பலரும் பலநாளும் எதிர்பார்த்திருந்த முக்கியமான மாவீரர் நாள் நேற்று கடந்து சென்றிருக்கிறது. மாவீரர் நாளில் உரையாற்றுவதன் மூலம் ஈழப் போராட்டத்தை யார் அடுத்து முன்னெடுத்துச் செல்லப் போகிறார் என்று பலரின் மனதிலும் தொக்கி நின்ற கேள்விக்குத் தெளிவான பதிலைத் தராமலே இந்த நாள் சென்றுவிட்டது. சிலர் பொட்டு அம்மன் வருவார் என்றனர்; இன்னும் சிலர் பிரபாகரனே தன்னை வெளிபடுத்திக் கொள்வார் என்றனர். இரண்டுமே நடக்கவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலகம் ’மாவீரர் தின உரை’ என்ற பெயரில் அறிக்கை மட்டும் வெளியிட்டுள்ளது. ஆனால் பிரபாகரனின் இடத்திலிருந்து தமிழீழ விடுதலை புலிகளின் சார்பில் யாரும் உரையாற்றவில்லை.
புலம் பெயர் சமூகத்திலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசு செயற்குழு இணைப்பாளர் ருத்ரகுமாரன் அறிக்கை வெளியிட்டார். என்னைப் பொருத்தவரை, களத்தில் போராட்டங்கள் சுத்தமாக துடைத்தழிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த transnational goverment என்பது மிக அவசியமானது ஒன்று. இததகைய அரசமைவு, போராட்டத்தை உளவியல் ரீதியாக பலப்படுத்துவதாகவும், சர்வதேச சமுதாயத்தில் ஓர் கவன ஈர்ப்பாகவும் இருக்கும் என்பதால் இதற்குரிய முக்கியத்துவம் தமிழ்ச் சமுதாயத்தில் முதலில் கிடைக்கப்பெற வேண்டும்.
இதற்கிடையில், விடுதலை புலிகளின் மூத்த தளபதி ராம் என்பார், பிரபாகரன் போர் முனையின் இறுதி நாளில் முள்ளிவாய்க்காலில் வைத்து தனக்குப் பின் விடுதலைப் போரை முன்னெடுத்துச் செல்லும் பணியை தன்னிடம்தான் ஒப்படைத்ததாகவும், அதனை தமிழ்ச் சமுதாயம் ஆதரிக்க வேண்டும் என்று கூறி மாவீரர் தின உரையாற்றி ஓர் ஒலிநாடா வெளியிட்டுள்ளார். பிரபாகரனின் உள்வட்டத்திலிருந்த முக்கிய தளபதிகளில் ஒருவரான இந்த ராம் காட்டுப் பகுதியில் ஒளிந்திருந்தபோது, இலங்கை ராணுவத்தின் தேடுதல் படையணியால் அண்மையில் கைது செய்யப்பட்டுவிட்டதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இப்போது அந்த ராமிடமிருந்துதான் உரை வெளியாகியுள்ளது. இதனால், ஒருவேளை இது இலங்கை ராணுவத்தின் உளவியல் ரீதியான யுத்தத்தின் ஒரு நடவடிக்கையாக, தமிழ் மக்களை குழப்பத்தில் ஆழ்த்த செய்யப்பட்ட ஏற்பாடாக இருக்கலாம் என்று சந்தேக கண் கொண்டு பார்க்கப்ப்படுகிறது. கிட்டத்தட்ட நிராகரிக்கவும் படுகிறது. அவ்வளவு சீக்கிரத்தில் பிரபாகரன் இடத்தில் யாரையும் தமிழ் சமூகம் ஏற்றுக் கொண்டு விடாது.
வழக்கம்போல் பழ.நெடுமாறன் பிரபாகரன் உயிருடன் தான் உள்ளார் என்று மக்களை குழப்பும் வேலையை மாவீரர் நாளிலும் செய்துள்ளார். ஆனால் அவரிடம் கேபி உள்ளிட்ட பிரபாகரனின் சகாக்கள், புலிகளின் தலைமைச் செய்லகம் மற்றும் சர்வதேச ஈழ சமுதாயம் அனைத்தும் ஒப்புக்கொண்டுவிட்ட பிரபாகரனின் இறப்பை எதன் அடிப்படையில் மறுக்கிறீர்கள் என்று மட்டும் கேட்டுவிட முடியாது. கேட்பவர் தமிழின விரோதியாக சித்தரிக்கப்படுவார். வைகோ தேவலாம்; ஒருவழியாக பிரபாகரன் கொலை செய்யப்பட்டுள்ளதாக பேட்டிக் கொடுக்கத் துவங்கிவிட்டார்.
இம்மாதிரியான குழப்பவாதிகளால்தான் பிரபாகரனுக்கு நியாயமாக செலுத்தப்பட்டிருக்க வேண்டிய அஞ்சலி செலுத்தப்படாமலே இன்றுவரை தொடர்கிறது.
கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகளாக ஈழ நடப்புகளை உன்னிப்பாக அவதானித்து வரும் எனக்கு இந்த மாவீரர் நாள் பிரபாகரனின் உரையின்றி மௌனமாக கடந்து சென்றிருப்பது, மௌனத்தின் வலியாக மட்டுமல்ல, தமிழின அழிப்பு நடவடிக்கையை ஆதரித்துவிட்ட ஒரு நாட்டின் குடிமகன் என்ற வகையில், மனசாட்சியின் வலியாகவும் இருக்கிறது.
0 comments:
Post a Comment