Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

காவியம் கவிதை: பிரமிள்

Posted: Wednesday, May 4, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
வேறொரு இழையில் ரிஷி பகிர்ந்து கொண்ட ஒற்றை இறகு கவிதையைப் படித்தவுடன் எனக்கு பிரமிளின் மிகப்புகழ்பெற்ற இறகு கவிதை உடனே ஞாபகம் வந்தது. உலகத்தரமான கவிதை என்று இலக்கிய உலகில் போற்றுப்படுவது அது.

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது.

தமிழ் இலக்கிய ஆக்கங்களில் ஆர்வம் காட்ட விழைவோர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய இலக்கிய முகம் பிரமிளுனுடையது. கவிஞர், விமர்சகர், சிறுகதை ஆசிரியர் என்று பன்முக ஆளுமை கொண்ட பிரமிள் என்கிற தருமு சிவராமு, இலக்கிய ஆர்வம் காரணமாக இலங்கையிலிருந்து தமிழ்நாடு வந்து மிகத் தீவிரமான ஆளுமையாக தன்னை நிறுவிக்கொண்டதுடன், அந்தத் தீவிரம் காரணமாகவே வாழ்க்கையை தொலைத்து வறுமை பீடிக்க தெருவில் அலைந்து தொலை தூரம் சென்று முகவரி அற்று இறந்து போனார்.

பாரதிக்குப் பிறகு அதிக மரியாதையை சம்பாதித்துக் கொண்ட பின்நவீனத்துவ கவிஞர் பிரமிள்.

அவர் பத்தோடு பதினொன்றாகிவிடக்கூடாது என்பதற்காகவே இந்தத் தனிப்பதிவு.
மேலும்...

பொன்னியின் செல்வனும் மணிரத்னமும்

Posted: Saturday, April 30, 2011 | Posted by no-nononsense | Labels: , 0 comments
பொன்னியின் செல்வனை முன்வைத்து... :

மணிரத்னம் பற்றி பேசி நேரத்தை வீணடித்துக்கொள்ள வேண்டுமா என்று யோசிக்கிறேன். இங்கே ஏற்கெனவே ஒருமுறை அவர் தலை எனக்கும் நவலடிக்கும் இடையே உருண்டிருக்கிறது. அப்போதாவது ஒன்றிரண்டு உரோமங்கள் அதில் ஒட்டிக்கொண்டிருந்தன. ராவணன் என்னும் த்ராபைக்கு பிறகு அவையும் உதிர்ந்து விட்டன. இப்போது முற்றிலும் முனை மழுங்கிய மனிதராக காட்சியளிக்கிறார். இராமாயணம் என்னும் காவியத்தையே திரைக்கதையில் சரிவர கையாளத் தெரியாமல் சொதப்பிய ஒருவரால் எப்படி பொன்னியின் செல்வன் போன்ற ஒரு வெகுசன இலக்கியத்திற்கு காட்சி வடிவம் கொடுக்க முடியும் என்பது சந்தேகமாக இருக்கிறது.

மணிரத்னம் படைப்பூக்கத்துடன் செயல்பட்ட ஆரம்பகால படங்களை மட்டும் வைத்துக்கொண்டு இன்று வரை அவரை எடை போட்டுக்கொண்டு இருப்பது சரியான மதிப்பீடாக இருக்காது. கடந்த பத்தாண்டுகளில் அவரின் படங்களில் தொழில்நுட்பம் மேம்பட்டிருக்கும் அளவுக்கு படைப்பின் தரமும், அது பார்வையாளன் முன் முன்வைக்கும் மொழியும் மேம்படவில்லை என்பதற்கு ஆய்வெல்லாம் அவசியமில்லை. பத்தோடு பதினொன்றாக அவை கரைந்து எந்த வித அழுத்தமான தடங்களையும் தனக்கென பதிவு செய்துகொள்ளாமல் காணாமல் போனதே போதுமானது.

அவருடைய படங்களில் ஆரம்ப காலங்களில் தென்பட்ட குறைந்த பட்ச எதார்த்த வடிவம் சிதைவடைந்து விட்டது. சேரிகளை காட்டும்போது கூட அதில் ஒரு மேட்டிமைத்தனமான பாசாங்கை எதார்த்தம் என்று படம் பிடித்துக் காட்ய முயல்கிறார். யாரை நம்ப வைக்க? யாருக்காக? நிச்சயமாய் அவரை இந்தளவு உயர்த்திய நல்ல சினிமாவின் ரசிகர்களுக்காக அல்ல. நிச்சயமாக பத்தாண்டுகள் முன்பு வரை ‘சி’ சென்டரிலும் கூட அவரின் படத்தை நூறு நாட்கள் ஓட்டிக்காட்டிய கடைமட்ட ரசிகனுக்காக அல்ல [அலைபாயுதே வெளியான வருடம் 2000].

அவரின் உலகம் வேறு மாதிரி ஆகிவிட்டது. படைப்பூக்கம் திரிந்து, ஹிந்து, தமிழ், தெலுங்கு என்பதான மூன்று மொழிகளுக்கான வியாபார கணக்குகள்தான் இன்று அவரின் சினிமாவை நிர்ணயம் செய்துகொண்டு இருக்கின்றன. ‘மணிரத்னம்’ என்னும் brand name-ஐ மும்மொழிகளில் திறம்பட மார்க்கெட் செய்யத் தெரிந்த ஒருவராக, சமரசங்கள் நிறைந்த சரக்குகளை உற்பத்தி செய்து தள்ளிவிட்டுக்கொண்டு இருக்கிறார். இன்று மணிரத்னம் வெறும் முகமூடி மட்டுமே. அதன் பின்னால் இருந்து எல்லாவற்றையும் முடிவு செய்வதும் இயக்குவதும் அவரின் அறிவுஜீவி மனைவி என்று கேள்வி. இப்படி நீர்த்துபோய்விட்ட ஒரு மனிதரிடம் இருந்து என்ன ஒரு நல்ல காட்சியாக்கத்தை பொன்னியின் செல்வனில் எதிர்பார்த்துவிட முடியும்? எனக்கு நம்பிக்கை இல்லை.

ஜெயமோகன் இலக்கியத்தில் ஜாம்பவானாக இருக்கலாம். ஆனால் சினிமா உலகம் என்பது வேறு. கவிஞர் வாலியின் வார்த்தைகளில் சொன்னால் அங்கே யாரும் துட்டுக்கு முட்டையிடும் பெட்டை கோழியாகத்தான் இருக்கமுடியும். இதுவரை அவர் பங்கெடுத்துக் கொண்ட ஆக்கங்களில் அவரின் ஆளுமை நிரூபிக்கப்பட்டதில்லை. அண்மையில் தான் எழுதிய கதை என ஜெயமோகன் ஜபர்தஸ்தாக மார்தட்டிக்கொண்ட ‘சிந்துசமவெளி’ சந்தி சிரித்துவிட்டது. இவர்கள் இருவரும் சேர்ந்து கிண்டப்போகும் கூட்டாஞ்சோறு சுவையாக இருந்துவிட்டால் மகிழ்ச்சிதான். மாறாக, வேறு மாதிரி அமைந்துவிட்டால் அங்கே கூறுபோடப்படுவது கல்கியின் காவியமாக இருந்துவிடும் என்பதுதான் எம் கவலை. இதுவே அவர்களின் சொந்தக் கதையாக இருந்திருந்தால் இவ்வளவு பதற்றம் நமக்கு அவசியமில்லை. ஆனால், அமரர் கல்கியின் அந்த குறிப்பிட்ட காவியத்துடன் தமிழ் வாசகன் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மனதளவிலான நெருக்கம் அப்படிப்பட்டதல்லவே.
மேலும்...

தாய்மொழியும் ஆன்மிகமும் - ஜெமோவுக்கு ஓர் எதிர்வினை

Posted: Tuesday, February 22, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
மொழிக்கான தேவை என்பது அக்குழந்தைகளின் இயல்பான ஆன்மீக வல்லமை சார்ந்த விஷயம்.வெறுமே உலகியலார்வம் மட்டும் உள்ள குழந்ததைகளுக்கு ஒருவேளை தாய்மொழி தாய்நாடெல்லாம் பொருட்டாகத் தெரியாது. ஆனால் கணிசமான குழந்தைகள் அப்படி அல்ல. அவற்றுக்குள் ஆன்மீகமான ஒரு நாட்டம் உள்ளது. அவைதான் கலைகளையும் சிந்தனைகளையும் நோக்கிச் செல்கின்றன. - ஜெயமோகன்

ஜெயமோகனின் அரசியலை எளிமைப்படுத்திச் சொல்லி விடலாம். அது எந்த கருமாந்திரம் குறித்த உரையாடாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கான பதிலில் ஆன்மிகத்தையும், தேசிய இன உணர்வையும் கோட்டிங் வேலை செய்துவிட வேண்டும். உடனே கூட்டம் நாம் நடக்க நடக்க ‘லாலேலலலாலா...’ என்று பின்னால் கோரஸ் பாட ஆரம்பித்து விடும்.

மொழி உணர்வு குறித்து நான் எண்ணற்ற கட்டுரைகள் வாசித்திருக்கிறேன். இராம.கி(http://valavu.blogspot.com/) போன்ற உணர்வாளர்களுடன் நேரடி உரையாடல்களிலும் ஈடுபட்டிருக்கிறேன். பாவாணரில் மூழ்கி கிடந்திருக்கிறேன். பின்னால் அவரின் பல வாதங்களுடன் நான் ஒப்பவில்லை என்பது வேறு விசயம். ஆனால் அவர்களில் யாரிடமும் உள்ளடி அரசியல் கோட்டிங் வேலையை நான் காணவில்லை. குழந்தைகள் மொழி உணர்வுடன் இருக்க வேண்டும் ஏனென்றால் அப்போதுதான் அவர்களுக்கு ஆன்மிக நாட்டம் இருக்கும். ஏனென்றால் அது அவர்களின் ஆன்மிக வல்லமை சார்ந்த விசயம். பலே ஜெயமோகன்! ஒரே வரியில் தமிழ்நாட்டின் கார்ப்போரேட் சாமியார்களின் பின்னால் ஆன்மிக நாட்டம் கொண்டு தன்னுணர்வற்று திரியும் மேட்டுகுடி வர்க்கத்தையே புறந்தள்ளிவிட்டார்.

உண்மையில் ஆன்மிக நாட்டத்திற்கும் மொழிக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை. எந்த மொழியில் பொழிப்புரைத்தால் என்ன... ஆன்மிக நாட்டம் வளரவேச் செய்யும். அது முற்றிலும் மனம் சார்ந்த விஷயம். தத்துவம் சார்ந்த விருப்பம். ஓஷோ என்ன தமிழ் மொழியிலா ஆன்மிக தொண்டாற்றினார். இல்லை ஜெமோ இங்கே காட்டியிருக்கும் ராமாயணம் என்ன தமிழ் மொழியிலா இயற்றப்பட்டது? தமிழில் உள்ள பக்தி இலக்கியங்களின் காலம் என்ன? மிஞ்சிப் போனால் ஒரு நானூறு ஆண்டுகள்! தமிழின் தொன்மை ஜெமோவே கூறியுள்ளது போல ஐயாயிரம் ஆண்டுகளை தாண்டும். ஐயாயிரம் ஆண்டுகளில் வெறும் நானூறாண்டு பக்தி இலக்கியங்கள்தான் மொழியுணர்வை அளித்து ஆன்மிக நாட்டத்தை குழந்தைகளிடம் புகட்டுகின்றனவா?

தாய்மொழியின் அவசியம் என்ன? குறிப்பான தமிழை நம் அடுத்தடுத்த தலைமுறைகளிடம் கொண்டுசெல்வதன் நோக்கம் என்ன? தமிழின் தொன்மையும், அதன் இலக்கிய வளங்களும், அது அளிக்கும் முடிவற்ற சுவையும்தான். அதன் தொன்மையைப் பற்றி எழுதிக் கொண்டிருந்தாலே இங்கே இடம் காணாது. எழுத திறனும் போதாது. உதாரணமாக,

“வைசிகன் பெறுமே வாணிப வாழ்க்கை”

இதன் அர்த்தத்தை விளக்கவும் வேண்டுமா? எல்லோருக்கும் புரியும் மொழிதான். அதாவது வைசிகன் (வணிகன்) வாணிபம் செய்யும் வாழ்க்கையை பெறுவான் என்பது பொருள்.

இன்னொரு உதாரணம் பார்ப்போம்.

“வேளான் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிக்ழ்ச்சி”

வேளாண்மை செய்பவனுக்கு உழுவதே தொழில். அதுவன்றி அவன் வேலை வேறு இல்லை.

எவ்வளவு எளிமையாக புரிகின்றன. இது தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் வரிகள். தமிழில் கிடைக்கப்பெற்ற ஆதி நூல் தொல்காப்பியம். அது வழிநூல் தான். அதற்கு மூலநூல் அகத்தியம் கிடைக்கவில்லை. தொல்காப்பியக் காலம் 4500 ஆண்டுகள் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்து. அது இடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட நூல். இடைச்சங்கம் 3500 ஆண்டுகள் நடைபெற்றதா சொல்லப்படுகிறது. அது உண்மையானால் முதல் சங்க காலம் 7500 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கக்கூடும்.

இவ்வளவு தொன்மை வாய்ந்த தமிழ் இன்று வரை சிறு சிறு வரிவடிவ மாற்றங்களைத் தவிர மற்ற பெரும் மாறுதலின்றி தன்னுடன் எண்ணற்ற இலக்கியச் செல்வங்களை தாங்கிக்கொண்டு கடந்து வந்திருக்கிறது. காலமெல்லாம் அவற்றை கற்றுக்கொள்ள நினைத்தாலும் முடியாது. அதை ஆங்கிலம் என்னும் போலிகௌரவத்தின் காரணமாக நம் காலத்தில் அழியவிட வேண்டுமா? உலகில் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் முதிர்ச்சியுள்ள வேறு எந்த சமூகமும் செய்ய மனம் உவக்காத இந்தச் செயலை நாம் நம் காலத்தில் பிரக்ஞையற்று ஸ்மரணை செத்து செய்து கொண்டிருக்கிறோம். அது எவ்வளவு கேவலம்?

இதைப்பற்றியெல்லாம் என்னை விட அதிகம் எழுதும் விஷயஞானம் கொண்டவர் ஜெமோ என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. நான் அறிவில் சிறியன். ஆனால் அதையெல்லாம் அவர் செய்ய மாட்டார். காரணம் அவரின் நோக்கம் அவரின் பீடம்.
மேலும்...

கீதை

Posted: Thursday, December 30, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஒன்றை தேடப் போய் சில சமயம் பல நாள்களாக தேடி சலித்த வேறு ஒன்று அகப்படும். இன்று அப்படியாக ஒரு பழைய ரசீதை தேடி என்னுடைய அலமாரியில் முத்து குளித்துக்கொண்டிருந்த பொழுது கீதை சம்மந்தப்பட்ட என்னுடைய பழைய குறிப்புகள் சில அகப்பட்டன. தேடியதை விட்டு விட்டு கிடைத்தவற்றை படித்துக்கொண்டிருந்தேன். அந்தக் குறிப்புகளின் காலம் குறைந்தது ஆறு வருடங்கள் இருக்கலாம். கீதையை மிகத் தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்த ஒரு காலகட்டம் அது.

கீதையை பொறுத்தவரை அது மகாபாரதத்தில் உபதேசமாகும் இடம் மட்டுமன்றி கீதையின் உள்ளடக்கமான பல பரிமாணங்களையும் கருத்தில் கொண்டு பரிசீலிக்கும்போது அது நிச்சயமாக ஒரு இடைசெருகலே என்றுச் சொல்ல முடியும். ஆனால் ஒரு அழகிய இதிகாசத்தின் சுவாரசியத்துக்கு வலு சேர்க்கும் ஓர் அங்கம் அது என்னும் கருத்து மிகையானதில்லை. அது ஒரு அழகிய ஆபத்து. அதே நேரம் பாம்பின் விஷம் மருந்தாவது போல உள்ளத்தின் தெளிவுக்கும் அது ஒரு ஔஷதம் என்பதுதான் அதன் சிறப்பு.

கீதையை தன்னுள் தாளப் பொறுத்திக்கொண்டுள்ள மகாபாரதம் போன்ற இதிகாசங்களை பொறுத்தவரை எஸ்.ரா சொல்வது போல அவை இயல்பும் அதீதமும் கலந்தவை. அந்தக் கலப்பில் எது இயல்பு எது அதீதம் என்றெல்லாம் கண்டறிந்து கொள்வது கடினம். அவ்வாறாக கண்டறிந்து கொள்ள இயலாத ஒன்றுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு வடிவம் தந்து பார்க்க நினைப்பதும் ஒரு குறிப்பிட்ட தத்துவார்த்த விளக்க வகைமைக்குள் அதனை அடையாளப்படுத்த நினைப்பதும், தர்க்க ரீதியாக தோல்வியை சந்திக்க கூடிய ஒரு முயற்சியாக இருந்துவருகிறது. ஆனால் அதனைத்தான் வெற்றிகரமாக வேதாந்திகளின் மரபு செய்துவந்துள்ளது. அவர்களின் வெற்றியின் அடித்தளம் மறுபுறமுள்ள மக்களின் அறியாமையில் உள்ளது.

இதனைப் பற்றி விரிவாக எழுதுவது பல நூற்றாண்டு கால வேதாந்த மரபை பற்றிய ஆய்வாக மாறிவிடக்கூடிய ஒன்றாக ஆகிவிடும். பணத்தின் பின்னால் அலைவது ஓய்ந்து வாசிப்பதற்காக மட்டும் அமரும் ஒரு காலம் கைகூடினால் இவற்றை தர்க்கரீதியாக அணுகி தன்னளவில் விளங்கிக்கொள்ள சித்தம் கொண்டிருக்கிறேன். பார்ப்போம்.
மேலும்...

எல்லே இளம்கிளியே

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
எல்லே இளம்கிளியே

மார்கழித் திங்கள் 15ஆம் நாளில் பக்தர்கள் பாடி மகிழும் ஆண்டாள் திருப்பாவையின் கீழ்காணும் 15ஆம் பாடல் ஓர் அற்புதம்! ஒரு சிறிய அழகிய நாடகமே அதில் அடங்கியுள்ளது. பக்தியோடு தமிழின் செழுமைக்காகவும் பக்தி இலக்கியங்களை படியுங்கள் தோழர்களே.

எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

(உறங்கிக்கொண்டிருப்பவளை தட்டியெழுப்பி பெருமாளை பாட அழைக்கிறாள் ஒருவள். அதற்கு மறுமொழி தருகிறாள் மற்றவள்)

இன்று அதிகாலை
செய்திதாளில்
இப்
பாடலையும் பொருள் விளக்கத்தையும் படித்ததில்
இருந்தே இதைத்தான்
வாய் முணுமுணுத்துக்கொண்டு இருக்கிறது.

பொருள்:

எழுப்புவோர்: ஏண்டி! இளங்கிளி போல் மிழற்றும் குமரிப் பெண்ணே, இன்னமும் உறங்குகின்றாயே!

தூங்குபவள்: பெண்களே! 'சில்' என்று கத்தி கூப்பிடாதீர்கள்! இதோ வந்து விடுகின்றேன்.

எழுப்புவோர்: நீ மிகவும் கெட்டிக்காரி! பசப்பு வார்த்தைக்காரி! உன்னுடைய பேச்சுவன்மையை நாங்கள் முன்பே அறிவோம்! உன் வாயையும் நாங்கள் அறிவோம்!

தூங்குபவள்: கெட்டிக்காரிகள் நீங்களா? நானா? நானே ஆனாலும் சரி.

எழுப்புவோர்: சீக்கிரம் எழுந்து வா! இந்த கெட்டிக்காரத்தனத்தைத் தவிர வேறு என்ன வைத்திருக்கின்றாய்!

தூங்குபவள்: நம் தோழியர்கள் அனைவரும் வந்து விட்டனரா?

எழுப்புவோர்: வந்து விட்டார்கள்! சந்தேகம் இருந்தால் நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள். குவாலயாபீடம் என்ற யானையை கொன்ற கண்ணனை, பகைவரின் செருக்கை அழிக்க வல்லவனை(வல்லானை) மாயக்கண்ணனின் புகழைப் பாடலாம் சீக்கிரம் வாடி.


மேலும்...

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

Posted: Thursday, September 23, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி (இவர் ஒரு மன்னர்) என்னும் சங்க கால புலவர் அக்கால சான்றோர் பெருமக்களைப் பற்றி எழுதிய உரை ஒன்றை வாசித்தேன். அதில் அவர் இவ்வாறு கூறுகிறார்:
“தேவர்களுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும் அதனைத்தாம் மட்டும் தனியே உண்ணமாட்டார். யார்மீதும் வெறுப்புக் கொள்ள மாட்டார். பிறர்க்கு வரும் துன்பம் கண்டு அவர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சி அத்துன்பத்தை நீக்கும் வரையில் கண் துயில மாட்டார். புகழ்தரக்கூடிய செயலென்றால் அதற்குத் தம் உயிரையும் கொடுப்பார். பழி வருவதாயின் அதன்பொருட்டு உலக முழுதும் பெறும் வாய்ப்பு வந்தாலும் அதனை ஏற்க மாட்டார். அவர்கள் தமக்கென்று முயற்சி     செய்யும் தன்னலமற்றவர். பிறர்க்கென்றே முயற்சி மேற்கொள்வர். அத்தகையோர் இருப்பதால்தான்     இந்த     உலகம்     வாழ்ந்து கொண்டிருக்கின்றது"

புலவர்கள் எதையும் சிறிது மிகைப்படுத்திதான் கவிபுனைவார்கள். அந்த மிகையை மட்டும் குறைத்து விட்டு தேடினாலும் கூட இக்காலத்தில் அப்படிப்பட்ட மனிதர்கள் அகப்படுவார்கள் என்று நிச்சமில்லை. நுகர்வு கலாச்சாரம் மக்களின் அடிப்படை குணாம்சத்தில் ஏற்படுத்தியுள்ள பாரிய மாற்றம் இது.

இந்த கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி கடலுக்குள் கலத்தில் செல்லும்போது மாய்ந்து விட்டதால் இந்த பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். இதுபோல் சங்ககால புலவர்களின் பட்டப்பெயர்களெல்லாம் சுவாரஸ்யமான காரண கதைகளை கொண்டிருக்கின்றன.
மேலும்...

நீர்க்கோல வாழ்வை நச்சி

Posted: Friday, August 6, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments

இன்றைய தினம் கம்பனும் இனிதே துவங்குகிறது.

“நீர்க்கோல வாழ்வை நச்சி” என்ன ஓர் உவமை !!!

அது கம்பராமாயணத்தில் வரும் போர்க்களக் காட்சி. ராமனை எதிர்கொள்ள ராவணன் சார்பில் கும்பகர்ணன் போர்களம் புகுந்திருக்கிறான். அப்போது விபீஷணன் அவனை சந்திந்தித்து ‘நீயும் ராமனுடன் சேர்ந்து விடு’ என்று வேண்டுகிறான். அதற்கு கும்பகர்ணனின் பதில் தான் இந்த பாடல்:
நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள்வளர்த்துப் பின்னை
போர்க்கோலம் செய்துவிட்டார்க்கு உயிர் கொடாது அங்குப் போகேன்
தார்க்கோல மேனி மைந்த எனதுயிர் தருதியாயின்
கார்க்கோல மேனியானைக் கூடுதி கடுகின் ஏகி.
'தண்ணியில வரஞ்ச கோலம் மாதிரியான இந்த வாழ்வில், இத்தன நாள் வளத்து, இன்னிக்கு சண்டக்கிப் போடா'ன்னு அனுப்பி வச்சவனுக்குத்தான் என் உயிரைத் தரணும். அவன் செய்வது சரியில்லைஎன்று எனக்கு நல்லாவே தெரியும். ஆனா, அவனுடைய அடியவன் என்ற முறையில் இது என் கடமை. நீ செய்தது ரொம்ப சரி. அதுல எனக்கு வருத்தமே கிடையாது. நீயாவது பிழைத்திருக்க வேண்டும். என்னை வாழ வைக்கணும்னா, உடனே, இப்பவே போயிமறுபடியும் ராமன் பக்கத்துல நில்லு. தம்பீ, ஏன் சொல்றேன்னா, அண்ணன் நாளைக்குச் செத்துக் கிடப்பாம்பா. அவன் பக்கத்துல கிடக்கிறத்துக்கு ஒரு தம்பியின் பிணமாவது இருந்தாகணும்பா. 'தம்பியர் இன்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்மேல்'. நீயாவது பிழைச்சிருந்தாகணும்ப்பா.

பொருள் விளக்கத்திற்கு நன்றி: திரு.ஹரிகிருஷ்ணன், அகத்தியர் யாஹூ குழுமம்.
மேலும்...

நாமக்கல்லின் இலக்கிய முகம் (1)

Posted: Sunday, December 27, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
எனக்கு நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தின் மீது ஒரு விஷயத்தில் மாளாத பொறாமை உண்டு. அன்று முதல் இன்றுவரை சுந்தரம் ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், அ.கா.பெருமாள் போன்ற பல இலக்கிய எழுத்தாளர்களை தமிழுக்கு நல்கிய மாவட்டம் அது. இந்த வரிசையில் உள்ள முதல் மூன்று பெயர்களை தவிர்த்து நவீன தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை எழுதுதல் சாத்தியமில்லை. என் மனதுக்கு நெருக்கமான கவிஞர் தொ.சூசைமிக்கேலும் அதே மாவட்டத்துக்காரர் தான்.

அது போல், நாமக்கல்லின் இலக்கிய முகம் யாது என்று சிந்தித்துப் பார்த்திருக்கிறேன். புத்தகப்பிரியர்களான சில நண்பர்களை வினவியும் இருக்கிறேன். நாமக்கல் கவிஞரை தாண்டி வேறு ஒருவரை சுட்டிக்காட்ட ஒருவராலும் இயலவில்லை. நாமக்கல் கவிஞர் தீவிரமான இலக்கியப் பணி ஆற்றியது சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் - கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பு. அதற்கு பிறகு நாமக்கல்லில் இலக்கியம் படைக்க
ஒருவருமே இல்லையா என்பதுவே என் ஆரம்ப கால தேடலாக இருந்தது. சோகம் என்னவென்றால், அங்கொன்றும் இங்கொன்றுமாக குமுதத்திற்கு காமாசோமா ஒருபக்க கதைகள் எழுதிவிட்டு இலக்கிய அந்தஸ்துக்கு துண்டு போட்டு காத்திருக்கும் ஒரு சிலரைத் தவிர, காத்திரமான இலக்கிய படைப்பாளி என்று சொல்லிக் கொள்ள ஒருவருமே இல்லை என்பதுதான் நிதர்சனமாக இருக்கிறது. சிலம்பொலியார் இருக்கிறார் என்றாலும், அவரும்கூட பழந்தமிழ் இலக்கியத்தில் திறனாய்வு செய்தவரே தவிர, படைப்பிலக்கியமாகிய புனைவில் ஈடுபட்டவர் அல்ல என்றே நினைக்கிறேன்.

எனினும், இரண்டு எழுத்தாளர்கள் மட்டும் தமிழக இலக்கிய அரங்கில் நம் மானத்தை காத்துவருகின்றனர். ஒருவர், கு.சின்னப்ப பாரதி. மற்றொருவர், பெருமாள் முருகன். ’கூளமாதாரி’ என்னும் வட்டார வழக்கு நாவல் எழுதி புகழ்பெற்ற பெருமாள் முருகன் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர். நாமக்கல் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில்(கரட்டு காலேஜ்) விரிவுரையாளராக பணியாற்றுகிறார். அவரை பற்றி இன்னொரு நாள். இப்போது நான் சொல்லவந்தது, கு. சின்னப்ப பாரதி பற்றி.

கு. சின்னப்ப பாரதி (பரமத்தி)வேலூர் வட்டம் பொன்னிரிப்பட்டியை சேர்ந்தவர். கொங்கு வேளாள கவுண்டர். இங்கு இனத்தைப் பற்றி வலிந்து நான் சொல்லக் காரணம் அவர் அதையெல்லாம் உதறித் தள்ளி பொதுவுடமைவாதியாக (கம்யூனிஸ்ட்) காலமெல்லாம் வாழ்ந்துவருபவர் என்பதால்தான். நாமக்கல் மாவட்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆனிவேராக இயங்கியவர்களில் ஒருவர் அவர். அதுமட்டுமன்றி, இயக்கத்தின் பிரபலமான செம்மலர் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். அவருடைய கம்யூனிச இயக்க செயல்பாடுகளின் இடையே ஒரு தீவிர படைப்பிலக்கியவாதியாகவும் பரிணமித்து சில அற்புத புதினங்களை தமிழுக்கு தந்திருக்கிறார். இடதுசாரி இலக்கியத்தில் முக்கியமானதாக பெரும்பான்மையான விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்படுவது அவரது தாகம் மற்றும் சங்கம் ஆகிய நாவல்கள் ஆகும். ஏனையவை, தலைமுறை மாற்றம், சர்க்கரை, பவளாயி, சுரங்கம். இவற்றில் நான் தாகம் தவிர மற்றவற்றை இன்னும் படிக்கவில்லை என்பதால் படைப்பை முன்வைத்து கருத்துகூற முடியவில்லை. இருந்த போதிலும், படைப்புகளைப் படித்த ஜெயமோகன் போன்ற மற்ற படைப்பாளிகளிடம் உரையாடிய வகையில் கு. சின்னப்ப பாரதியின் எழுத்துக்கள் பெற்றுள்ள மரியாதையை உணர்ந்து கொள்ள முடிகிறது.

இவரை நான் முதலும் கடைசியுமாக சந்திந்தது, நாமக்கல்லின் பிரபல இடதுசாரி சிந்தனையாளரும் என் உறவினருமான கே.பழனிசாமியின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில். குழுமியிருந்த கூட்டத்திற்கு இடையில் பெரிதாக பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனினும், கொல்லிமலையில் 1950 வாக்கில் நடைபெற்ற கந்துவட்டி எதிர்ப்பு போராட்ட அனுபவங்கள் பற்றி சிறிது மட்டும் கேட்டு அறிந்தேன். வரலாறு தெரியாதவர்களால் கம்யூனிஸ்ட்கள் என்றால் ஏதோ தெருமுக்கில் நின்று கோஷமிடும் கோமாளிகள் மாதிரி பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் சமூகத்திற்கு ஆற்றியுள்ள பணிக்கு நிகராக இன்னொரு இயக்கத்தை யாராலும் சுட்டிக் காட்ட முடியாது. நான் மேற்சொன்ன அந்த கொல்லிமலை சம்பவத்தை குறிப்பாக நான் கேட்டறிய காரணம் - உழைப்பதும் அதைக்கொண்டு பிழைப்பதும் அன்றி வேறொன்றும் அறியாத ஒரு பழங்குடி இனத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை, அடக்குமுறை பற்றிய ஒரு காலகட்டத்தின் உண்மை வரலாற்றை அறிந்து கொள்ளும் நோக்கத்தில்தான். நம்மை சுற்றி பல நூறு வரலாறுகள் பனி மறைக்கும் பார்வையாக காலத்தால் மறைக்கப்பட்டு கிடக்கின்றன. அவற்றை அறிதலின் மூலம் நாம் நம் உண்மையான வரலாற்றை மீட்டெடுப்பது, காலம் காலமாக நம் முன்னால் பரப்பப்பட்டுவரும் பொய்யுரைகளை கட்டுடைக்க உதவும். இதனால்தான் நான் தீராத சரித்திர காதலனாக இருக்கிறேன். பார்வை நாளுக்கு நாள் தெளிவடைந்து வருகிறது.

அந்த ஒருமுறைக்குப் பிறகு வேறு எந்த இலக்கிய கூட்டங்களிலும் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தாலும் சந்தர்ப்பவாத முகஸ்துதிகள் மட்டுமே இலக்கிய உரைகளாக பொழியப்படும் இடத்தைவிட்டு அகன்றே வருகிறேன். இதனால் கு. சின்னப்ப பாரதி அவர்களை பிறகு சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று இணையத்தை மேய்ந்து கொண்டிருந்த போது கு. சின்னப்ப பாரதிக்கு சென்னையில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் கலைஞர் பொற்கிழி விருது அளிக்கப்பட உள்ளது என்று அறிந்தேன். எத்தனையோ செய்திகள் நம்மை கடந்து போகின்றன. நமக்கு சம்மந்தமுள்ளது என்று அறியாமலே அவற்றில் எத்தனையோ பெயர்களை நாம் கடக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு பெயராகவே கு. சின்னப்ப பாரதியினுடையதும் நாமக்கல்வாசிகளால் கடந்து செல்லப்படுகிறது. அவர்களுள் நாமும் ஒருவராக இல்லாமல் குறைந்த பட்சம் அவரை பற்றி தெரிந்து கொள்ளவாவது செய்யலாமே என்ற நோக்கத்தில்தான் இதனை எழுதினேன். வேறு சந்தர்ப்பங்களில் மற்றவர்களைப் பற்றியும் எழுதுகிறேன்.
மேலும்...