இன்றைய வெகுஜன இதழ்களின் போக்கை முன்வைத்து
எஸ்.ஏ.பியுடன் குமுதமும் பாலசுப்ரமணியனுடன் விகடனும் அவை எதற்காக விரும்பப்பட்டனவோ அத்தனித்தன்மையை இழந்து விட்டன. இது தலைமுறை மாற்றம்; நிர்வாகத்தில் மாத்திரமல்ல, வாசகர்களின் ரசனையிலும்கூட. சினிமாவும் பிரபலங்களின் அந்தரங்கம் பற்றிய கிசுகிசுவும் இல்லாத ஒன்றை புரட்டியும் பார்க்கவும் தயாரில்லாத சமூகம் இது. இவை மட்டுமே விற்கும்போது அவை மட்டுமே அச்சில் கிடைக்கும்.
நல்ல சினிமா அதிகம் வருவதில்லை என்று சினிமாவுக்குச் சொல்லப்படும் தகுமானம் போல பத்திரிக்கைகளுக்குச் சொல்லி தப்பிவிட முடியாது. உயிர்மை, காலச்சுவடு, அம்ருதா, தீராநதி, புதிய புத்தகம் பேசுகிறது என்று கனமான விஷயங்களை உள்ளடக்கங்களாகக் கொண்ட பல பத்திரிக்கைகள் வெளியாகின்றன. கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் கிடைக்கவும் செய்கின்றன. ஆனால் எத்தனை விற்கின்றன?
தொடர்ந்து பாலியல் சர்வேக்களையே புத்தகமாகப் போட்டு விற்றுவரும் இந்தியா டுடே விற்பனையாகும் அளவிற்கு தரமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வரும் சண்டே இண்டியன் விற்கிறதா?
இன்று விகடனிலும், குமுதத்திலும் விமர்சனக் கட்டுரைகள் எழுதிப் பிரபலமாக இருக்கும் ஞாநி இதற்கு முன் நடத்திவந்த ’தீம்தரிகிட’ இதழின் கதி என்ன ஆனது? இதைவிட காத்திரமான பல கட்டுரைகளை அதில் எழுதி வந்தார். ஆனால் யார் சீண்டினார்?
விஜயின் அடுத்தப் படத்துக்கும் அடுத்தப் படம் கூட எல்லோருக்கும் தெரியும். எஸ்.ராமகிருஷ்ணன் கடைசியாக எழுதிய நாவலின் பெயராவது பலருக்கு தெரியுமா? முதலில் எஸ்.ராமகிருஷ்ணன் யார் என்றாவது தெரியுமா? தெரியும் என்பவர்களுக்கும் அவர் விகடனில் துணையெழுத்து எழுதாது போயிருந்தால் தெரிந்திருக்குமா? துணையெழுத்து, கதாவிலாசம் என்று அவர் தொடர்ந்து பொதுஜன வாசகர்களுக்கு மத்தியிலும் தன் முத்திரையை பதித்த பின்னரும் எத்தனை பேரை சென்றடைந்திருக்கிறார்?
அருகில் இருக்கும் கேரளாவில் தரமான எழுத்துக்களும் பத்திரிக்கைகளும் கொண்டாடப்படுகின்றன. சகீலா படத்திற்கு கியூ கட்டிய கூட்டம்தான் எம்.டி.வாசுதேவன் நாயரையும், வைக்கம் முகம்மது பஷீரையும், தகழியையும் லட்சக் கணக்கில் விற்க வைக்கின்றன. கமர்ஷியல் சினிமா என்பது அங்கே சமீப காலம் வரை இல்லை என்றே சொல்லலாம். இலக்கிய தரத்தில் எடுக்கப்படும் படங்களே பரவலான அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றன. மலையாளிகளிடம் ரசனையில் ஓர் சரிவிகிதத்தை காணமுடிகிறது. ஆனால் இங்கே?
அதிகம் விற்பனையாகும் பண்டமே அதிகம் தயாரிக்கவும் படும் என்னும் பொது விதி வேறு எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ பத்திரிக்கை தொழிலுக்கு அட்சர சுத்தமாக பொருந்தும்.
உதாரணத்திற்கு இன்று இணைய வெளியில் சாருநிவேதிதா அதிகம் படிக்கப்படும் எழுத்தாளராக இல்லையா? ஆனால் அவரைப் போலவே வலைமனை கொண்டு எழுதிவரும் கலாப்ரியா, அழகிய சிங்கர், அ.முத்துலிங்கம், இரா.முருகன், ஜெயபாரதிக்கெல்லாம் எத்தனை ஹிட்ஸ் கிடைக்கின்றன?
ஆனால் உன்னை போல் ஒருவனுக்கு வசனம் எழுதியவர்தான் இரா.முருகன் என்றால் பளிச் சென்று ’ஆமா, அதில் டயலாக்கெல்லாம் நல்லாயிருந்ததே’ என்பார்கள். அரசூர் வம்சம் எழுதியவரின் அறிமுகம் இப்படித்தானா நிகழ வேண்டும்?
அதனால் வியாபாரிகளை மட்டும் குறை சொல்லி பயனில்லை. தேவை ரசனையில் மாற்றம்.
2 comments:
ஆம், இன்றையத்தேவை, நம் ரசனையில் மாற்றம் தான்.நல்ல கட்டுரை. விரும்பிப்படித்தேன். நன்றி!
பாரதி மணி
நன்றி, மணி சார்! வேறு வேறு இடங்களில் நிகழ்த்தும் உரையாடல்களை ஒரு வசதிக்காக இங்கே சேமிக்கிறேன். இதை எந்த திரட்டியிலும் பட்டியலிடவில்லை. இருந்தும், இது உங்கள் பார்வைக்கு வந்துள்ளது உவகை அளிக்கிறது!
Post a Comment