அது காலை நேரத்தின் வழக்கமான பீக் அவர்ஸ் கூட்ட நெரிசல். பிதுங்கியபடி வந்து நின்ற பேருந்தை காணவே அலுப்பாக இருந்தது. படிகளில் தொங்கிவரும் கூட்டத்தில் கலந்து முன்னேறி உள்ளே செல்வது அனுதினமும் ஒரு சாகசச் செயல்.
கரூருக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்த இரண்டு வருட அனுபவத்தில் இதெல்லாம் இப்போது கைவந்த கலையாகிவிட்டது. கால்விரல்களில் பேலன்ஸ் செய்து கைகளை லாவகமாக கண்ணில் படும் இடங்களில் நுழைத்து முன்னாலிருக்கும் மனிதர்களுக்கு முகம் இடிபட போவது போல பாவனை செய்தால் உள்ளே செல்ல தானாக இடைவெளி கிடைக்கும்.
அந்த சாகசக் கலையை பயன்படுத்தி படிக்கட்டிலிருந்து மேலே சென்று இருக்கையோரம் நின்று கொண்டேன். அடுத்த வேலையாக சுற்றிலும் அமர்ந்திருப்பவர்களை நோட்டம் விட வேண்டும். அவர்கள் டிக்கெட் வாங்கும்போது எந்த ஊருக்கு எடுக்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும். அப்போதுதான் அருகாமையில் இருக்கும் நிறுத்தங்களுக்கு டிக்கெட் எடுப்பவர்களின் அருகில் மதியூகமாக சென்று நின்று இடம்பிடிக்க முடியும்.
கண்களை சுழலவிட்டதில் எல்லோரும் நீண்ட பயணக்காரர்களாகவே தெரிந்தார்கள். மதுரை, போடி, கீழக்கரை போன்ற நீண்ட தூர வண்டிகளில் ஏறிவிட்டால் இதுதான் பிரச்னை. உட்கார இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விடும்.
பயணிகளுள் என் முன்னாலிருந்த இருக்கையில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞனும் அவனுடன் யூனிஃபார்ம் அணிந்திருந்த +1 அல்லது +2 படிக்கும் பெண்கள் இருவரும் கவனத்தை கவர்ந்தார்கள்.
அவர்களுக்கு முன்னாலிருந்து இருக்கையிலும் அதே யூனிஃபார்ம் அணிந்த பெண்களின் கூட்டம்.
அவர்களெல்லாம் பள்ளி மாணவிகள் என்றும், இந்த இளைஞன் அவர்களின் சார் என்றும் அவர்களின் பேச்சிலிருந்து புரிந்தது.
பெண்கள் அனைவருமே சுமாரான அழகு தான். இளமைக்குண்டான வனப்பும் செழிப்பும் அவர்களிடத்தில் இல்லை. எனினும் அவர்களின் சராசரிக்கும் கூடுதலான உயரம் அதை ஈடுகட்டியது. என்னுடைய யூகத்தின்படி அவர்கள் எஸ்.சி ஹாஸ்டல் பெண்களாக இருக்கக்கூடும்.
‘சார்’ என்று அந்தப் பெண்கள் அழைந்த அந்த இளைஞனின் போக்கு வித்தியாசமாக இருந்தது. பாக்கெட்டில் கையைவிட்டு பாக்கு பாக்கெட் ஒன்றை எடுத்து வாயில் கொட்டி அரக்கிக் கொண்டே இருந்தான். ஒரு மாதிரி காலை நீட்டி சாய்ந்து கொண்டிருந்தான். அதில் ஒரு ஆசிரியருக்குரிய லட்சணம் இருக்கவில்லை.
சிறிது நேரத்தில் அவன் தனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு குறிப்பிட்ட மாணவியிடம் தன் லூட்டிகளை ஆரம்பித்தான். அவளின் ஜடையை பிடித்து இழுக்கவும், கன்னத்தை கிள்ளிவிட்டு வேறு பக்கம் பார்க்கவும், அதற்கு அந்தப் பெண் “சார் நீங்க தானே.. இல்ல, எனக்கு தெரியும், நீங்கதான்..” என்று சிணுங்கவும், ஏதோ அவர்களுக்கு மட்டும் புரியும் சங்கேத மொழியில் பேசி சில்மிஷமாக சிரித்துக் கொள்ளவும் என... ஒருவாறாக பொழுது போய்க்கொண்டிருந்தது.
அவர்களுடன் வந்த மற்ற மாணவிகள் அதைக் கண்டும் காணாமலும் தங்களுக்குள் ‘களுக்’ என்று சிரித்துக்கொண்டும் இருந்தனர். சார் அல்லவா! அதிலும் இளைஞர்.
பஸ் வேலூரை தாண்டியிருந்தது. இப்போது அந்த இளைஞனின் சேட்டை ஜடையிலிருந்து உடைக்கு முன்னேறியிருந்தது. அந்தப் பெண்ணின் சிணுங்கலின் டெஸிபல் மேலும் அதிகரித்ததில் பலருக்கும் காதில் புகை வராத குறை. அவள் போட்டிருந்த சுடிதாரை அல்லையில் பிடித்து இழுத்துவிட ஆரம்பித்தான். அவள் அதன் பட்டியை இழுத்துவிட்டுக் கொண்டு சிரித்தாள்; சில நேரங்களில் நாணத்தில் சத்தம் வராமலும், சில நேரங்களில் சில்லறையை சிதற விட்ட மாதிரியும்.
இவர்களின் விளையாட்டிலே சகபயணிகளின் கண் நிலைத்திருந்தது.
திடீரென்று சிவபூஜையில் கரடியாக பொறுத்தது போதும் என பொங்கியெழுந்தார் ஒரு நடுத்தர வயது மனிதர்.
“இதென்ன பஸ்ஸூன்னு நெனைச்சீங்களா இல்லை வேற ஏதாவதுன்னு நெனைச்சீங்களா..? இதெல்லாம் உங்க இடத்துல போய் வெச்சிகுங்க...”
அந்த இளைஞனுக்கு அறச்சீற்றம் பொங்கியது.
“ஏன் சார் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கறீங்க. நாங்க சும்மா விளையாடிட்டு இருந்தோம். உங்களுக்கு என்ன போச்சி..”
அந்த பெண் பாய்ந்தெழுந்தார்.
“இது எங்க சாருங்க சார். நாங்க சும்மா வெளையாடிட்டுதான் இருந்தோம். பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க, ஏன் இப்படி தப்பா பாக்கறீங்க..”
மற்ற மாணவிகளும் சேர்ந்திசையில் இணைந்தனர். பலவாறாக அவருடைய கல்வியை, வயதை, முதிர்ச்சியை சீண்டி தூஷித்தனர். விட்டுத் தராமல் பேசினர். பெண்களின் ஒருமித்த குரல் உண்மையை ஒடுங்கச் செய்யும் ஆற்றல் கொண்டது.
சில்மிஷ விளையாட்டுக்கு ஆட்சேபம் தெரிவித்த அந்த நபர் தனித்து விடப் பட்டார். முடிந்தவரை ‘இதெல்லாம் உங்க வீட்டுல இல்ல எங்கயாவது காட்டுல போய் வெச்சுக்கங்க.. திஸ் இஸ் பப்ளிக் ப்ளேஸ்...” என்று தமிழும் ஆங்கிலமும் கலந்து சிறிது நேரம் கத்திக் கொண்டிருந்தவரை கண்டக்டர் சமாதானம் செய்து அமர வைத்தார்.
பின்னர் ஊர் சென்று சேரும் வரை முகத்தில் கடுப்புடன் குறுகுறுவென்று அவர் அமர்ந்திருந்ததை கவனித்தேன். அவருக்கு உறுதுணையாக வேறு யாரும் குரல் தரவில்லை என்னும் ஆற்றாமையை அவர் கண்களில் கண்டேன்.
‘நாம்தான் அநாவசியமாக இதையெல்லாம் தட்டிக்கேட்டு சங்கடப்பட்டுக் கொண்டோமோ’ என்னும் ஓர் எண்ணம் மனதில் அவருக்கு தொந்தரவளித்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. அதற்கு பிறகு அவர் எதுவும் பேசவில்லை. அவரிடமும் யாரும் பேச முற்படவில்லை.
கண்களை மூடி ஒருமுறை ஆழமாக மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டேன். எண்ணங்கள் அந்த சம்பவத்தின் தாத்பரியத்தை சுற்றி வந்தன. இதை நான் எப்படி அணுகுவது? அது அந்த இளைஞன் மற்றும் மாணவியின் சொந்த விஷயம் என்று விட்டுத் தள்ளுவதா? இல்லை, பொதுநாகரிக சாட்டையை நானும் சுழற்றுவதா?
அவர்கள் மகிழ்ந்து விளையாடினார்கள் -
அந்த ஆட்சேபகர் அதிருப்தி கொண்டார் -
இதெல்லாம் படர்க்கை. தன்மையின் மெய்ம்மை எப்போது எந்தவித உணர்வில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தது? அதாவது நான்...
அவர்கள் செயல் எனக்கு அளித்தது என்ன? பொழுதுபோக்கா? இல்லை, ஒரு கணம் அவன் இடத்தில் என்னை கற்பனை செய்து பார்த்துக் கொண்டதில் ஏற்பட்ட உள்ளக் கிளர்ச்சியா? இல்லை, காட்சிப்புலன் உய்வித்த உவகையா?
அல்லது, சில பொழுதுகளில் மனம் உணரும் இவை எல்லாவற்றையும் கடந்த ஒரு பற்றற்றத் தன்மையா?
அந்த மனசங்கடத்திற்குள்ளான மனிதரின் முகம் அவர் பக்கம் திரும்பிப் பார்க்காமலே கண்களில் அலையாடியது. அதிலிருந்து விடுபடுவது சிரமமாக இருந்தது. கேள்விகள் ஒன்றிலிருந்து ஒன்றாக கிளைத்த வண்ணம் இருந்தன.
அவற்றிற்கான பதில்கள் குறித்தான தேடல் தன் திசையை தீர்மானிப்பதற்குள் நிறுத்தம் வந்துவிட்டது. இறங்கிக் கொண்டேன் - நினைவுகளின் தடங்களை மட்டும் அங்கேயே விட்டு விட்டு.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment