Showing posts with label ஊர்ப்புறம். Show all posts
Showing posts with label ஊர்ப்புறம். Show all posts

கார்த்திகை தீபம் - சில நினைவுகள்

Posted: Monday, November 22, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
தீபமா அல்லது இன்னொரு தீபாவளியா என்று சந்தேகிக்கும்படியான பட்டாசு வெடிச் சத்தங்களுடன் நேற்று கார்த்திகை தீபம் ஜோராக கடந்து சென்றிருக்கிறது. ஒருநாளும் இல்லாத திருநாளாக கடைக்கு அழைத்துச் சென்று டிஸன் தேர்வு செய்து விளக்கு வாங்கிக் கொடுத்தது முதல், அதற்கு திரி திரித்து தந்து, எண்ணை ஊற்றி வைத்து, விளக்கை வைக்க வாழையிலையை கச்சிதமாக கத்தரித்து தந்து, காற்றுடன் மல்லுக்கட்டி ஒளி விளக்கை ஒழியா விளக்காக குறைந்தது 1 மணி நேரம் வரை தூண்டி விட்டு கட்டிக்காத்தது வரை.. என்னளவில் ஒருமாதிரி கொண்டாட்டமாகத்தான் போனது நேற்றைய பொழுது.

பண்டிகைகளின் பின்னுள்ள புராணகதைகளெல்லாம் எவ்வளவு அபத்த குப்பைகளாக இருப்பினும், வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க வகை செய்யும் harmless days, அவைகள். அவற்றை உபயோகப்படுத்திக் கொள்ள ஒரு பகுத்தறிவுவாதியாக எனக்கு ஒரு தயக்கமும் இல்லை.



6-8 விளக்கு வைத்து முடிந்ததும் 8 மணிக்கு மேல் ஊர் பிள்ளையார் கோவில்(!) முன் வைக்கப்படும் சொக்கப்பனையை(கூம்பு) பார்க்க மகளுடன் போயிருந்தேன். அது ஒரு தனி அனுபவம். அதன் மலரும் நினைவுகளை சென்ற வருட கார்த்திகை தீபம் சமயத்திலேயே எழுதி இருக்கிறேன் என்பதால், நெல்லை கண்ணனின் மகனும் டைரக்டரும், சிறந்த எழுத்தாளருமாகிய சுகா எழுதிய நெல்லைத் தமிழ் கொஞ்சும் சொக்கப்பனை பதிவை படிக்கலாம்: http://venuvanamsuka.blogspot.com/2010/02/blog-post.html
மேலும்...

நாமக்கல் ஓசை

Posted: Thursday, January 14, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments

நேற்று நாமக்கல் ச.பே.புதூர் முனையில் ‘நாமக்கல் ஓசை’ எனும் விளம்பரத்தையும், இது சம்மந்தமான சில போஸ்டர்களையும் கண்டேன். பொங்கலை முன்னிட்டு சென்னையில் 17 இடங்களில் வெகு ஜோராக நடந்துவரும் 'சென்னை சங்கமம்" கலை நிகழ்ச்சிகளைப் போல இங்கேயும் "நாமக்கல் ஓசை" என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்கிறார்கள் என்று தெரிகிறது. நிச்சயம் வரவேற்கத்தக்க முடிவு. இதேமாதிரி மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டால் அது மெல்ல மறைந்துவரும் தமிழ் மரபுசார் கலை வடிவங்களை மீட்டெடுப்பதாக இருக்கும்.

மதிய நாய் கண்காட்சி மற்றும் மாலை நேர கலை நிகழ்ச்சிகளுக்கு செல்லலாம் என்று இருக்கிறேன். உள்ளூர் நண்பர்களை அங்கே சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சி. செவிக்கின்பம் போக கூடுதலாக என் செலவில் லிச்சி ஜூஸும் கிடைக்கும்.
மேலும்...

NAMAKKAL SHOULD BE REDISCOVERED - தொடரும் உரையாடல்

Posted: Tuesday, January 12, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
மாது: எனக்கு தெரிந்தவரை மாரியம்மன் கோவிலுக்கு அருகே ஒரு ஈஸ்வரன் கோவில் உள்ளது அது காமட்சியம்மன் கோவில் என்றும் சொல்வார்கள்,
மலையின் பெயரே நாமகிரி தாயார் என்று வந்துள்ளது.
திருத்தம் ராஜா தியேட்டர் இப்பொழுது MGM என்று பெயர் மாற்றம் அடைந்துள்ளது

புஷ்பராஜ்:
வள்ளிபுரத்தில் சில வருடங்களாக செழித்தோங்கும் ஈஸ்வரன் கோவிலையும் உன் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம். இவையெல்லாம் மிக சமீபமாக கட்டப்பட்டவை. இவற்றின் பின்னால் ஒரு நூறு, வேண்டாம், ஒரு ஐம்பது வருட வரலாறு கூட கிடையாது. அதனால் பழம்பெருமையில்லாத இவற்றை சைவ சமயத்தின் தாக்கத்தால் எழும்பியவை என்று சொல்ல முடியாது. நாமக்கல்லை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள மற்ற சிவதலங்களுடன் ஒப்பிடுவதன் மூலம் இதனை நீ அறியலாம்.

உதாரணமாக சேலம் சுகவனேஸ்வரர் குறைந்தது ஐநூறு வருடங்கள் பழமையானது. திருச்சியின் திருவானைக்கோவில் நாயன்மார்களால் பாடப்பெற்ற பெருமைக்கொண்ட பஞ்சபூத சிவதலம். ஈரோடு மாவட்டத்தில் பல பழமையான கோவில்கள் உண்டு. அவற்றுள் ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் குறிப்பிடத்தக்கது. கொல்லிமலையின் அறப்பளீஸ்வரர் கூட பழமையான கோவில்தான். பாடப்பெற்ற ஸ்தலம் என்றும் நினைக்கிறேன்.

இம்மாதிரி ஒரு சிவன் கோவிலும் நாமக்கல் பகுதியில் கிடையாது. பரமத்தி-வேலூர் நன்செய் இடையாறில் இருக்கும் ஒரு கோவில் மட்டும்தான் இங்கே சுற்றுபுறத்தில் பழமையான கோவில். பெயர் எனக்கு நினைவில்லை.

நாமக்கல் இதற்கு முன்பு பெரிய ஊர் கிடையாது என்பதால் மற்ற பெரிய ஊர்களுடன் இதை ஒப்பிட முடியாது என்பதை ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும் கூட, இங்கே நாமக்கல் மலையில் மட்டும் மேலொன்றும், இடம் வலம் இரண்டாக மொத்தம் மூன்று பெருமாள் கோவில்கள் இருப்பது இடிக்கிறது.

இவற்றையெல்லாம் ஒப்புநோக்கும்போது இந்த பகுதியில் சைவத்தை விட வைணவத்தின் தாக்கம் அதிகம் இருந்திருப்பதாக தெரிகிறது.

நாமக்கல்லின் பழம் வரலாறு குறித்து ஆராய முற்படுவதன் தொடக்கப் புள்ளி சேலத்தின் வரலாற்று ஏடுகளை புரட்டுவதில்தான் ஆரம்பிக்கிறது. காரணம் பண்டைய காலம் முதல் இதனை சேலத்தின் ஒரு பகுதியாக வகை பிரித்தே ஆண்டு வந்திருக்கிறார்கள்.
மேலும்...

NAMAKKAL SHOULD BE REDISCOVERED

Posted: Friday, January 8, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments


சென்னையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து கலைஞர் பேசும்போது “சென்னை மறுகண்டுபிடிப்பு” என்னும் புத்தகம் பற்றி சில மாறுபாடான கருத்துகளை கூறியிருந்தார். அதன் தொடர்ச்சி இந்த வார துகளக் வரை சர்ச்சையை கிளப்பிய வண்ணம் உள்ளது. நாம் அதனுள் நுழைய வேண்டாம்.

அப்புத்தகம் எஸ். முத்தையா எழுதிய "Madras rediscovered" என்னும் ஆங்கிலப் புத்தகத்தின் தமிழ் பதிப்பு. அதன் ஆங்கில மூலம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மறுபதிப்பு கண்டு வருகிறது. இன்றைய சென்னையின் முற்கால மெட்ராஸ் ராஜ்தானி வரலாற்றை தெளிவான ஆய்வுக்குட்படுத்தி தொகுக்கப்பட்ட அந்த நூலைப்பற்றி படிக்கும் போதெல்லாம், நாமக்கலுக்கும் ஏன் இப்படி ஒரு கால வரிசைப்படுத்தப்பட்ட வரலாற்று ஆய்வு நூல் இல்லை என்ற கேள்வியே மனதில் தொக்கி நிற்கிறது.

இங்கேயும் எத்தனையோ முனைவர்களும் ஆய்வாளர்களும் மண்ணின் மைந்தர்களாக தோன்றியிருக்கிறார்கள். எவரிடமிருந்தும் குறைந்த பட்சம் மேலோட்டமான ஒரு வரலாற்று நூல் கூட உருவானதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு ஆய்வு நூல் இருந்திருந்தால் வெறும் யூகங்களை (என்னென்ன என்பதை கீழே எழுதியிருக்கிறேன்) மட்டுமே வரலாறாக கொண்டு வாழ்ந்து வர வேண்டியதில்லை.

எனக்கு தெரிந்த தகவல்களின் அடிப்படையில் நாமக்கல்லை ஒரு குறுக்கு வெட்டுக்கு உட்படுத்தி யோசிக்கும் போது மனதில் கீழ் காணும் கேள்விகளும் சிந்தனைகளும் தோன்றுகின்றன.

  • நாமக்கல் நகரின் மையமாகத் திகழும் நாமக்கல் மலைக்கு ’நாமகிரி’ என்று பெயர் வந்தது எப்படி? நாமகிரி தாயார் காரணமாக நாமகிரி மலையா (அ) மலை காரணமாக நாமகிரி தாயாரா?
  • இப்பெயர் பெறும் முன் இம்மலையின் பெயர் என்ன?
  • மலையின் மேலுள்ள மலைக்கோட்டையை சிலர் திப்பு சுல்தான் கட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள்; சிலர் மதுரை திருமலை நாயக்கர் அரசாட்சியை சேர்ந்த ராமசந்திர நாயக்கர் கட்டியதாகச் சொல்கிறார்கள். உண்மையில் யாரால் கட்டப்பட்டது? அது சம்மந்தமான கல்வெட்டு, செப்பேடு ஏதேனும் உள்ளதா?
  • மலையை திப்பு சுல்தான் தான் கட்டினான் என்றால் மலை மீதுள்ள வரதராஜ பெருமாள் கோவிலும், முகப்பிலுள்ள ஹிந்து சின்னங்களும், நாமமும் எப்படி வந்தன?
  • மலை மீதுள்ள இஸ்லாமிய தர்கா (அ) சமாதி (அ) கட்டிடத்தின் பின்னுள்ள வரலாறு என்ன? எப்படி இந்து-முஸ்லிம் சமய சின்னங்கள் ஒரே இடத்தில் நிறுவப்பட்டன?
  • நரசிம்மர் - நாமகிரி அம்மன் கோவிலின் சிற்ப வேலைப்பாடுகளும், குகை குடைவரை கட்டிடக்கலை முறையும் அப்படியே திருமயம் கோவிலை ஒத்திருப்பதால் இவையும் மகேந்திரவர்ம பல்லவனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். நாமக்கல்லை பல்லவர்கள் ஆண்டதாக எங்கேயும் பதிவு இல்லாதபோது எப்படி பல்லவ முறையில் கோவில்கள் கட்டபட்டன?
  • நரசிம்மர் கோவிலை நோக்கி கைகூப்பி நிற்கும் ஆஞ்சநேயர் கோவிலின் ஸ்தல வரலாறு என்ன?
  • நாமக்கல் சேர மன்னர்களின் ஆட்சியின் கீழ் அதிக காலம் இருந்ததாக தெரிகிறது. பிறகு சோழர்கள், நாயக்கர்கள், பீஜப்பூர் - கோல்கண்டா - மைசூர் சுல்தான்கள், அவர்களுக்குப் பிறகு நிஜாம் மன்னர் ஆகியோரின் ஆட்சியின் கீழ் இருந்ததாக தெரிகிறது. பிறகுதான் மற்ற இடங்களையும் போலவே இதுவும் ஆங்கிலேயரின் கீழ் வந்துள்ளது. இவை எல்லாமே மேலோட்டமான தகவல்களாகவே ஆங்காங்கே பதியப்பட்டுள்ளன. கால வரிசைப்படுத்தப்பட்ட முறையான தரவுகள் இல்லை.
  • நாயக்க ஆட்சியின் கீழ் பிரிக்கப்பட்ட 72 பாளையங்களில் நாமக்கல் எந்த பாளையத்தில் அடக்கம்?
  • அரசு ஏடுகளிலோ அல்லது அருகிலுள்ள சேலம், ஈரோடு மாவட்ட ஆய்வு ஏடுகளிலோ நாமக்கலின் பண்டைய வரலாறுபற்றி ஏதேனும் குறிப்புகள் இருக்கிறதா?
  • ஈரோடு மாவட்டத்தில் கபாலிகம்(சைவ மதத்தின் ஒரு பிரிவு) பரவலாக பின்பற்றப்பட்டிருந்தும் நாமக்கல்லில் வைணவம் மட்டும் கோவில் கண்டது எப்படி? (நாமக்கல்லில் ஒரு ஈஸ்வரன் கோவில்கூட கிடையாது)
  • கி.பி 1 முதல் 4 வரை தமிழகத்தில் தழைத்தோங்கியிருந்த புத்த சமண சமயங்களின் பாதிப்பு எந்தளவு இங்கே இருந்தது?
  • நாமக்கல் மணிக்கூண்டு யாரால் கட்டப்பட்டது? அதற்கு தொட்ட்ண்ணா பெயர் வைக்கப்பட்டது ஏன்? யார் எந்த தொட்டண்ணா?
  • சுதந்திரப் போராட்டத்தில் நாமக்கல்லின் பங்கு என்ன? (கவிஞர் ராமலிங்கம் பிள்ளையைத் தவிர்த்து)
  • 1933-ல் காந்தியை நாமக்கல் அழைத்து வந்து குளக்கரையில் பொதுக்கூட்டம் நடத்தியவர் யார்? அக்கூட்டத்தின் உரை அல்லது அதைப்பற்றிய செய்தி குறிப்புகள், நூல் பதிவுகளின் சேகரம் உள்ளதா?
  • நாமக்கல் மக்களின் பிரதான தொழிலாக வேளாண்மை இருந்திருக்கிறது. இங்கே என்ன மாதிரியான பயிர் வகைகள் பயிரிடப்பட்டன? என்ன மாதிரி விவசாய முறைகள் பின்பற்றப்பட்டன?
  • பொய்யேரி போன்ற சிறு சிறு வாய்க்கால்கள் இருந்திருக்கின்றன. அவற்றின் நதிமூலம் யாது? நாமக்கல்லில் பின்பற்றப்பட்ட பாசனமுறைகள் யாவை?
  • லாரி, கோழிப்பண்ணை தொழில்கள் முதலில் யாரால் மேற்கொள்ளப்பட்டன? அவை எப்படி வேறூன்றின?
  • நாமக்கல்லின் ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்குகள் என்ன?
  • தமிழகத்தின் கலை அரசியல் பண்பாட்டியலில் நாமக்கல்லின் பங்கு என்ன?
  • துறையூர் ரோட்டில் நியூ பேலஸ், மோகனூர் ரோட்டில் காந்தமலை, ச.பே.புதூரில் செல்வி, சேலம் ரோட்டில் ராஜா தியேட்டர் ஆகிய சினிமா கொட்டகைகள் இருந்துள்ளன. இவற்றில் செல்வி சிவசக்தியாகவும், ராஜா கே.எஸ் ஆகவும் பெயர் மாற்றம் கண்டன. (ரமேஷ் தியேட்டர் நமக்கே தெரியும்). இதுபோல் கூத்து, நாடக மன்றங்கள் இருந்தனவா? அப்படியானால் எம்மாதிரி கூத்துகள் நடத்தப்பட்டன? இவையெல்லாம் குறித்த முழுமையான தகவல்கள் தேவை.
  • தமிழகத்தில் வறட்சி மற்றும் சாதி கலவரங்களால் ஒருபோதும் பாதிக்கப்படாத ஒரு சில இடங்களில் நாமக்கல்லும் ஒன்று என்கிறார்கள். இத்தகவல் எந்தளவு உண்மை?
  • நாமக்கல்லில் எந்த மாதிரி பஞ்சாயத்து அமைப்பு முறைகள் இருந்தன? அதில் எந்த தகுதியின் அடிப்படையில் பொறுப்புகள் வழங்கப்பட்டன? நீதி வழங்கல் அப்பஞ்சாயத்துகளில் நடைமுறையில் இருந்ததா?
  • நாமக்கல்லின் வரலாற்றில் தடம் பதித்த குறிப்பிடத்தக்க மனிதர்கள் யார் யார்? நாமக்கல் பகுதியின் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் குறித்த தரவுகள்?
  • நாமக்கல் பகுதியிலிருந்து ஏதாவது பெரு/சிறு பத்திரிக்கைகள் வெளியானதுண்டா? அப்படியானால் அதன் பின்புலம், தாக்கம்பற்றிய தகவல்கள்?
  • நாமக்கல் வட்டார வழக்கு யாது? அப்படி ஒன்று இருப்பின் அதன் தனித்துவமான வார்த்தைகளின் தொகுப்பு உருவாக்கப்படுதல் அவசியம்.
  • சுதந்திர இந்தியாவின் தமிழக சட்டமன்ற, பாராளுமன்ற ஆட்சியியலில் நாமக்கல் தொகுதி உறுப்பினர்களின் பங்களிப்பு

பிடித்து இழுக்க இழுக்க நீளும் மந்திரவாதியின் தொப்பி கயிறு போல நாமக்கல் வரலாறு குறித்த கேள்விகளும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கின்றன. இவை அனைத்தையும் திரட்டி தொகுக்க முடிந்தால் நமக்கும் ஒரு மறுகண்டுபிடிப்பு நூலும், பிறந்த மண்ணின் வரலாறும் கிடைக்கும். ஒருவகையில் பிறந்த மண்ணின் வரலாறு கூட பிறப்பித்த தந்தையின் பெயருக்கு ஒப்பாக தோன்றுகிறது. எதை வேண்டுமானாலும் தந்தை பெயராக எப்படி சொல்லிவிட முடியாதோ, அதுபோல யூகங்களை மட்டுமே என் ஊர் வரலாறாக சொல்லிக்கொண்டு வாழ முடியாது.
மேலும்...

கொல்லிமலை - தொடரும் விவாதம்

Posted: Thursday, January 7, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
(கொல்லிமலை குறித்து நண்பர்களுடன் மின்மடலில் நடந்த விவாதத்தின் ஒரு பகுதி)

மாது மஹா ப்ரபோ! ஒரு வேலை செய்வீராக! நேரே கூகுள் சென்று kolli hills tour / trip / road trip / trekking என்பது போன்ற குறிச்சொற்கள் கொண்டு தேடுவீராக! அப்போது தெரியும் நாலா திசைகளிலும் இருந்து எத்தனைப் பேர் கொல்லிமலைக்கு வந்து போயிருக்கிறார்கள்; அவர்கள் அதை எந்தளவு அனுபவித்து எழுதியிருக்கிறார்கள் என்று.

சென்ற வருடத்தில் ஒருநாள் அதிகாலையிலேயே கிளம்பி திருச்சியிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். முசிறி தாண்டியுள்ள மணமேடு அருகே பஸ் பழுதாகி நின்றுவிட்டது. அந்த தடத்தில் ஒரு பிரச்னை என்னவென்றால் பத்துக்கு ஒன்பது பஸ்கள் படிக்கட்டுகளையும் தாண்டி பிதுங்கிக்கொண்டுதான் பயணம் செய்யும். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாகியும் வேறு பஸ் மாறமுடியவில்லை. அப்போது ஜோடி ஜோடியாக பைக்கில் பயணம் வந்த இளைஞர்கள் சிலர், நான் நின்றிருந்த இடம் அருகேயுள்ள டீக்கடையில் ஓரம் கட்டுவதைப் பார்த்தேன். ஒரு பைக் மட்டும் ஒத்தையில் வந்திருந்தது. அவர்கள் பயணம் நாமக்கல் திசை நோக்கி இருந்ததால் அவர்களிடம் சென்று லிப்ட் கேட்டேன். மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். பேசிக் கொண்டிருந்ததில் அவர்களெல்லாம் திருச்சியில் கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் என்றும், பைக்கிலேயே கொல்லிமலைக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிந்தது. அதுகுறித்து அவர்கள் உற்சாகமாக காணப்பட்டார்கள். அவர்களில் ஒரு இளைஞன் இதுபோல் தான் பலமுறை பைக்கில் வந்து போயுள்ளதாகச் சொன்னான். பிறகு அவர்களுடன் நாமக்கல் வரை வந்து சேர்ந்தேன்.

நாமக்கல்லிலிருந்து சுமார் 55 கி.மீ தான் மொத்த தொலைவும். பைக்கில் சென்றாலுமேகூட ஒரு ஒன்றரை மணி நேரத்தில் உச்சிக்கே போய்விடலாம். இருந்தும் போகாததற்கு வித்தாரமாக வியாக்யானம் பேசிக் கொண்டிருக்கிறாய்.

உள்ளூரிலேயே வெண்ணையை வைத்துக்கொண்டு ஏனடா பிளாக்தண்டர், அதிசயம் என்று ஊரெல்லாம் தொண்ணையை தூக்கிக்கொண்டு நெய்க்கு அலைகிறீர்கள்; ஒருமுறை உள்ளூர் சரக்கையும் சுவைத்துத்தான் பாருங்களேன் என்றால், சொன்னதில் பொருளை விட்டுவிட்டு என் சொல்லில் மட்டும் குற்றம் காணும் உன் திறம் கண்டு வியக்கிறேன். போகாதது தேசிய குற்றம் ஒன்றும் இல்லைதான்; ஆனால் உன் தேடலில் குற்றம் என்கிறேன். சும்மா வாய் பேசாமல் நாங்கள் போகும்போது உடன் வந்துவிட்டு சொல், என் சொல் எப்படி என்று. சரியா?

(இப்படியெல்லாம் பில்டப் கொடுத்தாலாவது வர்றீங்களான்னு பார்க்கலாம்)

*

இதை எழுதும்போது இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஒருமுறை நானும் மணிகண்டனும் சோளக்காடுவரை ஒரு வேலையாக சென்றிருந்தோம். திரும்பிவரும்போது இயல்பாகவே மிதமான சுபாவம் கொண்ட அவனை கலவரப்படுத்த எண்ணி, வளைவுகள் தவிர்த்து மற்ற இடங்கள் அனைத்திலும் நான் வண்டியை கையை விட்டுவிட்டு ஓட்டி வந்தேன். அது கைனடிக் ஸபாரி வண்டி. டிவிஎஸ்ஸை விட நல்ல பாலன்ஸ் கிடைக்கும் என்பதால் பிரச்னை இல்லை. கீழே செக்போஸ்ட் வரும்வரை நான் செய்த அலும்புகளால் முகம் பேஸ்தடித்துப் போனதை மணி இன்னும் மறந்திருக்க மாட்டான்.

அப்போது அதெல்லாம் சாகஸம். இப்போது நினைக்கும்போதுதான் ரிஸ்க் புரிகிறது. சொல்லப் போனால் சாகஸத்துக்கும் ரிஸ்கிற்கும் இடையில்தான் இளமையின் த்ரில் இருக்கிறது.


மேலும்...

தமிழகத்தின் எல்லை தாவாக்கள் & கொல்லிமலை ஒரு சிறு பார்வை

Posted: Sunday, January 3, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
கொல்லிமலையை ஒட்டி வேறு எந்த மாநிலத்தின் எல்லையாவது இருந்திருந்தால் இப்போது நாம் கற்பனையாக பேசிக் கொண்டிருப்பது நிஜமான விவாதப் பொருள் ஆகியிருக்கும்.

குமரியை கேரளாவும், கோவையை கர்நாடகாவும், கிருஷ்ணகிரியை ஆந்திராவும் உரிமை கொண்டாடுவது போல தமிழ்நாடு அக்கம் பக்கம் மாநிலத்தின் ஏதாவது இடத்தைப் பற்றி சர்ச்சை கிளப்பி இருக்கிறதா? அவ்வப்போது திருப்பதி போச்சே என்று பெருமூச்சு விடுவதோடு சரி. ஆனால் இது தகப்பன் வீடு மாதிரி. மெட்ராஸ் ஸ்டேட்டில் இருந்து பாகப் பிரிவினை செய்து கொண்டுபோன பிள்ளைமார்கள்தான் நம் அண்டை மாநிலங்கள் எல்லாம். எனக்கு கொடுத்த பாகம் மறு கண் சுண்ணாம்பு என்று குறைபட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். மனித இயல்பு.

இதையாவது பங்காளி தகராறு என்று விட்டுக்கொடுத்துப் போகலாம். ஆனால் கச்சதீவை தாரை வார்த்ததைவிட ஒரு இளிச்சவாய்த்தனம் இன்னொன்று இல்லை. கருணாநிதி செய்த தவறு இன்று மீனவர்களை துப்பாக்கி குண்டுகளுக்கு காவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. அசல் முட்டாள்தனம்!

*

கொல்லிமலை இன்றுவரை ஒரு மாசுபடாத மலைப்பிரதேசமாக நீடிக்கிறது. அதற்கு அதன் 72 கொண்டை ஊசி வளைவுகள்தான் கவச குண்டலம். மாற்று வழி போடப்பட்டுவிட்டால் (அ) கொண்டை ஊசிகள் அகற்றப்பட்டுவிட்டால், வரும் பத்தாண்டுகளில் நிலைமை மாறலாம்.

இன்றுவரை மேலே எந்த பெரிய நகரமும் கிடையாது. அப்படியொன்று உருவாக்கப்பட்டு கொல்லிமலை சுற்றுலாதளமாக promote செய்யப்படும் நாள் அதன் அழிவின் தொடக்க நாள். நகர் விரிவாக்கம், மக்களின் அதீத குடியேற்றம் ஆகியன நிகழுமாயின் அங்கேயுள்ள மரங்கள் வெட்டப்பட்டு கானகத்தின் பரப்பளவு குறையும். அதன் விளைவாக நாமக்கல் மழை மறைவு பிரதேசமாகி வறண்டு போகக்கூடும். ஆகவே கொல்லிமலை அதன் இன்றைய வனப்புடன், அறியப்படாத மர்மங்களுடன் தொடர்ந்து அப்படியே நீடிப்பதுதான் நல்லது. ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் ஆகியவற்றின் அன்றைய இன்றைய நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இக்கூற்றின் பின்னாலுள்ள உண்மை புரியும்.

கொல்லிமலையின் அருமை நாமக்கல் மக்களால் இன்றுவரை உணரப்படவேவில்லை என்றே சொல்வேன்.
மேலும்...

நாமக்கல்லின் இலக்கிய முகம் (1)

Posted: Sunday, December 27, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
எனக்கு நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தின் மீது ஒரு விஷயத்தில் மாளாத பொறாமை உண்டு. அன்று முதல் இன்றுவரை சுந்தரம் ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், அ.கா.பெருமாள் போன்ற பல இலக்கிய எழுத்தாளர்களை தமிழுக்கு நல்கிய மாவட்டம் அது. இந்த வரிசையில் உள்ள முதல் மூன்று பெயர்களை தவிர்த்து நவீன தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை எழுதுதல் சாத்தியமில்லை. என் மனதுக்கு நெருக்கமான கவிஞர் தொ.சூசைமிக்கேலும் அதே மாவட்டத்துக்காரர் தான்.

அது போல், நாமக்கல்லின் இலக்கிய முகம் யாது என்று சிந்தித்துப் பார்த்திருக்கிறேன். புத்தகப்பிரியர்களான சில நண்பர்களை வினவியும் இருக்கிறேன். நாமக்கல் கவிஞரை தாண்டி வேறு ஒருவரை சுட்டிக்காட்ட ஒருவராலும் இயலவில்லை. நாமக்கல் கவிஞர் தீவிரமான இலக்கியப் பணி ஆற்றியது சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் - கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பு. அதற்கு பிறகு நாமக்கல்லில் இலக்கியம் படைக்க
ஒருவருமே இல்லையா என்பதுவே என் ஆரம்ப கால தேடலாக இருந்தது. சோகம் என்னவென்றால், அங்கொன்றும் இங்கொன்றுமாக குமுதத்திற்கு காமாசோமா ஒருபக்க கதைகள் எழுதிவிட்டு இலக்கிய அந்தஸ்துக்கு துண்டு போட்டு காத்திருக்கும் ஒரு சிலரைத் தவிர, காத்திரமான இலக்கிய படைப்பாளி என்று சொல்லிக் கொள்ள ஒருவருமே இல்லை என்பதுதான் நிதர்சனமாக இருக்கிறது. சிலம்பொலியார் இருக்கிறார் என்றாலும், அவரும்கூட பழந்தமிழ் இலக்கியத்தில் திறனாய்வு செய்தவரே தவிர, படைப்பிலக்கியமாகிய புனைவில் ஈடுபட்டவர் அல்ல என்றே நினைக்கிறேன்.

எனினும், இரண்டு எழுத்தாளர்கள் மட்டும் தமிழக இலக்கிய அரங்கில் நம் மானத்தை காத்துவருகின்றனர். ஒருவர், கு.சின்னப்ப பாரதி. மற்றொருவர், பெருமாள் முருகன். ’கூளமாதாரி’ என்னும் வட்டார வழக்கு நாவல் எழுதி புகழ்பெற்ற பெருமாள் முருகன் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர். நாமக்கல் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில்(கரட்டு காலேஜ்) விரிவுரையாளராக பணியாற்றுகிறார். அவரை பற்றி இன்னொரு நாள். இப்போது நான் சொல்லவந்தது, கு. சின்னப்ப பாரதி பற்றி.

கு. சின்னப்ப பாரதி (பரமத்தி)வேலூர் வட்டம் பொன்னிரிப்பட்டியை சேர்ந்தவர். கொங்கு வேளாள கவுண்டர். இங்கு இனத்தைப் பற்றி வலிந்து நான் சொல்லக் காரணம் அவர் அதையெல்லாம் உதறித் தள்ளி பொதுவுடமைவாதியாக (கம்யூனிஸ்ட்) காலமெல்லாம் வாழ்ந்துவருபவர் என்பதால்தான். நாமக்கல் மாவட்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆனிவேராக இயங்கியவர்களில் ஒருவர் அவர். அதுமட்டுமன்றி, இயக்கத்தின் பிரபலமான செம்மலர் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். அவருடைய கம்யூனிச இயக்க செயல்பாடுகளின் இடையே ஒரு தீவிர படைப்பிலக்கியவாதியாகவும் பரிணமித்து சில அற்புத புதினங்களை தமிழுக்கு தந்திருக்கிறார். இடதுசாரி இலக்கியத்தில் முக்கியமானதாக பெரும்பான்மையான விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்படுவது அவரது தாகம் மற்றும் சங்கம் ஆகிய நாவல்கள் ஆகும். ஏனையவை, தலைமுறை மாற்றம், சர்க்கரை, பவளாயி, சுரங்கம். இவற்றில் நான் தாகம் தவிர மற்றவற்றை இன்னும் படிக்கவில்லை என்பதால் படைப்பை முன்வைத்து கருத்துகூற முடியவில்லை. இருந்த போதிலும், படைப்புகளைப் படித்த ஜெயமோகன் போன்ற மற்ற படைப்பாளிகளிடம் உரையாடிய வகையில் கு. சின்னப்ப பாரதியின் எழுத்துக்கள் பெற்றுள்ள மரியாதையை உணர்ந்து கொள்ள முடிகிறது.

இவரை நான் முதலும் கடைசியுமாக சந்திந்தது, நாமக்கல்லின் பிரபல இடதுசாரி சிந்தனையாளரும் என் உறவினருமான கே.பழனிசாமியின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில். குழுமியிருந்த கூட்டத்திற்கு இடையில் பெரிதாக பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனினும், கொல்லிமலையில் 1950 வாக்கில் நடைபெற்ற கந்துவட்டி எதிர்ப்பு போராட்ட அனுபவங்கள் பற்றி சிறிது மட்டும் கேட்டு அறிந்தேன். வரலாறு தெரியாதவர்களால் கம்யூனிஸ்ட்கள் என்றால் ஏதோ தெருமுக்கில் நின்று கோஷமிடும் கோமாளிகள் மாதிரி பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் சமூகத்திற்கு ஆற்றியுள்ள பணிக்கு நிகராக இன்னொரு இயக்கத்தை யாராலும் சுட்டிக் காட்ட முடியாது. நான் மேற்சொன்ன அந்த கொல்லிமலை சம்பவத்தை குறிப்பாக நான் கேட்டறிய காரணம் - உழைப்பதும் அதைக்கொண்டு பிழைப்பதும் அன்றி வேறொன்றும் அறியாத ஒரு பழங்குடி இனத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை, அடக்குமுறை பற்றிய ஒரு காலகட்டத்தின் உண்மை வரலாற்றை அறிந்து கொள்ளும் நோக்கத்தில்தான். நம்மை சுற்றி பல நூறு வரலாறுகள் பனி மறைக்கும் பார்வையாக காலத்தால் மறைக்கப்பட்டு கிடக்கின்றன. அவற்றை அறிதலின் மூலம் நாம் நம் உண்மையான வரலாற்றை மீட்டெடுப்பது, காலம் காலமாக நம் முன்னால் பரப்பப்பட்டுவரும் பொய்யுரைகளை கட்டுடைக்க உதவும். இதனால்தான் நான் தீராத சரித்திர காதலனாக இருக்கிறேன். பார்வை நாளுக்கு நாள் தெளிவடைந்து வருகிறது.

அந்த ஒருமுறைக்குப் பிறகு வேறு எந்த இலக்கிய கூட்டங்களிலும் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தாலும் சந்தர்ப்பவாத முகஸ்துதிகள் மட்டுமே இலக்கிய உரைகளாக பொழியப்படும் இடத்தைவிட்டு அகன்றே வருகிறேன். இதனால் கு. சின்னப்ப பாரதி அவர்களை பிறகு சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று இணையத்தை மேய்ந்து கொண்டிருந்த போது கு. சின்னப்ப பாரதிக்கு சென்னையில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சியில் கலைஞர் பொற்கிழி விருது அளிக்கப்பட உள்ளது என்று அறிந்தேன். எத்தனையோ செய்திகள் நம்மை கடந்து போகின்றன. நமக்கு சம்மந்தமுள்ளது என்று அறியாமலே அவற்றில் எத்தனையோ பெயர்களை நாம் கடக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு பெயராகவே கு. சின்னப்ப பாரதியினுடையதும் நாமக்கல்வாசிகளால் கடந்து செல்லப்படுகிறது. அவர்களுள் நாமும் ஒருவராக இல்லாமல் குறைந்த பட்சம் அவரை பற்றி தெரிந்து கொள்ளவாவது செய்யலாமே என்ற நோக்கத்தில்தான் இதனை எழுதினேன். வேறு சந்தர்ப்பங்களில் மற்றவர்களைப் பற்றியும் எழுதுகிறேன்.
மேலும்...

"Paa" வேட்டைக்காரன் | மோகனூர் - வேலூர் காவிரி கரைகள்

Posted: Friday, December 4, 2009 | Posted by no-nononsense | Labels: , 0 comments
So, ‘Paa’ proves to be an excellent film and you’ll surely enjoy watching it.

Verdict: Highly recommended
- ‘பா’ படத்திற்கு இப்படி விமர்சனம் எழுதியிருக்கிறது ஒரு இணையதளம் (IndiaGlitz). தேடிப் படித்த அனைத்து விமர்சனங்களுமே படத்தை பாராட்டித் தள்ளி இருக்கின்றன. டிவிடி கிடைக்க எப்படியும் இன்னும் ஒரு வாரம் ஆகுமென நினைக்கிறேன். எதற்கும் டோரண்ட்களில் தேடிப் பார்க்க வேண்டும்.

அமிதாப் கடந்த பத்தாண்டுகளில் நடித்துள்ள வித்தியாசமான காதா பாத்திரங்களில் ஒன்றையாவது ஏற்று நடிக்க நம் ஊர் சூப்பர் ஸ்டார்கள் முன் வருவார்களா என்பது சந்தேகமே. இத்தனைக்கும் பிளாக், சீனிகும், பா எல்லாமே கமெர்சியலாகவும் ஹிட் என்பதால் ஆர்ட் மூவி என்றும் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது.

இன்னும் படமே வரவில்லை. அதற்குள் இந்த வேட்டைக்காரன் விளம்பரம் படுத்தும் பாடு தாங்க முடியாததாக இருக்கிறது. ஒரு வாரமாக சன் டிவியை திருப்பவே முடியவில்லை. இத்தொல்லை எப்படியும் இன்னும் சில மாதங்கள் வரையாவது நீடிக்கும் என்பதால் என் அறையில் இருக்கும் டிவியில் சன் டிவியே வராமல் செய்துவிட்டேன். ஏதோ என்னால் முடிந்தது. சன் டிவி மீது வன்கொடுமை வழக்கு தொடர யாராவது தயாராக இருந்தால் அதற்கு வக்காலத்து ஃபைல் பண்ண நான் தயார். ஒன்று இவர்கள் படம் வாங்குவதை நிறுத்த வேண்டும். அல்லது நாம் சன் டிவி பார்ப்பதை நிறுத்தி விட வேண்டும். இரண்டில் ஒன்று நடந்தாலொழிய சன் டிவி நமக்கு கொடுக்கும் டார்ச்சரில் இருந்து தப்பிக்க வழியே இல்லை.

oo-oo oo-oo oo-oo


பரமத்தி வேலூர் காவிரி பாலத்திலிருந்து என் மொபைலில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. நமது வண்டியிலேயே கரை வரைச் சென்று, வண்டியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு இறங்கி குளிக்க வசதியான விசாலமான ஆற்றங்கரை ஒன்றை இதைப் போல வேறு நம் ஊர் அருகில் எங்கும் நான் பார்த்ததில்லை. மோகனூரில் சுடுகாட்டு கரை ஒன்று இதுபோல் இருந்தது. மோகனூர் ஆறு தொடர்பான சுகந்தமான நினைவுகள் அனைத்தும் எனக்கு அக்கரை சம்மந்தமானதுதான். உங்களுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். சரியாக அதே இடத்தில்தான் இப்போது மோகனூர் - வாங்கல் இணைப்புப் பாலம் பிரம்மாண்டமான தூண்கள் பதிய வேலையாகிக் கொண்டிருக்கிறது. அந்த இடமே வடிவம் மாறி குளிக்க உகந்ததான நிலையில் இல்லை. அதனால் இப்போது மோகனூர் ஆறு என்றால் கோவில் வாசல் படித்துறை மட்டுமே. அதற்கு பதில் இனி இங்கேச் செல்லலாம் என்று சிபாரிசு செய்கிறேன்.

வரும் வாரஇறுதிகள் ஒன்றில் அங்கேச் சென்று குளியல் போட்டு புதிதாக வேலூரில் திறக்கப்பட்டுள்ள ’நம்ம கடை’ என்னும் வாத்து கறி கடையில் சிரம பரிகாரம் செய்து வர எண்ணியுள்ளேன். இணைந்து கொள்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் :-)

மேலும்...

உழவரின் உணவகம்

Posted: Tuesday, October 27, 2009 | Posted by no-nononsense | Labels: 0 comments
நாமக்கல்லை பொருத்தவரை வெளியே சென்று ஏதாவது சிற்றுண்டி/ஸ்நாக்ஸ் சாப்பிட்டு வரலாம் என்றால் அன்று முதல் இன்று வரை அதே பானி பூரி, சில்லி சிக்கன், பீப்ஸ் கடைகள் தான் இருக்கின்றன. அதையும் விட்டால் பேக்கரிகளில் பப்ஸ் கிடைக்கும். இவை எதிலுமே மனிதன் உண்ணத்தக்க எண்ணெய்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் ஏதாவது சைவ ஹோட்டலுக்கு சென்று தயிர் வடையும், குழி பனியாரமும் சாப்பிடுவதோடு திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் குறையை சில நாட்களாக "உழவர் உணவகங்கள்" தான் போக்குகின்றன. உழவர் சந்தை தெரியும். அதென்ன உழவர் உணவகங்கள் என்று கேட்கும் NRN' கள் இங்கே, இங்கே க்ளிக் செய்யலாம்.

அச்செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதைபோல சோளம், தினை, கம்பு மற்றும் பயிறு வகைகளை சார்ந்த முற்றிலும் கிராமிய உணவுகள் மட்டுமே இக்கடைகளில் விற்கப்படுகின்றன. மாலை வேளைகளில் மக்கள் கூட்டம் அள்ளுகிறது. 5 மணி முதல் 7 மணிக்குள் எல்லாம் விற்று தீர்ந்து விடுகிறது. உளுந்த கஞ்சியும், சூடான சோள பனியாரமும், கிழங்கு பக்கோடாவும் என்னுடைய ஃபேவரைட். நாமக்கல்லின் ஹாட் ஸ்பாட் கொஞ்ச நாட்களாக இதுதான் என்றால் மிகையாகாது.

சில புகைப்படங்களை இதனுடன் இணைத்துள்ளேன். பட்டியலிலுள்ள எல்லாம் கிடைப்பதில்லை என்றபோதிலும் கிடைப்பனவற்றில் பழுதில்லை. அடுத்தமுறை ஊருக்கு வருபவர்கள் எல்லோருக்கும் என் செலவில் அங்கே ட்ரீட் உண்டு.

*
Reply to one of my friends comment:

இல்லை, இது காண்ட்ராக்ட் விடப்படுவதில்லை. உழவர் அடையாள அட்டை வைத்திருக்கும் உழவர்கள் மட்டும் நாளொன்றுக்கு ரூ.20 கட்டணம் செலுத்திவிட்டு கடை போட்டுக்கொள்ளலாம். வேறு வெளியாட்களுக்கு அனுமதியில்லை. இவற்றை கண்காணிக்க ஒவ்வொரு உழவர் சந்தையிலும் அலுவலகங்கள் இருக்கின்றன.

எனினும், அடையாள அட்டை வைத்திருக்கும் எல்லோருமே உழவரா என்றால் நிச்சயம் கிடையாது. வியாபாரிகளும் கலந்துதான் இருக்கிறார்கள். இது தவிர்க்க முடியாதது.

இந்த உணவகங்களில் ஆரம்பத்தில் இப்போது இருப்பதை விட இன்னும் நிறைய கடைகளும், வித விதமான பதார்த்தங்களும் இருந்தன. இப்போது வாடிக்கையாளர் அதிகம் விரும்பும் பலகாரங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. போகப் போகத்தான் இதன் நிலைத்தன்மை தெரிய வரும்.

------------

நமது முன்னோர்களின் உணவில் இடம்பெற்றிருந்த கம்பு, சோளம், ராகி வகையறா உணவெல்லாம் இப்ப எங்க கிடைக்குது சொல்லு......? nowhere! சிறு வயதில் என் பாட்டி எனக்கு கம்பு/சோள சோறும், அதற்குத் தொட்டுக்கொள்ள புலச்ச கீரை கடைசலும் சமைத்து பரிமாறியது ஞாபகம் உள்ளது. பிறகு இப்போது சில பெரிய இடத்து திருமணங்களின் பஃபே விருந்துகளில் கம்பஞ்சோறு, சோள தோசை சாப்பிட்டிருக்கிறேன். என் அனுபவம் அவ்வளவுதான்.
மேலும்...