உள்வாங்கிக்கொள்வதா, அழிய விடுவதா, எது globalization?

Posted: Sunday, June 6, 2010 | Posted by no-nononsense | Labels:
பாரம்பரிய இசையை அழிய விடுவது குறித்த இளையராஜாவின் வருத்தத்தின் மீதான இணைய குழும விவாதம் ஒன்றில் என் கருத்து:

ஹிந்தி படங்களுக்கு இசையமைப்பது என்ன பெரிய குற்றமா? அதற்கு ஏன் அவர் காரணம் தேடி அலையப் போகிறார்? இளையராஜா, ஹிந்தியில் அவ்வளவு பிஸியாகவா இருக்கிறார்?

2007-ல் சீனி கும், 2009-ல் பா, சல் சலே என்று இந்த மூன்று வருடங்களில் மொத்தமே மூன்று படங்களுக்குதான் ஹிந்தியில் இசையமைத்திருக்கிறார். அதனால் உன் கருத்து ஏற்புடையது அல்ல.

இளையராஜா மேடையில் மைக் பிடித்தால் பொதுவாக ஆன்மா, ஜீவன், இசை, கடவுள் என்று அவருக்குமே மட்டுமே புரிந்த மொழிநடையில் உளறிக்கொட்டுவது வழக்கம்தான். ஆனால் இங்கே பேசியுள்ளது அர்த்தப்பூர்வமானது. தமிழ் கலாச்சாரம், தமிழ் பாரம்பரியம் என்று குஷ்பூவின் மீது கல்லெறிந்த கூட்டம், தமிழர்களின் தனிச் சிறப்பான பாரம்பரிய கலை வடிவங்கள் அழிவதைப் பற்றி ஒருநாளும் குரல் எழுப்பியதில்லை. நாம் தமிழர்கள் என்று கோஷம் போட்டு வேஷம் போடுபவர்களும் கல்லெறியத்தான் சொல்லெறிகிறார்களே தவிர, தமிழர்களின் கலாச்சாரத்தின் வேர்களை மீட்டெடுப்பதில் ஒரு துரும்பையும் அசைக்கவில்லை.

எந்த ஒரு இனமாக இருந்தாலும், அதற்கு தன் மொழியின் மீதும், கலாச்சாரத்தின் மீதும் ஒரு குறைந்த பட்ச அக்கறை இருக்கவேண்டும். தமிழர்களிடம் அது கிஞ்சித்தும் கிடையாது. இருந்திருந்தால் கல்லூரிகளில் ‘கல்சுரல்ஸ்’ என்ற பெயரில் அடிக்கப்படும் கூத்துகள், வெறும் சினிமா நடிகையை அழைத்து வந்து அவர்களுடைய ‘மச்சான்ஸ்’ தமிழை கேட்டு கிறுகிறுத்து போவதாக மட்டும் இருந்து வராது.

Globalization என்பது மேற்கத்திய பாரம்பரிய இசையை உள்வாங்கிக்கொள்வதா? அல்லது அதற்கு நம் பாரம்பரிய இசையையும் கலையையும் காவு கொடுப்பதா?

இ.ரா: மயிலாட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், தேவராட்டம், கோலாட்டம், பாவைக் கூத்து, உடுக்குப் பாட்டு, கும்மிப் பாட்டு என நம்மிடம் 300 வகையான கிராமியக் கலைகள் இருந்தன. இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக 50 கலைகள் மட்டும் ஒரு சிலரின் சொந்த முயற்சியில் உயிர் வாழ்கின்றன.

இளையராஜா குறிப்பிடும் இந்த 50-ஐயும் விட்டு விடுவோம்; மேலே குறிப்பிட்டுள்ள முக்கியமான எட்டு கலைகளில் நாம் அறிந்து வைத்துள்ளது எத்தனை? அறிந்துகொள்ள விழைபவர்களுக்கு அறிய கிடைப்பது எத்தனை?

ஹே.. அதெல்லாம் சுத்த போரிங்பா.. என்பாயேயானால் இனியும் தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் என்பது பற்றியெல்லாம் எங்கும் மூச்சு விடக்கூடாது.

இளையராஜாவினுடையது, விளிம்பு நிலையில் இருந்து கிளைத்து வந்து, நாட்டுப்புற செவ்வியல் இசைகளில் கரைகண்ட ஒரு கலைஞனின் உண்மையான ஆதங்கம். அதை கொச்சைப்படுத்தி விமர்சிப்பது, சொல்வது இளையராஜா என்பதால் செய்யப்படுவது. இதையே ரஹ்மான் சொல்லியிருந்தால் உங்களின் விமர்சன பேனா வேறு இங்க் கொண்டு எழுதியிருக்கும்; எழுதிய பக்கம் பாராட்டு மழையால் நனைந்திருக்கும். காரணம் இப்போது அவர் காட்டில் அல்லவா பரிசு மழை!

சென்னையில் கனிமொழியின் பங்களிப்பில் நடத்தப்பட்டு வரும் சென்னை சங்கமம் ஒரு முன்மாதிரியான நிகழ்ச்சி என்று பார்த்த பலரும் பாராட்டுகிறார்கள். அதேபோல் பொங்கல் சமயத்தில் சகாயம் நடத்திய நாமக்கல் ஓசை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக குளக்கரை திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய கலை வடிவங்களின் மேடை நிகழ்ச்சியை நீ கண்டிருக்க வேண்டும். அந்த இசையும் நடனமும் உன்னுடைய உணர்வுகளில் புரிந்த ஜாலங்களில் நாம் எவ்வளவு சிறப்பான ஒன்றை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்திருப்பாய்.

சாதாரண ரசிகர்களுக்கே இப்படி என்றால் இளையராஜா போல் நாட்டுபுற செவ்வியல் இசையில் ஊறித் திளைத்த, அதன் தாத்பர்யங்களில் வித்வத்துவம் பெற்ற ஒருவருக்கு, அது வழக்கொழிந்து வருவதை காணும்போது எழும் ஆதங்கத்தையும் ஆவேசத்தையும் மதிக்க வேண்டும். தாமாக ஒரு காரணம் கற்பித்துக்கொண்டு இகழக்கூடாது.

0 comments:

Post a Comment