Showing posts with label புத்தகங்கள். Show all posts
Showing posts with label புத்தகங்கள். Show all posts

நாடு விட்டு நாடு

Posted: Wednesday, April 20, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஆ! தன்யனானேன்! தேடும் பொருள் கிடைக்க வழி கிடைத்து விட்டால் சீதையை கண்ட அனுமன் போல துள்ளாட்டம் போட ஆரம்பித்து விடுகிறது மனம்.

வெள்ளகோவில் அருகே ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த முத்தம்மாள் பழனிசாமி என்னும் கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்த பெண்மணியின் சுயசரிதைதான் இந்த நூல்.

தோட்டத் தொழிலாளராக மலேயாவுக்கு செல்லும் இவரின் குடும்பம் அங்கே சந்திக்கும் அனுபவங்களும், வாழ்வியல் மாறுதல்களும் ஒரு பெண்ணின் பார்வையில் நூலில் பதியப்பட்டுள்ளதாக நல்ல வாசகர்கள் சிபாரிசு செய்கிறார்கள். வாங்க வேண்டும்.
மேலும்...

வால்கா முதல் கங்கை வரை

Posted: Wednesday, January 12, 2011 | Posted by no-nononsense | Labels: 0 comments
”வால்கா முதல் கங்கை வரை” புத்தகத்தின் 600 பக்கங்களில் 400 வரை படித்தாகிவிட்டது

சொன்னபடியே நிற்கிறாய் அதற்குத் தக. மிக்க மகிழ்ச்சி..! நூலை முழுமையாக வாசித்த பிறகு மீண்டும் ஒரு முழுமையான கருத்துரையை உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

சாதி பாகுபாடு சாதி பாகுபாடு மற்றும் புரோகிதம் போன்ற ஆரியர்களின் இன்றைய பழக்கவழக்கங்கள் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதல்ல அவற்றை அவர்கள் இந்திய தொல்குடிகளிடமிருந்தே (ஹரப்பா மற்றும் மொகஞ்சாதாரோ காலகட்டத்தில்) பெற்றுக்கொண்டார்கள் என்ற செய்தி எனக்கு புதியது.

இந்த நூல் அடிப்படையில் ஒரு புனைவு என்பதால் ஆரியர் குறித்து ராகுல்ஜி கொடுத்துள்ள சித்திரம் அப்படியே உண்மையென கொள்ளத்தக்கதல்ல என்பது என் கருத்து. காரணம் ஹரப்பா, மொஹஞ்சதாரோ மக்கள் குறித்த படிமங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவர்களின் வாழ்க்கை முறை குறித்து ஆராயத்தக்கதாக எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அவர்களின் சமூக வாழ்க்கை மற்றும் சாதிய அமைப்பு குறித்த கருத்துக்கள் எல்லாம் அடிப்படையில் அவரவர் மனசாய்வுக்கேற்றபடி யூகமானவை மட்டுமே. மேலும் இந்த நூல் வேதங்களையும் உபநிடதங்களையும் புராணக்கதைகளையும் அடியொட்டியே இயற்றப்பட்டதாக படித்திருக்கிறேன். அதனால் அதன் பாதிப்பு காரணமாகவும் ஆரியர் குறித்த இத்தகைய கருத்தாக்கத்தை ஆசிரியர் ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம்.

நான் இன்னும் அந்த நூலை வாசித்ததிலை என்பதால் இதன்மேல் முழுமையாக கருத்துரைக்க முடியாது. நீ முடித்து விட்டு கொடு. ஒரு ஓய்வற்ற முழுவாசிப்பில் முடித்து விட்டு மேற்கொண்டு உரையாடலை தொடர்வோம்.
மேலும்...

கமல் வாழ்க்கை வரலாறு நூல்

Posted: Tuesday, August 31, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments

Chetan Bhagat-ன் Five point someone மற்றும் கி.லக்ஷ்மணனின் இந்திய தத்துவஞானம் ஆகிய நூல்கள் ஒரு வாரமாக என் வாசிப்பில் இருந்துவருகின்றன. இன்னொரு பக்கம் அபிதான சிந்தாமணி. ஆனால் அது கலைக்களஞ்சியம் என்பதால் கணக்கில் வராது. இவையனைத்தையும் அப்படியே ஓரம்கட்ட வைத்து விட்டு இரண்டு நாள்களாக என்னை தன்னுள் முச்சூடாக இழுத்துக் கொண்டது பத்திரிக்கையாளர் பா.தீனதயாளன் எழுதிய ‘கமல்’ என்னும் கமல்ஹாசனின் வாழ்க்கை வரலாறு நூல். கிழக்கு பதிப்பக வெளியீடு.

கமல் என்னுடைய அபிமான நடிகர் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒரு ஐம்பது ஆண்டுகளாக நாம் பார்த்து வியந்து பொறாமைப்பட்டு ஆகர்ஷிக்கப்பட்டு வெளியே விமர்சித்தாலும் மனதிற்குள் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒரு பன்முக ஆளுமை கமல்ஹாசன். அவர் பெயரை தாங்கியச் செய்தி ஒற்றை வரியேயாயினும் அதனை படிக்காமல் கடந்து செல்வது என்பது தமிழர்களின் வழக்கத்தில் கிடையாது.

அப்படிப்பட்டவரின் வாழ்க்கையை நுணுகி பார்த்து எழுதப்பட்ட நூல் ஒன்று கையில் கிடைக்கும்போது, அதனில் கோர்க்கப்பட்ட சம்பவங்களை மனது உடனுக்குடன் சம்மந்தப்பட்ட படங்களுடன் இணைத்து ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கியபடி இருக்கும்போது, அந்த அனுபவத்தை விட்டு வெளியே வருவது சினிமா ஆர்வலர்கள் யாருக்கும் எளிதன்று. அது ஒரு joyful experience!

இத்தனை வருடம் சினிமாவில் இருந்து கமல் என்ன சம்பாதித்தார் என்றால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மட்டுமே என்பதைத் தவிர, வேறு ஒன்றுமில்லை என்பதை ஒவ்வொரு சினிமா முயற்சியின் பின்னணியும் நம்மை உணர வைக்கிறது. அவர் ஈட்டிய பணமெல்லாம் சினிமாவைப்பற்றி மேலும் மேலும் படிக்க தெரிந்துகொள்ள மட்டுமே செலவளித்திருக்கிறார். எல்லா முதலீடும் சினிமாவில் மட்டுமே. முடிவாக இதுவரை கண்டதெல்லாம் நஷ்ட கணக்குதான். ஆனாலும் சிந்தனையில் எப்போதும் சூழ் கொண்டிருப்பது சினிமா மற்றும் சினிமா மட்டுமே.

நம் காலத்தின் நிஜ கலைஞன் கமல்! அதனை நாம் அவர் சினிமாவில் எப்படி போராடி தனக்கான இடத்தை அடைந்தார் என்பதை தெரிந்துகொள்ளும்போது மட்டுமே உணர்ந்துகொள்ள இயலும்.

(அவர் மீதான சினிமா விமர்சனங்கள் தனிப்பட்டவை. இந்நூல் கமல் என்னும் தனி மனிதனின் வாழ்க்கையைப்பற்றிய தரிசனம் மட்டுமே)

இதன் வாசிப்பனுபவத்தை இன்னும் விரிவாக பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். நேரம் அனுமதிக்கும்போது நடக்கலாம். அதற்குள் வேறு எண்ண இழை எழுத்தில் குறிக்கிடாமல் இருக்கவேண்டும்.

**

சில கருத்துகளின் மீதான பதில்:


என்னுடைய விமர்சனங்களெல்லாம் கமல் சினிமாக்களின் மீதுதான். கமல் மீது தனிப்பட்ட விமர்சனங்கள் எதுவும் கிடையாது. உண்மையில் பல முற்போக்கான கருத்துக்களில் கமல் எனக்கு ஒரு ஆதர்ஷம். முக்கியமாக இருவரும் பெரியார் கொள்கைகளில் அதிதீவிர ஈடுபாடுடையவர்கள். சமூக மதிப்பீடுகளுக்கான இருவரின் முக்கியத்துவமும் ஷூ காலுக்கு கீழேதான். இப்படி அச்சொட்டாக கமலை அவதானித்து வருவதால் அவரை விமர்சிப்பதிலும் எனக்கான உரிமைகள் தனிப்பட்டே இருக்கும். அதேசமயம் ஏதோ விஜயை வாய் போன போக்கில் காமெடி செய்வதுபோல யாராவது கமலிடமும் வேலையை காட்டினால் அங்கே நான் ரௌத்திரம் பழகுவதும் தவிர்க்க இயலாதது :-) 

இதை நான் முன்பே ஒருமுறை சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். 

*

பள்ளிநாள்களில் நான் பிரபு ரசிகனும் கூட. அரங்கேற்ற வேளை, மை டியர் மார்த்தாண்டன், ராஜா கைய வச்சா, சின்ன மாப்பிள்ளை போன்ற படங்கள் வந்த காலகட்டங்களில் பிரபு என் விருப்ப நடிகர். (இங்கே சின்ன தம்பியை நான் லிஸ்டில் சேர்க்கவில்லை என்பதை கவனிக்க). குறிப்பாக எனக்கு காமெடி கலந்த பிரபு படங்கள் பிடிக்கும். பிற்காலங்களில் அவர் தன் உருவத்துக்கு ஏற்ற வேடங்களை தேர்ந்தெடுத்து நடிக்காமல் ஆக்சன் வலைக்குள் அகப்பட்டுக் கொண்டார். ரசிகர்களையும் மார்க்கெட்டையும் இழந்தார். 

எனக்கு இன்னும் எம்.ஜி.ஆர், சிவாஜி, கலைவாணர் படங்களும்கூட மிகவும் பிடிக்கும். அது என்ன, ரசிகன் என்றால் யாராவது ஒருவருக்குத்தான் இருக்கவேண்டுமா என்ன?
மேலும்...

சிவசங்கரியின் “புதிய கோணங்கள்” நூலை முன்வைத்து

Posted: Tuesday, April 6, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments

Sivasankari

சிலர் சில விஷயங்களுக்காக பொதுவில் பிரபலமாக இருப்பார்கள். அவர்களின் மற்றொரு முகம் பெரும்பாலும் அறியப்படுவதில்லை. எழுத்தாளர் கல்கியின் சரித்திர நாவல்கள் பிரபலமடைந்த அளவிற்கு அவருடைய கட்டுரைகள் பிரபலமில்லை. ஆனால் அவைதான் என்னைப் பொருத்தவரை அதிக சுவாரஸ்யமானவை. குறிப்பாக அவருடைய “மூன்று மாத கடுங்காவல்” மற்றும் “ஏட்டிக்கு போட்டி” ஆகிய இரண்டும் அளிக்கும் எழுத்து விருந்துக்கு இணையான ஒரு சுவையை இன்று வரை நான் கடக்கவில்லை.

அதேபோல்தான் எழுத்தாளர் சிவசங்கரியின் பயணக் கட்டுரைகள். புரிந்துகொள்ள மிக எளிமையான நடையில், செல்லும் இடங்களைப் பற்றிய பொதுவான தகவல்களுடன் மாறுபட்ட நுணுக்கமான பல குறிப்புகளையும் பதிவு செய்தவண்ணம் இருப்பார். ஆனால் அவர் கதைகள் பிரபலமான அளவிற்கு இவருடைய பயண எழுத்து படிக்கப்படவில்லை. இப்படி வெட்டவெளிதனில் கொட்டிக் கிடக்கும் எழுத்துக்கள் எண்ணிலடங்கா.

அண்மையில் அவருடைய “புதிய கோணங்கள்’ என்னும் கட்டுரை தொகுப்பிலிருந்து நேபாள பயண அனுபவங்கள் படிக்க கிடைத்தன. வழக்கம் போலவே விறுவிறுப்பான நடையில் சிறப்பான காட்சிப் படுத்தல்கள் நிறைந்த எழுத்துக்கள். ஆனால் இங்கே நான் எழுத முனையும் விஷயம் அது அல்ல. அதே கட்டுரை தொகுப்பில் எம்.டி.வாசுதேவன் நாயரின் (கேரளத்தின் முக்கியமான எழுத்தாளர்) நேர்காணல் ஒன்றும் வெளியாகியிருந்தது. அதன் கருபொருள்தான் என்னை ஈர்க்கிறது.


அதாவது எம்.டி.வி “இரண்டாம் மூழா” என்னும் நூலை எழுதியிருந்தார். இரண்டாம் மூழா என்றால் ”இரண்டாவது ஸ்தானம்” (Second in line) என்று பொருள். மகாபாரதம், பாண்டவர்களில் இரண்டாவது மகனாகிய பீமனுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை என்பதுதான் அப்புத்தகத்தின் வழியாக அவர் வைக்கும் குற்றச்சாட்டு.

அவர்களின் உரையாடலின் சாராம்சம்:

→ மகாபாரத போரின் வெற்றிக்கு ஆரம்பத்திலிருந்து முக்கிய பங்காற்றிய பீமனுக்கு, அவனுக்குரிய தர்மருக்கு அடுத்த இரண்டாவது ஸ்தானமும் மரியாதையும் அளிக்கப்படவில்லை. மாறாக அந்த இடத்தையும் முக்கியத்துவத்தையும் பீமனின் தம்பி அர்ஜூனனுக்கே மகாபாரதம் அளிக்கிறது.

→ போரில் அர்ஜூனனின் மகன் அபிமன்யூ இறக்கிறான். பாண்டவர்கள் பரிதவித்து போகிறார்கள். ஆனால் போரில் பல வீர தீரங்கள் புரிந்த பீமனின் மகன் கடோத்கஜன் இறக்கும்போது “ஏன் அழுகிறீர்கள், ஒரு ராட்சஸன் இறந்தது சந்தோஷமான விஷயம் தானே’ என்கிறான் கண்ணன்.

→ கதையின் இறுதியில் எல்லோரும் மகாநிர்வாணத்தை, அதாவது மோட்சத்தை நோக்கிச் செல்லும்போது, பீமன் மட்டும் “எனக்கு ராட்சஸி (இடும்பி) ஒருத்தியும், பகைவன் (அஸ்வத்தாமா) ஒருவனும் காத்திருக்கிறார்கள் என்று மோட்சத்தை மறுத்து விடுவதாக வருகிறது. இது பீமனுக்கு செய்யப்பட்ட அநியாயமாக கருதுகிறார் ஆசிரியர்.

→ மகாபாரதத்தின் எத்தனையோ சம்பவங்களில் எல்லோரும் அறிந்த ஒரு சம்பவம்: வஸ்திராபகரணம். அதாவது திரௌபதிக்கு கண்ணன் சேலை அளித்து மானம் காத்த அந்த சம்பவம். மகாபாரதத்தின் ஆதிப் பிரதிகள் எவற்றிலும் அப்படி ஒரு சம்பவம் இடம்பெறவே இல்லை; அது ஒரு இடைசெருகல் என்கிறார் எம்.டி.வி. அதற்கு ஆதாரமாக குறிப்பிடத்தக்க சில வெளியீடுகளை காட்டுகிறார். கதையின் அந்த இடத்தில் அவள் மாதவிலக்காகவும், ஒற்றை சேலை அணிந்தபடியும் மட்டுமே இருந்திருக்கிறாள்.

→ ஆதிநாட்களில் மகாபாரதத்திற்கு ’ஜெயா’ என்று பெயர். மகாபாரதத்தின் மூல நூலில் இருந்தவை இருபதிலிருந்து நாற்பதினாயிரம் ஸ்லோகங்கள் மட்டுமே. பிறகு ஏற்பட்ட இடைசெருகல்கள் காரணமாக அது லட்சத்து இருபதினாயிரம் ஸ்லோகமாக ஆகிவிட்டது.

→ உண்மையில் வியாசர் என்றால் எடிட்டர் என்றுதான் அர்த்தம். அதன்படி பல நூறு ஆண்டுகளாக பல நூறு எடிட்டர்கள் திறமை காட்டிய தொகுப்பே மகாபாரதம்.

இவற்றையெல்லாம் ஏழு வருடங்களாக ஆராய்ச்சி செய்து அறிந்துகொண்டதாக எம்.டி.வி உரையாடலின் போது குறிப்பிடுகிறார்.

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களாகிய ராமாயணமும் மகாபாரதமும் திறமையாக புனையப்பட்ட புதினங்களே என்னும் நாள்பட்ட விமர்சனத்தை எம்.டி.வி என்னும் மாபெரும் எழுத்தாளரின், இந்த ஆராய்ச்சி குறிப்புகள் உறுதி செய்வதாக அமைந்துள்ளன.

ஆனால் எவ்வளவுதான் தர்க்க ரீதியாக நிரூபணம் செய்தாலும் மாறுபாடான கருத்துக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் இந்தியாவைப் பொருத்தவரை கிடையாது. அதனால்தான் இன்றும் - பாபர் மசூதி பிரச்சினைக்கும், ராமர் பால விவகாரத்திற்கும் மக்கள் தங்கள் ஜீவாதார பிரச்னைகளை விட அதிக முக்கியத்துவம் தருபவர்களாக இருந்துவருகின்றனர்.

*

இதேபோல வால்மீகி ராமாயணத்திலிருந்து கம்பராமாயணம் எப்படியெல்லாம் வேறுபடுகிறது என்பதையும் எழுத உத்தேசம். குறிப்புகள் எடுத்து வைத்து பல காலமாக கிடப்பில் கிடக்கின்றன.
மேலும்...

குல்தீப் நய்யாரின் “ஜட்ஜ்மென்ட்” நூலை முன்வைத்து

Posted: Sunday, March 28, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
இரு நாட்கள் முன்பு பழைய புத்தகக் கடை ஒன்றில் குல்தீப் நய்யார் எழுதிய ‘The Judgment" இன் தமிழ் பதிப்பு கிடைத்தது. அதை கையில் எடுத்தது முதல் கீழே வைக்கவிடாமல், அதன் வேகமும் விறுவிறுப்பும் என்னை உள்ளிழுத்துக் கொண்டது.

எமர்ஜென்ஸி பற்றி இதற்கு முன் திராவிட தலைவர்களின் உரைகளில் சிறு குறிப்புகளாக அறிய கிடைத்த தகவல்களைத் தவிர, பெரிதாக ஒன்றும் இதுவரை எனக்கு படிக்க கிடைக்கவில்லை. அதுவும்கூட மிசா சட்டத்தில் உள்ளே இருந்த தங்களின் தீரத்தை பறைசாற்றிக்கொள்ளும் விதமான உரைகளுக்கிடையே, ஒரு ஊறுகாய் அளவிற்குத்தான் எமர்ஜென்ஸி பற்றிய தகவல்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

துக்ளக்கை தொடர்ந்து வாசிப்பதால் சோ சில சமயம் எமர்ஜென்ஸி நேரத்தில் தான் எப்படியெல்லாம் தணிக்கை அதிகாரியை மண்டை காய விட்டேன் என்பதை அவருக்கேயுரிய அங்கதத்துடன் எழுதியிருந்ததை படித்திருக்கிறேன். அவருடைய அங்கதமே விஷயத்தின் தீவிரத்தை உறைக்கச் செய்யாமல் மேலெழுந்தவாரியாக அமைந்து விட்டது. அதனால் எனக்கு எமர்ஜென்ஸி பற்றி மனதில் இருந்த சித்திரம் ஒரு 144 அளவிலேயே இருந்தது. அக்குறையை இப்புத்தகம் தீர்த்து வைத்துள்ளது. நய்யார் அக்காலகட்டத்தின் நிகழ்வுகளை ஒரு குறுக்கு வெட்டு தோற்றத்துடன் பதிவு செய்துள்ளார்.


என்ன மாதிரி ஆள், இந்த சஞ்சய் காந்தி..! இவ்வளவு வானளவு அதிகாரத்தை ஆகக்கூடிய அனைத்து அராஜகங்களையும் நிகழ்த்தி ஒரு தனி நபரால் கைக்கொள்ள முடிகிறது என்றால், அதையெல்லாம் மௌனமாக அனுமதித்த, விதந்தோதிய அவருடைய அம்மையாரின் பதவி பெருவிருப்பத்தை [வெறி என்று இந்திராவைப் பார்த்துச் சொல்ல ஏனோ மனம் வரவில்லை. காரணம், சராசரி இந்தியர்களுக்கேயுரிய நேரு குடும்ப விசுவாச ரத்தமாக இருக்கலாம் :-) ] என்ன என்று சொல்ல? இந்திரா காந்தி பற்றி என் மனதில் இத்தனை நாளும் ஏடுகள் கட்டி வைத்திருந்த ஒரு உறுதியான பிம்பம், இன்று முற்றிலும் நிறம் மாறிவிட்டது! இன்று இருக்கும் பதவி வெறி பிடித்த நாலாந்தர அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அன்றே அவர் நடந்து கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது.

நினைத்த வடிவங்களுக்கு அரசியல் சட்டங்களை மாற்றுவதும், அதிகாரத்தின் அசுர பலத்தை சந்தேகப்படும் அனைத்து மனிதர்களின் மீதும் ஏவி விடுவதுமாக ஒரு சர்வாதிகாரியாக வாழ்ந்திருக்கிறார். இல்லை.. இல்லை.. சர்வாதிகாரியின் அம்மாவாக வேடிக்கைப் பார்த்திருக்கிறார்! இப்படி இரும்புக்கரம் கொண்டு ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்ததினாலேதான் தானோ, என்னவோ, இவரை இந்தியாவின் இரும்பு பெண்மணி என்கிறார்கள்!

சஞ்சய் காந்தியின் அடிபொடிகளாக நய்யார் சுட்டிக்காட்டும் பன்சிலால், சுக்லா வகையறாக்களைப்பற்றி படிக்கும்போது இன்றிருக்கும் ஜனநாயக கேலிக்கூத்து அரசியலுக்கும் அன்றைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது புரிகிறது. அதிலும் பன்சிலால் மாநிலத்திலும் மத்தியிலும் வெகுசாமார்த்திய அரசியல் நடத்தி வந்திருக்கிறார்.

அப்புறம் சஞ்சய் காந்தியின் அந்த குடும்ப நலத் திட்டம் எவ்விதம் அமல்படுத்தப்பட்டது; அதற்கு ஆள் பிடிக்க ஒவ்வொரு அரசு அதிகாரிக்கும் எது மாதிரியெல்லாம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது; மற்றும் துர்க்மன் கேட் பகுதியில் குடிசைகளை அகற்றும் பணியில் 150 பேர் கொல்லப்பட்டது ஆகியவற்றையெல்லாம் படிக்கும்போது சஞ்சய் காந்தி இன்னுமொரு முகம்மது பின் துக்ளக் என்றுதான் எண்ண தோன்றுகிறது. நல்லவேளையாக அவர் ரொம்பநாள் அரசியலில் நீடிக்கவில்லை!

நய்யார் குறிப்பாக லாரன்ஸ் பெர்ணான்டஸ் மற்றும் சினேகிதா ரெட்டி ஆகிய இருவரின் சிறை டைரியின் சில பகுதிகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். தலைமறைவு வாழ்க்கையில் இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸைப்பற்றிய தகவல்களைக் கேட்டு அவரின் சகோதரரை எப்படியெல்லாம் துன்பப்படுத்தினார்கள் என்பதும், அதே ஜார்ஜ் பெர்ணாண்டஸின் நட்பு வட்டத்தில் இருந்தார் என்பதற்காக சினேகிதா ரெட்டியை படுத்திய பாடுகளும் ஒரு சோற்று பதமாகவே இருக்கமுடியும். இதுமாதிரி தேசம் முழுவதும் எத்தனை எத்தனை கைதுகள்; அவற்றின் பின்னால் மறைந்திருக்கும் எத்தனை எத்தனை கதைகள் என்பதெல்லாம் என்றும் வெளிவரப் போவதில்லை.

ஆனால் எல்லா அரசியல்வாதிகளின் நிழலாகவும் இப்படி யாராவது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இருந்து வருகிறார்கள் என்பதுதான் நிதர்சனம். காரணம் இந்திராவுக்கு ஒரு சஞ்சய் காந்தி என்றால், எதிர்தரப்பில் மாற்றாக முன்நின்ற மொரார்ஜிக்கு ஒரு காந்தி பாய் தேசாய்! இருவருக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதை நாம் அவர்கள்

காங்கிரஸுக்கு எதிரான கட்சிகள், இப்படி பல துன்பங்களை அனுபவித்து, எமர்ஜென்ஸியை வெற்றிகரமாக எதிர்கொண்டு 1977-ல் தாங்கள் பெற்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளாமல், மீண்டும் ஆட்சியை மக்கள் இந்திராவிடமேஅளிக்கும்படி ஒற்றுமையில்லாமல் நடந்து கொண்டது, இன்று மட்டுமல்ல அன்றும் கூட எதிர்தரப்பு அரசியல் என்பது வெறும் சந்தர்ப்பவாத அரசியலாகத்தான் இருந்திருக்கிறது என்பதையே உணர்த்துகிறது. மாற்று அரசியலை முன்வைத்த தலைவர்கள் ஜேபியுடன் மறைந்து விட்டார்கள். அல்லது காங்கிரஸ் அப்படி யாரையும் வளர விடவில்லை. பின்னால் வந்த பிஜேபி முன்வைப்பது மத ரீதியான பயமுறுத்தல். அதை மாற்று அரசியலில் சேர்த்து விவாதிக்க முடியாது என்றும் நம்புகிறேன். அதனால்தான் அதனால் எல்லா திசைகளிலும் காலூன்ற முடியவில்லை.

நய்யார் ஓரிடத்தில் இப்படி எழுதுகிறார்.

மத்திய ராஜ்ய அமைச்சர் ஷா நவாஸ் கான் முஸாபர் நகர் குறித்து ஓர் அறிக்கையைப் பிரதமருக்கு அனுப்பினார். அதில் போலீஸார் வேண்டுமென்றே எப்படி கொடுமையாக நடந்து கொண்டார்கள் என்பது பற்றிய விவரங்கள் இருந்தன. அந்த அறிக்கை மிகைப் படுத்தப் பட்டிருப்பதாகக் கூறி விட்டார் திருமதி காந்தி.

அந்த அறிக்கையின் பிரதி பக்ருதீன் அலி அகமதிடம் தரப்பட்டது. அதைப் பார்த்த போது அவர் அதிர்ச்சி அடைந்தார். அதுப் பற்றி பிரதமருக்கு ஆட்சேபனை தெரிவித்ததோடு, தம்முடைய டயரியிலும் அவர் எழுதி வைத்தார்.

ஆனால் நய்யார், அது என்ன சம்பவம் என்று விளக்கவில்லை. எமர்ஜென்ஸி கொடுமைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்த பக்ருதீன் அலி அகமதுவையே கோபப்படுத்தி விட்ட அந்த முஸாபர் நகர் சம்பம் என்ன என்பது குறித்து அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

மொத்தத்தில் இந்த புத்தகம் சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றின் ஒரு முக்கியமான காலகட்டத்தை அப்படியே நம் கண்முன் நிறுத்துகிறது. விளைவாக சிற்சில மனச்சித்திரங்கள் முற்றிலும் கலையவும், மாற்றி அமையவும் செய்கின்றன.
மேலும்...

எனக்கான குறிப்புகள் (2): கல்கி, ராஜேஷ்குமார்

Posted: Wednesday, March 24, 2010 | Posted by no-nononsense | Labels: , , 0 comments
கல்கி ஆசிரம வீடியோக்களைப்பற்றி என் வாடிக்கையாளர்கள் இருவர் என் அலுவலக முன்னறையில் பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது. அதில் ஒருவர் கல்கியின் தீவிர பக்தர். இன்னொருவர் அவரின் நண்பர். இருவரும் அந்த வீடியோக்களையும் சன் டிவியையும் திட்டிக் கொண்டிருந்தார்கள். 'கடவுளின் காலடியில் இருப்பவர்களையும் சாதாரண பக்தனையும் எப்படி ஒன்றாக ஒப்பிட முடியும். அவர்கள் இருந்ததுதான் பரவச நிலை’ என்பதாக கல்கி பக்தர் ஆவேசமாக பேசியபடி, கல்கியின் அற்புதங்களாக சிலவற்றை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தார். அவரைக் காண எனக்கு பரிதாபமாக இருந்தது. சாமியார்களின் வண்டவாளம் வெளிச்சத்திற்கு வரும்போது இம்மாதிரி உண்மை பக்தர்கள்தான் மிகவும் சங்கடப்பட்டு போகிறார்கள்.

தாசஜிக்கள் என்னும் கல்கியின் சீடர்களின் செய்கையையெல்லாம காணும்போது அது உச்சக்கட்ட போதையாகத்தான் தெரிகிறது. ஆனால் எது அவர்களுக்கு இவ்வளவு போதையை தருகிறது என்பது குறித்தெல்லாம் இந்த வீடியோ விளக்கவில்லை. சில பக்தர்களுக்கு மனதிற்குள் தாண்டவமாடும் பித்துநிலை, இவர்களிடம் புறவயமாக வெளிப்பட்டிருக்கிறது. சுயசிந்தனையை மலுங்கடிப்பதுதான் சாமியார்கள் செய்யும் முதல் வேலை. அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிமுறையை கையாளுகிறார்கள். கல்கிக்கு போதை போலும்.

ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால் இந்த கல்கி என்னும் விஜயகுமாரின் மேல் அவருடன் பணிபுரிந்த அவரின் முன்னாள் நண்பர் என்று சொல்லிக்கொண்ட ஒருவர் போலீஸில் புகார் கொடுத்து, அது பத்திரிக்கைகளில் பரபரப்பாக இருந்தது. அந்த புகாரெல்லாம் என்ன ஆனது, புகார் கொடுத்த நபர் என்ன ஆனார் என்பதெல்லாம் துருவினால் நிறைய வெளிவரலாம்.


கல்கி ஆரம்பத்தில் இந்த கெட்டப்பில்தான் பல சீடர்களையும் கவர்ந்தார். பிறகு அவர் மனைவியையும் ‘அம்மா பகவான்’ ஆக்கி, அவருக்கென்று ஒரு தனி பிஸினஸை ”oneness” என்ற நாமகரணத்தில் வைத்துக் கொடுத்தார். அவருக்கென்றும் தனியாக பக்தர்கள் குழாம் உருவாகியது.

சாமியார்களைப்பற்றி பேசவும் எழுதவும் கூடாது என்று நினைத்தாலும் முடியாது போலிருக்கிறது. நேற்று அதே சன் டிவில் இன்னொரு சாமியாரைப்பற்றிக் காட்டிக் கொண்டிருந்தார்கள். இவர் பெயர் புருஷோத்தமன். சிவில் டிரெஸில் இருந்த இவரும் தன்னைத் தானே கடவுள் என்று சொல்லிக் கொள்கிறார். அவர் பக்தர்கள் கல்கியின் தாசாஜிக்களுக்கு குறைவில்லாமல் பித்து பிடித்தது போல ’சக்ரா’ என்று ஏதோ கத்துகிறார்கள்; உளறுகிறார்கள்; ஆடுகிறார்கள். ஒரு கல்லூரி மாணவி இங்கே வந்து ’மந்த்ரா’ கற்றுக்கொண்ட பிறகே வாழ்க்கை நன்றாக இருப்பதாக பேட்டியளித்துக் கொண்டிருந்தார்.

இத்துடன் சாமியார்கள் பற்றி தொடர்ந்து நான் பிரஸ்தாபிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். நாட்டில் பேசவும் எழுதவும் மற்ற எத்தனையோ விஷயங்கள் இருக்க, என் நேரத்தை நாய் வால் நிமிராமல் இருப்பது குறித்து ஆராய்ச்சி செய்வதில் வீணடிக்க விரும்பவில்லை.

0

பேசாமல் நான் ஏதாவது இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸம் பத்திரிக்கை ஒன்றில் வேலைக்கு சேர்ந்து விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் ;-) தினமும் வித விதமான க்ரைம் கதைகளுடன் வேலையை துவங்க முடியும் போலிருக்கிறது. காரணம் என் புத்தக உறவு துவங்கியதே ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்களுடன் தான். அவரில் ஆரம்பித்து பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேந்திரகுமார், தேவிபாலா, புஷ்பா தங்கதுரை என்று pulp fiction-களில் ஊன் உறக்கமற்று மூழ்கி கிடந்த காலம் என்று என் வாழ்வில் ஒன்று இருந்தது. சுபா, ப.பி எல்லாம் இப்போது சினிமாவில் வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தேவிபாலா பல சீரியல்களுக்கும் கதை வசனம் எழுதி வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். ராஜேந்திரகுமார் மறைந்து விட்டார். புஷ்பா தங்கதுரைக்கு வயதாகி விட்டது. ஆனால் இன்று வரை சினிமாவை சுவீகரித்துக்கொள்ளாத ஒரு எழுத்தாளராக ராஜேஷ்குமார் மட்டும் இருந்து வருகிறார்.


novels.jpg

ராஜேஷ்குமார் என்றதும் தான் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருக்கும் பாய் கடைதான் புத்தகங்கள் வாங்க பிரபலமானது. வழக்கமாக அங்கே எனக்கு தேவையானதை மட்டும் வாங்கிக்கொண்டு உடனே நடையைக் கட்டிவிடுவேன். நேற்று ஒரு நண்பருக்காக அங்கே காத்திருக்க நேர்ந்ததால், தனியாக ஒரு ஓரத்தில் தொங்க விடப்பட்டிருந்த நாவல்கள் மீதும் கண்களை மேய விட்டேன். பத்துக்கு ஒன்பது ராஜேஷ்குமார் நாவல்கள் தாம்! தமிழ் க்ரைம் நாவல் உலகில் மனிதர் இன்றும் சூப்பர் ஸ்டாராகத்தான் திகழ்கிறார் என்பது புரிந்தது.

ராஜேஷ்குமார் 1000 நாவல்களை கடந்து விட்டார். அவரின் 1000-ஆவது நாவல் ”டைனமைட் 98” ஐ படிக்க ஆவலுடன் தேடிக்கொண்டிருக்கிறேன். யாரிடமாவது இருந்தால், கிடைத்தால் பகிர்ந்துகொள்ளவும்.
மேலும்...

படிப்பதும் படிக்க விரும்புவதும்

Posted: Wednesday, December 16, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
இரண்டு நாட்களாக க.நா.சு வின் ’பொய்த்தேவு’ கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. க.நா.சுவின் விமர்சன கட்டுரைகளை நிறைய படித்துள்ளேன். கணையாழியில் அவர் போட்டுவந்த டாப் டென் நூற் பட்டியல்களை சேகரித்து வைத்துள்ளேன். ஆனால், அவர் புதினங்கள் எதையும் இதுவரை வாசித்ததில்லை. பொதுவாக என் வாசக தேர்வுகள் அபுனைவாகவே(non-fiction) இருக்கும். அதில் படிக்க குறித்து வைத்துள்ளதையே இன்னும் படித்துமுடிக்க முடியாமல் இருப்பதால், புனைவுகள் பக்கம் நான் செல்வதே இல்லை. என்றாலும், பாலாஜி போன்ற தீவிர புனைவிலக்கிய ஆர்வலர்களுடன் உரையாட நேரும்போது புதின ஜூரம் நம்மையும் இயல்பாக தொற்றிக் கொண்டு விடும். அவனுடைய சிபாரிசின் பேரில் பொய்த்தேவை நூலகத்தில் இருந்து எடுத்து வந்துள்ளேன். இரண்டொரு பக்கங்களை தாண்டுவதற்குள்ளாகவே க.நா.சு வின் எழுத்து நடை வசீகரித்து விட்டது. அதற்காகவே முழுதும் படித்து முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன்.

க.நா.சு போல இன்னொரு விமர்சக ஜாம்பவான் சி.சு.செல்லப்பா. அவரின் ’வாடிவாசல்’, நான் படிக்க குறித்து வைத்துள்ள must read புதினங்களில் ஒன்று.

*



க.நா.சு வின் மருமகன் பாரதிமணி ஓர் அனுபவ களஞ்சியம். டெல்லியில் பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகள் வகித்து ஓய்வு பெற்றுவிட்ட அவர், உயிர்மை இதழில் அவ்வப்போது எழுதிவரும் கட்டுரைகளுக்கு பெரும் வாசகர் கூட்டம் உண்டு. அவைகள் தொகுக்கப்பட்டு ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியுள்ளது. நான் வாங்க குறித்து வைத்துள்ள அந்த புத்தகத்தை உங்களுக்கும் பலமாக சிபாரிசு செய்கிறேன்.

பாரதிமணியை பல படங்களில் முதலமைச்சராக, நீதிபதியாக, அப்பாவாக பார்த்திருக்கலாம். பாரதி திரைப்படத்தில் பாரதியாரின் அப்பாவாக நடித்ததினாலேயே மணி, பாரதிமணி ஆனார்.

*

நேரம் கிடைக்கும்போது இனி இதுபோல் பார்த்த, கேட்ட, படித்த விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன். எல்லாவற்றுக்கும் நேரம் துணை செய்ய வேண்டும்.

மற்ற நண்பர்களும் அவர்களின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டால் உபயோகமாக இருக்கும். தமிழில்தான் என்று இல்லை. ஆங்கிலத்திலும் எழுதலாம். அது ஆங்கில புத்தகமாகவும் இருக்கலாம்.

“The things I want to know are in books; my best friend is the man who'll get me a book I ain't read.”
- Abraham Lincoln
மேலும்...