நிகழ்த்து கலைகள்: தேவராட்டம் ஒயிலாட்டம்

Posted: Sunday, October 24, 2010 | Posted by no-nononsense | Labels:
// http://www.youtube.com/watch?v=QsVJFQEXS2k இது ஒயிலாட்டம் என நினைக்கிறேன். சரியா//

இல்லை. இதுவும் தேவராட்டம் தான். ஒயில்லாட்டம் என்றால் பின்னணியில் பாடல் இருக்கும்.

தேவராட்டத்திற்கும் ஒயிலாட்டத்திற்கும் என்ன வேறுபாடு என்றால் தேவராட்டத்தில் தேவதுந்துபி அல்லது ஏதேனும் தோலிசைக்கருவி இசைக்கப்பட அதன் ரிதத்துக்கு ஏற்ப ஆட்டம் மெதுவாக ஆரம்பித்து உச்சக்கட்டத்தில் வேகம் சூடுபிடிக்க முடிவடையும். இசை மட்டுமே; பாடல் இருக்காது.

ஆனால் ஒயிலாட்டத்தில் பாட்டும் அதற்கு பின்பாட்டும் இருக்கும். ஒயிலாட்டி(இவர் தான் ஆட்டத்திற்கு ஆசிரியர்) பாடும் பாட்டிற்கு ஆட்டக்காரர்கள் பின்பாட்டு பாடிக்கொண்டே முன்னும் பின்னும் சென்று பலவகையில் ஆடுவர். ஒயிலாட்டத்தில் பெரும்பாலும் ராமாயண காதையே பாடலாக பாடப்படும். (ஆனால் இப்போதெல்லாம் சினிமா பாடலை ஒலிக்க விட்டு அதற்குகூட ஆடுகின்றனர்)  கையில் கைக்குட்டையும் காலில் சலங்கையும் அநேகமாக கட்டாயம்.

(இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் 
தயாரித்து இயக்கி நடித்து ஒயிலாட்டம் என்றே ஒரு படம் கூட வந்ததே. அவருடைய முழுநேர நடிப்பு கேரியருக்கு அதுதான் பிள்ளையார்சுழி)
தேவராட்டம், ஒயிலாட்டம் இரண்டையுமே கற்றுக்கொள்வதும் ஆடுவதும் சுலபம் தான்.  தேவராட்டத்தை ஆரம்பத்தில் கம்பளத்து நாயக்கர் என்னும் சமூகம் மட்டுமே ஆடி வந்ததார்கள் என்று கீற்றில் ஒரு கட்டுரையை வாசித்திருந்தேன். இப்போது அப்படிப்பட்ட வரைமுறை எதுவும் இல்லை. பலரும் ஒரு கிராமியக் கலையாக ஆடுகின்றனர்.

தென்மாவட்டங்களில் குடும்ப நிகழ்ச்சிகளில் கூட இவை ஆடப்படுவதுண்டு - எப்படி இங்கே திருவிழாக்களில் விரலை மடக்கி வாயில் வைத்து விசில் அடித்துக்கொண்டு ‘ஒத்தையடி’ ‘ரெட்டையடி’ என்று மேளக்காரனிடம் கேட்டு வாங்கி ஆடுகிறோமோ அப்படி அங்கே இவை சட்டென்று கூடியிருப்பவர்களால் சேர்ந்து ஆடப்படும். அதுபற்றி தென்மாவட்டத்தை சேர்ந்த என் பழைய சகா ஒருவன் சொல்லக் கேள்வி.

அது எப்படியென்றால், 1997-ல் மதுரை அருகேயுள்ள ஆண்டிப்பட்டி பங்களா என்னும் குக்கிராமத்தில் சிண்டிகேட் வங்கியின் சுயதொழில் பயிற்சிக்காக (RUDSET) சில மாதங்கள் பல மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுடன் தங்கியிருந்தேன். அப்போது பெரியகுளத்தை சேர்ந்த ஒருவனும், சோழவந்தானைச் சேர்ந்த ஒருவனும் சேர்ந்து இதனை எங்களுக்கு ஆடிக் காண்பித்ததுடன், சில நிமிடங்கள் மட்டுமே ஆடக்கூடிய நடன அசைவுகளை சொல்லியும் கொடுத்தனர். அதெல்லாம் அப்போது ஒரு fun.

அங்கே நான் இருந்தவரை இருந்த இருப்பும், கிடைத்த அனுபவமும் அலாதியானது. தனியே ஒருநாள் எழுத வேண்டும்.

0 comments:

Post a Comment