My reply to my friend's support for Seeman and his view on today's youths:
நண்பா, சீமான் விஷயத்தில் நிச்சயம் நீ என்னை எதிர்கொள்வாய் என்று எதிர்பார்த்தேன். அப்படியே நடந்தது. விவாதிக்க முன்வந்ததற்கு முதலில் நன்றி. விவாதிப்பதன் மூலம்தான் சிந்தனையை கூர் தீட்டிக்கொள்ள முடியும். மாற்று கருத்துக்களை எதிர்கொண்டால்தான் தெளிவு கிடைக்கும்.
இன்றைய இளைஞர்களை யாரும் தவறாக வழிநடத்திவிட முடியாது என்கிறாய். நமது இளைஞர்கள் அவ்வளவு பக்குவப்பட்டு விட்டார்கள் என்றால் எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் நாட்டு நடப்பு அப்படியிருப்பதாகத் தெரியவில்லை. ஜாதி, இனம், மொழியின் பெயரால் இளைஞர்களின் உணர்வுகள் தூண்டிவிடப்படும் செயல்களே பெரும்பாலும் நடைபெறுகின்றன. அண்மையில் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்கள் கொலைவெறி கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டது எந்த பக்குவத்தின் அடிப்படையில் என்று விளக்கினால் நல்லது. அது முதலில் ரேக்கிங் காரணமாக எழுந்த தகராறு என்றார்கள். ஆனால் பின்னர்தான் தெரியவந்தது அது முழுக்க முழுக்க ஜாதி துவேஷத்தின் அடிப்படையில் எழுந்த மோதல் என்பதும்; பின்னாலிருந்து தூண்டி விட்டவர்கள் அரசியல்வாதிகள் என்பதும். இதெல்லாம் பிற்பாடு மாணவர்களே அளித்த பேட்டியில் வெளியான தகவல்கள். இவர்கள் படித்த இளைஞர்கள் தானே, பிறகு ஏன் ஜாதி மோதல்?
சரி, இருவேறு ஜாதி இளைஞர்கள் தான் அடித்துக் கொள்கிறார்கள் என்றால், ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களே வெட்டிக் கொள்கிறார்களே? விடுதலை சிறுத்தைகளும், தேவேந்திர குல வேளாளர்களும் இளைஞர்களால் நிரம்பிய கட்சி தானே? ஏன் அடித்துக் கொள்கிறார்கள்? சரி, அவர்கள் மிக பிற்படுத்தப்பட்ட இனம் என்பதால் விட்டு விடலாம் என்றால், சற்று முன்னேறிய இனமாகிய கவுண்டர்களே இரண்டு கட்சி வைத்துக்கொண்டு(பெஸ்ட் ராமசாமி, தனியரசு) தெருமுனைகளில் அடித்துக் கொள்வது எதனால்? இத்தனைக்கும் அடித்துக் கொள்பவன் எல்லாம் மாமன்-மச்சானாக இருக்கிறான். அதிலும் தனியரசின் பின்னாலுள்ளவர்கள் அனைவரும் இளைஞர்கள் மட்டுமே! அவர்களின் மீதுதான் அடிக்கடி அடிதடி வழக்குகள் பதிவாகின்றன. இத்தனை நாளும் ஒற்றுமையாக இருந்த இனம் இன்று பிளவுபட்டு நிற்பதும், அதற்கு அந்த இனத்தின் இளைஞர்களே துணை போவதும் எந்த பக்குவத்தின் அடிப்படையில்?
அரசியல் / ஜாதி கட்சிகளின் மாநாடுகளை கவனித்திருக்கிறாயா.. அதன் முன்புறம் ஆடிக்கொண்டும் ஓடிக்கொண்டும் திரிவதெல்லாம் யார்? அதிலேதாவது அர்த்தம் இருக்கிறதா?
இந்திய தேசியத்தைப் பற்றி இன்றைய இஸ்லாம் சமுதாய இளைஞர்களின் கருத்தென்ன? இந்து தீவிரவாதத்தால் தாங்கள் நசுக்கப்படுவதாக நினைக்கிறார்கள். ஜிகாத் தவறில்லை என்று கருதுகிறார்கள். இந்தியாவில் தங்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலை நிலவுவதாக நினைக்கிறார்கள். ஆனால் அப்படியில்லை; நாம் நமது முஸ்லிம் நண்பனையோ, அல்லது நம் வீட்டருகில் வசிக்கும் முஸ்லிம் குடும்பத்தையோ வேறுபாடாக நினைக்கவில்லை என்று உனக்கும் எனக்கும் தெரியும். அவர்களுக்கும் சமீபகாலம் வரை அப்படித்தான் தெரிந்துவந்தது. ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை என்பதையும், இந்தியத்துவத்திற்கெதிரான அவர்களின் ஆவேசமான கருத்துக்களையும் நீ அவர்களின் ஏகத்துவம் போன்ற பத்திரிக்கைகளில் படித்தால் தெரிந்துகொள்ளலாம். 1994க்கு முன்பில்லாத மாற்றம் இன்றைக்கு ஏற்பட்டது எதனால்? இன்றைக்கு இருப்பதில் 90% தீவிரவாத அமைப்புகள் 1990க்கு முன்பு வரை காஷ்மீரில் கிடையாது. இவ்வளவு பிரச்சினைகளும் கிடையாது. ஆனால் அதற்கு பிறகு அங்கே இத்தனை இளைஞர்கள் தீவிரவாதம் பக்கம் திரும்பியது எதனால்?
ஒரிஸ்ஸா கந்தமாலில் கிறிஸ்துவர்களை தேடி தேடி வேட்டையாடிய கும்பலில் இருந்ததெல்லாம் யாரென்று நினைக்கிறாய்?
மொழியின் பெயரால் இன்று மஹாராஷ்டிராவில் மற்ற மாநிலத்தவர்கள் அடித்து துரத்தப்படுவது யாரால்? ராஜ் தாக்கரே பின்னால் திரண்டிருக்கும் இளைஞர் கூட்டத்தினால். அன்று பால் தாக்கரேவினால் தமிழர்கள் அடித்து துரத்தப்பட்டார்கள்; இன்று ஹிந்திவாலாக்கள் துரத்தப்படுகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். கர்நாடகாவில் வட்டாள் நாகராஜ் பின்னால் நிற்பதும் தமிழனை தாக்குவதும் இளைஞர்களே!
நடிப்பென்று தெரிந்தும் திரையில் தெரியும் போலி பிம்பங்களை ஹீரோயிஸமாக சிரமேற்க் கொண்டு கொண்டாடி நடிகர்களின் பின்னால் திரியும் கூட்டத்தில் எத்தனை முதியவர்கள் இருக்கிறார்கள்? பல நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வருவது யாரை நம்பி என்று நினைக்கிறாய்?
இப்படி இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் நண்பா! இது எல்லாமே உனக்கே தெரியும். இவர்களையெல்லாம் எந்த ஊடகமும் தீண்டுவதில்லை என்றா நினைக்கிறாய்? இல்லை அனைவரும் படிப்பறிவு அற்றவர்களா? பிறகு எப்படி இந்த மனிதநேயமற்ற துவேஷம் ரத்தத்தில் கலந்தது?
இத்தனை கேள்விகளுக்கும் விடை ஒன்றுதான். சுயலாபநோக்கு கொண்ட அல்லது முதிர்ச்சியற்ற மூர்க்கம் நிறைந்த தலைவர்களால் அவர்களின் ஜாதி-மொழி-இன உணர்வுகள் தூண்டப்படுகின்றன. அவர்களின் பேச்சுத் திறமையால் இளைஞர்களின் சுயமரியாதை சோதிக்கப்பட்டு அவர்களுக்கான சித்தாந்தங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இளைஞர் சக்தி இவ்வாறு தவறான கருத்தாக்கத்தின் பின்னால் பிரவாகமெடுத்து திசை தவறி பயணிக்கும்போது இழப்புகள் பாரிய அளவில் இருக்கின்றன - சமுதாயத்துக்கு மட்டுமல்ல, அவர்களுக்கே கூட!! இது தொடர்ந்து நடைபெற்று கொண்டேதான் இருக்கிறது. பெரும்பான்மை முதிர்ச்சியடையும் வரை நடந்து கொண்டேதான் இருக்கும்.
சமகால நிகழ்வுகள் இவ்வாறு இருக்க, இன்றைய இளைஞர்களை தவறாக வழி நடத்திவிட முடியாது என்று நீ கூறுவதை நான் முற்றிலும் மறுக்கிறேன்.
சீமான் மேல் எனக்கு என்ன விமர்சனம் என்பதை அடுத்த மடலில் தொடர்கிறேன்.
*
(நேற்று எழுதியதன் தொடர்ச்சி...)
-----------------------------------------------------------------------
இதையா எதிர்பார்த்தோம் சீமானிடம்?
-----------------------------------------------------------------------
சீமானை விமர்சிப்பவர்கள் மீது அவருடைய அபிமானிகளுக்கு கோபம் வருவதில் வியப்பில்லை. சுயநலம் மட்டுமே மேலோங்கியிருக்கும் தமிழக அரசியல் சூழலைக் கண்டு சலிப்புற்று மரத்துப் போய்விட்ட தங்கள் தமிழ் இன உணர்வுகளை, தட்டியெழுப்பி மீட்க வந்த மேய்ப்பராக அவரை இந்த (நாம் தமிழர்)இளைஞர்கள் காண்கிறார்கள். நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் கண்டேன்.
1. சீமானின் எழுச்சி பலரும் நினைப்பதைப் போல திரையுலகம் நடத்திய இராமேஸ்வரம் ஆர்பாட்டத்தில் தொடங்கியது அல்ல. அதற்கு முன்பே அவர் தமிழக முற்போக்கு களங்களில் அவருடைய பெரியாரிஸ்ட் முழக்கங்கள் மற்றும் சாதி மத பேதங்களுக்கு எதிரான சீர்திருத்தக் கருத்துக்களுக்காக அறியப்பட்டவராக இருந்தார். மேடையில் இந்து மத பிற்போக்குத்தனங்களைக் கண்டித்து அனல் பறக்க பேசி பகுத்தறிவாளர்களிடையே பெரும் மதிப்புக்கும் நம்பிக்கைக்கும் உள்ளாகி வந்தார். கோவையில் கோவை இராமகிருஷ்ணன் நடத்திய பெரியார்.தி.க பொது கூட்டத்தில் இந்து மத அடிப்படைவாதிகளால் அவர் கல்லால் தாக்கப்பட்டபோது, அதைக் கண்டு உள்ளம் பூரிக்கப் பெற்றவர்களுள் நானும் ஒருவன். இந்து மத அடிப்படைவாதம் தங்கள் பிற்போக்குத்தனத்திற்கு ஆபத்து வந்து விட்டதாக அச்சம் கொள்ளும்போதுதான் கல்லை கையில் எடுக்கும். அத்தகைய அச்சத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்ட ஓர் ஆள் நமக்கு கிடைத்து விட்டார் என்னும் பூரிப்பு அது. ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்து, கழுதை தேய்ந்து கட்டெறும்பாக கூட இல்லை அதற்கும் கீழே போய்க் கொண்டிருப்பதுதான் கவலை கொள்ளச் செய்கிறது.
2. சீமானின் பெரியாரிஸ்ட் சாயம் வெளுத்தது அவருடைய தம்பி திரைப்படத்தில். அதில் ஒரு காட்சியில் மாதவன் வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் படங்கள் வரிசையாக காட்டப்படும். பெரியார், பாரதிதாசன் வரிசையில் அடுத்து இடம்பெற்றிருந்தப் படம் முத்துராமலிங்க தேவருடையது. பெரியாரும், அவர் வழி வந்த பாரதிதாசனும் காலமெல்லாம் எதை எதிர்த்து போராடினார்களோ, அந்த ஆதிக்கச் சாதி வெறியின் ஒட்டுமொத்த உருவகமான முத்துராமலிங்க தேவரின் படத்தை அவர்கள் அருகில் மாட்டி அவமானப்படுத்தியிருந்தார். வேறு யாருமென்றால் அறியாமல் செய்தது எனலாம். ஆனால் தன்னை பெரியாரின் பேரனாக அறிவித்துக் கொள்ளும் ஒருவரிடமிருந்து இதை நாம் எதிர்பார்க்கவில்லை. பின்னர் கீற்று இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அறியாமல் தவறு நடந்துவிட்டதாக வருந்தியதுடன், முத்துராமலிங்கத்தின் சாதி வெறியை கண்டிக்கவும் செய்கிறார். அப்பேட்டி கீழே,
கேள்வி: தமிழ் சினிமா சாதியை எப்படி கையாளுது. சாதியை எதிர்த்து வந்த படங்கள் கூட அதைத் தீவிரமா செய்யலை. சாதியை எதிர்த்து ‘வேதம் புதிது’ன்னு பாரதிராஜா ஒரு படம் எடுத்தார். அதிலயும் கடைசியில் பார்ப்பனர்களுக்கு அடிபணிந்து போறமாதிரி தான் எடுத்திருப்பார்...மார்க்சிஸ்டுகள், பெரியாரிஸ்டுகளைத் தவிர வேறு யாருக்கும் சாதியைக் கடந்து மக்களை மீட்கணுங்கிற நோக்கம் கிடையாது. இங்க சாதி, மதம்னு எல்லாம் எதுவும் கிடையாது. அது ஒரு உணர்வு அவ்வளவுதான். கடவுள், கற்பு இதெல்லாம் எப்படிக் கற்பிதமோ சாதியும் அப்படி ஒரு கற்பிதம். ஒரு உருவகம். வேதங்கள் சொல்லுது, தர்மங்கள் சொல்லுதுன்னா அதையே நாமக் கொளுத்தணும். ஆனா சாதியை அடிச்சு நொறுக்கணுங்கிற நோக்கத்தில இங்க யாரும் எதையும் படைக்கலை. அந்த உணர்ச்சிகளையும் வைச்சு காசு சம்பாதிக்கணுங்கிற நோக்கத்தில் தான் திரைப்படங்கள் படைக்கப்படுது.கேள்வி:நீங்க சாதியைப் பத்திப் பேசறதால இங்க ஒரு கேள்வி கேட்க விரும்புறோம். முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால் உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து இடம்பெறுகிறது.?கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள் எதுவும் தெரியாது. தம்பி படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான் என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும் கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கைரீதியா வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக்கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட பார்வார்ட் பிளாக் கொடிதான் என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன். முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான்.
அதுதான் அறியாமல் நடந்த பிழை என்று சொல்லிவிட்டாரே, இன்னும் அவரை ஏன் குற்றம் சொல்ல வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறதா? எங்களுக்கும் அப்படித்தான் தோன்றியது. அதை அதோடு விட்டு விட்டோம். ஆனால் ஆதிக்கச் சாதியினரால் ஆண்டு தோறும் நடத்தப்படும் தேவர் குரு பூஜையில் இந்த வருடம் கலந்து கொண்டதுடன், யாரை மேலேயுள்ள பேட்டியில் விமர்சித்து இருந்தாரோ, அதே தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து போட்டோவுக்கு சிரித்தபடி போஸும் கொடுத்தவரை, பகுத்தறிவு படகு ஓட்டித் தமிழனின் தன்மானம் காக்க வந்த தனயன் என்று அதற்கு பிறகும் சொல்லிக் கொண்டிருந்தால் நாடு சிரிக்காது?
’அவர் தேவர் சிலைக்கு மட்டுமா மாலை அணிவித்தார்? இமானுவேல்சேகரன் சிலைக்கும் தானே மாலை அணிவித்தார்’ என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். கொலையாளிக்கும் மாலை, கொலையானவருக்கும் மாலை - கணக்கு சரிதானே என்பது எந்த ஊர் நியாயம் அய்யா? தலித் மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக போராடி உயிர் நீத்த இமானுவேல்சேகரனின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்(அவர் கதை தனி வரலாறு..).
இப்படி பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன் என்னும் இரட்டை வேடத்தை ஓட்டு பொறுக்கி அரசியல் கட்சிகள் தான் போடுகின்றன என்றால், சே குவேரா சட்டையணிந்த புரட்சிக்காரர், பெரியார் பேரன் சீமானுக்கு அது எதற்கு?
இன்னொன்றும் சொல்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்., தேவர் இனமும் தமிழர்கள் தானே. அவர்களை எப்படி விட்டுவிட முடியும் என்று. இந்த வாதம் இவர்களிடமிருந்து வந்தது அதிர்ச்சியாக இருந்தது. இந்த அளவுகோல் கொண்டு அளந்தால் தமிழ் பள்ளர், தமிழ் பறையர், தமிழ் சக்கிலியர் என்று எல்லோரும் சாதி பாகுபாடு தமிழர்களாகவே நீடிப்பார்களேயொழிய, சீமான் முன்வைக்கும் literal ‘நாம் தமிழர்’ஆக மட்டும் எவனும் கிடைக்க மாட்டான். சாதி ஒழிப்பை ஆதரிக்காத யாரும் தன்னை சீர்திருத்த செம்மலாக முன்னிறுத்திக் கொள்ள முடியாது.
அதிலும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்த இந்த முன்னாள் முற்போக்காளர் ’ஈனச்சாதிப்பயலா இருந்தா காங்கிரஸுக்கு ஓட்டுப் போடு” என்று சாதியை இழிவுச் செய்து ஓட்டு வேட்டையாடி இருக்கிறார்.
மேலே முதல் கேள்வியில் சாதி மறுப்பாளராக நாம் அடையாளம் கண்ட அதே நபர், பின்னர் சாதியை வைத்து சதிராட ஆரம்பித்துவிட்டார் என்பது எத்துனை வேதனை தரும் விஷயம்?
3. இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடிய இயக்கங்களெல்லாம் பிற்பாடு அரசியல் கட்சியாக பரிணாமம் கண்ட பிறகு ஓட்டு அரசியலில் இறங்கி நீர்த்துப் போன வரலாறு திமுக, பாமக முதல் அண்மை கால விடுதலை சிறுத்தைகள் வரை நம் முன்னே கொட்டிக் கிடக்கிறது. ஆதிக்க சாதிகளின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ’அடங்க மறு; அத்து மீறு” என்று தன் இனத்தின் இளைஞர்களை தட்டியெழுப்பி போராட்ட களம் கண்ட திருமா, அரசியல் கட்சியாக இயக்கத்தை மாற்றியது முதல், திராவிட அரசியலின் சமரசங்களுக்குள் சறுக்கி விளையாடிக் கொண்டு, புலியிலிருந்து பாலுக்கு அலையும் பூனையாக மாறிவிட்டார். அப்படி சீமானும் ஆகிவிடக்கூடாது என்று புத்தி எச்சரிக்கிறது. ஆனால் நடப்புகள் வேறு மாதிரி இருக்கின்றன.
செய்தி: நாம் தமிழர் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறுகிறது
சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டுமானால், தேர்தல் களத்துக்கு வெளியே இருந்து கொள்கைகளை மக்களிடம் விதைத்து வர வேண்டும். இன்று வரை பெரியாரிஸ்ட்கள் அதைத்தான் கடைபிடித்து வருகிறார்கள். ஆனால், பெரியாரின் உண்மையான பேரன் தான்தான் எனத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் சீமானும் ஓட்டு அரசியலில் இறங்குவது உள்ளபடியே வருத்தமான விஷயம்.
அதிலும் அரசியல் இயக்க அறிவிப்பு கூட்டத்திலேயே என்ன கூறுகிறார் பார்:
நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற போகிறோம். மே-17ல் இதற்கான மாநாடு நடைபெறும். அதன் பிறகு அடிக்கு அடி; உதைக்கு உதைதான். அடி, உதை கொடுக்க தைரியமுள்ளவர்கள் என் இயக்கத்தில் சேருங்கள்
இவர் இளைஞர்களை இட்டுச் செல்லும் பாதை அச்சம் தருவதாகவுள்ளது.
4. ஈழப் பிரச்சினையில் சீமானின் செயல்பாடுகள்................... பெரிய்ய்ய டாபிக், நண்பா! சுருங்கச் சொன்னால், பிரபாகரனின் மேல் அவர் கொண்டுள்ள personality cult, இன்று அவரைப் பின்பற்றும் இளைஞர்களையும் தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது. தவறான பாதை என்று எதனைச் சொல்கிறேன் என்றால், இங்கேயிருந்து ஐம்பதாயிரம் பேருடன் இலங்கைச் சென்று போராடப் போவதாகவெல்லாம் கூறுகிறார். ஆகக் கூடிய காரியமா அது? ஆவேசமான பேச்சு இருக்கும் அளவிற்கு தெளிவான அணுகுமுறை இல்லை. இருந்தும் அவர் பேச்சில் மயங்கி பெரும் இளைஞர் கூட்டம் அவர் பின்னால் செல்வது கவலைக்குரியது. இலங்கையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழர்களின் ஓட்டுக்காக ஐடிபி கேம்பை காலி செய்து அகதிகள் அனைவரையும் அவரவர் ஊருக்கு அனுப்பிவிடுவார்கள் என்று சொல்கிறார்கள். அப்படி நடந்துவிட்டால், பிறகு சிறிது நாளில் ஈழப் பிரச்சினையின் வீச்சு அடங்கிவிடும். அதன்பிறகு ஈழத்தைப் பற்றி பேசிப் பெரிதாக யாரும் ஜல்லியடிக்க முடியாது.
*
சீமானின் ஆதரவாளராக இருந்து பின்னர் அவரின் விமர்சகனாக நான் மாறியதன் பின்னணி இதுதான். சீமானை அண்ணனாக ஏற்றுக் கொண்டிருக்கும் உன்னத நோக்கம் கொண்ட உன் போன்ற உண்மையான தம்பிகளுக்கு என்னுடைய காரசாரமான கருத்துக்கள் கொஞ்சம் மன வருத்தத்தைத் தரக் கூடும். அப்படியாகின் வருந்துகிறேன். என் கோபத்தின் பின்னால் நம்பியிருந்த ஏமாற்றம் இருக்கிறது என்பது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.
(இனியாவது)இருப்பாய் தமிழா நெருப்பாய்!
0 comments:
Post a Comment