Showing posts with label மதம். Show all posts
Showing posts with label மதம். Show all posts

Mooladee - ஓர் எதிர்வினை

Posted: Thursday, April 28, 2011 | Posted by no-nononsense | Labels: , , 0 comments
Dear .....,

Thanks a lot for your time to respond to me and this mail gave me an opportunity to analyse this matter. There is a hadith which says about female circumcision. But not every hadiths are taken as the islamic law. There are rulings for the hadiths to be authentic and then only it will be considered as a law in Islam. For a deep understanding on this, if you get time please go through the site http://www.islamset.com/hip/health5/female.html.


I wish you good luck.


Thanks
........

அன்புள்ள ஹபீப்,நீங்கள் கூறியுள்ளது உண்மை. இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ இது வழக்கத்தில் கிடையாது. குரானிலும் சொல்லப்படவில்லை. Sunnah-ல் இல்லை. ஆனால் ஹதிஸீல் இருப்பதாக தெரிகிறது. அதையொட்டியே சில மத அடிப்படைவாதிகளால் அவர்களுடைய ஆதிக்கக்குடிகளிடத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்:

Um Atiyyat al-Ansariyyah said: A woman used to perform circumcision in Medina. The Prophet (pbuh) said to her: Do not cut too severely as that is better for a woman and more desirable for a husband.

மெதினாவைச் சேர்ந்த விருத்தசேதனத்துக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளும் பெண்ணை பார்த்து நபிகள் ‘கடுமையாக வெட்டிக் கொள்ளாதே’ என்று சொல்கிறார். என்று மட்டும்தான் சொல்கிறார். வெட்டிக் கொள்ளாதே என்று சொல்லவில்லை. இதை சுட்டிக்காட்டித்தான் பெண்களிடம் விருத்தசேதனத்தை ‘purification' என்ற பெயரில் வலியுறுத்தி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

இதனை படித்த பிறகே அதை இஸ்லாமில் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கமாக பொதுமைப்படுத்தி எழுதி இருந்தேன். ஆனாலும் மதத்திற்கு வெளியே இருந்து எழுதும்போது, அதனை தவிர்த்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. அந்த விஷயத்தில் நண்பர் ஹபீபின் கருத்தை எற்றுக்கொள்கிறேன்.

எனினும், இஸ்லாமியர்களில் கூட சில பழங்குடி மரபினரிடம் மட்டும் - குறிப்பாக மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலுள்ள சில நாடுகளில் தேசம் தழுவிய அளவில் ஒரு நடைமுறை வழக்கமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே அதை எழுதினேன். அதை அந்தக் கட்டுரையிலேயே சொல்லியும் இருந்தேன். இந்தப் படம் களமாக கொண்டிருக்கும் செனகல் நாட்டில் அப்படி ஒரு வ்ழக்கம் இருந்து ஐ.நா.வின் முயற்சியினால் 2006-ல் அது அங்கே தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. (Moolaade வெளிவந்தது 2004-ல் என்பது ஒரு தகவலுக்காக). கிழக்காசிய நாடுகளில் அரபுக்களிடமும் அது இருந்திருக்கின்றன. அது குறித்தத் தகவல்கள் இணையம் முழுக்க கொட்டிக்கிடக்கின்றன.

இஸ்லாமில் தடை செய்யப்படாதவை அனுமதிக்கப்பட்டவை என்று ஒரு ஐதீகம் உண்டு. அந்த ஹராமில் female genital mutilation வரவில்லை. குரானில் male circumcision பற்றியும் கூட சொல்லப்படவில்லை. ஆனால் நபிகள் அவரே செய்து கொண்டிருக்கிறார். அதனால் சொல்லப்படாதது எதுவும் வழக்கத்தில் இல்லை என்றும் கிடையாது என்பது புரிகிறது. ஒரு மதத்திற்கு வெளியே இருந்து எழுத நேரும்போது இந்த மாதிரி கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நமது புரிதல்கள் இப்படித்தான் அமைகின்றன.

அதனால் குறைந்த பட்ச சரிபார்த்தல்களாவது இல்லாமல் எதையும் நான் எழுதுவதில்லை. அதன் உண்மையான காரணம் நான் என்னளவில் தெளிவு பெறவே எதையும் படிக்கவும் அறிந்து கொள்ளவும் விழைகிறேன். எழுதுவது என்பது நண்பர்களுடன் ஒரு பகிர்தலுக்காக மட்டுமே. சரிபார்த்தல்களையும் மீறி அதில் சில நேரங்களில் தகவல் பிழைகள், முரண்கள் இருக்கலாம். ஏனென்றால் நாம் ஆதாரம் என்று கருதி முன்வைத்து புரிந்து கொள்ளும் மூலப்பொருளில் பிழை இருந்தால் அது நமது கருத்தாக்கத்தையும் பிழையாக்கி விடுகிறது. Female circucision - ஐ இஸ்லாமுடன் சம்மந்தப்படுத்தும் இந்த ஹதீஸும் அதுபோன்றது தானா என்பதெல்லாம் மத ரீதியான ஆய்வுக்குரிய விஷயம். இஸ்லாம் மதத்திற்கு வெளியே இருந்து கிடைப்பனவற்றைப் படித்து நாம் அடைவதெல்லாம் மேலெழுந்தவாரியான புரிதல்கள் மட்டும்தான்.


அன்புடன்,
......
மேலும்...

நிஷ்காமிய கர்மம் - ஒரு தர்க்கம்

Posted: Friday, November 26, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
வாலி என்றதும் அவர் இந்தவார விகடனில் எழுதியுள்ள தொடர் ஞாபகம் வருகிறது. கீதை வலியுறுத்தும், கருப்பு சட்டைக்காரர்கள் கண்டனம் செய்யும் நிஷ்காமிய கர்மத்தைப்பற்றி உயர்வுநவிற்சியாக எழுதி மகிழ்ந்திருக்கிறார். துட்டுக்கு பாட்டு என்பதை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு செய்யும் அவரளவில் அதில் பிரச்னையில்லை. அதை குறிப்பிட்ட சாதியினரின் மீது ஏவி விடும்போதுதான் பிரச்னை உண்டாகிறது. உண்டாகி பல பழம் பழக்கங்கள் துண்டானதும் இப்படித்தான்.

ஒரு சில வருடங்கள் முன்பு ரஜினி ரசிகர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்த்தினார். அந்த மேடையில் வைக்கப்பட்டிருந்த தட்டி பலரின் கவனத்தை ஈர்த்தது. காரணம் அதிலிருந்த, ‘கடமையை செய்; பலனை எதிர்பார்’ என்னும் வாசகம். கடமையை செய்; பலனை எதிர்பார்க்காதே என்னும் கீதை வரிகளுக்கு மாறான பொருளில் அமைந்த அது பின்னர் இந்துத்துவ கும்பல்களிடம் விமர்சனத்தையும் சம்பாதித்தது. இங்கேயும் இரண்டு தத்துவக்கோளாறுகளே காரணம். அந்த நிஷ்காமிய கர்மம், சுதர்மம் பற்றிய என் சில கருத்துகளை ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன்.
அதை விரித்து இன்னும் பேச தோன்றுகிறது.

ஆனால் இதுபோன்ற தத்துவவிசார தர்க்கமெல்லாம் தவறியும் காலை வைத்துவிட்டால் உள்ளிழுத்துக் கொள்ளும் பெரும் சுழல். உள்ளே உள்ளதெல்லாம் உண்மையென நம்பச் சொல்லும் வெறும் நிழல். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளாக கொள்ள மட்டுமே நேரமுள்ள ஒரு நேரத்தில் உள்ளபடியே இயலாது. தொடரும் மனநிலைக்கு அது என்றுமே கூட இயலாமல் போகலாம். Who cares? :-) அவரவர் கர்மம்; அவரவர் தர்மம்.

ததாஸ்து!

-0-

எதிர்வினை:

நித்திய + காமிய + கர்ம + அனுஷ்டானம் = ===> " நிஷ்காமிய கர்மம் "
எப்பபொழுதும் + செய்யக்கூடிய + தொழிலில் + கடைபிடிப்பது

அவரவர் செய்யகூடிய தொழிலில்
நீதி , நேர்மையுடன் தொழிலை தர்மம் பிசகாமல் செய்யவேண்டும்
அதுவே நிஷ்காமிய கர்மம் ஆகும்
ஒருவர் அவருடைய செயலில் , முழு மனதோடு , ஈடுபாட்டுடன் , அர்ப்பணிப்பு , மற்றும் நீதி, நேர்மை , தர்மத்துடன் செய்யவேண்டும் என்பதே இதன் கருத்து

என்னை பெறுத்தவரை ,
இங்கு ஜாதி , மதம் இவற்ற்றை பற்றி கவலை கொள்ள தேவை இல்லை ,

சொல்லப்படும் கருத்தே முக்கியம்

வாலி எந்த மதத்தை சொல்கிறார், உயர்வாக குறிபிடுகிறார் , ஏவி விடுகிறார் என்பதை பற்றி
நாம் எடுத்துக்கொள்ள வேண்டாம்

இருத்த போதிலும் வாலி, ரகுமானை என்னய்யா பாடல் வரிகளில் கூட
(தெய்வம் vs தேவதை = நியூ படத்தில் வரும் பட்டு )
என்ன என்பதனையும் , கோபித்து கொண்டதை பற்றியும் குறிபிட்டுள்ளார்

கவிஞர் வாலி,
பல நபர்களை "நிஷ்காமிய கர்மம்" இக்கு எடுத்துகாட்டாக குறிபிட்டாலும்
அதே துறையில் இளையராஜா , ஏசுதாஸ் இவர்களை குறிபிடாமல் விட்டது
என்னக்கு பெரிய ஏமாற்றம்மே

பதில்: அக்கால அனுஷ்டான வைதீகம் முதல் இக்கால அப்டேட்டட் கார்ப்போரேட் வைதீகம் வரை இவ்வாறுதான் நிஷ்காமிய கர்மத்திற்கு பதம் பிரித்து அருஞ்சொற்பொருள் கூறி அதை அப்படியே சிரமேற்கொண்டு வாழ்வில் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன. அதன் லிடரல் மீனிங் என்னவோ பலரும் மேலோட்டமாக கொண்டிருக்கும் அதே ‘பலனை பற்றி கவலைப்படாமல் கடமையை செய்’ புரிதல்தான். கேட்கவும் கடைபிடிக்கவும் நன்றாக இருக்கும் இது, இக்காலத்தில் சௌகரியமாக, சாய்ந்து அமர்ந்து கொண்டு, சாயா சிப்பியபடி கணினியில் கண் பதித்து வேலை செய்பவர்களுக்காக உபதேசிக்கப்பட்டது அல்ல. சொல்லப் போனால், இவ்வாறான மேலோட்டமான நேரடி அர்த்தங்கள் தரும் புரிதல்களை விட்டு விட்டு பார்த்தால் இந்த நூற்றாண்டுக்கும் இந்த வாசகங்களுக்குமே சம்மந்தமில்லை. இதற்கான வரலாறு வேத காலத்திற்கும் பிந்தைய உபநிடதங்களுக்கு சுலோகம் இயற்றப்பட்ட காலத்தில் இருக்கிறது.

அக்காலத்தில் ஏன் அதற்கான அவசியம் ஏற்பட்டது என்பதற்கு பதில் வைதீகம் வேகமாக பரவ ஆரம்பித்ததிலும், பழங்குடியினரின் மத மாற்றத்திலும், அதற்கு அவசியமான எளிமையான புரிதல்களுக்கு இணக்கமான ஓர் உபதேசம் தேவைப்பட்ட காரணத்திலும் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப உருவானதே கீதை. கீதையின் வரலாறு பகவானின் அருள்வாக்கில் இருக்கிறது என்று முழுமையான நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு வரலாற்று நோக்கில் முன்வைக்கப்படும் ஆய்வு முடிவுகள் நம்ப கடினமாக இருக்கும். ஆனால் அது மட்டுமே தர்க்க ரீதியான படிநிலைகளுக்கு ஆதாரமான ஒரே அம்சம். மற்றவையெல்லாம் வெறும் நம்பிக்கை என்னும் ஒற்றை பரிமாண புலனறிவை மட்டுமே ஆதாரமாக கொண்ட கருத்தாக்கங்கள்.

நிஷ்காமிய கர்மம் மற்றும் உனக்கு விதிக்கப்பட்ட வேலையை நீயே செய்ய கடவாய் என்னும் வர்ணாசிரம சுவதர்மம் ஆகிய இரண்டும் வைதீகம் தன்னுடைய மேலாட்சியை நிலைப்படுத்திக் கொள்ள கையாண்ட சூத்திரங்கள். இது யாருக்கு விதிக்கப்பட்டது; யாருக்கு பலனளித்தது என்பதெல்லாம் அக்காலத்தில் நீ சூத்திரனாகவோ, பஞ்சமனாகவோ பிறந்திருந்தால் அனுபவத்தில் கண்டிருப்பாய். இன்று அதை பிரத்திடய்சமாக உணர்ந்து கருத்துரைப்பது தன் கருத்தியல் நிலையை வெறும் நம்பிக்கையின் மீது மட்டும் கட்டமைத்துக் கொண்டிருந்தால் சாத்தியமில்லை.

இந்த பரஸ்பர விளக்கங்கள் விவாதமாக வடிவெடுத்தால் அது மேலதிகமாக கீதையையே மையம் கொள்ளும். காரணம் இந்த உபதேசங்களின் மூலம் கீதை. ஆனால், 1) கீதையை நாம் எந்தளவு புரிந்து கொண்டிருக்கிறோம், 2) கீதை இந்திய வாழ்வியலில் கலந்தது எப்போதிருந்து, 3) பரவலாக கீதை என்னும் ஒரு நூல் அறியப்பட்டது எந்த நூற்றாண்டு முதல் 4) கீதைக்கு முதலில் வியாக்கியானம் எழுதப்பட்டது யாரால் 5) அவர் சார்ந்திருந்த சமயம் அல்லது அப்போது நிலவிய சமய சூழல் என்ன .. என்பன போன்று கிளைத்துச் செல்லும் கேள்விகளுக்கு விடை காணாமல், இன்று சலூன் கடைகளிலும், செல்போன் மெஸேஜ்களிலும் படிக்க கிடைக்கும் “எதை கொண்டு வந்தாய் அதை கொண்டு போக” என்னும் — முன்பு சொன்ன அந்த மேலோட்டமான லிடரல் மீனிங் — கீதாசாரங்களில் மட்டும் தேடிக் கொண்டிருந்தால் புரிந்து கொள்ள முடியாது.

ஆக, நாம் நிஷ்காமிய கர்மத்திற்கும் சுவதர்மத்திற்கும் மேலோட்டமான அர்த்தத்தை மட்டும் வைத்து அதன் உட்பொருளை, அது வரலாற்றில் ஏற்படுத்திய மேலாதிக்கத்தையும் வடுக்களையும் உணர்ந்து கொள்ள முடியாது என்பதே என் வாதம். இதில் வாலிக்கும் அவர் எழுதிய நாலு வரி துணுக்குகளுக்கும் சம்மந்தமில்லை.

கீதையின் இவ்விரண்டு அதிகம் விதந்தோதப்படும், அதேசமயம் விமர்சிக்கப்படும் சாரங்களையும் கடுமையாக விமர்சித்தவர், விவேகானந்தர்! விசாரங்களுக்கு பொதுவில் வேதாந்திகளால் வழங்கப்படும் தேன் தடவிய விளக்கங்களை விலக்கி உள்சென்று வரலாற்றின் ஏடுகளில் படிந்திருக்கும் உள்ளார்ந்த அரசியல் குறித்தும் ஓரளவு சிந்திந்த ஆன்மிகவாதி அவர்.

பல நபர்களை "நிஷ்காமிய கர்மம்" இக்கு எடுத்துகாட்டாக குறிபிட்டாலும்அதே துறையில் இளையராஜா , ஏசுதாஸ் இவர்களை குறிபிடாமல் விட்டது என்னக்கு பெரிய ஏமாற்றம்மே


இளையராஜா நிஷ்காமிய கர்மத்தின் வரையறைக்குள் வரமாட்டார். ஒரு வாதத்திற்காக அது உயர்வான தர்மம் என்று வைத்துக் கொண்டால், அந்த தகுதி நிலையில் இளையராஜா இல்லை. வாலி போல செய்யும் தொழிலில் தன் விருப்பு வெறுப்புகளை வெளியே நிறுத்தி ஈடுபடக் கூடியவர் அல்ல அவர்.

உதாரணத்திற்கு விகடனில் வாலி சொல்லியுள்ளதை போல: தான் ஒரு ஆத்திகராக இருப்பினும் சினிமாவுக்காக பாடல் எழுத அமரும்போது அங்கே தனக்கு பணிக்கப்பட்ட சூழ்நிலைக்கு தாள்பணிந்து ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ என்று பாடல் எழுதினார். அந்த உயர்நிலை கர்மம் இளையராஜாவிடம் இல்லை என்பது அவரை பெரியார் படத்திற்கு ஒப்பந்த செய்ய அணுகிய போது வெளிப்பட்டது. கடவுள் இல்லை என்று சொன்னவரின் படத்திற்கு நான் இசையமைக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார்.

ஜேசுதாஸும் சற்று பிடிவாதக்காரர்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் அனுபவஸ்தரான வாலி அறிந்தே இருவரையும் சொல்லாமல் விட்டிருக்கலாம் என்றுதான் நான் நினைக்கிறேன்.
மேலும்...

வேதகால பிராமணர் திராவிடரா?

Posted: Wednesday, October 27, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
வேதங்களை பற்றி பின்னர் எழுதுகிறேன் என்று கூறியிருந்தேன். இப்போது அவ்வாறாக சில கருத்துக்களை பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன்.

முதலில் வேதம்தான் ultimacy என்று நினைப்பதும், அவற்றை அடிப்படையாக கொண்டு வரலாற்றை புரிந்துகொள்ள முயலுவதுமே தவறான அணுகுமுறை. இங்கே குறிப்பிட்டுள்ளதை போல அவை ஒன்றும் 6000 ஆண்டுகள் எல்லாம் பழமையானவை அல்ல. அப்படியெல்லாம் ஒரு ஆதாரமும் கிடையாது. வேதங்களில் பழமையானதுவான ரிக் வேதம் கி.மு.1200 - 1500 ஆண்டுகளில் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தீவிர இந்துத்துவ நூல்களே அவ்வாறுதான் குறிக்கின்றன. அப்படியானல் மற்ற வேதங்களெல்லாம் அதற்கும் பிறகே ஏற்பட்டவை என்பதால் 6000 ஆண்டுகளெல்லாம் ரொம்பவே மிகையான கணக்கு. 

வேதங்களின் காலம் தொட்டே நாட்டில் இனங்களிடையே சமூகவியல் வாழ்க்கைமுறைகளில் ஒரே அடையாளமும் சமத்துவம் நிலவி வந்தது என்பது புத்தரை மறுப்பதற்கு ஒப்பு. பார்ப்பனீயம் என இன்று அடையாளப்படுத்தப்படும் மேல்சாதி மேலாதிக்கமாகிய வைதீகத்தை எதிர்த்து உருவானதே புத்த மதம். ஒருவகையில் வைதீகத்திற்கும் புத்த/சமண சமயங்களுக்கும் இடையே சென்ற ஆயிரம் ஆண்டுகள் வரை ஒரு சமரே நிலவி வந்தது எனலாம்.

ஆதி வேதத்தின் காலமே கிமு 1500 தான் எனும்போது அவற்றை மட்டுமே அடியொட்டி பாரத பண்பாட்டு தளங்களை கட்டமைத்துக் கொள்வதும், வேதங்கள் தாம் சாஸ்வதம் என்று நம்புவதும் நம்மை அவற்றோடு தேங்கச் செய்து, அதற்கு முன்னும் பின்னுமுள்ள சமூகவியல் சித்தாந்தங்கள் குறித்த அறிதலை கிடைக்காமல் செய்து விடுகிறது. வேதங்கள் அல்டிமசியோ, சாஸ்வதமோ அல்ல. அவை மனிதர்களால் வழி வழியாக சுலோகங்களின் மேல் சுலோகங்களாக உரைக்கப்பட்டு செவி வழி மரபாக குருவிடமிருந்து சிஷ்யர்களுக்கு கடத்தப்பட்டு, கிமு 100 முதல் 300 க்குள்ளாகத்தான் எழுத்து வடிவை பெற்றிருக்கின்றன. ஆனால் யாருடைய மரபின் வழியாக அவை ஓதப்பட்டனவோ, அவர்களே அதைக்கொண்டு பிழைப்பு வேலை செய்து கொண்டனர். 

யார் யார் ரிஷிகள் பெயரையெல்லாம் குறிப்பிட்டு அவர்களெல்லாம் தென்னாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதாக கூறி அதனால் ஆரியர்களும் திராவிடர்களே என்று ஒரு வாதம் செய்துள்ளாய். ஒரு ராஜஸ்தான் லேவாதேவி சேட்டு குடும்பம் ஒன்று இரண்டு மூன்று தலைமுறைகளாக தமிழ்நாட்டில் வாழ்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனால் மட்டுமே அவர்களும் தமிழர்கள் தாம் என்று நாளை வரலாற்றில் ஒருவன் எழுதினால் அது உண்மையாகி விடுமா? அந்தண ரிஷிகள் தென்னாட்டில் வாழ்ந்ததால் மட்டுமே அவர்களும் திராவிடர்களே என்னும் வாதம் முற்றிலும் ஏற்புடையது அன்று. 

வைதீக வாழ்க்கைமுறை வேதங்களில் இருந்து தொடங்க வில்லை. அது வேதங்களுக்கும் முற்பட்டது. அதுபோதே அது நெடுங்காலமாக பாரதத்தின் பல இடங்களிலும் வேர் விட்டிருந்தது. ஆரியர்களின் வருகை கிமு 2000 ஆண்டுகளில் நடந்திருக்கலாம் என்று சரித்திர ஆசிரியர்களால் கருதப்படுகிறது. அதனால் தென்னாட்டில் வாழ்ந்த ரிஷிகள் பற்றி வேதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை. அதனால் மட்டுமே இரு பண்பாடுகளும், முக்கியமாக இரு இனமும் ஒன்றுதாம் என்பது முற்றிலும் தவறான புரிதல் நிலை. 

ஆரியம் இந்திய வாழ்க்கைமுறையுடன் தொடர்பற்ற என்பதை எப்படி புரிந்துகொள்வது என்றால், ரிக் வேதம் வலியுறுத்தும் சடங்கு முறைகள் எதுவும் அதற்கு முந்தைய பாரத பண்பாட்டில் முற்றாக கிடையாது என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. அதற்கு பிறகே வேதங்கள் புனிதமானவை என்று பிரச்சாரம் செய்யப்பட்டு, அவற்றின் சடங்கு முறைகள் உள்ளூர் வேளாள மற்றும் பழங்குடி இன வழக்குகளில் இரண்டற கலந்தன.

மேலும் அன்றைய ஆரியர்கள் தாம் இன்றைய பார்ப்பனர்கள் என்பதும் தவறான கருதுகோள்தான். நிஜமான ஆரிய மரபு இந்தியருடனான இனக்கலப்பின் காணாமல் போய் விட்டது. இன்று இருக்கும் பார்ப்பனர்களெல்லாம் இந்தியருடனான கலப்பினம் தான். நேரடிய ஆரிய மரபு இன்னும் தொடர்வதாக கூறப்படுவது கோவில் குருக்கள் குலத்திலும், கேரள நம்பூதிரி மரபிலும் என்று ஒரு மரபியல் ஆய்வு தெரிவிக்கிறது. 

இன்னொரு பக்கம் திராவிடன் என்பன யார், அவனின் வாழ்க்கைமுறை வேதங்களின் திணிப்புக்கு பிறகு எங்ஙனம் மாறுபாடு கண்டது என்பதெல்லாம் விரிவான அலசலுக்கு உரிய விஷயங்கள். அவற்றையும் ஆய்ந்து இன்னொரு தட்டில் சீர்தூக்கு பார்க்கும்போது மட்டும் வேறுபாடு விளங்கும். 

இங்கே மையமான பிரச்னையாக நான் காண்பது - வேதங்களை மட்டுமே மையப்படுத்தி வரலாறை புரிந்துகொள்ள முற்படுவது. அந்த புள்ளியில் மட்டும் சரியான அணுகுமுறைக்கு மாற்றிக்கொண்டு விட்டால், அல்லது other side of the coin ஐ ஆவது ஒரு பரிசீலனைக்கு உட்படுத்த முயன்றால் வரலாற்றின் உண்மை நிலையும், சில சங்கர மட ஸ்பான்சர்டு அந்தணர்களின் திரிபு வாதமும் விளங்க வாய்ப்புண்டு. 

சென்ற மடலில் நான் இறுதியாக கூறியதையே மீண்டும் கூற விழைகிறேன். 

“சரித்திரத்தின் பக்கங்களை ஓரிரு நூலை மட்டும் கொண்டு ஆராயாமல், ஆர்வம் இருப்பின் பல நூல்களையும் கருத்தாக்கங்களையும், கோட்பாட்டு ரீதியான ஆய்வுநிலைகளையும் பரிசீலித்து தமக்கான கருத்தை உருவாக்கிக் கொள்வது வரலாற்றின் நிர்தாட்சண்யமான பக்கங்களை நாம் விளங்கிக்கொள்ள உதவுவதாக அமையும்’


*


படித்து தெரிந்துகொள்ளவும் விவாதித்து புரிந்துகொள்ளவும் கடலளவு விஷயங்கள் இருக்கின்றன. தேவை முன்முடிவற்ற திறந்த மனநிலை மட்டுமே. 

இந்த விவாதத்தின் தொடக்கப்புள்ள தீபாவளி பண்டிகை. தீபாவளியை கொண்டாட கூறப்படும் புராண காரணத்தை நான் நிராகரிக்கும் அதேவேளை அந்தநாளின் மக்களின் மகிழ்ச்சியை மிகவும் ஆதரிக்கிறேன். தீபாவளி மட்டுமல்ல, மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் எந்த ஒரு கொண்டாட்டத்தையும் ஆதரிக்கிறேன். 

வருடம் முழுவதும் துன்புறும் அன்றாட அல்லல்களில் இருந்து ஒரு இளைப்பாறுதலை தருவது பண்டிகைகள் மட்டுமே. அவற்றின் பின்னாலுள்ள பழங்காரணம் என்னவாக இருந்தாலும், அவற்றை முன்னிருத்தாமல் கொண்டாட்டத்தை மட்டும் மையப்படுத்தி மகிழ்ச்சியை பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ளும் வரையில் அதை ஆரியக்கூத்தாக பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து.

என் குழந்தையோ, மனைவியோ அதை ஒரு நரகாசுரவதமாக எண்ணி மகிழவில்லை. அவர்களுக்கு அது ஒரு மகிழ்ச்சிக்குரிய தினம். அவர்களின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சியாக ஆகிவிட்ட ஒரு வாழ்க்கையில் இயல்பாக எனக்கும்தான்...
மேலும்...

சுட்டுவிரலை சுட்டும் முன்

Posted: Wednesday, August 18, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
நண்பர்களை பகடி செய்து எழுதியது. இந்து மதத்தை மட்டும் நான் அதிகம் விமர்சிக்கிறேன் என்பது அவர்களின் குறை :-) :

காட்சி: அண்ணன், தம்பிகளாகிய பஜேஷ், குஜேஷ் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பஜேஷ்: தம்பி நம்ம வீடெல்லாம் ஒரே தூசும் தும்பும் அழுக்குமா கெடக்கு. இதையெல்லாம் கொஞ்சம் ஒட்டடையடிச்சி வெச்சிக்கினா பளிச்னு ஆயிடும். சுகாதாரத்துக்கு சுகாதாரம்.. அழகுக்கு அழகு!

குஜேஷ்: டாய்.. என்ன வார்த்த சொல்லிகின நம்ம வூட்டப் பத்தி. எதிர் வூட்டுக்காரன் வூட்டுல ஏழு நாளா தண்ணி வராம யாரும் சரியா ஆய் கழுவுல.. அத்த கேட்டுகினியா நீ? பக்கத்து வூட்டுக்கார பன்னாட பாதிநாளு பல்லே வெளக்கறதில்ல.. அத்தயாவது கேட்டுகினியா நீ? நம்ம வூட்டப் பத்தி பேச வந்துட்டான். டாய்..

பஜேஷ்: அதெல்லாம் அவன் பிரச்சன பா.. நான் நம்ம வூட்டப் பத்தி பேசினுக்கீறேன். முதல்ல நம்ம வூட்ட நாம சுத்தமா வெச்சிப்போம். அப்பால அடுத்தவன பத்தி பேசலாம்.

குஜேஷ்: டாய்.. நம்ம வூட்ட்டு அழுக்கப் பத்தி மட்டும் பேசிகின, அண்ணன்னு பாக்க மாட்டேன்.. கீச்சுடுவேன்.. வகுந்துடுவேன்..டாய்.. 

பஜேஷ்: தம்பி கொஞ்சம் பொறுமை பா.. நம்ம நல்லதுக்கு தானே சொல்றேன். இப்படி குப்பையா இருக்கறதால எத்தனை நோய் நொடி அண்டுது தெரியுமா? உனக்கு வீஸீங், எனக்கு பேதி, கடேசி தம்பிக்கு காய்ச்சல்- ன்னு அடிக்கடி வருதே, அதெல்லாம் ஏன்னு கொஞ்சம் யோசிச்சி பார்த்திருக்கியா?

குஜேஷ்: யார பாத்து என்ன வார்த்த சொல்லிகின.. சுத்தமாம்ல சுத்தம். அது சோறு போட்டிருக்காடா..  சொல்ல வந்துட்டாரு டீடெயில்லு. கை கழுவாம சாப்பிட்டா கபால மோட்சம்ங்கற அந்தகார அழுக்குணி சித்தர் பாட்டு தெரியுமா உனக்கு? 

டாய்.. அவன முதல்ல ஆய் கழுவச் சொல்லு.. நான் கை கழுவறேன். அவன பல்லு வெளக்கச் சொல்லு. அப்ப நான் பாத்ரூம் கழுவறேன். 

பஜேஷ்: தம்பி, நம்ம பொழப்பே நாறி கெடக்கும்போது, அடுத்தவன் பழம நமக்கு எதுக்கு. கொஞ்சம் அறிவுப்பூர்வமா சிந்திச்சி தான் பாரேன். எல்லாம் நம்ம நல்லதுக்குதான்.

குஜேஷ்: என்னது அறிவுப்பூர்வமா சிந்திக்கறதா.. என்னை சிந்திக்கச் சொன்னவன என் தாய் தடுத்தாலும் விடேன்.. டாய்.. டாய்.. முதல்ல அவனை ஆய் கழுவச் சொல்லு... அப்புறம் இவன பல்லு வெளக்கச் சொல்லு..  (என்றுகுஜேஷ் டெர்ரிஃபிக் டெஸிபலில் கத்தியபடி டெர்ரராகி கடிக்க வருகிறார்)

சரி. இவனுக்கு விளங்க வைக்கறதும் விஜய் ரசிகனுக்கு புத்தி சொல்றதும் ரெண்டும் ஒண்ணுதான் என்று பஜேஷ் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி விடுகிறார். 

---

நான் எழுதியுள்ளதை கொஞ்சம் கவனமாக படித்தால் புரியும் நான் எந்த மதத்தை விமர்சித்திருக்கிறேன் என்று. என் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது பற்றித்தான் எனக்கு முழுமுதல் அக்கறை. என் வீட்டு அசுத்தம் பற்றி என் குடும்பத்தில் ஒருவரே சுட்டிக்காட்டி விமர்சிக்கும்போது அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு திருத்திக்கொள்ள முயற்சிப்பதோ, அல்லது அவர் சுட்டிக்காட்டும் விஷயம் குறித்தான மாற்று கருத்தை சரியான விதத்தில் முன்வைப்பதோ தான் சரியான விவாத திசையாக இருக்கமுடியும். மாறாக - அவன் வீட்டை பார்த்தியா கலீஜு; இவன் வீட்டை பார்த்தியா அழுக்கு; இதில் என் அழுக்கு மட்டும் எந்த விதத்தில் இழுக்கு? - என்று சால்ஜாப்பாக மறுமொழிவது எவ்வகையிலும் ஏற்புடையதன்று.
//நம்ம ஊர்ல  வேற மதம் பத்தி பேசின//

நீ வேறு மதம் என்பது அநேகமாக இஸ்லாம் பற்றி என்று நினைக்கிறேன். இஸ்லாம் மீது விமர்சனம வைக்க இங்கே இதுவரை சூழல் அமையவில்லை. அமையும்போது பேசலாம். 

---

//ஹா! ஹா! நல்ல கற்பனை//

கற்பனையை விட கருத்துமுதல்வாதமே(idealism) இது எழுதப்பட்டதன் மையநோக்கம். பொதுவாக விமர்சன விரல் நம்மை நோக்கி நீளும்போது அது சுட்டும் பிரச்னையை விட்டு விட்டு, அந்த விரலின் நீள அகலங்களை பற்றிய விமர்சன ஆராய்ச்சிகளில் இறங்கி விடுவதையே நாம் வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதற்கு காரணம் எல்லாவற்றிலும் சிறந்தது என் இனமே, என் மதமே, என் மொழியே, என் கலாச்சாரமே என்னும் ஓர் ஒற்றை பரிமாண சிந்தனைப் போக்கு. அதில் உண்மை இல்லை என்பதே உண்மை. எல்லா வாழ்வியல் முறைகளிலும் நிறை குறைகள் உண்டு. அந்த விதிக்கு நாம் மட்டும் விதிவிலக்காக இருக்கமுடியாது. 

மனதை திறந்து வைத்திருக்க வேண்டும். எல்லா கருத்துகளையும் உள்வாங்கி பரிசீலிக்கும் முனைப்பு வேண்டும். மற்ற சக இன,மத,கலாச்சார விழுமியங்களை பற்றிய அறிதல்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவரவருக்கு என்று ஓர் தெளிதலோ, அல்லது தெளிதலை நோக்கிய ஒரு குறைந்தபட்ச முயற்சியோ கூட சாத்தியம். 

மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியின் சிகரத்தில் இப்போது அமர்ந்து கொண்டிருக்கிறோம் என்று ஓரளவு சொல்லமுடியும். இந்த சிகரத்தை அடைய நாம் உரித்து போட்ட சட்டைகளை எண்ணி விட இயலுமா? ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நம்பிக்கை; அஃதாகவே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சிந்தனை போக்கு தோன்றி அதுவரை மையமாக இழையோடிய  நம்பிக்கையை கேள்வுக்குள்ளாக்கி களைந்திருக்கிறது. அப்படி ஒரு களைதல் நிகழாமல் போனவர்களே இன்னும் பழங்குடிகளாக தொடர்கிறார்கள். நாம் முன்னிலும் மேம்பட வேண்டுமா அல்லது பழங்குடியின் பண்பாட்டு கூறுகளோடு தேங்கி விட வேண்டுமா என்பதை விமர்சன விரல்களை வெட்ட முற்படுபவர்களிடமே விட்டு விடுகிறேன். 

---


எனக்கும் உலக மதங்கள் பற்றி ரொம்ப எல்லாம் தெரியாது. எல்லாம் நுனிப்புல் மேய்ச்சல்தான். அதேபோல் பன்னாட்டு நண்பர்களும் ரொம்ப எல்லாம் கிடையாது. ஆனால் இரு பாகிஸ்தானிகளிடம் சில ஆண்டுகளாக அரசியல், மதம் குறித்து அரட்டை அடித்து வருகிறேன் என்பது உண்மை. (என்னை விட அவர்களுக்குத்தான் அதில் ஆர்வம் அதிகம். இதைப்பற்றி ஒருநாள் விரிவாக எழுத வேண்டும். சில விஷயங்கள் உண்டு) நீங்கள் தைரியம், பயம் என்றெல்லாம் உசுப்பேத்தி விட்டதால் அதை குறிப்பிட வேண்டிய அவசியம் வந்தது. 

எனக்கு இந்து மதத்தின் மீது எந்த காழ்ப்பும் கிடையாது. சில நேரங்களில் விமர்சிப்பதுண்டு. அதையும் கூட என்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே செய்வேன். இங்கேயும் கூட சுரேஷும், மாதுவும் பேசியதால்தான் நான் மறுமொழிந்தேன். நேரில் நாம் மோதிக்கொள்வதன் நீட்சி என்று வைத்துக் கொள்ளேன். மற்றபடி மதங்களை பற்றிய விவாதங்கள் என்பது போகாத ஊருக்கு தேடப்படும் வழி என்பதை நான் நன்கு அறிவேன். அதனால்தான் பலமுறை மதங்களையும், ஜாதிகளையும் பற்றி இங்கே விவாதம் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன்.

நான் ஏன் இந்து மதத்தில் தொடர விரும்புகிறேன், இந்து மதம் எனக்கு ஏன் ஏற்புடையதாக இருக்கிறது என்பது குறித்து விரிவாக நித்தியானந்தர் இழையில் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். படித்து பார்த்தால் என் நிலைப்பாடு புரியும். 

ஏன் இந்து மதம் விமர்சனத்திற்கு உரியது என்றால், அது அதனை அனுமதிக்கிறது. அதுதான் இந்து மதத்தின் அழகு(ரிஷி சொன்னானே அந்த beautiful imperfection! அது தன்னை காலத்திற்கேற்ப விமர்சனங்களின் வழியாக மேம்படுத்திக் கொண்டு வருகிறது. இதனை ராமாயணத்திலேயே காணலாம். ஜபாலி என்னும் முனிவர் நாத்திகவாதம் செய்வார். யாரிடம் - ராமனிடமே. இந்த மதச் சுதந்திரம் வேறு மதங்களில் இல்லை. 

இப்படி விமர்சனங்களை அனுமதிக்கும் மதம் என்பதால்தான் இன்று கொஞ்சம் மூர்க்கமான மத வழிபாட்டு முறைகளை கொண்ட தாந்த்ரீகம், கபாலிகம்(மயிலை கபாலீஸ்வரர்..!) போன்றவை காலாவதி ஆகிவிட்டன. இந்து மதம் தன்னை திருத்திக் கொண்டுள்ளபடியால்தான் இன்று “உடன்கட்டை” இல்லை. கணவனை இழந்த யாரும் வெள்ளையுடுத்துவதில்லை. பூவும் பொட்டும் கூட வைத்துக் கொள்கிறார்கள்.

இந்து மதம் இன்று சைவம், வைணவம், ஸ்மார்த்தம் மற்றும் மற்ற ஞானமரபுகளை எல்லாம் ஒருங்கே தன்னுள் ஏற்றுக்கொண்டு ஒருமுகமாக உலகுக்கு தன்னைக் காட்டிக்கொண்டு இருப்பது எல்லாம் அது விமர்சனங்களை எதிர்கொண்டதால்தான். முற்காலத்தில் அப்படி இல்லை. சைவர், வைணவரையும், சமணர்களையும் கழுவிலேற்றி கொன்று விடுவார்கள். 

இப்படி முற்றிலும் முற்போக்கான ஒரு மதம் உலகிலேயே இல்லை என்று சொல்லலாம். இதெல்லாம் பல காலங்களாக மாற்றங்களை தன்னுள் அது அனுமதித்ததால் மட்டுமே. அந்த மாற்றங்களுக்கான குரல் என்பது என் போன்றவர்களினுடையதே. அதை முற்றிலும் புறம்தள்ளி விட்டு துவேசமாக அடையாளப்படுத்தி விட முடியாது.

இது உங்களுக்கு தேவையான முதல் புரிதல்.

இரண்டாவது, நீ பாரா சொன்னதை மட்டும் எதிர்கொண்டிருந்தால், “எங்க பழக்கவழக்கம் அப்படித்தான் இவருக்கென்ன” என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தால் பிரச்னை இல்லை. மற்ற மதங்களை அநாவசியமாக இழுக்கிறாய். அவற்றிலும் மூடநம்பிக்கை இல்லையா என்கிறாய். இது ஒருவகையில் சுயவாக்குமூலம் என்றாலும், இஸ்லாம் பற்றிய உன் அடிமன வெறுப்பையே காட்டுகிறது. அதுதான் கேட்கிறேன், அம்மதத்தின் எதை நீ மூடநம்பிக்கை என்கிறாய் என்று. 

உண்மையிலேயே உனக்கு தெரியாது. இங்கே இருப்பதால் அங்கேயும் இருக்கவேண்டும் என்பது உன் எண்ணம். அதுதான் தவறு என்கிறேன். உனக்கு எது தெரியுமோ அதைத்தான் நீ பேச வேண்டும். நீ பேசவில்லை. அதனால் நீ பாராவை கோழை என்பது விமர்சனத்தை எதிர்கொள்ள இயலாமல் வெட்டி மையக்கருத்தை திசை திருப்பும் வேலை என்கிறேன். 

இன்னும் ஒன்று. எங்கேயாவது சுவற்றில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் நான்கு கீதை வாசகங்களை மட்டும் படித்து விட்டு ‘பாரா’யணம் செய்யாதீர்கள். இந்து மதத்தில் இருந்து வந்தால், அதனை நேசித்தால், தடுத்தாட் கொண்டால் மட்டும் போதாது. கொஞ்சமாவது அதனை தெரிந்து கொள்ளுங்கள். அதனை படியுங்கள்.நிச்சயம் வேண்டாத வாதங்களை வைக்க மாட்டீர்கள். 

பேச நிறைய உண்டு. ஆனால் அதற்கான தயாரிப்புகளையும் அடிப்படை தெளிவுகளையும் நாம் தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். விமர்சனம் என்பது புடம் போட்டுக்கொள்ள சமயம் அளிக்கும் வாய்ப்பு. அது இஸ்லாமில் கிடையாது. ஆனால் இந்து மதம் அனுமதிக்கிறது. அங்கேயே அது ஜெயித்து விடுகிறது. இந்த கோட்பாட்டை நீ சுட்டிக்காட்டி இருந்தாயேயானால் நீ சமர்த்தன் :-) அப்படிச் செய்யவில்லையே.

மதங்களை பற்றிய விவாதங்கள் ஆரோக்கியமான களத்தில் அமையாமல் விட்டு வெளியே இழுத்துச் செல்லப்பட்டு வேறு மதங்களையும் சந்திக்கு இழுத்து ஒரு குழாயடி சண்டை போல எல்லாம் மாறி விடுவதை கண்டதால்தான் அது வேண்டாம் என்று ஒதுங்கி விடச் சொல்கிறேன். அப்படியில்லாமல் ஆரோக்கியமாக விவாதிக்க முடியும் என்றால் பேச எவ்வளவோ உண்டு. எதையும் நாம் எப்படி அணுகுகிறோம் என்பதை பொறுத்துதான் எல்லா எதிர்விளைவுகளும். 
மேலும்...

மதங்களையும் நம்பிக்கைகளையும் பற்றிய ஒரு விவாதம்

Posted: Saturday, March 13, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
பொதுவாக நான் எந்த வலைப்பதிவிலும் மறுமொழி எழுதுவதில்லை. நீண்ட காலத்திற்கு பிறகு அப்படி ஒன்றை ஒரு பதிவில் எழுதப்போக, அது இப்போது அங்கே மதங்களையும் நம்பிக்கைகளையும் பற்றிய தத்துவவிசாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. விவாதம் மேலும் வளர்ந்தால் அதில் இறுதிவரை ஈடுபடவும் எண்ணம் உண்டு. அதன் சுட்டியை பின்னர் கொடுக்கிறேன். இப்போதைக்கு அங்கே பதியப்பெற்ற என் சில கருத்துக்களை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

(1)

சாமியார்களை ஆதரிப்பதையும், பிறகு அம்பலங்கள் அரங்கேறியதும் தடிகொண்டு தாக்குவதையும் - இரண்டையுமே பக்தர்களாகப்பட்டவர்கள் ஒருவித கண்மூடித்தனத்துடன் செய்வதுதான் பிரச்னை.

இந்தப் பிரச்னையில் அதன் ஆனி வேரான மதநம்பிக்கையை சுட்டிக்காட்டியிருப்பது நான் படித்தவரை அநேகமாக நீங்கள் மட்டும்தான் என்று நினைக்கிறேன். நடக்க சாத்தியமில்லா விட்டாலும் தீர்வு என்பது அதுதான் எனும்போது, அதை ஒரு பதிவாககூட முன்மொழிய இங்கே பலரும் தயங்குவதுதான் புதிராக உள்ளது.

சாமியார்களின் போலித்தனங்களை ஆயிரம் ஆதாரங்கள் கொண்டு நிரூபித்தாலும், அதையெல்லாம் புறங்கையால் விலக்கி விட்டு மறக்காமல் உடனே கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பிடிவாதமான பக்திக்கு பின்னால் மரபு ரீதியான காரணங்கள் இருப்பதாக தோன்றுகிறது. காலம் காலமாக ஏதாவது உருவத்தை வழிபட்டே வாழ்ந்துவிட்டார்கள். அது சிலையாகவும் இருக்கலாம்; அதிமானிடமாகவும் இருக்கலாம். எதிலாவது தங்களை ஒப்புவித்துக்கொள்வதில் இயல்பான மனோபாவத்தை கொண்டிருக்கிறார்கள்.

(2)

Basicaana manidha charaterai gavanikka marandhu vitteergal. Manidhargalukku unmai pidikkaadhu. aarudhal mattumey pidikkum. Nithyanandha unmai peysiyirundhaal oru aalum appodhey avarai madhiththirukka maattaargal. Nithyanandha peysiyadhellaam manidhargal yedhai keytka virumbinaargalo adhaiye

உங்கள் கருத்து யோசிக்க வைக்கிறது. இது வெற்றிகரமான சாமியார்கள்/பிரசங்கிகள் எல்லோருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். வெகுஜன உளவியலுக்கு மாறான கலக கருத்துக்களின் பின்னால் — அது மெய்ஞான போதனையாகவே இருப்பினும் — எப்போதும் மெஜாரிட்டி சேர்வதில்லை. எங்கே மெஜாரிட்டி கூடுகிறதோ, அங்கே அவர்களின் முன்முடிவுகளை ஒட்டிய பிரசங்கம் நடக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

(3)

மதங்கள் மனிதர்களுக்கு என்ன அளிக்கின்றன என்னும் வழமையான பார்வையை கொஞ்சம் மாற்றி, மனிதர்களுக்கு மதங்களின் தேவை ஏன் ஏற்படுகிறது என்ற கோணத்தில் சிந்திக்கும்போது சில விஷயங்களின் மேல் உத்தேசமான ஒரு தெளிவு கிடைக்கிறது. புதிதாக ஒன்றும் இல்லை. எல்லாம் புத்தர் போன்ற மஹான்கள் ஏற்கெனவே கண்டறிந்து சொன்ன அவைதீக கோட்பாடுதான்.

அஃதாவது, மனிதன் பிணி, மூப்பு, சாக்காடு ஆகிய மூன்றின் மீதும் ஆதிகாலம் முதல் இன்று வரை பெரும் அச்சம் கொண்டவனாக இருக்கின்றான். அவற்றிலிருந்து தன்னை விடுவிக்கும் மதம்/மார்க்கம்/வழிபாட்டுமுறை எதிலாவது தன்னை ஒப்பிவித்துக்கொள்வதில் தாளாத முயற்சியுடையவனாக இருக்கிறான். அதை கண்டறிதலுக்கான தேடல், அவனில் எப்போதும் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது. இதற்கான தீர்வு சிலருக்கு அவரவர் பிறக்கும்போது உடன் சுமத்தப்பட்ட மத வழிபாட்டு முறையிலேயே கிடைத்து விடுகிறது. சிலருக்கு அதையும் தாண்டியதொரு தேடலாக நீள்கிறது.

இந்த இடத்தில்தான், சாமியார்களின் தேவை உருவாகிறது. கண்டவர்கள் விண்டதில்லை; விண்டவர்கள் கண்டதில்லை எனும்படி தங்களால் எளிதில் உணர்ந்துகொள்ளமுடியாதபடி புதிராக இருக்கும் கடவுளிடம், தாங்கள் நேரடி தொடர்பில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் சாமியார்களை, கடவுளுக்கும் தங்களுக்கும் இடையேயான மீடியமாக காண்கிறார்கள் - தேடலில் ஈடுபட்டிருக்கும் நம்பிக்கையாளர்கள். அதிலும் அச்சாமியார்களே உபாதைகளை சொஸ்தப்படுத்துபவர்களாகவும் அற்புதங்களை நிகழ்த்துபவர்களாக அமைந்துவிடும் பட்சத்தில், சிலருக்கு அவர்களே எளிதில் கடவுளாகவும் ஆகிவிடுகிறார்கள்.

யுகம் யுகமாக தேடல்கள் புதிய புதிய திசைகளில் அமைந்துகொண்டே இருக்கின்றன. அதை நிறைவு செய்யும் புதுப் புது சாமியார்களின் தேவையும், அவர்கள் போதிக்கும் வேறு வேறான வழிபாட்டு முறைகளும் ஓயாமல் உருவாகியபடியே இருக்கின்றன. ஒன்றுக்கொன்று முரணாக அல்லது மேம்பட்டதாக தோன்றும்/பிரசங்கிக்கப்படும் இவை ஒவ்வொன்றின் தொடக்கத்தையும் முடிவையும் ஒரு நூல் கொண்டு இணைத்துப் பார்த்தால் கிடைக்கும் உருவம், மேற்சொன்ன மூன்று தலையாய பிரச்னைகளின் நிவாரணத்திற்கான எத்தனங்களாகவே இருக்கக் காணலாம்.

இங்கே பிணி என்பதை பாபங்களில் இருந்து விடுதலை, நல்வாழ்வு குறித்தான பெருவிருப்பம் எனும்படி உட்கூறாக கிளை பிரித்து இன்னும் ஆழமாக சென்று பேசமுடியும். ஆனால் எல்லாவற்றின் உள்ளீடான பொருளும் முடிவில் ஒன்றாக இருக்கமுடியும்.

இங்கே சாமியார்கள் என்றால் மேற்காசியாவில் தொடர்ந்து மெஸ்ஸையாக்களின் தேவை இருந்துகொண்டே இருந்திருக்கிறது. மறுதலிக்க முடியாத மார்க்கமாக தெரியும் ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் பின்னால் வந்த மீட்பர்களால்/தேவதூதர்களால்/நற்செய்தியாளர்களால் மறுதலிக்கப்பட்டே வந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் நம்பிக்கையாளர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். இந்த உளவியலில் அறிவியலாலும்கூட பெரிய மாற்றம் எதையும் கொண்டுவந்துவிட முடியவில்லை. காரணம், இதன் பின்னாலுள்ள காரணங்கள் மரபு ரீதியானவை.

மதத்தைப்பற்றி மார்கஸ் சொன்ன ஒன்றை மேற்கோள் காட்டியிருந்தீர்கள். அதில் அந்த கடைசி வரியாகிய ‘opium of the mass' என்பதற்குத்தான் வரலாற்றில் போர்களாகவும், உயிரிழப்புகளாகவும் எத்தனை எத்தனை எண்ணற்ற உதாரணங்கள்!

மதத்தின் வரையறையாக நான் படித்தனவற்றுள் ‘இயற்கையின் போக்கையும், மனித வாழ்வையும் கட்டுப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்துவதாக நம்பப்படும் மனிதசக்திக்கும் மேலான ஒரு சக்தியுடன் நல்லிணக்கம் செய்து கொள்ளுதல்’ என்று எங்கேயோ படித்தது இன்னும் நீங்காமல் நினைவில் நீடிக்கிறது. இதற்கும் வெளியே சென்று பெரிதாக எதையும் பகுத்தாய்ந்து விட முடியாது என்றே நான் நினைக்கிறேன்.
மேலும்...

சக்ஸஸ்ஃபுல் சாமியாராவது எப்படி?

Posted: Thursday, March 11, 2010 | Posted by no-nononsense | Labels: , , 1 comments
சாமியார்கள் பற்றி தொடரும் உரையாடல்:

அடியேனும் அதை எதிர்பார்க்கிறேன்.அதற்க்கான வாய்ப்புண்டா என்று உனக்கு தெரிந்த ஒரு சுவாமிகளிடம் கேட்டு ஒரு சீட் வாங்கி தா

முன்னெச்சரிக்கை: பக்தர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம்.

எனக்கு ஆசாமிகளைத் தவிர ஒரு சாமியுடனும் சங்காத்தம் இல்லை. தவிரவும், சாதாரணமாக எல்லாம் சக்ஸஸ்ஃபுல் சாமியார் ஆகிவிடமுடியாது.

-ஊன் உறக்கம் தவிர்த்து பல மணி நேரங்கள் நிஷ்டையில் ஆழ்ந்துவிடும் திறமை வேண்டும். அல்லது அப்படி நடிக்கவாவது தெரிய வேண்டும். உறக்கம் தவிர்ப்பாய்; ஊன் உனக்கு கஷ்டம்.

-சமஸ்கிருதம் கற்றுவைத்துக்கொண்டு அதிலிருந்து அவ்வப்போது சுலோகங்களை அள்ளிவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் மாமா மாமிக்கள் நம்புவா. அவர்கள் கூட்டம் கூடினால்தான் உனக்கு பரிசுத்தர் பட்டம் கிடைக்கும். சினிமா செய்தி இல்லையெனில், அரைப்பக்கத்துக்கும் மேல் எந்த புத்தகத்தையும் திருப்பி பழக்கமில்லாத உனக்கிது ஆகாதவேலை.

-குருடர்கள் பார்க்கிறார்கள்; முடவர்கள் நடக்கிறார்கள்; சர்வ ரோகமும் சடுதியில் சொஸ்தமாகிறது என்றெல்லாம் விளம்பரம் செய்யும் மார்க்கெட்டிங் உத்தியில் வல்லவனாக இருக்கவேண்டும். அரைமணி நேரம்கூட வெளியே அலைந்து திரிய அலுத்துக்கொள்கிறாய். உனக்கு இதுவும் கஷ்டம்.

-எதைப்பற்றிக் கேட்டாலும் ஆத்மா, ஜீவன், முக்தி, கிரகம், கர்மா, வினைப்பயன், தியானம், பாவம், ஸவரஞான, பரிபூரண .. etc etc, என்று எளிதில் புரியாத வார்த்தைகளை ஆங்காங்கே தூவி விட்டு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு பதில் பேசத் தெரிய வேண்டும். அதுவும் கேட்பவன் தமிழன் என்றால் கண்டிப்பாக அவனிடம் 50% ஆங்கிலம் கலந்த தங்லீஸுல்தான் உரையாட வேண்டும். தூய தமிழில் பேசினால் ஒரே ஒரு வெள்ளை காலர் சிஷ்ய(யை)கோடி கூட கிடைக்க மாட்டான். அப்புறம் ஒரு பீடிக்குகூட வழி பிறக்காது. ஆண்களிடம் அலுக்காமல் பேசுவதென்பது உனக்கு ஒத்து வருமா, சொல்?? ம்ஹூம்!

-ஓஷோ, ஜேகே, ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானதர், தயானந்த சரஸ்வதி, அரவிந்தர், ஆரிய பிரம்ம குமாரிகள் சமாஜ தியாஸபிகல் முன்னோடிகளின் பிரசங்கங்களையெல்லாம் மிக்ஸியில் போட்டடித்து உனக்கென ஒரு மார்க்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ”இவங்க சினிமாவெல்லாம் நான் பார்த்ததேயில்லையே” என்பாய் நீ. உன்னை நானெப்படி சாமியார் ஆக்கி அழகிகள் சூழ அழகு பார்க்க?

-மேலும், முதலில் உன் மார்க்கத்துக்கென ஸ்வஸ்திக்கோ லிங்கமோ அல்லது இரண்டையும் கலந்த மாதிரியோ ஒரு குறிச்சின்னம் வடிவமைக்க வேண்டும். அது குறிப்பதாகச் சொல்ல என ஈஸ்வரனின் ரூபங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கவேண்டும்.(எல்லா பெரிய சாமியார்களும் ஈஸ்வரனை வழிபடுபவர்களாக இருப்பதன் பின்னால் உளவியல் காரணம் ஒன்று புலப்படுகிறது). இருக்கும் எல்லா சாமியார்களும் ஏற்கெனவே எல்லாவற்றையும் பிராண்ட் செய்து லேபிள் ஒட்டிவிட்டார்கள்தான் என்றாலும், நம் ஊரில் கடவுள்களின் ரூபங்களுக்கா பஞ்சம்? அதிலொன்றை இந்துத்துவ நிபுணர்களை கலந்தாலோசித்து கப்பென்று பிடித்துக்கொள். அதிலும் ஒரு கண்டிஷன், அது மாரியம்மன், காளியம்மன் என்று B-C செண்டர் சாமிகளாக இருக்கக்கூடாது. அவற்றின் பக்கமெல்லாம் மழைக்கும் ஒதுங்கக்கூடாது.

-இதெல்லாம் முடிவான பிறகு உங்கள் கம்பெனிக்கென, மன்னிக்கவும், கம்யூனுக்கென ஒரு யூனிஃபார்மும் டிஸைன் செய்ய வேண்டும்(சிவப்பை பங்காரு பேடண்ட் வாங்கிவிட்டார்). அது வெள்ளையாக இருப்பது ஷேமம். அப்போதுதான் ஹைடெக் களை கிட்டும்.

-இதுபோக, வாரா வாரம் ஏதாவது பத்திரிக்கையில் தொடர் எழுதுதல், பக்தர்களிடம் சின்ன சின்ன சித்து வேலைகள் செய்தல், அரசியல்வாதிகளுக்கு ஜோஸியம் பார்த்தல் மற்றும் ஒரே நாளில் ஒரு கோடி மரம் நடுதல், ஒரு லட்சம் பேருடன் உட்கார்ந்து மழைவேண்டி மஹாயாகங்கள் செய்தல் போன்ற ஹைஜீனிக்-ஹைடெக்-எண்வைரன்மெண்டல் சமூகப்பணிகளில் ஈடுபடுதல் என்று இன்னும் எவ்வளவோ இருக்கிறது. (சமூகப்பணி என்று சொல்லிக்கொண்டு சேரிப்பக்கமெல்லாம் போனால் அப்புறம் உன்னை ஒரு வெள்ளைக்காலர் பக்த(தை)னும் மதிக்க மாட்டான்; பணம் கொட்டவே கொட்டாது. கவனம்!)

அதனால், கார்ப்போரேட் சாமியார் ஆவதொன்றும் அவ்வளவு சுலபமில்லை. வேண்டுமானால் பஸ்கி சாமியார், விஸ்கி சாமியார், சுருட்டு சாமியார் மாதிரி நீ ’பீர் சாமியார்’ லெவலுக்கு ஏதாவது முயற்சி செய்து பாரேன்! வேலையும் பெயரும் கனப்பொருத்தமாக இருக்கும் :-))

ஓஸானா சூன்யஸ்ரீ சுரேஷானந்த பரம்ஹம்ஸம்!! :)
மேலும்...

நித்தியானந்தா சர்ச்சை - ஹிந்து மதத்துக்கெதிரான சதியா?

Posted: Friday, March 5, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
it is attempt to defame him and all hindus, please dear brothers and sisters do not write bad comments about him - A comment by someone for us to think about the truth.
இந்த சின்ன விஷயத்தை ஏன் பலரும் ஹிந்து மதத்திற்கு ஏற்பட்ட இடராக, அதை அழிக்க நினைக்கும் ஆபத்தாக பார்க்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. முதலில் ஹிந்து என்பதை ஒரு மதம் என்று சொல்வதைவிட, அதை ஒரு வாழ்க்கைமுறை என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். காரணம் இதற்கென பிரத்தியேக மதநூலோ(பகவத் கீதை மதநூல் அல்ல), நெறிமுறைகளோ, கோட்பாடுகளோ கிடையாது. உருவ வழிபாட்டை மையக் கருத்தாகக் கொண்டு அவரவருக்கு தோன்றிய மாதிரி அவரவர் வழிபாடுகள், சடங்குகள் சம்பிரதாயங்களை வகுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இஸ்லாம் போன்ற அந்நிய மதங்களின் படையெடுப்பு நிகழ்ந்தபோதுதான் இந்த வாழ்க்கைமுறைக்கென தனி மத அடையாளம் ஏற்பட்டது.

இதைவிட ஒரு முற்போக்கான மதத்தை பார்க்கமுடியாது. இதனை எதிர்த்துக் கொண்டே இதனுள் நீங்கள் தொடர்ந்து நீடிக்கலாம். எல்லா விமர்சனங்களையும் அது சகிப்புத்தன்மையுடன் அனுமதிக்கிறது. இப்போதுதான் என்று இல்லை, வேத காலம் தொட்டே விமர்சனங்களும் கருத்து வேறுபாடுகளும் இதன் ஒரு பகுதியாகவே இருந்து வந்திருக்கின்றன.

ராமாயணத்தில்கூட ஜபாலி என்பவரின் நாத்திக வாதம் அக்கதையினுள் ஒரு சம்பவமாக இன்றுவரை இடம்பெற்றிருக்கின்றன. அதை யாரும் நீக்கி விட வில்லை. சார்வாகர்கள் என்போர் ஹிந்து மதத்தின் வர்ணம்/சாதி முறைகளை எதிர்த்து பெரிய தர்க்கங்களை நிகழ்த்திய பதிவுகள் இருக்கின்றன. பிற்காலத்தில் சமணம், பௌத்தம் எல்லாம் ஹிந்து மதத்தின் வைதீக போக்கை எதிர்த்து ஹிந்து மதத்தினுள் இருந்து உதித்தவைதான்.

கி.பி முதலாம் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் முற்றிலும் சமணமும் பௌத்தமுமே தழைத்திருந்தன. களப்பிரர் என்னும் முற்போக்கு ஆட்சியாளர்களால் அந்த காலகட்டத்தில் ஹிந்து மதம் கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்டது. அப்போதுதான் பக்தி இயக்கம் தோன்றி ஆழ்வார்களும் நாயன்மார்களும் மீண்டும் பக்தி மார்க்கத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்தனர். ஹிந்து மத வாழ்க்கைமுறை மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தடைப்பட்டிருந்த உருவ வழிபாடு மீண்டும் தொடங்கியது. காரணம் இதில் கழுத்தை நெறிக்கும் கட்டுப்பாடுகள் இல்லை; கைக்கொள்ள மிக எளிதானது. அதனால் இது அழிய வாய்ப்பேயில்லை. வேண்டுமானால் புதுப் புது பிரசங்கிகளும், அவர்கள் தோற்றுவிக்கும் புதுப் புது உட்பிரிவுகளும் அவ்வப்போது தோன்றி மறைந்து வடிவம் மாறலாமேயொழிய, தேய்ந்து அழிந்து போக என் சிற்றறிவுக்கு எட்டியவரை காரணங்கள் கிடையாது.

ஹிந்து மதம் காலத்திற்கு தகுந்த மாதிரி தன்னை அப்டேட் செய்துகொள்வதும் இதற்கு முக்கியமான காரணம். இன்னும் ஐநூறு ஆண்டுகள் ஆனாலும், இஸ்லாத்தின் ஐந்து கடமைகளும், மதச்சட்டமான ஷரியாவும் சிறிதும் மாறப் போவதில்லை. அதில் கை வைக்கும் தைரியம் யாருக்கும் கிடையாது. அதேபோல்தான் கிறிஸ்துவமும். பரிசுத்த வேதாகமமே காலத்திற்கும் வாழ்வியலுக்கான மறை.

ஆனால் ஹிந்து மதத்தில் அப்படி எந்த கட்டுப்பாடும் கிடையாது. காலை அலுவலகம் வந்ததும் கம்யூட்டர் ஸ்கிரீனில் ஒரு பட்டனை க்ளிக் செய்தால், அதுவே மணியடித்து தீபாராதனை காட்டி நமக்கு பதில் பூஜை செய்து முடித்துவிடுகிறது. கையை கூப்பியோ, கன்னத்தில் போட்டுக்கொண்டோ வேலையை தொடங்கி விடலாம். இப்படி ஒரு சௌகரியத்தை எந்த மதத்தின் கோட்பாடுகளிலும் பார்க்க முடியாது. இந்தளவு கட்டற்ற சுதந்திரத்தை வாரி வழங்கும் ஒரு மத ரீதியான வாழ்க்கைமுறையிலிருந்து மக்கள் மாறிவிடுவார்கள் என்று நம்ப இடமில்லை.

எனக்கு ஹிந்து மதத்தின் மீது எவ்வளவோ விமர்சனங்கள் இருக்கலாம்; நண்பர்கள் அறிவார்கள். ஆனால் என்னை ஏதாவது ஒரு மதத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டுதான் ஆகவேண்டும் என்னும் நிலை வந்தால், இதில் பிறந்ததால் மட்டுமல்ல, அதைப்பற்றிய அறிதல் இருப்பதாலுமேகூட சொல்கிறேன், இந்த வாழ்க்கைமுறைதான் என் சாய்ஸ். ஆனால் நான் விரும்பி ஏற்கும் ஹிந்து மதம் இப்போது நீங்கள் பின்பற்றும் வழிபாட்டு வாழ்க்கைமுறையாக இருக்காது. ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றோர் நிகழ்த்திக் காட்டிய பௌத்தத்தின் சாரங்கள் நிறைந்த தர்க்க ரீதியிலான ஹிந்து வாழ்க்கைமுறையாக அது இருக்கும். ஹிந்து மதம் காலம் காலமாக அனுமதிக்கும் உட்பிரிவுதான்; அதன் இன்னொரு பரிமாணம்தான் அதுவும். உருவ வழிபாடு கொண்டும் வாழலாம். அது இல்லாமலும் வாழலாம். இதை இன்னொரு மதத்துடன் ஒப்பிடமுடியாது.

ஏதோ சில மத சாமியார்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் வரையறுத்து வைத்த சடங்குகள் சம்பிரதாயங்கள் வழிபாட்டு முறைகளை மட்டுமே ஹிந்து மதம் என்று எண்ணி அதை மட்டுமே உரைகல்லாக கொண்டு இதனை அளக்காதீர்கள். இதன் ஆகிருதி அது எல்லாவற்றையும் மீறியது. அளவிடமுடியாதது.

ஆகவே இந்த நித்தியானந்தா போனால் இன்னொரு முக்தியானந்தா வருவார். யாருக்கு எதில் விருப்பமோ அதையதை அவரவர் பின்பற்றுவார்கள். ஹிந்து மதம் தொடர்ந்து அப்படியே நீடிக்கும் - அதன் மீதான விமர்சனங்களுடன்.

இதன் மீது பேச இன்னும் நிறைய இருக்கிறது. நேரம்தான் இல்லை, இருவருக்குமே.

- நண்பர்களுடனான உரையாடலின் ஒரு பகுதி...
மேலும்...