கொங்கு முன்னேற்ற பேரவை கட்சி குறித்தான ஒரு நண்பரின் மின்னஞ்சலுக்கு நான் ஆற்றிய எதிர்வினையை இங்கே சேமிக்கிறேன்.
-0- -0-
பொதுவாக ஆதிக்க ஜாதிகளின் பலவீனமே ஒற்றுமையின்மை தான். பதவி போட்டி என்று வரும்போது கொமுபேரவையிலும் விரைவில் இது தலைகாட்டும். (ஏற்கெனவே இரண்டாகத்தான் பிரிந்து கிடக்கிறது. தனியரசு என்பவர் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கும் போஸ்டரும் கொடியும் கூட்டமும் அல்லோகல்லல் படுகிறது).
தலித்கள் போன்ற ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்கு இருக்கும் சமுதாய தேவைகள் எதுவும் கொங்கு வேளாள கவுண்டர்களுக்கு கிடையாது. கள் இறக்க அனுமதி, விவசாய இடுபொருள் விலைகுறைப்பு, தீண்டாமை வழக்கு நீக்கம் ஆகிய வாழ்வாதரங்களோடு நேரடியாக சம்மந்தப்படாத மேலோட்டமான கோரிக்கைகளைத் தவிர பெரிதாக வேறு கோரிக்கைகள் இவர்களுக்கு இல்லை. BC இல் இருந்து MBC ஆக மாற்றி இடஒதுக்கீடு அளிக்க கேட்கிறார்கள். நடக்காத காரியம் என்பது அவர்களுக்கே தெரியும்.
அதிமுக, திமுக கட்சி அரசியலை உடைத்து தமது ஜாதி ஓட்டுக்களை ஒரு சேர திரட்டுவது இன்றளவில் இயலாத காரியம். நம்ம ஜாதி கெத்த காட்டணும் என்பதெல்லாம் ஆர்வ கோளாறாக ஓரிரு தேர்தல்களில் நீடிக்கலாம். அதற்கு மேல் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்பவில்லை.
மேலும் வரும் தேர்தலில் கொங்கு பெல்ட் எனப்படும் கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, கரூர், நாமக்கல் பகுதிகளில் அதிக அளவில் கொங்கு சமுதாயத்தினரே எல்லா கட்சியினராலும் நிறுத்தப்பட இருக்கிறார்கள். அதனால் கவுண்டர்கள் ஓட்டு கவுண்டர்களுக்கே என்னும் கோஷமும் எதிர்தரப்பிலும் கவுண்டர் வேட்பாளரே நிற்கும்போது அடிபட்டு போகிறது.
உதாரணமாக கடந்த தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் கவுண்டர்களே. இதனால் ஜாதி ஓட்டுக்கள் அனைவருக்கும் பிரிந்து நாமக்கல் கொமுபே வேட்பாளர் மற்ற இடங்களில் போட்டியிட்ட கொமுபே வேட்பாளர் பெற்ற ஓட்டுக்களோடு ஒப்பிடுகையில் குறைவாகவே பெற்றார். இத்தனைக்கும் அவருக்கு ஜாதி மக்களிடையே மிக நல்ல பெயர்.
தனியாக நின்று பெரிதாக எதுவும் சாதிக்க முடியாத விஜயகாந்த் அடுத்த தேர்தலில் ஏதாவது ஒரு கூட்டணியில் இணைந்தால் கொமுபே ஓட்டு சதவிகிதம் இன்னும் குறையவே வாய்ப்பிருக்கிறது. எனினும் கடந்த தேர்தலில் ஓட்டை பிரித்துக் காட்டியிருப்பதால் சட்டமன்ற தேர்தலில் அதிமுக (அ) திமுக — ஏதாவது ஒரு கூட்டணியில் இடமும் போட்டியிட சில தொகுதிகளும் கிடைக்கலாம். அதைத் தாண்டி புரட்சிகரமாக எதுவும் நடக்க வாய்ப்பில்லை. உண்மையில் கொமுபேரவை தன் பலத்தை சுயபரிசோதனை செய்து கொள்ளும் களமாக வரும் சட்டமன்ற தேர்தலே இருக்கும்.
தமிழக அரசியல் களத்தில் ஆகப்பெரும் மாற்றங்களை இரண்டாம் கட்ட தலைவர்களே இல்லாமல் இயங்கி வரும் அதிமுகவில் ஜெயலலிதாவின் இடம் வெற்றிடமாகும் போது மட்டுமே காண இயலும். அதுவரை இப்போது இருக்கும் நிலையே நீடிக்கும்.
கொங்கு முன்னேற்ற பேரவை — ஒரு பார்வை
Posted:
Sunday, June 21, 2009 |
Posted by
no-nononsense
|
Labels:
அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
Test comment
Post a Comment