வேதகால பிராமணர் திராவிடரா?

Posted: Wednesday, October 27, 2010 | Posted by no-nononsense | Labels: ,
வேதங்களை பற்றி பின்னர் எழுதுகிறேன் என்று கூறியிருந்தேன். இப்போது அவ்வாறாக சில கருத்துக்களை பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன்.

முதலில் வேதம்தான் ultimacy என்று நினைப்பதும், அவற்றை அடிப்படையாக கொண்டு வரலாற்றை புரிந்துகொள்ள முயலுவதுமே தவறான அணுகுமுறை. இங்கே குறிப்பிட்டுள்ளதை போல அவை ஒன்றும் 6000 ஆண்டுகள் எல்லாம் பழமையானவை அல்ல. அப்படியெல்லாம் ஒரு ஆதாரமும் கிடையாது. வேதங்களில் பழமையானதுவான ரிக் வேதம் கி.மு.1200 - 1500 ஆண்டுகளில் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தீவிர இந்துத்துவ நூல்களே அவ்வாறுதான் குறிக்கின்றன. அப்படியானல் மற்ற வேதங்களெல்லாம் அதற்கும் பிறகே ஏற்பட்டவை என்பதால் 6000 ஆண்டுகளெல்லாம் ரொம்பவே மிகையான கணக்கு. 

வேதங்களின் காலம் தொட்டே நாட்டில் இனங்களிடையே சமூகவியல் வாழ்க்கைமுறைகளில் ஒரே அடையாளமும் சமத்துவம் நிலவி வந்தது என்பது புத்தரை மறுப்பதற்கு ஒப்பு. பார்ப்பனீயம் என இன்று அடையாளப்படுத்தப்படும் மேல்சாதி மேலாதிக்கமாகிய வைதீகத்தை எதிர்த்து உருவானதே புத்த மதம். ஒருவகையில் வைதீகத்திற்கும் புத்த/சமண சமயங்களுக்கும் இடையே சென்ற ஆயிரம் ஆண்டுகள் வரை ஒரு சமரே நிலவி வந்தது எனலாம்.

ஆதி வேதத்தின் காலமே கிமு 1500 தான் எனும்போது அவற்றை மட்டுமே அடியொட்டி பாரத பண்பாட்டு தளங்களை கட்டமைத்துக் கொள்வதும், வேதங்கள் தாம் சாஸ்வதம் என்று நம்புவதும் நம்மை அவற்றோடு தேங்கச் செய்து, அதற்கு முன்னும் பின்னுமுள்ள சமூகவியல் சித்தாந்தங்கள் குறித்த அறிதலை கிடைக்காமல் செய்து விடுகிறது. வேதங்கள் அல்டிமசியோ, சாஸ்வதமோ அல்ல. அவை மனிதர்களால் வழி வழியாக சுலோகங்களின் மேல் சுலோகங்களாக உரைக்கப்பட்டு செவி வழி மரபாக குருவிடமிருந்து சிஷ்யர்களுக்கு கடத்தப்பட்டு, கிமு 100 முதல் 300 க்குள்ளாகத்தான் எழுத்து வடிவை பெற்றிருக்கின்றன. ஆனால் யாருடைய மரபின் வழியாக அவை ஓதப்பட்டனவோ, அவர்களே அதைக்கொண்டு பிழைப்பு வேலை செய்து கொண்டனர். 

யார் யார் ரிஷிகள் பெயரையெல்லாம் குறிப்பிட்டு அவர்களெல்லாம் தென்னாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதாக கூறி அதனால் ஆரியர்களும் திராவிடர்களே என்று ஒரு வாதம் செய்துள்ளாய். ஒரு ராஜஸ்தான் லேவாதேவி சேட்டு குடும்பம் ஒன்று இரண்டு மூன்று தலைமுறைகளாக தமிழ்நாட்டில் வாழ்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனால் மட்டுமே அவர்களும் தமிழர்கள் தாம் என்று நாளை வரலாற்றில் ஒருவன் எழுதினால் அது உண்மையாகி விடுமா? அந்தண ரிஷிகள் தென்னாட்டில் வாழ்ந்ததால் மட்டுமே அவர்களும் திராவிடர்களே என்னும் வாதம் முற்றிலும் ஏற்புடையது அன்று. 

வைதீக வாழ்க்கைமுறை வேதங்களில் இருந்து தொடங்க வில்லை. அது வேதங்களுக்கும் முற்பட்டது. அதுபோதே அது நெடுங்காலமாக பாரதத்தின் பல இடங்களிலும் வேர் விட்டிருந்தது. ஆரியர்களின் வருகை கிமு 2000 ஆண்டுகளில் நடந்திருக்கலாம் என்று சரித்திர ஆசிரியர்களால் கருதப்படுகிறது. அதனால் தென்னாட்டில் வாழ்ந்த ரிஷிகள் பற்றி வேதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை. அதனால் மட்டுமே இரு பண்பாடுகளும், முக்கியமாக இரு இனமும் ஒன்றுதாம் என்பது முற்றிலும் தவறான புரிதல் நிலை. 

ஆரியம் இந்திய வாழ்க்கைமுறையுடன் தொடர்பற்ற என்பதை எப்படி புரிந்துகொள்வது என்றால், ரிக் வேதம் வலியுறுத்தும் சடங்கு முறைகள் எதுவும் அதற்கு முந்தைய பாரத பண்பாட்டில் முற்றாக கிடையாது என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. அதற்கு பிறகே வேதங்கள் புனிதமானவை என்று பிரச்சாரம் செய்யப்பட்டு, அவற்றின் சடங்கு முறைகள் உள்ளூர் வேளாள மற்றும் பழங்குடி இன வழக்குகளில் இரண்டற கலந்தன.

மேலும் அன்றைய ஆரியர்கள் தாம் இன்றைய பார்ப்பனர்கள் என்பதும் தவறான கருதுகோள்தான். நிஜமான ஆரிய மரபு இந்தியருடனான இனக்கலப்பின் காணாமல் போய் விட்டது. இன்று இருக்கும் பார்ப்பனர்களெல்லாம் இந்தியருடனான கலப்பினம் தான். நேரடிய ஆரிய மரபு இன்னும் தொடர்வதாக கூறப்படுவது கோவில் குருக்கள் குலத்திலும், கேரள நம்பூதிரி மரபிலும் என்று ஒரு மரபியல் ஆய்வு தெரிவிக்கிறது. 

இன்னொரு பக்கம் திராவிடன் என்பன யார், அவனின் வாழ்க்கைமுறை வேதங்களின் திணிப்புக்கு பிறகு எங்ஙனம் மாறுபாடு கண்டது என்பதெல்லாம் விரிவான அலசலுக்கு உரிய விஷயங்கள். அவற்றையும் ஆய்ந்து இன்னொரு தட்டில் சீர்தூக்கு பார்க்கும்போது மட்டும் வேறுபாடு விளங்கும். 

இங்கே மையமான பிரச்னையாக நான் காண்பது - வேதங்களை மட்டுமே மையப்படுத்தி வரலாறை புரிந்துகொள்ள முற்படுவது. அந்த புள்ளியில் மட்டும் சரியான அணுகுமுறைக்கு மாற்றிக்கொண்டு விட்டால், அல்லது other side of the coin ஐ ஆவது ஒரு பரிசீலனைக்கு உட்படுத்த முயன்றால் வரலாற்றின் உண்மை நிலையும், சில சங்கர மட ஸ்பான்சர்டு அந்தணர்களின் திரிபு வாதமும் விளங்க வாய்ப்புண்டு. 

சென்ற மடலில் நான் இறுதியாக கூறியதையே மீண்டும் கூற விழைகிறேன். 

சரித்திரத்தின் பக்கங்களை ஓரிரு நூலை மட்டும் கொண்டு ஆராயாமல், ஆர்வம் இருப்பின் பல நூல்களையும் கருத்தாக்கங்களையும், கோட்பாட்டு ரீதியான ஆய்வுநிலைகளையும் பரிசீலித்து தமக்கான கருத்தை உருவாக்கிக் கொள்வது வரலாற்றின் நிர்தாட்சண்யமான பக்கங்களை நாம் விளங்கிக்கொள்ள உதவுவதாக அமையும்’


*


படித்து தெரிந்துகொள்ளவும் விவாதித்து புரிந்துகொள்ளவும் கடலளவு விஷயங்கள் இருக்கின்றன. தேவை முன்முடிவற்ற திறந்த மனநிலை மட்டுமே. 

இந்த விவாதத்தின் தொடக்கப்புள்ள தீபாவளி பண்டிகை. தீபாவளியை கொண்டாட கூறப்படும் புராண காரணத்தை நான் நிராகரிக்கும் அதேவேளை அந்தநாளின் மக்களின் மகிழ்ச்சியை மிகவும் ஆதரிக்கிறேன். தீபாவளி மட்டுமல்ல, மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் எந்த ஒரு கொண்டாட்டத்தையும் ஆதரிக்கிறேன். 

வருடம் முழுவதும் துன்புறும் அன்றாட அல்லல்களில் இருந்து ஒரு இளைப்பாறுதலை தருவது பண்டிகைகள் மட்டுமே. அவற்றின் பின்னாலுள்ள பழங்காரணம் என்னவாக இருந்தாலும், அவற்றை முன்னிருத்தாமல் கொண்டாட்டத்தை மட்டும் மையப்படுத்தி மகிழ்ச்சியை பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ளும் வரையில் அதை ஆரியக்கூத்தாக பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து.

என் குழந்தையோ, மனைவியோ அதை ஒரு நரகாசுரவதமாக எண்ணி மகிழவில்லை. அவர்களுக்கு அது ஒரு மகிழ்ச்சிக்குரிய தினம். அவர்களின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சியாக ஆகிவிட்ட ஒரு வாழ்க்கையில் இயல்பாக எனக்கும்தான்...

0 comments:

Post a Comment