சம்மந்தமில்லாத சங்கடங்கள்

Posted: Thursday, June 16, 2011 | Posted by no-nononsense | Labels:

குழந்தையை பள்ளியில் விட்டு விட்டு, ஃபோன் டாப்-அப் செய்வதற்காக பரமத்தி ரோட்டில் ஒரு கடை முன்னால் வண்டியில் சென்று இறங்கினேன். உள்ளே நாலைந்து பேர் அடைத்துக்கொண்டு நின்றிருந்தனர். கும்பல் குறையட்டும் என்று அதை ஒட்டியிருந்த படிக்கட்டின் தாழ்வாரத்தில் ஒதுங்கினேன். இது போன்ற கடைகளில் எப்போதும் அப்பி கிடக்கும் கூட்டத்தை காணும்போது, பேசாமல் நாமும் இப்படி ஒரு டாப் அப் கடை வைத்தாலென்ன என்று சில நேரங்களில் எண்ணுவதுண்டு.


அப்போது பின்னால் படிக்கட்டில் இறங்கி வந்தவர் ‘கொஞ்சம் வழி..’ என்றுச் சொல்ல, பதறி விலகி நின்று, கடந்து சென்றவரின் முகம் பார்த்தேன். இருவரின் கண்களும் சந்தித்துக்கொண்டன. நொடிப்பொழுதில் அவர் முகத்தில் ஒரு புன்னகை தோன்றி, சிறிது நாணத்துடன் வேகமாக கடந்து சென்றுவிட்டார். தெரிந்தவர்தான். அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரும் அவர்தான்.


வேகமாக கடந்து செல்ல அவசியமில்லாத தருணங்களில் கூட, சில காலமாக அவர் என்னைக் கண்டால் அப்படித்தான் நடந்து கொள்கிறார். இத்தனைக்கும் முன்பெல்லாம் இருவரும் எங்கே சந்தித்தாலும் சில நிமிடங்களாவது நின்று பேசிக்கொண்டு இருக்காமல் கடந்து சென்றதில்லை. இந்த மாற்றமெல்லாம் சில ஆண்டுகளாகத்தான்.


ஆனால் ஏன்?


இந்தக் கேள்விக்கு விடையளிக்க கொசுவர்த்தியை சுழலவிட்டு உங்களை ஊட்டி வரை அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது.


என் கம்பெனியின் வருடாந்திர ஆய்வு கூட்டத்திற்காக எங்களை ஊட்டிக்கு அழைத்திருந்தார்கள். ஷேர் மார்க்கெட்டின் பொற்காலம் அது. ஆய்வு கூட்டங்கள் படோபமாக பல வித கொண்டாட்டங்களுடன் ஊட்டி, கொச்சி போன்ற இடங்களில் ரிஸார்ட்களில் நடக்கும். இன்றைய நிலைமையில் CEO-க்கள் அவர்களாகவே ஃபர்பார்மன்ஸ் ஷீட்டை எடுத்துக்கொண்டு, அந்தந்த கிளைகளுக்கு நேரில் வந்து ஆய்வு கூட்டம் நடத்தி, டார்கெட் கொடுத்துவிட்டு, கார் ஏறி அடுத்த கிளைக்க்கு பறந்துவிடுகிறார்கள். நிலைமை அப்படி ஆகிவிட்டது.


ஊட்டியின் பிரபலமான ஸ்டெர்லிங் ரிஸார்ட்டில் நடந்து கொண்டிருந்த ஆய்வு கூட்டத்தின் இடைவெளியில், அந்த ரிஸார்ட்டை சகாக்களுடன் சுற்றிப் பார்த்து போட்டோக்கள் எடுத்துக்கொண்டிருந்தேன். எப்போதும் ஏதாவது ‘க்ளிக்’ செய்து கொண்டேயிருப்பது என் ஹாபி. ரிஸார்ட்டின் முன்புறமுள்ள பூந்தோட்டம், பக்கவாட்டிலுள்ள மலைச்சரிவு எல்லாம் எடுத்து முடித்து, உள்ளே கலைநயமான பொருட்களின் காட்சியகம் உள்ள இடத்தில் வலம் வந்து கொண்டிருந்தேன். அதையொட்டிதான் ரெஸ்டாரண்ட் இருந்தது.


ஏதேச்சையாக கவனித்தபோது, ரெஸ்டாரண்டின் முன்புற மேசையில் எனக்கு நன்கு பழக்கமான மணிமாறன் இருந்தார். தினமும் என் அலுவலகம் வந்துசெல்லக்கூடிய வாடிக்கையாளர். குடும்ப சகிதமாக டூர் வந்திருப்பார் போலுள்ளது - அவருடன் அவர் மனைவியும் இருந்தார். அவர்களுடன் மற்றும் சிலர் குடும்பமாக அமர்ந்து மேசையை நிறைத்திருந்தனர். தொந்தரவு செய்ய வேண்டாமே என்று ‘ஹலோ, மணி சார்’ என்று அழைத்து கையசைத்து விட்டு நகர்ந்துவிட்டேன்.


கூட்டம் முடிந்து, ஊட்டியை சுற்றிப் பார்த்துவிட்டு, அடுத்த நாளே அடித்து பிடித்து எல்லோரும் ஊர் போய் சேர்ந்தோம்.


தினமும் சரியாக டீ டைமில் அலுவலகம் வந்து, ஓஸி டீ, போண்டாவின் தரத்தை திட்டிக்கொண்டே சாப்பிட்டுச் செல்லும் மணிமாறனை அடுத்த சில நாட்களாக ஆளையே காணவில்லை. எனக்கு அவரில்லாமல் போராக இருந்தது. எதையாவது வாய் வலிக்க விமர்சனம் செய்து கொண்டே இருப்பார். அவர் சீரியஸாக பேசுவது நமக்கு சிரிப்பாக இருக்கும். போன் செய்தாலும் சரியாக பதில் இல்லை. நான் அவரை அழைப்பதையே அடுத்த சில நாட்களில் மறந்து போனேன்.


நாலைந்து நாள் கழித்து அவராகவே டீ டைமில் ஆஜரானார். ஆனால் பழைய கலகலப்பு இல்லை. நானாக ஆரம்பித்தேன்.


“என்ன சார் ஊட்டி டூரெல்லாம் ஜோர் தானே? வெயில்தான் கொஞ்சம் ஜாஸ்தியில்ல?”


“ஆமாமா. சரி சரி, இப்ப அதப்பத்தி என்ன. விடு”. ஏனோ, மனுசன் பிடி கொடுத்தே பேசவில்லை.


இப்படியாக இரண்டொரு நாள் போனது. மூன்றாவது நாளில் அவராக ஊட்டியை பற்றி ஆரம்பித்தார்.


“சிவா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லச் சொன்னார், சார்”


குரல் வழக்கத்தை விட கனிவாக இருந்தது.


”எந்த சிவா, சார்?”


”அதாம்பா, லாம்ப்ரட்டா ஸ்கூட்டர்ல வருவாரே.. சந்தை பேட்ட புதூர் சிவா”


“ஓ! அவரா... என்ன சொல்ல சொன்னார் சார்”


“ப்ச்.. இதான வேண்டாங்கறது. அந்த ஊட்டி மேட்டர் பத்தி யார்கிட்டயும் சொல்ல வேணான்னார். முக்கியமா ரகோத்தமன் கிட்ட”.


ரகோத்தமன் இங்கே பேசப்படும் சிவாவின் பார்ட்னர். எனக்கு நல்ல பழக்கமானவர்.


“என்ன ஊட்டி மேட்டர்? என்ன சொல்றீங்கன்னு எனக்கு ஒண்ணுமே புரியலையே”


“ப்ச்.. மறுபடியும் பாரேன்... அதான் அங்க ஊட்டியில எங்கள பார்த்துட்டியே! அதைத்தான் சொல்ல வேண்டாம்”


”சரி, சொல்லலை. ஆனால் டூர் வந்ததெல்லாம் பெரிய விஷயமா சார். இதில் மறைக்க என்ன இருக்குன்னு தெரியலை” என்றேன்.


“என்னாபா இப்படி சொல்ற, நீ பாட்டுக்கு எங்கள ஆளுக்கொரு ‘மேட்டரோட’ ஊட்டில பார்த்தேன்னு சொல்லிட்டியின்னா, வீட்டில் என்னாவறது?. சுத்தி சுத்தி வந்து போட்டோல்லாம் வேற எடுத்த. அதான் சிவா பயப்படுறான். போட்டோ இருந்த அழிச்சிட சொல்லி சொல்ல சொன்னான்”


ஓஹ்! ஓஹ்! ஓஹ்! மேட்டர் அப்படி வருதா!


நான் அன்று பார்த்தது இந்த மணிமாறனை மட்டும்தான். அதுவும் அவருடன் இருந்தவரை அவருடைய மனைவி என்றுதான் நினைத்துக்கொண்டேன். அவர் முகத்தைக்கூட சரியாக பார்க்கவில்லை. ஆனால் இவரை விட இளமையாக இருந்த மாதிரி ஒரு பூசினாற் போன்ற ஞாபகம் மட்டுமே உண்டு. ஸோ அண்ட் ஸோ... இவர்களெல்லாம் ஆளுக்கொரு ஜோடியை ஏற்பாடு செய்துகொண்டு ஊட்டியை உல்லாசபுரி ஆக்கியிருக்கிறார்கள். அதைத்தான் நான் பார்த்துவிட்டேன் என்று இப்போது பயப்படுகிறார்கள். இப்போது விஷயம் தெளிவாக புரிந்துவிட்டது.


இவர்களின் குடும்ப விவரங்கள் எனக்கு ஓரளவு தெரியும். இவர்கள் இருவருக்கும் வயது சுமார் 45 இருக்கும். தோளை எட்டிப் பிடித்து விட்ட பிள்ளைகள் உண்டு. அந்த சிவாவிற்கு சிங்கப்பூரில் படிப்பை முடித்துவிட்டு வந்த கல்யாண வயது பெண் பிள்ளையே உண்டு. சபே.புதூரில் நில புலன்களுடன் வசதியாக வாழ்பவர். என் மாமன்களின் சம வயது தோழர் என்று பேச்சிலிருந்து அறிந்து கொண்டிருக்கிறேன். எங்கேயாவது எதிர்பட்டால் சந்தை நிலவரம் பற்றி பேசிக்கொள்வோம். அந்த அளவில் சொல்லப் போனால் ஒரு சாதாரண உறவுதான் எங்களிடையே நிலவியது.


பேச்சை தொடர்ந்தேன்.


“என்னது ‘மேட்டரா’?! நான் அது உங்க வைஃப்ன்னு தான நினைச்சிட்டிருந்தேன். முகம் கூட சரியாக பாக்கலை. சிவா சாரையெல்லாம் நான் பார்க்கவேயில்லையே... அன்னைக்கு அவரும் உங்க கூட தான் இருந்தாரா?!”


“அட, என்னாபா.. அன்னைக்கு நீ எங்களை பார்த்துட்டன்னு சிவா ரொம்ப பயந்துட்டு இருக்கான். நீ என்னடான்னா பாக்கவேயில்லைன்னு சொல்ற.. அப்ப நாங்களாத்தான் உளறிட்டமா..” என்றார் வெட்கச் சிரிப்புடன்.


“அதான் இப்ப தெரிஞ்சிப் போச்சில்ல..ஹஹ்ஹஹ்ஹா!”


“சரி, போவுது. இத உன்னோட வெச்சிக்க. புதூர்ல யார்கிட்டயும் பேச்சு வாக்கில கூட சொல்லிடாத”


ஏன் சார், எனக்கு வேற வேலையில்லையா? இதெல்லாம் ஒரு மேட்டர்ன்னு நான் போயி பேசிட்டு வேற இருக்கனா?”.


அத்துடன் இது சம்மந்தமான சம்பாஷணைகள் முடிவுக்கு வந்தன.


மணிமாறன் - அதற்கு பிறகு எப்போதும் போல் சகஜமாகி விட்டார். ஆனால் சிவா... மனுசன் எங்கே பார்த்தாலும் நாணி கோணி சிரித்துக்கொண்டே அகன்று விடுகிறார். அது, அவரை விட எனக்கு சங்கடமாக இருக்கிறது.


0 comments:

Post a Comment