தமிழக அரசியல் சூழலை முன்வைத்து:
ஒருமுறை ஒரு முனிவர் குளக்கரைக்கு குளிக்கச் சென்றாராம். அப்போது குளத்தின் நீரில் ஒரு தேள் மிதந்தபடி உயிர் பிழைக்கத் தத்தளிப்பதை கண்டு அதன் மேல் பரிதாபப்பட்டு அதை கையில் எடுத்து கரையில் விட முயற்சி செய்தாராம்.கையில் எடுத்தவுடனே தேள் கொடுக்கால் கொட்டியது. உடனே ‘ஆ’ என்று அலறியபடி கையை உதறி தேளை கீழே போட்டுவிட்டவர், மீண்டும் அது தத்தளிப்பதை பார்த்து மீண்டும் பரிதாபம் கொண்டு, அதை மீண்டும் கையில் எடுத்தார். தேள் மீண்டும் கொட்டியது. மீண்டும் அலறியபடி தண்ணீரில் போட்டு விட்டார். கையை தேய்த்துவிட்டுக் கொண்டு மீண்டும் தேளை காப்பாற்ற முயற்சிக்கிறார்.மீண்டும் மீண்டும் அது கொட்டுவதும், இவர் அலறி அதை கைவிடுவதும், ஆனால் மீண்டும் கை கொடுப்பதும் ஒரு தொடர் நிகழ்வாக நீண்ட நேரம் நடந்து கொண்டே இருக்கிறது.இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் கேட்டார்களாம் ‘சுவாமி.. அதுதான் கடிக்கிறதே, அதைப் போய் ஏன் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள்..’ என்று.அதற்கு முனிவர், ’கடிப்பது அதன் சுபாவம். அதைக் காப்பாற்றுவது என் சுபாவம்’ என்று கூறிவிட்டு தன் வேலையை தொடர்ந்தாராம்.
இதைப் போலவே கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் தமிழகத்தை மாறி மாறி ஊழல்/அராஜக ஆட்சி செய்வதுவும், அவர்கள் என்ன செய்தாலும் மக்கள் மீண்டும் மீண்டும் இருவரில் ஒருவருக்கே வாக்களித்து தேர்ந்தெடுத்து ஆட்சி செய்ய விடுவதுமாக இருக்கிறது.
இதுவரை இந்த தேள்களின் கொடுக்குகளில் மட்டும் இருந்து வந்த விஷம், இப்போது மெல்ல மக்களின் மனங்களிலும் சேர்ந்து விட்டதை அவர்கள் ஓட்டு போட லஞ்சம் வாங்க துணிந்து விட்டதிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது. லஞ்சம், ஊழல் எல்லாம் சமூகக்கேடு என்பதிலிருந்து இதெல்லாம் அரசியலில் சகஜம் என்னும் நிலைக்கு அவர்களை இட்டுச் சென்று ஆயிரம் கோடி ஊழல்களெல்லாம் தேர்தலில் ஒரு பிரச்னையே இல்லை என்னும் அளவிற்கு விஷத்தின் வீரியம் அவர்களின் மனதை எதிர்மறையான போக்கில் தகவமைத்துக் கொள்ளச் செய்து விட்டது.
தேளைக் காப்பாற்றுவது அந்த முனிவரின் சுபாவமாக இருக்கலாம். ஆனால் சிறிது சிறிதாக உடலில் சேரும் விஷம் காரணமாக ஒரு கட்டத்திற்கு மேல் உறுப்புகள் செயலிழந்து சவமாகப் போவதும் அவர் தான். அதுபோலவே, தொடர்ந்து ஊழல்வாதிகளையே ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தால் ஒருநாளில் இந்த சமூகமும் விஷம் பாரித்து சவமாகி செயலிழக்கும்.
0 comments:
Post a Comment