொலை என்பது பற்றி உரையாடிக் கொண்டிருந்தேன். பேச்சு புலிகளின் சயனைடு குப்பி மற்றும் சமுராய்களின் ஹாராக்கிரியை மையம் கொண்டு அமைந்தது. சயனைடை கடித்து நொடியில் இறப்பது என்பதை விட பாரம்பரிய ஹாராக்கிரியை செயல்படுத்த கடும்நுண்மனமுதிர்ச்சி வேண்டும் என்பது என் வாதமாக இருந்தது. காரணம் அது வயிற்றை கிழித்துக் கொண்டு குடல் சரிய விட்டு பல மணி நேர வலிக்குப் பிறகு சாவது.  அதோடு இந்த சயனைடு குப்பி சாவுக்கு முன்னோடிகளாக நாஜிக்கள் இருந்ததாக சில குறிப்புகள் படித்திருக்கிறேன். சட்டென்று தேடியெடுக்க முடியவில்லை. 


*


இரண்டு மணி நேரமாக ஒரு வாடிக்கையாளர் என்முன் அமர்ந்து இடைவெளியில்லாமல் பேசிக்கொண்டே இருக்கிறார். நான் ‘ஊம்’ மட்டும் கொட்டியபடி கேட்டுக் கொண்டிருக்கிறேன். எல்லாமே எனக்கு தேவையில்லாத தகவல்கள். பேசியதில் பிரச்னையில்லை.. என்ன இருந்தாலும் தொழில்முறையில் வேண்டப்பட்டவர்! ஆனால், சிலரால் எப்படி இப்படி முடிகிறது என்பது குறித்து கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது!


*


என் மேசையின் மீதிருக்கும் இங்க் பேனாவில் அதை வாங்கியபோது போட்ட மை இன்னும்கூட தீரவில்லை. தேவைப்படும் நேரங்களில் உதறியுதறி பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு nostalgia-க்காக! என் அழகிய கையெழுத்துதான் கர்ணகொடூரமாகி விட்டது :(


*


லெமூரியா கண்டம் பற்றி நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். என் வாசிப்பனுபவங்களின் அடிப்படையில் என் புரிதல்: அப்படி ஒரு கண்டம் இருக்கவேயில்லை. அது இரு ஆய்வாளர்களின் கற்பனையில் உதித்த ஒன்று. அதை தேவநேய பாவாணர் போன்ற ஆரியத்துக்கு எதிராக திராவிடத்தை முன்னிறுத்திய தமிழறிஞர்கள் குமரிக்கண்டத்துடன் முடிச்சிட்டு அதற்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்தி விட்டனர். 

மேலும்...

சிற்சில குறிப்புகள் (4)

Posted: Sunday, August 15, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
பேராசிரியர் ஞானசம்பந்தனை நடுவராக கொண்ட வழக்காடு மன்றம் ஒன்று பொதிகையில் நடந்து கொண்டிருக்கிறது. மனிதர் நகைச்சுவையை நாக்கில் தடவி, இல்லையில்லை, நாக்காகவே கொண்டிருக்கிறார். அதேசமயம் பேசுபொருளில் இருந்து விலகுவதும் இல்லை. அருமையான உரை!

*

மெகா டிவியில் எம்.எஸ்.வி.யின் இன்னிசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழின் மாபெரும் 'unsung hero' என்று இவரையேச் சொல்வேன். அந்த அதிருப்தியை கூட வெளிப்படுத்திக்கொள்ளத் தெரியாத அப்பாவி இவர். கண்ணதாசன் பெயரை உச்சரிக்காமல் ஒரு பாராவைக்கூட கடக்கமுடிவதில்லை எம்.எஸ்.வி.க்கு. எப்படி முடியும்?!

இந்த அத்யந்தம் பின்னால் வந்த இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் வாய்க்காமல் போனதில் நஷ்டம் அவர்களுக்கு என்பதை விட இசைக்குதான் என்பதே உண்மை. விலைமதிக்க முடியாத இழப்பு.

*

இந்த வார குமுதம் போல இவ்வளவு சொதப்பலான குமுதம் எடிசனை நான் வாசித்ததாக நினைவில்லை. பத்து நிமிட புரட்டலில் தூக்கி எறிந்து விட்டேன்.
குமுதத்தில் பங்காளி தகராறு ஏற்பட்ட பிறகு திறமையான பலர்
விலகி விட்டதாக கேள்விப்பட்டேன். அதை இதழில் உணரமுடிகிறது.

நான் பல ஆண்டுகளாக வாரா வாரம் குமுதம், ஆ.வி, துக்ளக் வாங்கி வருகிறேன். இடையில் ஒருமுறை துக்ளக் தவிர மற்ற இரண்டையும் நிறுத்தி விட்டேன். பிறகே உணர்ந்தேன் என் குடும்பத்தாரும் நண்பர்களும் அதை எவ்வளவு மிஸ் பண்ணுகிறார்கள் என்று. அவர்களுக்காக வாங்கி வருகிறேன். மாகசின்களை பொருத்தவரை நம் எதிர்பார்ப்பு வேறாக இருக்கிறது. அவர்களுக்கு வேறாக உள்ளது. ஆ.வியையும் குமுதத்தையும் தமிழ்நாட்டு குடும்பங்களில் இருந்து பிரிப்பது கடினம்.
மேலும்...

சிற்சில குறிப்புகள் (3)

Posted: Friday, August 13, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
பாரதிதாசன் கவிதை:

எங்கெங்கு காணினும் சக்தியடா...தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா


கலைஞரின் உல்டா எந்திரன் வாழ்த்து கவிதை:

எங்கெங்கு காணினும் வெற்றியடா
ஏழு கடல் தாண்டியும் எந்திரன் முழங்குமடா

-----------

தற்சமயம் வீட்டில் குமுதம், ஆனந்த விகடன் இரண்டும் வாங்கி வருகிறேன். இரண்டுமே குடும்பத்தார் படிப்பதற்காக. இரண்டில் ஒன்றை நிறுத்தி விட்டு இனி கல்கி வாங்க இருக்கிறேன். ’ஞாநி’யின் ஓ பக்கங்களை படிப்பதற்காக. குமுதத்தில் கருத்துரிமை மறுக்கப்பட்ட ஞாநி இந்த வாரம் முதல் கல்கியில் எழுத இருக்கிறார். 

குமுதம் என்றதும் சாருவின் பின்வரும் கமெண்ட் தான் ஞாபகம் வருகிறது:

முரசொலி வீக்லியாக வர ஆரம்பித்து விட்டது. சினிமா செய்திகள்; கலர் படங்கள். ரகளை. பெயர்தான் குமுதம் என்று இருக்கிறது. முரசொலியே பெட்டர் இல்ல?

-----------

#இலங்கை மீனவர்களை கொல்வது யார்? செயற்கை கோள்கள் உதவியுடன் கண்டுபிடிக்க வேண்டும்!-கனிமொழி எம்.பி.-

இது என்னங்க கொடுமை? இந்தளவா மக்களை முட்டாளா நினைப்பாங்க...இவங்க? தந்தை வழியில் வீறு நடை போட்டு கிளம்பி விட்ட கவிதாயினியே நீங்கள் வாழ்க!

இலங்கை மீனவர்களை கொல்வது யார் என கண்டுபிடிக்க செயற்கை கோள் உதவியை நாடும் தங்கள் புத்தி கூர்மையை காணும் போது செம்மொழி மாநாட்டில் தங்கள் இலக்கிய திறனை ஆராய்ந்து இரண்டு ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டது சரியே.

http://sathish777.blogspot.com/2010/08/blog-post_12.html

-----------
இந்தியாவுக்கு சுதந்திரம் ‘நள்ளிரவில்’ கிடைத்த கதை:

இந்திய சுதந்திர போராட்டத்தின் கிளைமாக்ஸ் காலமாகிய 1947 ஆகஸ்ட் மாத நிகழ்வுகளை படித்து கொண்டிருந்தேன்: இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் என்று அறிவித்து விட்டார்கள். விட்டார்களா நம் சாஸ்திர சாம்ராட்டுகள்.. “அந்த தேதியில் கிரஹ ஸ்தானம் சரியில்லை, நாங்கள் கணிக்கும் தேதியில்தான் சுதந்திர அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்று அறிக்கைகள் விட்டார்கள். ஒரு குழுவாக சென்று மௌண்ட்பேட்டனை சந்தித்தார்கள். உலகம் முழுவதும் அறிவித்த பிறகு இனி மாற்றமுடியாது என்று ஒருவழியாக உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்று ஆகஸ்ட் 14-15 நள்ளிரவில் முறையாக அறிவித்து கொடியேற்றினார்கள். இதுதான் நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்த கதை.
மேலும்...

சிற்சில குறிப்புகள் (2)

Posted: Sunday, August 8, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
  • ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்.ஆர்.ஐ வாழ்க்கைச் சூழல் அச்சமூட்டுகிறது. ஒரே தெருவில் ஒண்ணு மண்ணா பொழச்சி, ‘ஓ’ன்னு குரல் கொடுத்தா ஓடி வர ஊரே இருப்பதன் அருமை புரிகிறது.

  • Bannedthoughts.net -ல் தோழர் ஆசாத் படுகொலை குறித்த அறிக்கையை வாசித்துக் கொண்டிருக்கிறேன். மாவோயிஸ்டுகளுக்கு  என்று பிரத்யேகமாக ஒரு வலைதளம் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது. போராட்டங்களை டிஜிட்டல் வடிவிலும் முன்னெடுக்க வேண்டிய காலகட்டமிது.

  • முன்காலை முடிந்த
    ஞாயிறு இந்நாள்
    பின்காலை பொழுதில்
    கஷ்டம் பலபட்டு
    கண்விழித்தெழுந்து 
    காப்பிக்கோப்பையுடன்
    கபாலத்தில் ஏதேனும்
    ஏற்றிக்கொள்ளமே என
    கணினி முன்னமர்ந்தால்
    கர்மசிரத்தையாக
    கள்ளக்காதலுக்கு
    கருத்தரங்கம் நடாத்துகிறார்!
    கலாச்சாரக் காவலர்தம்
    அனாச்சார போக்குபற்றி
    காரசாரமாய் கருத்துரைக்க
    கைகள் பரபரக்கின்றன்.
    ஆனாலும்,
    கட்டினவள் அருகமர்ந்து
    கணினித்திரையில் 
    கண்பதித்திருப்பதை
    கருத்தில்கொண்டே 
    நழுவிச் சொல்கிறேன்
    “கப்சிப் கபர்தார்”!

    (கள்ளக்காதல் பற்றிய உரையாடலின் போது)
மேலும்...

சிற்சில குறிப்புகள் (1)

Posted: Friday, August 6, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
  • எத்தைத் தின்றால் பித்தம் தெளியுமென்றறிய செத்த நேரம் வெளியே உலாவி வரலாமென்றால், நித்தம் பொட்டியில் கண் பதியாவிட்டால் இன்று பெருங்குத்தமாகி வாடிக்கையாளரின் சோளியே சுத்தமாகி விடும் போலுள்ளதே. 
  • தடவியல் நிபுணர் சந்திரசேகரனின் ‘கிரிமினல்கள் ஜாக்கிரதை’ என் வாசிப்பில் இருக்கிறது. எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்ட வழக்கு பற்றிய குறிப்பில், ராதா அருகிலிருந்து சுட்டும், தன்னை தானே சுட்டுக் கொண்டும் இருவருமே ஏன் இறக்கவில்லை என்பது குறித்த ஆய்வு விளக்கம் சுவாரசியம்.
  • உண்டி சிறுக்க உகந்த வழியென 
    நாக்கை இறுக்கச் சொன்னார் - முயன்று 
    முடிவில் மூக்கறுந்து போவதே மிச்சம்.


மேலும்...

Buzzings - 2 (14.02.2010 to 21.02.2010)

Posted: Sunday, February 21, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
  • என் நண்பன் என்னை வாழ்த்தினான். நான் அவனை வாழ்த்தினேன். காதலர் தினம் இனிதே முடிந்தது. சம்சாரியானதிலிருந்து சங்காத்தங்கள் இப்படித்தான் பரிமாணம் கொண்டிருக்கின்றன.

  • காதல் பரிசு: கடந்த மூன்று நாட்களாக காலை பொழுதில் நான் செய்யும் முதல் வேலை பிட்டு பிட்டாக இப்படத்தை பார்ப்பதுதான். நான் என்ன செய்ய? ஆனி புடுங்க நான் போகும் தேனி பஸ்ஸில் மார்னிங் மார்னிங் இதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது.

    இப்படி வேறு வழியில்லாமல் ஒரே படத்தை திரும்ப திரும்ப பார்க்க நேர்வதிலும் ஒரு நன்மை இருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக கவனத்தை கதையிலிருந்து மற்ற தொழில் நுட்பங்களின் மீது செலுத்தமுடிகிறது. அப்படி கவனித்து பார்த்ததில் நாடோடிகளின் ஒளிப்பதிவு, காதல் பரிசின் வசனங்கள் சிலாக்கியமாக இருந்தன. எதிர்மறையான கருத்தை ஏற்படுத்தியது ‘தளபதி’ படம். இசை ஒன்றைத் தவிர வேறு எத்துறையிலும் தேறாத அதனை இன்றும் கொண்டாடும் என் நண்பர்கள்தான் அப்படத்தை விட என் ஆகப்பெரும் ஆச்சரியங்கள்!

    காதல் பரிசின் வசனங்கள் என்னை கவர்ந்தன.குறிப்பாக கமலும், அம்பிகாவும் சந்திக்கும் இடங்களில் அனல் பறக்கச் செய்ய பிரயோகிக்கப்படும் வார்த்தைகளின் தெரிவில் நறுக்கு தெரிக்கிறது. யாரென்று தேடிப் பார்த்தேன். டைரக்சன் ஜகன்நாதன் என்று மட்டும் தெரிந்தது. வசனமும் அவராகவே இருக்கலாம். அதுதானே பின்நவீனத்துவ தமிழ் சினிமா தொடங்கி வைத்த புது டிரெண்ட்!

  • சாருவைப்பற்றி சதா கருத்து கேட்டு சதாய்க்கிறான் என் இலக்கிய ஆர்வ இளவல் ஒருவன். நகைமுரணை ரசிக்கலாம்; அதற்காக இலக்கியமென அதையே புசிக்கமுடியாது என்பதை எடுத்துச் சொன்னால் வாசகர்களுக்கு புரியும். ஆனால் ரசிகர்களுக்கு?!

  • எல்லா கணங்களிலும், எல்லா நிகழ்வுகளிலும் நாம் உற்றுப் பார்த்து உள்வாங்கிக்கொள்ள ஏதாவது உட்பொருள் இருக்கத்தான் செய்கிறது என்பதை எனக்கு நிர்தாட்சண்யமாக உணர்த்தச் செய்யும் நிகழ்கால நிரூபணங்களே என் அன்றாட பேருந்து பிரயாணங்கள் என்பதாக உணர்கிறேன்.

  • புறவய கவர்ச்சிக்கும் பாலியல் கிளர்ச்சிக்கும் பெரிதாக சம்மந்தமில்லை என்பதற்கு அத்தாட்சியானதொரு தம்பதியை சந்தித்தேன். அவர்களுக்கு மூன்று குழந்தைகள்!

  • தண்ணிய போட்டா சந்தோசம் பொறக்கும் - வறுமையின் நிறம் சிவப்பு, சிங்காரி சரக்கு - காக்கிசட்டைக்காரன், ஜாதியில்ல பேதமில்ல தண்ணி போட்டுட்டா - காதல் பரிசு, சொர்க்கம் மதுவிலே - சட்டம் என் கையில், etcetera. எண்ணிப் பார்த்தால் தன் படங்களில் குடியை அதிகம் கொண்டாடிய நடிகராக கமல்தான் கண்ணில் தெரிகிறார்.

  • தன் சுருளான - அதனால் அழகான - தலைமுடியை அழகு நிலையம் சென்று அலங்கோலம் செய்துவந்து நிற்கும் தோழியை தோப்புகரணம் போட வைத்த பிறகும் ஆறவில்லை மனது. எதனால் தோழியானோம் என்பதையே சமயத்தில் மறந்து விடுகிறார்கள், என் செய்ய!

  • தனிப்பட்ட விருப்பம்; தனிமனித சுதந்திரம் பற்றியெல்லாம் பேசுவதற்கு முன் அஜித் முதலில் தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டு, தன்னை அனைத்து சங்கங்களிலும் இருந்து விலக்கிக் கொண்டு அதனை சொல்லவேண்டும். தன்னை ஆதர்சமாக கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை தன் பின்னால் அணி வகுக்கச் செய்திருக்கும் ஒருவருக்கு, உணர்வுபூர்வமான பொது விஷயங்களில் தன்னிஷ்டம் பற்றி பேசும் தகுதி கிடையாது. அதேபோல் சங்கத்தின் உறுப்பினராக இருக்கும்வரை அதன் முடிவுகளுக்கு எதிராக நடக்கவும் உரிமை இல்லை. எதிர்த்து பேசி விட்டதாலேயே கொண்டாடப்படுகிறார். என் மதிப்பிலிருந்து சறுக்கிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

  • கலைஞரை மனநோயாளி என்று விளித்திருக்கும் ஞாநியின்(இவரை எப்படி இன்னும் எழுத விட்டு வைத்திருக்கிறார்கள்?!) கட்டுரை வெளியாகியிருக்கும் அதே குமுதத்தில்தான் கலைஞரின் பேட்டியும் வெளியாகியிருக்கிறது. குமுதத்தின் சாமார்த்தியம் வியக்க வைக்கிறது!

  • ”என்னது, இந்திராகாந்தி இறந்துவிட்டாரா!” என்பதுபோல இருக்கிறது குமுதத்தில் பாலகுமாரனைப்பற்றி எழுதப்பட்டிருக்கும் கிசுகிசு.

  • சேவியரின் “இயேசு என்றொரு மனிதர் இருந்தார்” வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஏசு, மீட்பரானதின் பின்னால் உளவியல் காரணங்கள் உள்ளதாக தோன்றுகிறது.
மேலும்...

Buzzings - 1 (10.02.2010 to 13.02.2010)

Posted: Saturday, February 13, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
  • ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் வாசலில் அரை மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது. பொழுது போகாமல் அங்கேயிருந்த ’அம்மா’வின் திருவாய்மொழி சுவர் எழுத்துக்களை படித்துக்கொண்டு இருந்தேன். இவரை விட ஒரு சிந்தனை மலடான ஆன்மிகவாதி யாரையும் படித்ததாக நினைவில்லை. இவர் பெண்களை கவர்ந்ததிலும் ஆச்சரியமில்லை!

  • 'ப்ரமரம்’ பார்த்துமுடித்தேன். தமிழ் திரைச்சூழல் குறித்து ஏற்கெனவே ஆட்டம் கண்டிருந்த என் குறைந்தபட்ச மிகை மதிப்பீட்டில் இன்னுமொரு செங்கல் உதிர்ந்தது.

  • Plurk-என்ற இன்னொரு SNS-ஐ சோதித்திக்கொண்டு இருக்கிறேன். எத்தனைதான் புதிதாய் வந்தாலும் அத்தனைக்கும் உடனே பயனர் உருவாகிறார்கள். இனிவரும் நாட்களில் இகபர லோகம் யாவும் இணையத்தினுள் ஐக்கியம் என்பது அட்சர ஸ்பஷ்டம்!

  • அவதார் படத்தை 3D-ல் தான் பார்க்க வேண்டும் என்ற பிடிவாதத்தால் பார்க்க தவறிவிட்டேன். மிஸ் பண்ணி விட்டேனோ என்று தோன்றுகிறது. சிற்றூரில் வாழ நேர்வதன் மற்றுமொரு குறைபாடு.

  • அடம் பிடித்து அழுத குழந்தை வடிவேலை கண்டதும் இடம் பிடித்து அருகில் அமர்ந்து கொண்டது. இதற்கு முன் டோரா, பும்பா விஷயங்களில் மட்டுமே இது சாத்தியம்.

  • ’திருதினஸ் பிருக் ஸ்மிருதி’யின் படி கொண்டாடப்படும் இன்றைய சிவராத்திரியை ’ஆகம சவுரமான விதி’ தடுக்கிறதாமே? ஈஸ்வரோ ரக்ஷிது!

  • பாதி இரவை இணையத்தில் கடத்தி விட்டு பாதி பகல் வரை தூங்கிவிட்டேன். எப்படியோ, மஹாசிவராத்திரி கொண்டாட்டம் என்னளவில் ஜோராக தொடங்கிவிட்டது

  • Dec 21st, 2012- அன்று உலகம் அழிந்து விடுமாம். அதற்கு ஆறு நாட்கள் முன்புதான் எனக்கு "Many Many Happy Returns Of The Day" சொல்லியிருப்பார்கள் என்பது எத்தகு நகைமுரண்! ;-)

  • சில காலமாக சாரு நித்தியானந்தா ஜபம் செய்வது ஏன் என்பது ஜெமோ ஜக்கியை விதந்தோதியதை படித்த பிறகுதான் விளங்குகிறது.

  • ஜக்கி வாசுதேவ் - வெள்ளியங்கிரி, நித்தியானந்தா - பிடதி, ரவிசங்கர் - கொல்கத்தா. ஆளுக்கொரு லிங்கம்; நாள் முழுவதும் கொண்டாட்டம். கலக்குகிறார்கள் கார்ப்போரேட் சாமியார்கள்.

  • கூகிளில் ’ஓரின சேர்க்கை கதைகள்’ என்று தேடி தினமும் நான்கு பேராவது என் பதிவை எட்டிப்பார்க்கிறார்கள். கோவாப் படத்துக்கு விமர்சனம் எழுதியதன்றி யாமொன்றும் அறியேன் பராபரமே!

  • பஸ் பிடிக்கும் அவசரத்தில் பணம் எடுக்க ஓடினால், எட்டு கார்டுகள் வைத்துக்கொண்டு அதில் உருப்படியாக எடுக்கவும் தெரியாமல், வெளியே நிற்பவர்களைப் பற்றிய எவ்வித பிரக்ஞையும் இல்லாமல், ஏ.டி.எம்முடன் ஏகாந்தமாக மல்லுக்கட்டிக்கொண்டு இருப்பவர்களை எத்தால் அடிக்கலாம்?

  • மீண்டும் ஒருமுறை ‘திரக்கதா’ பார்த்தேன். அலட்டல் இல்லாத இம்மாதிரி திரைக்கதைகளை தமிழ் எப்போது தழுவும்? பெருமூச்சுதான் வருகிறது!

  • பதிலளிக்காமல் எஞ்சி கிடந்த கடிதங்களுக்கெல்லாம் பதிலிட்டு அஞ்சல் பெட்டியை சுத்தம் செய்தபின் செய்யும் நெட்டிமுறிப்பு தரும் சுகமே தனிதான் ;-)

மேலும்...