Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

முரளிதரன் என்னும் சிங்களத் தமிழன்

Posted: Friday, July 15, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
இலங்கைக்கு எதிராக செயல்படுவதா?- இங்கிலாந்து, ஆஸி.யில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு முரளிதரன் கண்டனம்! --> http://thatstamil.oneindia.in/news/2011/07/15/muralitharan-warns-oz-not-boycott-sl-series-aid0091.html


முரளிதரன் இப்படித்தான் பேச முடியும். மாற்றிப் பேசினால் தான் அது செய்தி.

முரளிதரன் ஈழத்தமிழன் கிடையாது. மலையகத் தமிழன். அதாவது இந்திய வம்சாவழித் தமிழன். இன்னும் சொல்லப் போனால் இந்தியத் தமிழன் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் முரளிதரனிடம் இந்திய குடியுரிமையும் உண்டு.

இலங்கையை பொறுத்தவரை தமிழர்களிடையே மூன்று பெரும் பிரிவுகள் நிலவுகிறது. ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள். இவர்களிடையே ஒற்றுமை கிடையாது. குறிப்பாக மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எப்போதும் நல்லுறவு இருந்தது கிடையாது.

ஈழப் போராட்டத்திற்கு உள்ள நியாயங்கள் அளவுக்கு மலையகத் தமிழர்களின் குடியுரிமை போராட்டத்திற்கும், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கும் உண்டு. அதுவும் ஒரு கண்ணீர் கதைதான். 1988 வரை அவர்களை இலங்கை குடி மக்களாகவே அந்த நாடு அங்கீகரிக்கவில்லை. உண்மையில் 6 இலட்சம் மலையகத் தமிழர்களை இந்தியா திரும்ப அழைத்துக் கொள்வதாக சாஸ்திரி-பண்டாரநாயகா இடையே ஒரு ஒப்ப்ந்தம் கூட கையெழுத்தானது. பின்னர் அது கைவிடப்பட்டு ஜெயவர்த்தனே காலத்தில் 1988-ல் தான் அவர்களுக்கு இலங்கை குடியுரிமை அளிக்கப்பட்டது.

இப்படி அவர்கள் தங்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதில் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் ஈழப் பிரச்னைகளைப் பற்றி அவர்கள் அக்கறை காட்டியதில்லை.
அவர்களை இலங்கைத் தமிழர்களாக ஈழத் தமிழர்கள் கருதியதுமில்லை. குடியேறிகள் என மட்டம் தட்டி பேசுவார்கள். ஈழப் போராட்டத்தில் ஏதேனும் பதட்டமான சூழல் என்றால் அதில் பங்குபெறாத மலைகத் தமிழர்கள் தான் முதலில் தாக்கப்படுவார்கள். இதனால் இவர்களிடயே ஒரு ஒட்டுதல் கிடையாது.

கண்டியில் அந்த மாதிரி ஒரு சமூகத்தில் பிறந்து வளர்ந்து, சிங்களவர்களால் போஷிக்கப்பட்டு, அரசின் சலுகைகளை பயன்படுத்திக் கொண்டு தன் முதலீடுகளை பெருக்கிக்கொண்ட முரளிதரனிடம் இருந்து வேறு என்ன மாதிரி நிலைப்பாட்டை எதிர்பார்க்க முடியும்?

இதில் ஆச்சரியமில்லை.
மேலும்...

சகோதர யுத்தம்

Posted: Wednesday, October 27, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
நெடுமாறன்: ஈழத்தில் போராளிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்தியஅரசின் 'ரா' உளவுத் துறைதான் அதற்குக் காரணம். 'டெலோ' இயக்கத்துக்கு ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து, புலிகளுடன் மோதும்படி தூண்டிவிட்டது 'ரா'. அதன்படி, அவர்கள் ஆங்காங்கே விடுதலைப் புலிகளை சுட்டார்கள். சிலரைப் பிடித்துக்கொண்டு போனார்கள். அப்போது விடுதலைப் புலிகளின் சார்பில் இது குறித்து 'டெலோ' தலைவர் சிறீசபாரத்தினத்துடன் பேச்சு நடத்த கேப்டன் லிங்கம் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த லிங்கத்தின் இரு கண்களையும் தோண்டி எடுத்து, அவரைக் கொடூரமாகக் கொலை செய்தார் சிறீசபாரத்தினம். இதற்கு பதிலடியாகத்தான் புலிகளின் தாக்குதல் நடந்தது.

நெடுமாறனின் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. ஈழத்தின் ஆரம்ப கால அரசியலில் RAW-ன் பங்கு பெருமளவு இருந்ததாக கூறப்படுகிறது. 

அதை விடவும் புலிகளின் எதேச்சதிகார மனோபாவம்தான் மற்ற சக போராட்ட குழுக்களை அழித்தது என்பதும் உண்மைதான். குறிப்பாக TELO தலைவர் சிறீசபாரத்தினத்தை புலிகள் கொன்றதற்கு சகோதர யுத்தம்தான் காரணம். அதைப்பற்றி ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ புத்தகத்தில் சி.புஸ்பராஜா (EPRLF) விரிவாக எழுதியுள்ளார். 

புலிகளுக்கு பயந்து புகையிலை தோட்டத்தில் ஒளிந்து கொண்டிருந்த சிறீசபாரத்தினத்தை புலிகள் சூழ்ந்து கொண்டனர். அப்போது தான் புலி தலைமையுடன் பேச விரும்புவதாகவும் தன்னை கொல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டிருக்கிறார். ஆனால் புலிகள் கொஞ்சமும் இரக்கம் காட்டிக் கொள்ளவில்லை. கிட்டுவின் கையில் இருந்த ஏ.கே.47 துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டுகள் சிறீயின் உடம்பில் 20 இடங்களில் துளைத்தெடுத்தன. தமிழீழ போருக்கு தன்னை ஒப்புக் கொடுத்த வீரனின் உயிர் எதிரியால் போகவில்லை. இன்னொரு சக போராட்டக்காரனாலேயே போனது வருத்தத்துக்குரிய விஷயம்.

ஏன் சிறீ அவ்வளவு முக்கியத்துவம் கொண்டவராக கருதப்படுகிறார்?

பிரபாகரனுக்கு அடுத்து மக்களின் ஆதரவை பெற்று இரண்டாம் நிலையில் இருந்தவர்கள் சிறீயும்(TELO) பத்மநாபாவும்(EPRLF). அவர்களில் சிறீ, ஒரு நெடிய போராட்ட வரலாற்றை தன் பின்னால் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சீறீ படுகொலையை புரிந்துகொள்ள ஒரு எளிமையான உதாரணமாக ஸ்டாலினை அழகிரி போட்டுத்தள்ளிவிட்டால் என்ன மாதிரி ஒரு அதிர்ச்சி அலை எழும்புமோ, அப்படித்தான் அப்போதும் நிகழ்ந்தது. 

பின்னாட்களில் பத்மநாபாவும் புலிகளால் சென்னையில் கொல்லப்பட்டு விட்டார். 

புலிகளின் சகோதர யுத்தம் பற்றி நிறைய எழுதலாம். ஆனால் முடிவாக அவர்கள் அதில் அடைந்த பலன் பூஜ்ஜியம் என்பதை நெஞ்சில் நிறுத்தி பார்க்கும்போது, எதையும் பேசவோ எழுதவோ தோன்றுவதில்லை.

* * *

சிறீயை லிங்கம் சந்திக்கச் சென்றது தொடர்பான தொடர்பான ஈழவேந்தனின் விரிவான கட்டுரை ஒன்றை நாம்தமிழர் இணையதளத்தில் படித்திருக்கிறேன். தேடினால் கிடைக்கக் கூடும்.
மேலும்...

போருக்குப் பின்

Posted: Tuesday, September 28, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவ்வப்போது ஈழம் சார்ந்த செய்திகளை, குறிப்பாக யாழ்குடா நாட்டு நடப்புகளை அறிந்துகொள்வதில் எனக்கு ஒரு தனி ஆர்வம். போர் முடிந்த கட்டுப்பாடுகளற்ற ஒரு தளை தளர்ந்த சூழலில் யாழ்பாணத்தின் புதிய கலாச்சார சூழலை அம்மக்கள் எங்ஙனம் எதிர்கொள்கிறார்கள் என்பனவற்றை நிதானித்து வாசித்து வருகிறேன்.

மக்கள் இந்தியாவின் தாக்கம் மிகுந்த ஒரு நுகர்வு கலாச்சரத்தில் தம் இளம் சமூகத்தினர் திளைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருப்பதை உணர முடிகிறது. கலாச்சார சீரழிவு அபாய அலறல்கள் அணு தினமும் ஏதாவது பத்திரிக்கைகளில் கட்டுரைகளாக வெளிவந்தவாறு உள்ளன. இவை இனி தவிர்க்க முடியாதவை என்பதை முன்தலைமுறையினர் உணர வெகுகாலம் பிடிக்கும் என்று தோன்றுகிறது. அதுவரை புலம்பலும் விசும்பலும் விடாமல் கேட்கும்.

இது சம்மந்தமாக இரு கட்டுரைகள் படிக்க கிடைத்தன:

http://www.jaffnavoice.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%87/
http://www.jaffnavoice.com/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95/
மேலும்...

தற்கால ஈழச்சூழலில் எம்ஜிஆரையும் வைகோவையும் முன்வைக்கும் அரசியல்

Posted: Monday, March 1, 2010 | Posted by no-nononsense | Labels: , 2 comments
தற்கால ஈழச்சூழலில் எம்ஜிஆர், வைகோவை முன்வைத்த விவாதத்திலிருந்து:

எம்ஜிஆர் சாகும்போது அவருக்கு 70 வயது. இன்னும் உயிருடன் இருந்திருந்தால் தற்போது 93 வயது ஆகியிருக்கும். அவருக்கு இருந்த உடல் உபாதைகளில் இதெல்லாம் நடக்கிற காரியமா? இந்த ஈழப் பிரச்சினையைப்பற்றி பேசும் புலி ஆதரவாளர்கள் எல்லாம் ஏன் இன்னும் ”எம்ஜிஆர் மட்டும் இருந்திருந்தால்..” என்று இறந்து புதைத்து விட்ட செய்தி ஒன்றுக்கு பூ வைத்து பொட்டு வைத்து உதார் விடுகிறார்கள் என்பதுதான் எனக்கு புரியாத புதிர்.

எம்ஜிஆர் புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார்; கோடி ரூபாய் பணம் கொடுத்தார் என்பதெல்லாம் அதை அவர் கொடுத்த காலத்தில் சுலபமான காரியம். அப்போது ராஜிவ்காந்தியோ பத்பநாபாவோ இந்தியாவில் புலிகளால் கொல்லப்பட்டிருக்கவில்லை. மேலும், ஈழப் பிரச்சினையை அங்கே அரசியல் ரீதியாகவும் முன்னெடுக்க அமிர்தலிங்கம் போன்ற மக்கள் ஆதரவை பெற்ற மிதவாத தலைவர்களெல்லாம் இருந்தனர். அதனால் ஆயுதம் அரசியல் என இருபுறமும் போராட்ட களன் சமநிலை பெற்றிருந்தது.

ஆனால் ராஜிவ் கொலைக்கு பிறகு இந்திய தேசிய அரசியலில் மட்டும் அல்ல, தமிழ்நாட்டிலும்கூட புலிகளைப்பற்றிய பார்வை முற்றிலும் மாறி விட்டது. எம்ஜிஆரே அப்போது ஆட்சியில் இருந்திருந்தாலும்கூட அந்த நிகழ்வுக்காக அவர் கோபித்துக் கொண்டிருப்பார் என்று நம்ப இடமிருக்கிறது. அந்தளவு எம்ஜிஆரும் ராஜிவ்காந்தியும் கூட்டணி அரசியலில் வெகு இணக்கமாக இருந்தனர்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த சூழ்நிலைகளையும் அப்போதையை சில நிகழ்வுகளையும் மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, இன்னும் அதையே அசைபோட்டுக்கொண்டு பின்தங்கி கிடக்காதீர்கள் புலி ஆதரவாளர்களே. பிராந்திய அரசியல் அதற்கு பிறகு எவ்வளவோ மாற்றம் கண்டு விட்டது என்பதை உணருங்கள்.

அப்புறம், வைகோ..?!

கடந்த பத்தாண்டுகளில் இவருடைய கட்சிக்கு தமிழ்நாடு குறைந்தது பத்து எம்.பிக்களையாவது கொடுத்திருக்கிறது. அவர்களைக் கொண்டு கூட்டணி கட்சிகளுக்கு வால் பிடித்ததைத் தவிர இவர் வேறு என்ன சாதித்தார் என்பதை முதலில் பரிசீலித்து விட்டு பிறகு அதன்மேல் கட்டுங்கள் கனவையும் அதில் கோட்டையையும்.

If 'ifs' and 'buts' were candy and nuts, we'd all have a Merry Christmas.. என்பதெல்லாம் கழிவிரக்கத்தை காட்டுகிறதேயன்றி, அடுத்து ஆகவேண்டிய காரியத்தை அலசுவதாக இல்லை.
மேலும்...

ஈழப்போராட்டமும் சர்வதேச இன மோதல்களும்

Posted: Sunday, February 28, 2010 | Posted by no-nononsense | Labels: , , 0 comments
நிறைய பேர் ஆயிரத்தில் ஒருவன் கதையை ஈழ நிகழ்வுகளோடு ஒப்பிட்டு சொன்னார்கள். ஆனால் ஈழப்போராட்டத்தை பிரதிபலிக்கும் கதை அம்சம் கொண்ட படம் 300 என்னும் ஆங்கிலப்படம்.

300, ஆ.ஒ.தான் என்றில்லை, உலகின் பெரும்பாலான காலனியாதிக்க, ஆக்கிரமிப்பு போர்கள் மற்றும் இன மோதல்கள் சம்மந்தப்பட்ட கதைகளும் படங்களும் கூட உனக்கு ஈழப் பிரச்சினையைத்தான் ஞாபகப்படுத்தும். அனைத்தின் பின்புலமான காரணங்களும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

சமகாலத்திலேயே ஈழப் பிரச்சினையோடு ஒப்பிடக்கூடியதாக டார்பர், பாலஸ்தீனம், திபெத், ருவாண்டா, கொசோவோ போன்ற பலவற்றைக் குறிப்பிடமுடியும்.

இவற்றில் கொசோவோவை ஈழத்துடன் நெருங்கி வரக்கூடிய ஒன்றாக பார்க்கமுடியும். அவர்கள் செர்பியாவின் இன அழிப்புக்கெதிராக ஆயுதம் ஏந்திய அதேசமயத்தில், அதை சர்வதேச அளவில் அரசியல் ரீதியாகவும் முன்னெடுத்து, 2008-ல் தங்களை தன்னிச்சையாகவே சுதந்திர நாடாகவும் அறிவித்துக் கொண்டார்கள். அதற்கு அமெரிக்க, ஐரோப்பிய கூட்டமைப்பின் அங்கீகாரமும் கிடைத்தது.

அந்த அரசியல் சாமார்த்தியம்தான் ஈழப்போராட்டத்தில் புலிகளிடம் இல்லாமல் போனது. பாரிய இழப்புகளை சந்தித்து அடைந்த unofficial தமிழீழ அரசை தங்களின் மூர்க்கத்தன; அதீத ஆயுதப் போராட்ட தன்னம்பிக்கையால், திரண்டிருந்த வெண்ணையுடன் பானையை போட்டு உடைத்து விட்டார்கள். அதன் வலியை இன்னும் பல காலத்திற்கு ஈழம் அனுபவிக்க போகிறது.

கொசோவோவின் சுதந்திர நாடு பிரகடனத்தை சர்வதேச சமுதாயம் அங்கீகரித்த போது அதனைக் கண்டு எங்கே ஈழப் பிரச்சினையிலும் அதுவே நடந்து விடுமோ என்று நடுநடுங்கிய இலங்கை அரசு, கொசோவோவுக்கு எதிராக எப்படியெல்லாம் கண்ட குரல் எழுப்பியது என்பதை பழைய ஏடுகளை புரட்டிப் பார்த்தால் புரியும்.

*

மேலே ருவாண்டா பற்றி குறிப்பிட்டிருந்தேன். அங்கே 1994-ல் நடந்த இனமோதல்தான் அண்மை கால மனித குல வரலாற்றிலேயே, கொடூரமானதும் கொடுமையானதுமான ஒன்று ஆகும். டுட்சி, ஹூடு என்கிற இரு இனங்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மூன்று மாத காலத்திற்குள் ஐந்து முதல் பத்து லட்சம் பேர் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு இறந்தார்கள். (பத்து லட்சம் என்பது சாதாரண எண்ணிக்கை அல்ல). இறந்தவர்களில் அதிகம் பேர் அங்கே சிறுபான்மையினராகிய டுட்ஸி இனத்தினர். இலங்கையில் சிங்களவன் போல அங்கேயும் பெரும்பான்மையினராகிய ஹூடுவின் ஆட்சிதான் அப்போது நடந்து கொண்டிருந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு Hotel Rwanda என்றுகூட ஒரு படம் வந்தது. பலரும் பார்த்திருக்கலாம்.

திருச்சியில் நான் பணிபுரிந்தபோது எங்கள் அலுவலகத்திற்கு நிறைய ருவாண்டா மாணவர்கள் பணம் மாற்ற(Forex) வருவார்கள். Hotel Rwanda படம் பார்த்த அனுபவத்தில் அவர்களிடம் அந்த இனப்படுகொலைகளைப்பற்றி சிலவேளைகளில் நான் பேச்சுக் கொடுப்பதுண்டு. ஆள் தராதரம் பார்க்காமல் இனம் ஒன்றை மட்டுமே வேறுபடுத்தி பார்த்து கணவன் மனைவியையும், அப்பா பிள்ளையையும்கூட வெட்டித்தள்ளியதாக அவர்கள் கூறினார்கள். அதில் ஒருவன் என்னுடைய மின்னஞ்சல் முகவரியை பெற்றுச் சென்று, கர்ம சிரத்தையாக அது சம்மந்தமான பல புகைப்படங்களையும் கட்டுரைகளையும் கூட அனுப்பி வைத்தான்.

- ஈழத்தை நினைவுபடுத்தும் திரைப்படங்கள் மற்றும் இன மோதல்கள் மீதான விவாதத்தின் ஒரு பகுதி..
மேலும்...

இலங்கை இனப் பிரச்சினையும் தமிழக தமிழனின் தற்கால மனோபாவமும்

Posted: Thursday, February 4, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
ஈழப் பிரச்சினை காரணமாக தமிழக தமிழன் இந்திய அரசு பற்றி குமைந்து கொண்டிருப்பதாக கூறப்பட்ட கருத்தின்மீது என் உரை:

நண்பர் அழகாக சுருக்கமாக சொல்லி விட்டார். அதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. இது மாதிரி எழுதுபவர்களைப் பார்த்தால் எதன் அடிப்படையில் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று ஆச்சர்யமாக உள்ளது. போர் உக்கிரமாக நடந்து வந்த சூழலில், தினமும் பல்லாயிரம் மக்கள் படுகொலையாகி விட்டதாக செய்திகள் தெரிவித்து வந்த நிலையில் நடந்த தேர்தலிலேயே மக்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை எனும்போது, போரெல்லாம் முடிந்து இலங்கையில் தேர்தல்களும் நடத்தி முடிக்கப்பட்டு, அதிலும், அத்தேர்தலில் இன படுகொலையின் இரு காரண கர்த்தாக்களில் ஒருவருக்கு அங்கேயுள்ள மக்களே வாக்களித்துள்ள சூழலில், இனியும் இங்கே தமிழ்நாட்டில் என்ன பெரிய புரட்சி வெடிக்கப் போகிறது என்று எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.

இந்திய தேசியத்துக்கு எதிரான குரல் தமிழ்நாட்டில் எடுபட வாய்ப்பில்லை. அதற்கான காரணங்கள் தமிழக மக்களின் வாழ்வியல் நிலையில் இதுவரை உருவாகவில்லை. ஈழப் பிரச்சினையில் இந்தியா எடுத்த நிலைப்பாடு இங்கேயுள்ள ஆம் ஆத்மியை எந்த வகையிலும் இந்தியாவுக்கு எதிராக திருப்பாது. நாட்டு நடப்பு குறித்து குறைந்த பட்ச புரிதலாவது இருந்தால் தானே அதெல்லாம் நடக்க.

நெருக்கடியான நேரங்களில் எல்லாம் மௌனம் காத்து கடந்து விட்ட நிலையில் மீண்டும் கடந்த காலத்தை கவனத்தில் கொள்ள சொன்னால் காதில் போட்டுக்கொள்ள யாரிங்கு தயார்? நடந்ததை மறுபரிசீலனை செய்ய தமிழன் பழகியிருந்தால் இங்கே கருணாநிதியும் ஜெயலலிதாவும் மீண்டும் மீண்டும் மாறி மாறி ஆட்சிக் கட்டில் ஏற முடியுமா? மக்களுக்கு இலவச நோய் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. போன தேர்தலில் டிவி கிடைத்தது (இன்னும் எங்கள் ஏரியாவில் யாருக்கும் கிடைக்கவில்லை). இந்த தேர்தலுக்கு செல்போன் கிடைக்குமா என்பதில்தான் மக்களின் கவலையெல்லாம். அப்படி கெடுத்து வைத்து விட்டார்கள்.

இப்படி கட்டுரை எழுதிக்கொண்டிருப்பவர்கள் உண்மையிலேயே தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமானால் இலங்கை பொருட்கள் பகிஷ்கரிப்பை நடத்தலாம். கொழும்பு பெரு முதலாளி கம்பெனிகளின் பிஸ்கட்கள், சாக்லேட்கள் இப்போது சாதாரணமாக தமிழகத்தின் அனைத்து பெரிய மால்களிலும் விற்கப்படுகின்றன. நன்றாக விற்பனையும் ஆகின்றன. அவற்றை வாங்காமல் நிராகரிக்கச் சொல்லி மக்களைக் கேட்டுக்கொள்ளலாம். அக்கடைகளின் முன் போராட்டம் நடத்தலாம். அதை விடுத்து மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிட முயற்சிப்பது நேர விரயத்தைத் தவிர வேறு ஒரு பயனையும் தராது.

மேலும்...

சோழர்கள், இலங்கை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் - சில எண்ணங்கள்

Posted: Sunday, January 24, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
இலங்கையின் பூர்வகுடி திராவிடர்களாக (தமிழர்கள்) இருக்கவே வாய்ப்பு அதிகம் என்பது அங்கே கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த அகழ்வாய்வுகளின் மூலம் அறிய முடிகிறது. அதில் கிடைத்த பழங்கால ஆயுதங்கள், நாணயங்கள் தென்னிந்தியாவின் திராவிட நாகரிகத்துடன்தான் ஒத்துப் போகிறதே தவிர, தங்களை ஆரியர்களாக அடையாளப்படுத்தி வரலாற்றை திரித்து வைத்திருக்கும் சிங்களவர்களின் புரட்டுடன் பொருந்திப் போகவில்லை. அங்கே கிடைத்த முதுமக்கள் தாழியில் இங்கே போலவே தமிழ் எழுத்துக்கள் காணப்படுப்படுவதே இதற்கு அத்தாட்சி.

சிங்களவர்களின் வரலாற்று நூலாக கருதப்படும் மகாவம்சத்தில் கூட சிங்களவர்களின் முதல் அரசன் விஜயன் இலங்கையில் குடியேறும்போது அங்கே பூர்வகுடி பெண் ஒருத்தியை எதிர்கொண்டு அவளையே மணம்புரிந்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் சிங்களர்களின் குடியேற்றத்துக்கு முன்பே அங்கே ஒரு இனம் நிலைபெற்று வாழ்ந்து வந்துள்ளது அவர்கள் புனைந்து வைத்த புராணத்தின் மூலமாகவே அறிய முடிகிறது.

இதன்மேல் இன்னும் நிறைய எழுத முடியும். முன்பு பல விவரங்கள் சேகரித்து வைத்திருந்தேன். இப்போது நிறைய மறந்துவிட்டது. என்றாலும், ஒன்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஈழத்தின் தமிழ் இனம் என்பது அதன் பூர்வகுடி தானே தவிர, சிங்களவன் சொல்வது போல பிழைப்புக்காக வந்தேறியது அல்ல. அதற்கு அங்கே நடப்பது முற்றிலும் அநியாயம். படு பாதகம். அதன் நீண்ட கால தீர்வு தனி ஈழமாகத்தான் இருக்க முடியும். அவசியம் ஏற்பட்டால் இன்னும் விரிவாக அலசலாம்.

*

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதையை இதனுடன் என்னால் சம்மந்தப்படுத்த முடியவில்லை. ஆனால் சோழர்களுக்கும் இலங்கைக்கும் ஒரு சம்மந்தம் உண்டு. அதன் சில சம்பவங்கள் இந்த படத்தின் சில காட்சிகளுடன் - சில முரண்பாடுகள் இருப்பினும் - ஒத்துப்போவது கொஞ்சம் சுவாரசியம்தான்.

மன்னர்களின் பெயர்கள் மறந்துவிட்டன. இருந்தாலும் சொல்ல துணிகிறேன்.

சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே மூண்ட ஒரு போரில் தோற்றுப் போகும் பாண்டிய மன்னன், தன்னுடைய குலப் பெருமை மிக்க அரச முடி, அரசியின் முடி மற்றும் இந்திரஹாரம் ஆகியவை சோழர்களின் கையில் கிடைக்காமல் இருக்க தன்னுடன் நட்பில் இருந்த இலங்கை மன்னன் மகிந்த வசம் ஒப்படைக்கிறான். அதனை கைப்பற்றுவது சோழர்களின் கௌரவ பிரச்னையாக இருக்கிறது. அதற்காகவே தொடர்ந்து சோழர்கள் இலங்கை மீது படையெடுக்கிறார்கள். அந்த நோக்கம் பின்னால் இராஜேந்திர சோழன்(இராஜராஜன் மகன்) காலத்தில்தான் நிறைவேறுகிறது. இலங்கை முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவரும் இராஜேந்திரன், அநுராதபுரத்தை தலைமையிடமாக கொண்டு ஆண்டதாக வரலாறு.

உண்மையான வரலாற்றின் படி பாண்டியனின் குலப்பெருமைகள் சிங்களவர்களிடம் சிக்கிக்கொள்ள, அதனை கைப்பற்ற சோழர்கள் தான் இலங்கை மீது படையெடுக்கிறார்கள். ஆனால் சினிமாவில் சோழர்கள் மீது படையெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த முரண்நகை தவிர வேறு சம்மந்தம் இருக்க வாய்ப்பில்லை.
மேலும்...

மாவீரர் நாள் 2009 - ஒரு பார்வை

Posted: Friday, November 27, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
பலரும் பலநாளும் எதிர்பார்த்திருந்த முக்கியமான மாவீரர் நாள் நேற்று கடந்து சென்றிருக்கிறது. மாவீரர் நாளில் உரையாற்றுவதன் மூலம் ஈழப் போராட்டத்தை யார் அடுத்து முன்னெடுத்துச் செல்லப் போகிறார் என்று பலரின் மனதிலும் தொக்கி நின்ற கேள்விக்குத் தெளிவான பதிலைத் தராமலே இந்த நாள் சென்றுவிட்டது. சிலர் பொட்டு அம்மன் வருவார் என்றனர்; இன்னும் சிலர் பிரபாகரனே தன்னை வெளிபடுத்திக் கொள்வார் என்றனர். இரண்டுமே நடக்கவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் ’மாவீரர் தின உரை’ என்ற பெயரில் அறிக்கை மட்டும் வெளியிட்டுள்ளது. ஆனால் பிரபாகரனின் இடத்திலிருந்து தமிழீழ விடுதலை புலிகளின் சார்பில் யாரும் உரையாற்றவில்லை.

புலம் பெயர் சமூகத்திலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசு செயற்குழு இணைப்பாளர் ருத்ரகுமாரன் அறிக்கை வெளியிட்டார். என்னைப் பொருத்தவரை, களத்தில் போராட்டங்கள் சுத்தமாக துடைத்தழிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த transnational goverment என்பது மிக அவசியமானது ஒன்று. இததகைய அரசமைவு, போராட்டத்தை உளவியல் ரீதியாக பலப்படுத்துவதாகவும், சர்வதேச சமுதாயத்தில் ஓர் கவன ஈர்ப்பாகவும் இருக்கும் என்பதால் இதற்குரிய முக்கியத்துவம் தமிழ்ச் சமுதாயத்தில் முதலில் கிடைக்கப்பெற வேண்டும்.

இதற்கிடையில், விடுதலை புலிகளின் மூத்த தளபதி ராம் என்பார், பிரபாகரன் போர் முனையின் இறுதி நாளில் முள்ளிவாய்க்காலில் வைத்து தனக்குப் பின் விடுதலைப் போரை முன்னெடுத்துச் செல்லும் பணியை தன்னிடம்தான் ஒப்படைத்ததாகவும், அதனை தமிழ்ச் சமுதாயம் ஆதரிக்க வேண்டும் என்று கூறி மாவீரர் தின உரையாற்றி ஓர் ஒலிநாடா வெளியிட்டுள்ளார். பிரபாகரனின் உள்வட்டத்திலிருந்த முக்கிய தளபதிகளில் ஒருவரான இந்த ராம் காட்டுப் பகுதியில் ஒளிந்திருந்தபோது, இலங்கை ராணுவத்தின் தேடுதல் படையணியால் அண்மையில் கைது செய்யப்பட்டுவிட்டதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இப்போது அந்த ராமிடமிருந்துதான் உரை வெளியாகியுள்ளது. இதனால், ஒருவேளை இது இலங்கை ராணுவத்தின் உளவியல் ரீதியான யுத்தத்தின் ஒரு நடவடிக்கையாக, தமிழ் மக்களை குழப்பத்தில் ஆழ்த்த செய்யப்பட்ட ஏற்பாடாக இருக்கலாம் என்று சந்தேக கண் கொண்டு பார்க்கப்ப்படுகிறது. கிட்டத்தட்ட நிராகரிக்கவும் படுகிறது. அவ்வளவு சீக்கிரத்தில் பிரபாகரன் இடத்தில் யாரையும் தமிழ் சமூகம் ஏற்றுக் கொண்டு விடாது.

வழக்கம்போல் பழ.நெடுமாறன் பிரபாகரன் உயிருடன் தான் உள்ளார் என்று மக்களை குழப்பும் வேலையை மாவீரர் நாளிலும் செய்துள்ளார். ஆனால் அவரிடம் கேபி உள்ளிட்ட பிரபாகரனின் சகாக்கள், புலிகளின் தலைமைச் செய்லகம் மற்றும் சர்வதேச ஈழ சமுதாயம் அனைத்தும் ஒப்புக்கொண்டுவிட்ட பிரபாகரனின் இறப்பை எதன் அடிப்படையில் மறுக்கிறீர்கள் என்று மட்டும் கேட்டுவிட முடியாது. கேட்பவர் தமிழின விரோதியாக சித்தரிக்கப்படுவார். வைகோ தேவலாம்; ஒருவழியாக பிரபாகரன் கொலை செய்யப்பட்டுள்ளதாக பேட்டிக் கொடுக்கத் துவங்கிவிட்டார்.

இம்மாதிரியான குழப்பவாதிகளால்தான் பிரபாகரனுக்கு நியாயமாக செலுத்தப்பட்டிருக்க வேண்டிய அஞ்சலி செலுத்தப்படாமலே இன்றுவரை தொடர்கிறது.

கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகளாக ஈழ நடப்புகளை உன்னிப்பாக அவதானித்து வரும் எனக்கு இந்த மாவீரர் நாள் பிரபாகரனின் உரையின்றி மௌனமாக கடந்து சென்றிருப்பது, மௌனத்தின் வலியாக மட்டுமல்ல, தமிழின அழிப்பு நடவடிக்கையை ஆதரித்துவிட்ட ஒரு நாட்டின் குடிமகன் என்ற வகையில், மனசாட்சியின் வலியாகவும் இருக்கிறது.
மேலும்...