International Poultry Expo & Conference - சில குறிப்புகள்

Posted: Sunday, January 10, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments

அண்மையில் டெல்லியில் நடந்த Auto Expo 2010 -ஐ நான் இரண்டு காரணங்களுக்காக பின்தொடர்ந்து வந்தேன். முதல் காரணம் ஆனந்த் மகிந்த்ரா. எக்ஸ்போ நடப்புகளை தொடர்ந்து ட்விட்டி வந்தார். அதற்கேற்ப ஆட்டோ செக்டார் பங்குகளில் அந்த குறிப்பிட்ட நாட்களில் சிறப்பாக வர்த்தகம் செய்ய முடிந்தது. (கொஞ்சம் லாபம் பார்க்கவும் முடிந்தது. Thanks to that 140 word phenomenon, called Twitter!). இரண்டாவது காரணம் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் பணியாற்றும்போது எனக்கு அறிமுகமான நண்பர் ஒருவர் அதில் கலந்து கொண்டிருந்ததுடன் அதுபற்றி அடிக்கடி என்னுடன் பேசியும் வந்தார். கார்களை அடிக்கடி மாற்றுவது அவருக்கு வாடிக்கை. நாம் ஆடம்பரமாக நினைப்பது சிலருக்கு ஆதர்ஷமாக பெரும் கனவாக இருக்கிறது.

என்னுடைய அந்த நண்பர் பல விஷயங்கள் குறித்து என்னிடம் நிறைய உரையாடுவார். அவை பெரும்பாலும் புது புது தொழில்முறைகள் மற்றும் அதன் எதிர்கால சாத்தியக்கூறுகள் பற்றியதாக இருக்கும். எனக்கும் நிறைய சிபாரிசு செய்வார். எல்லாம் என் காலுக்கு அகலக் காலாக இருந்ததால் துணிந்து இறங்க முடிந்ததில்லை. சமீபத்தில் கோவையில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவுக்கு கூட அந்த நண்பர் என்னை அழைத்திருந்தார். இருக்கும் இடத்தை விட்டு எங்கும் நகரும் நிலையில் நான் இப்போதைக்கு இல்லை என்பதால் அதையும் தவறவிட்டுவிட்டேன். நிறைய வாய்ப்புகளும் தொடர்புகளும் பணியிட கடமைகளால் கண் முன்னே பறிபோகின்றன. சுயதொழில் புரிபவர்கள் புண்ணியவான்கள்!

இச்சூழ்நிலையில் உள்ளூரிலிருந்து ஒரு எக்ஸ்போவுக்கான அழைப்பு வந்தது. நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி ”International Poultry Expo & Conference” என்ற பெயரில் மூன்று நாட்கள் நடத்திய பன்னாட்டு கோழியின கண்காட்சிதான் அது. அதில் நமது நண்பர்கள் சதீஷ்கண்ணனும் மாதும் பங்குபெற்று ஸ்டால் போட்டிருந்தனர் என்பதால் அது நம் கவனத்தையும் கவர்ந்திருந்தது.

சதீஷ்கண்ணன் அந்த துறையில் இருப்பதால் அதில் பங்கு பெற்றதில் ஆச்சரியமில்லை. ஆனால் அதில் மாதுவையும் அவன் பங்குபெற வைத்ததுடன் கோழியின ஆர்வலர்களிடம் நல்ல அறிமுகத்தையும் ஏற்படுத்தி தந்திருக்கிறான். இந்த கண்காட்சியின் ஹைலைட்டே மாதுவின் பேன்ஸி கோழிகள்தான் என்றால் மிகையில்லை. எப்போதும் அங்கேதான் கூட்டம் மொய்த்தபடி இருந்ததாக தகவல். அதன் காரணமாக மாதுவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டான். இந்த தொடர்புகள் சாத்தியங்கள் எல்லாம் இங்கே நாம் இணையத்தில் இணைந்ததன் ஆகப்பயன் என்பதால் அதில் நமக்கும் மகிழ்ச்சிதான்.


இந்த இடத்தில் மாதுவின் பறவைக் காதல் பற்றி கொஞ்சம் குறிப்பிட்டாக வேண்டும். கடந்த வருடம் வரை மீன்கள் வளர்ப்பதில் தான் அவனுக்கு நாட்டம் இருந்தது. ஆனால் எங்கிருந்து பறவைகளின் மீது ஆர்வம் தொற்றியது என்று தெரியவில்லை, கடந்த ஒரு வருடமாக பல இன கோழிகள் மற்றும் வித விதமான பறவைகளை சேகரிப்பதிலும் பராமரிப்பதிலும் முழுவீச்சாக இறங்கிவிட்டான். அதற்காக நீண்ட பயணங்களை மேற்கொள்ள நேர்ந்தாலும் சளைப்பதில்லை. குறுகிய காலத்திலேயே தமிழக அளவிலான பறவை ஆர்வலர்களின் நெட்வொர்க்கில் குறிப்பிடத்தக்க இடத்தை அடைந்திருக்கிறான். எல்லாமே அசுர வேகத்தில் நடந்தது. ஒரு காரியத்தில் ஈடுபாடு கொண்டு விட்டால் அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வது அவனுக்கு இயல்புதான் என்பதால் எனக்கு அதில் ஆச்சரியமில்லை.

வெள்ளி கிழமை முதல் இக்கண்காட்சி நடந்து வந்தாலும் இன்றுதான் எனக்கு போக நேரம் கிடைத்தது. மனைவி குழந்தை சகிதம் கிளம்பினேன். உடன் நண்பர்கள் சுரேஷ் மற்றும் சதீஷ் (வக்கீல்) இணைந்து கொண்டனர். 12.30 அளவில் அரங்கினுள் நுழைந்தோம்.

பெயர்தான் சர்வதேச கோழியின கண்காட்சி. ஆனால் அங்கே இருந்த ஸ்டால்கள் அனைத்தும் பவுல்டரி வர்த்தக நிறுவனங்களின் விற்பனைப் பொருட்களின் காட்சிதான். அது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அதை ஈடு செய்யும் விதமாக ஈமு கோழிகளின் காட்சி இருந்தது. உருவத்தில் பிரம்மாண்டமான அக்கோழிகள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தன. அதைவிட்டால் மாதுவின் கோழிகள் தான் என்பதால் அதை நான் அவன் வீட்டு பண்ணையிலேயே பார்த்திருந்ததால் மற்ற ஸ்டால்களில் அதிகம் கவனம் செலுத்தினேன்.

நுட்பம் மேம்பட்ட பல பவுல்டரி உபகரணங்கள் புதிதாக சந்தைக்கு வந்திருந்தன. என்னுடைய கவனம் ஏதேனும் சிறுதொழில் வாய்ப்பு குறித்து தகவல் கையேடு, புத்தகம் கிடைக்குமா என்பதில் இருந்தது. ஆடு வளர்ப்பு, கலர் மீன் வளர்ப்பு, உவரி மீன் வளர்ப்பு குறித்து சில புத்தகங்கள் கிடைத்தன. எல்லாமே TANUVAS வெளியீடுகள். அதைத்தவிர வேறு உருப்படியாக ஒன்றும் இல்லை. இதுபோன்ற கருத்தரங்குகள் வணிக நோக்கத்தில் மட்டும் நடத்தப்படாமல் தொழில்முனைவோருக்கும் உபயோகமாக தகவல் கையேடுகள் மற்றும் விளக்க காட்சிகளுடன் நடத்தப்பட்டால் பயனாக இருக்கும்.

சதீஷ்கண்ணன் ஸ்டால் மிக ஜோராக இருந்தது. அதன் வடிவமைப்பில் செய்நேர்த்தி இருந்தது. என் பாராட்டுக்களை அவனிடம் சொல்லி சிறிது நேரம் அங்கே செலவிட்டுவிட்டு, மாது ஸ்டாலை வலம் வந்தோம். பெரிய இடத்தை அவனுடைய கோழிக் காட்சிக்காக ஒதுக்கியிருந்தார்கள். டிசைன் டிசைனான கோழிகள் நிறைந்திருந்தன. அவற்றின் இனம் குணம் பற்றியெல்லாம் எனக்கு ஸ்நான ப்ராப்தியும் இல்லை என்பதால் அருகில் இலவசமாக சாப்பிடக் கொடுத்த அவித்த முட்டைகள் சிலவற்றை உள்ளே தள்ளி, அங்கிருந்து நகர்ந்து ரொம்ப நேரமாக நாசியை தீண்டிக் கொண்டிருந்த சிக்கன் பிரியாணி உணவுக்கூடம் நோக்கிச் சென்றோம். அங்கே தயிர் சோறையும் மோர் மிளகாயையும் பஃபே போட்டு பங்கு வைத்துக் கொண்டிருந்தனர். சிக்கன் எல்லாம் டெலிகேட்ஸுக்குத்தானாம். கிடைத்ததை கொஞ்சம் ருசி பார்த்துவிட்டு (அய்யா ச.க, இப்படி பருப்பில்லாமல் கல்யாண சாப்பாடு போட்டது நியாயமா?) நண்பர்களிடம் விடை பெற்று வீடு வந்தோம்.

அங்கே எடுத்த சில புகைப்படங்களை கீழ்காணும் ஆல்பத்தில் காணலாம்.

மேலும்...

பொதுபுத்தியின் எஸ்கேபிஸம்

Posted: Saturday, January 9, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
இச்செய்தியை முன்வைத்து நடந்த உரையாடலில் என் கருத்து:

கொஞ்சம் புகைமூட்டம் அடங்கட்டும் கருத்துக்கூறலாம் என்று நினைத்தேன். பல நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி பிறகு அச்சம்பவத்தின் பின்னுள்ள உண்மை வேறாக இருக்க கண்டிருக்கிறேன். இதிலும் கூட கிட்டத்தட்ட அப்படித்தான். முதலில் அரை மணி நேரம் வேடிக்கைப் பார்த்தார்கள் என்றார்கள். பிறகு 20 நிமிடம்; இன்றைய செய்தியில் 10 நிமிடம் என்று சம்பவத்தை நிமிட வாரியாக தினமலரில் விளக்கியிருக்கிறார்கள்.

வெடிகுண்டு வீசப்பட்டதால் அருகில் செல்ல பயந்ததாகச் சொல்கிறார்கள் சம்மந்தப்பட்டவர்கள். பயந்தவர்கள் காவல்துறையினர் என்பதுதான் இதில் வேடிக்கை. இம்மாதிரி குண்டுகள் வீசப்பட்டால் அதை சமாளிப்பது எப்படியென சிறிதும் பயிற்சியில்லாத காவலர்களே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பது வேதனையான உண்மை.

சட்டம் ஒழுங்கு எல்லாம் இந்தியாவைப் பொருத்தவரை ஒரு போங்கு. சிவப்பு விளக்குச் சுழல செல்பவர்களைத் தவிர இங்கே யாருக்கும் குறைந்த பட்ச பாதுகாப்பு என்பது கிடையாது.

நடந்த இச்சம்பவமுமே கூட கேமிராவில் சிக்கியதாலும் அதில் அமைச்சர்களும் அதிகாரிகளும் சம்மந்தப்பட்டிருந்ததாலும் தான் வெளியே கசிந்து பரபரப்பாகி இருக்கிறது. இதுபோல அன்றாடம் சாமானியர்களை நோக்கி அதிகாரத்தில் இருப்பவர்களால் காட்டப்படும் அலட்சியம் கணக்கில் அடங்காதது. கணக்கில் வராதது. நேரில் பார்க்க வேண்டும் என்றால் சில நாட்கள் போலீஸ் ஸ்டேசன் பக்கமும் ஜி.எச் பக்கமும் சென்று வாருங்கள். தெரியும்.

*

இந்த சம்பவத்தில் இவர்கள் அனைவரின் செயல்பாடுகளும் ஒட்டு மொத்த வெகுஜன மனோபாவத்தின் ஒரு குறியீடு மட்டுமே. இவர்களை விமர்சிக்கும் நேர்மை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது என்பது அவரவர் தங்கள் மனசாட்சியிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. ரோட்டில் அடிபட்டு கிடப்பவரை வேடிக்கைப் பார்த்தவாறே கவனமாக விலகி கடந்து போகும் மனிதாபிமானமற்ற ஒரு வித சுயநல மனோபாவம்தான் நம்மில் பெரும்பாலானோரிடம் இருக்கிறது. மாறாக அந்த கணத்தின் எல்லா கமிட்மெண்ட்களிலும் இருந்து தன்னை கத்தரித்துக்கொண்டு உடனே களம் இறங்கி உயிரை காப்பாற்ற முனைபவர்களை இந்தியச்சூழலில் காண்பது அரிது.

மும்பை 26/11 தீவிரவாத தாக்குதலின் போது குண்டடிப்பட்ட தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கார்கரே மற்றும் உடனிருந்த இரு அதிகாரிகள் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் அடிபட்ட இடத்திலேயே இதேபோல் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்திருக்கின்றனர். அதன் பிறகே ஆம்புலன்ஸ் வந்திருக்கிறது. அதுவரை மக்கள் வழக்கம்போல் அவர்களை வேடிக்கை மட்டும் பார்த்திருக்கின்றனர்.

அந்நியன் படத்தில் விபத்தில் அடிபட்டவரைச் சுற்றி கூடிய கூட்டத்தார் “யாராவது ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுங்களேப்பா.. யாராவது ஹெல்ப் பண்ணுங்களேப்பா” என்று கூறும் காட்சி இங்கே நினைவுக்கு வருகிறது.

*

சென்ற வருடத்தில் ஒருநாள் திருச்சியில் நான் தங்கியிருந்த உறையூரிலிருந்து பஸ் பிடித்து வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். திருச்சியின் உள்ளூர் பஸ் போக்குவரத்து என்பது சத்திரம் பஸ் ஸ்டாண்டில் தொடங்கி ஒரு ஒரு மணி நேரத்தில் மீண்டும் அங்கேயே முடியும்படியான ஒரு வட்ட வடிவ வழித்தடம் கொண்டது. இடையில் எங்கேயாவது டிராபிக் ஜாம் ஆனால் கிட்டத்தட்ட நகரமே ஸ்தம்பித்து போகும். அப்படி ஒரு டிராபிக் ஜாமில் மாட்டி அன்று பாதி வழியிலேயே இறங்கி அலுவலகம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். வழியில் திருச்சி கோர்ட் காம்பவுண்ட் சுவரை ஒட்டி நீளும் பிளாட்பாரத்தில் ஒரு வயதான மனிதர் மயங்கிய நிலையில் வலியால் முனகியபடி கிடந்தார். பார்க்கும் எவருக்கும் மனம் பதை பதைக்கும்படி அவர் நிலை இருந்தது. இருந்தும் நெரிசலில் சிக்கி பிளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்திருந்த பலரும் ஒரு கணம் கண்ணை உயர்த்தி பார்த்து விட்டு கடந்து போய்க்கொண்டே இருந்தனர். அவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் அதன் பின்னர் நாள் முழுவதும் அந்த குற்ற உணர்வு என் நெஞ்சை அழுத்திய வண்ணம் இருந்தது. உடன் பணிபுரிவோரிடம் பகிர்ந்து கொண்டபோது அவர்களில் ஒருவர் கூட அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாததோடு இதுபோல் அவர்கள் கடந்து சென்ற சம்பவங்களை கோர்வைப் படுத்த ஆரம்பித்தனர். அடுத்த நாள் உள்ளூர் செய்திகளில் தேடிப் பார்த்தேன். குறிப்பான செய்திகள் எதுவுமில்லை. அவர் யாராலாவது காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று நம்பிக்கொள்கிறேன். எஸ்கேபிஸ பொதுபுத்தி கொண்டிருக்கும்வரை வேறுவழி?
மேலும்...

NAMAKKAL SHOULD BE REDISCOVERED

Posted: Friday, January 8, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments


சென்னையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை திறந்து வைத்து கலைஞர் பேசும்போது “சென்னை மறுகண்டுபிடிப்பு” என்னும் புத்தகம் பற்றி சில மாறுபாடான கருத்துகளை கூறியிருந்தார். அதன் தொடர்ச்சி இந்த வார துகளக் வரை சர்ச்சையை கிளப்பிய வண்ணம் உள்ளது. நாம் அதனுள் நுழைய வேண்டாம்.

அப்புத்தகம் எஸ். முத்தையா எழுதிய "Madras rediscovered" என்னும் ஆங்கிலப் புத்தகத்தின் தமிழ் பதிப்பு. அதன் ஆங்கில மூலம் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மறுபதிப்பு கண்டு வருகிறது. இன்றைய சென்னையின் முற்கால மெட்ராஸ் ராஜ்தானி வரலாற்றை தெளிவான ஆய்வுக்குட்படுத்தி தொகுக்கப்பட்ட அந்த நூலைப்பற்றி படிக்கும் போதெல்லாம், நாமக்கலுக்கும் ஏன் இப்படி ஒரு கால வரிசைப்படுத்தப்பட்ட வரலாற்று ஆய்வு நூல் இல்லை என்ற கேள்வியே மனதில் தொக்கி நிற்கிறது.

இங்கேயும் எத்தனையோ முனைவர்களும் ஆய்வாளர்களும் மண்ணின் மைந்தர்களாக தோன்றியிருக்கிறார்கள். எவரிடமிருந்தும் குறைந்த பட்சம் மேலோட்டமான ஒரு வரலாற்று நூல் கூட உருவானதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு ஆய்வு நூல் இருந்திருந்தால் வெறும் யூகங்களை (என்னென்ன என்பதை கீழே எழுதியிருக்கிறேன்) மட்டுமே வரலாறாக கொண்டு வாழ்ந்து வர வேண்டியதில்லை.

எனக்கு தெரிந்த தகவல்களின் அடிப்படையில் நாமக்கல்லை ஒரு குறுக்கு வெட்டுக்கு உட்படுத்தி யோசிக்கும் போது மனதில் கீழ் காணும் கேள்விகளும் சிந்தனைகளும் தோன்றுகின்றன.

  • நாமக்கல் நகரின் மையமாகத் திகழும் நாமக்கல் மலைக்கு ’நாமகிரி’ என்று பெயர் வந்தது எப்படி? நாமகிரி தாயார் காரணமாக நாமகிரி மலையா (அ) மலை காரணமாக நாமகிரி தாயாரா?
  • இப்பெயர் பெறும் முன் இம்மலையின் பெயர் என்ன?
  • மலையின் மேலுள்ள மலைக்கோட்டையை சிலர் திப்பு சுல்தான் கட்டியிருப்பதாகச் சொல்கிறார்கள்; சிலர் மதுரை திருமலை நாயக்கர் அரசாட்சியை சேர்ந்த ராமசந்திர நாயக்கர் கட்டியதாகச் சொல்கிறார்கள். உண்மையில் யாரால் கட்டப்பட்டது? அது சம்மந்தமான கல்வெட்டு, செப்பேடு ஏதேனும் உள்ளதா?
  • மலையை திப்பு சுல்தான் தான் கட்டினான் என்றால் மலை மீதுள்ள வரதராஜ பெருமாள் கோவிலும், முகப்பிலுள்ள ஹிந்து சின்னங்களும், நாமமும் எப்படி வந்தன?
  • மலை மீதுள்ள இஸ்லாமிய தர்கா (அ) சமாதி (அ) கட்டிடத்தின் பின்னுள்ள வரலாறு என்ன? எப்படி இந்து-முஸ்லிம் சமய சின்னங்கள் ஒரே இடத்தில் நிறுவப்பட்டன?
  • நரசிம்மர் - நாமகிரி அம்மன் கோவிலின் சிற்ப வேலைப்பாடுகளும், குகை குடைவரை கட்டிடக்கலை முறையும் அப்படியே திருமயம் கோவிலை ஒத்திருப்பதால் இவையும் மகேந்திரவர்ம பல்லவனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். நாமக்கல்லை பல்லவர்கள் ஆண்டதாக எங்கேயும் பதிவு இல்லாதபோது எப்படி பல்லவ முறையில் கோவில்கள் கட்டபட்டன?
  • நரசிம்மர் கோவிலை நோக்கி கைகூப்பி நிற்கும் ஆஞ்சநேயர் கோவிலின் ஸ்தல வரலாறு என்ன?
  • நாமக்கல் சேர மன்னர்களின் ஆட்சியின் கீழ் அதிக காலம் இருந்ததாக தெரிகிறது. பிறகு சோழர்கள், நாயக்கர்கள், பீஜப்பூர் - கோல்கண்டா - மைசூர் சுல்தான்கள், அவர்களுக்குப் பிறகு நிஜாம் மன்னர் ஆகியோரின் ஆட்சியின் கீழ் இருந்ததாக தெரிகிறது. பிறகுதான் மற்ற இடங்களையும் போலவே இதுவும் ஆங்கிலேயரின் கீழ் வந்துள்ளது. இவை எல்லாமே மேலோட்டமான தகவல்களாகவே ஆங்காங்கே பதியப்பட்டுள்ளன. கால வரிசைப்படுத்தப்பட்ட முறையான தரவுகள் இல்லை.
  • நாயக்க ஆட்சியின் கீழ் பிரிக்கப்பட்ட 72 பாளையங்களில் நாமக்கல் எந்த பாளையத்தில் அடக்கம்?
  • அரசு ஏடுகளிலோ அல்லது அருகிலுள்ள சேலம், ஈரோடு மாவட்ட ஆய்வு ஏடுகளிலோ நாமக்கலின் பண்டைய வரலாறுபற்றி ஏதேனும் குறிப்புகள் இருக்கிறதா?
  • ஈரோடு மாவட்டத்தில் கபாலிகம்(சைவ மதத்தின் ஒரு பிரிவு) பரவலாக பின்பற்றப்பட்டிருந்தும் நாமக்கல்லில் வைணவம் மட்டும் கோவில் கண்டது எப்படி? (நாமக்கல்லில் ஒரு ஈஸ்வரன் கோவில்கூட கிடையாது)
  • கி.பி 1 முதல் 4 வரை தமிழகத்தில் தழைத்தோங்கியிருந்த புத்த சமண சமயங்களின் பாதிப்பு எந்தளவு இங்கே இருந்தது?
  • நாமக்கல் மணிக்கூண்டு யாரால் கட்டப்பட்டது? அதற்கு தொட்ட்ண்ணா பெயர் வைக்கப்பட்டது ஏன்? யார் எந்த தொட்டண்ணா?
  • சுதந்திரப் போராட்டத்தில் நாமக்கல்லின் பங்கு என்ன? (கவிஞர் ராமலிங்கம் பிள்ளையைத் தவிர்த்து)
  • 1933-ல் காந்தியை நாமக்கல் அழைத்து வந்து குளக்கரையில் பொதுக்கூட்டம் நடத்தியவர் யார்? அக்கூட்டத்தின் உரை அல்லது அதைப்பற்றிய செய்தி குறிப்புகள், நூல் பதிவுகளின் சேகரம் உள்ளதா?
  • நாமக்கல் மக்களின் பிரதான தொழிலாக வேளாண்மை இருந்திருக்கிறது. இங்கே என்ன மாதிரியான பயிர் வகைகள் பயிரிடப்பட்டன? என்ன மாதிரி விவசாய முறைகள் பின்பற்றப்பட்டன?
  • பொய்யேரி போன்ற சிறு சிறு வாய்க்கால்கள் இருந்திருக்கின்றன. அவற்றின் நதிமூலம் யாது? நாமக்கல்லில் பின்பற்றப்பட்ட பாசனமுறைகள் யாவை?
  • லாரி, கோழிப்பண்ணை தொழில்கள் முதலில் யாரால் மேற்கொள்ளப்பட்டன? அவை எப்படி வேறூன்றின?
  • நாமக்கல்லின் ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்குகள் என்ன?
  • தமிழகத்தின் கலை அரசியல் பண்பாட்டியலில் நாமக்கல்லின் பங்கு என்ன?
  • துறையூர் ரோட்டில் நியூ பேலஸ், மோகனூர் ரோட்டில் காந்தமலை, ச.பே.புதூரில் செல்வி, சேலம் ரோட்டில் ராஜா தியேட்டர் ஆகிய சினிமா கொட்டகைகள் இருந்துள்ளன. இவற்றில் செல்வி சிவசக்தியாகவும், ராஜா கே.எஸ் ஆகவும் பெயர் மாற்றம் கண்டன. (ரமேஷ் தியேட்டர் நமக்கே தெரியும்). இதுபோல் கூத்து, நாடக மன்றங்கள் இருந்தனவா? அப்படியானால் எம்மாதிரி கூத்துகள் நடத்தப்பட்டன? இவையெல்லாம் குறித்த முழுமையான தகவல்கள் தேவை.
  • தமிழகத்தில் வறட்சி மற்றும் சாதி கலவரங்களால் ஒருபோதும் பாதிக்கப்படாத ஒரு சில இடங்களில் நாமக்கல்லும் ஒன்று என்கிறார்கள். இத்தகவல் எந்தளவு உண்மை?
  • நாமக்கல்லில் எந்த மாதிரி பஞ்சாயத்து அமைப்பு முறைகள் இருந்தன? அதில் எந்த தகுதியின் அடிப்படையில் பொறுப்புகள் வழங்கப்பட்டன? நீதி வழங்கல் அப்பஞ்சாயத்துகளில் நடைமுறையில் இருந்ததா?
  • நாமக்கல்லின் வரலாற்றில் தடம் பதித்த குறிப்பிடத்தக்க மனிதர்கள் யார் யார்? நாமக்கல் பகுதியின் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள் குறித்த தரவுகள்?
  • நாமக்கல் பகுதியிலிருந்து ஏதாவது பெரு/சிறு பத்திரிக்கைகள் வெளியானதுண்டா? அப்படியானால் அதன் பின்புலம், தாக்கம்பற்றிய தகவல்கள்?
  • நாமக்கல் வட்டார வழக்கு யாது? அப்படி ஒன்று இருப்பின் அதன் தனித்துவமான வார்த்தைகளின் தொகுப்பு உருவாக்கப்படுதல் அவசியம்.
  • சுதந்திர இந்தியாவின் தமிழக சட்டமன்ற, பாராளுமன்ற ஆட்சியியலில் நாமக்கல் தொகுதி உறுப்பினர்களின் பங்களிப்பு

பிடித்து இழுக்க இழுக்க நீளும் மந்திரவாதியின் தொப்பி கயிறு போல நாமக்கல் வரலாறு குறித்த கேள்விகளும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கின்றன. இவை அனைத்தையும் திரட்டி தொகுக்க முடிந்தால் நமக்கும் ஒரு மறுகண்டுபிடிப்பு நூலும், பிறந்த மண்ணின் வரலாறும் கிடைக்கும். ஒருவகையில் பிறந்த மண்ணின் வரலாறு கூட பிறப்பித்த தந்தையின் பெயருக்கு ஒப்பாக தோன்றுகிறது. எதை வேண்டுமானாலும் தந்தை பெயராக எப்படி சொல்லிவிட முடியாதோ, அதுபோல யூகங்களை மட்டுமே என் ஊர் வரலாறாக சொல்லிக்கொண்டு வாழ முடியாது.
மேலும்...

கொல்லிமலை - தொடரும் விவாதம்

Posted: Thursday, January 7, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
(கொல்லிமலை குறித்து நண்பர்களுடன் மின்மடலில் நடந்த விவாதத்தின் ஒரு பகுதி)

மாது மஹா ப்ரபோ! ஒரு வேலை செய்வீராக! நேரே கூகுள் சென்று kolli hills tour / trip / road trip / trekking என்பது போன்ற குறிச்சொற்கள் கொண்டு தேடுவீராக! அப்போது தெரியும் நாலா திசைகளிலும் இருந்து எத்தனைப் பேர் கொல்லிமலைக்கு வந்து போயிருக்கிறார்கள்; அவர்கள் அதை எந்தளவு அனுபவித்து எழுதியிருக்கிறார்கள் என்று.

சென்ற வருடத்தில் ஒருநாள் அதிகாலையிலேயே கிளம்பி திருச்சியிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். முசிறி தாண்டியுள்ள மணமேடு அருகே பஸ் பழுதாகி நின்றுவிட்டது. அந்த தடத்தில் ஒரு பிரச்னை என்னவென்றால் பத்துக்கு ஒன்பது பஸ்கள் படிக்கட்டுகளையும் தாண்டி பிதுங்கிக்கொண்டுதான் பயணம் செய்யும். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாகியும் வேறு பஸ் மாறமுடியவில்லை. அப்போது ஜோடி ஜோடியாக பைக்கில் பயணம் வந்த இளைஞர்கள் சிலர், நான் நின்றிருந்த இடம் அருகேயுள்ள டீக்கடையில் ஓரம் கட்டுவதைப் பார்த்தேன். ஒரு பைக் மட்டும் ஒத்தையில் வந்திருந்தது. அவர்கள் பயணம் நாமக்கல் திசை நோக்கி இருந்ததால் அவர்களிடம் சென்று லிப்ட் கேட்டேன். மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். பேசிக் கொண்டிருந்ததில் அவர்களெல்லாம் திருச்சியில் கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் என்றும், பைக்கிலேயே கொல்லிமலைக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிந்தது. அதுகுறித்து அவர்கள் உற்சாகமாக காணப்பட்டார்கள். அவர்களில் ஒரு இளைஞன் இதுபோல் தான் பலமுறை பைக்கில் வந்து போயுள்ளதாகச் சொன்னான். பிறகு அவர்களுடன் நாமக்கல் வரை வந்து சேர்ந்தேன்.

நாமக்கல்லிலிருந்து சுமார் 55 கி.மீ தான் மொத்த தொலைவும். பைக்கில் சென்றாலுமேகூட ஒரு ஒன்றரை மணி நேரத்தில் உச்சிக்கே போய்விடலாம். இருந்தும் போகாததற்கு வித்தாரமாக வியாக்யானம் பேசிக் கொண்டிருக்கிறாய்.

உள்ளூரிலேயே வெண்ணையை வைத்துக்கொண்டு ஏனடா பிளாக்தண்டர், அதிசயம் என்று ஊரெல்லாம் தொண்ணையை தூக்கிக்கொண்டு நெய்க்கு அலைகிறீர்கள்; ஒருமுறை உள்ளூர் சரக்கையும் சுவைத்துத்தான் பாருங்களேன் என்றால், சொன்னதில் பொருளை விட்டுவிட்டு என் சொல்லில் மட்டும் குற்றம் காணும் உன் திறம் கண்டு வியக்கிறேன். போகாதது தேசிய குற்றம் ஒன்றும் இல்லைதான்; ஆனால் உன் தேடலில் குற்றம் என்கிறேன். சும்மா வாய் பேசாமல் நாங்கள் போகும்போது உடன் வந்துவிட்டு சொல், என் சொல் எப்படி என்று. சரியா?

(இப்படியெல்லாம் பில்டப் கொடுத்தாலாவது வர்றீங்களான்னு பார்க்கலாம்)

*

இதை எழுதும்போது இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஒருமுறை நானும் மணிகண்டனும் சோளக்காடுவரை ஒரு வேலையாக சென்றிருந்தோம். திரும்பிவரும்போது இயல்பாகவே மிதமான சுபாவம் கொண்ட அவனை கலவரப்படுத்த எண்ணி, வளைவுகள் தவிர்த்து மற்ற இடங்கள் அனைத்திலும் நான் வண்டியை கையை விட்டுவிட்டு ஓட்டி வந்தேன். அது கைனடிக் ஸபாரி வண்டி. டிவிஎஸ்ஸை விட நல்ல பாலன்ஸ் கிடைக்கும் என்பதால் பிரச்னை இல்லை. கீழே செக்போஸ்ட் வரும்வரை நான் செய்த அலும்புகளால் முகம் பேஸ்தடித்துப் போனதை மணி இன்னும் மறந்திருக்க மாட்டான்.

அப்போது அதெல்லாம் சாகஸம். இப்போது நினைக்கும்போதுதான் ரிஸ்க் புரிகிறது. சொல்லப் போனால் சாகஸத்துக்கும் ரிஸ்கிற்கும் இடையில்தான் இளமையின் த்ரில் இருக்கிறது.


மேலும்...

ஹரி மாமியின் ஹரிகதா & சாஹித்ய சங்கீதம்

Posted: Monday, January 4, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
சென்னையின் சபாக்களில் சங்கீத சீசன் கன ஜோராக நடந்துவருகிறது. அதையொட்டி பத்திரிக்கைகளின் பக்கங்களும் வண்ணமயமான படங்களுடன் படபடக்கின்றன. மாமாக்களும் மாமிக்களும் தொடைத் தட்டி ரசிக்கும் கர்நாடக சங்கீதத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் நெஞ்சம் மேலிட்ட ஆர்வத்தில் உடன் பணிபுரிந்த சங்கீதம் கற்றிருந்த ஸ்ரீரங்க நண்பர் ஒருவரை படுத்தி எடுத்ததில், அடிப்படையான சில விஷயங்களை புரியவைத்து ராகங்களை பகுத்தறியும் பயிற்சியும் சொல்லிக் கொடுத்தார். பிறகு வழக்கம் போல வேறுவேறு விஷயங்களில் ஆர்வம் சென்று மற்ற பல விஷயங்களையும் போலவே இதை பாதியில்விட்டுவிட்டேன். அந்தளவில் அது சங்கீதத்திற்கு நல்லதாகிப் போனது.

அண்மை காலமாக ஒவ்வொரு சீசனிலும் நான் எதிர்பார்த்திருப்பது இரண்டு விஷயங்களை. ஒன்று சஞ்சய் சுப்ரமணியனின் கச்சேரி. இரண்டாவது விசாகா ஹரியின் கதாகாலட்சேபம். மாமியின் உபன்யாசத்தில் ஹரி கதா, ஆண்டாள் திருக்கல்யாணம், தியாகராஜ சரிதம் என்று எதைக் கேட்டாலும் அது திகட்டாத தெள்ளமுது. சனி மாலை ஜெயா டிவியில் மாமியின் மார்கழி மஹா உற்சவ உபன்யாசம் கேட்டதிலிருந்து மீண்டும் பழைய கச்சேரிகளையெல்லாம் நேற்று முழுவதும் தேடியெடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். குறிப்பாக ஆண்டாள் திருக்கல்யாணத்தில் கோதை மாலை சூட்டும் அழகை இதைவிட வேறு யாராவது அழகுபட பாடி விளக்கமுடியுமா?

மாலை சாற்றினாள்! கோதை மாலை மாற்றினாள்!
மாலடைந்து, மதிலரங்கன், மாலை அவர்தம் மார்பிலே,
மையலாள், தையலாள், மாமலர்க் கரத்தினாள்,

ரங்க ராஜனை, அன்பர் தங்கள் நேசனை,
ஆசி கூறி, பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட,
அன்புடன், இன்பமாய், ஆண்டாள் கரத்தினாள்,

மாலை சாற்றினாள்! கோதை மாலை மாற்றினாள்!
பா-மாலை சாற்றினாள்! பூ-மாலை மாற்றினாள்!

*

சாஹித்யம் இல்லாத சங்கீதத்தையே தான் விரும்புவதாக குமுதத்தில் இந்தவாரம் ஞாநி எழுதியுள்ளார். சாஹித்யங்கள் சினிமா பாடல்களுக்கு வேண்டுமானால் சில சமயம் பொருத்தமாகவும் ரசிக்க கூடியதாகவும் இருக்கிறது. ஆனால் சாஸ்திரிய சங்கீதத்திற்கு அது பெரும்பாலான நேரங்களில் திணிப்பாகவே இருக்கிறது என்பதுதான் என் கருத்தும். மேலும், ஞாநி குறிப்பிடுவது போல கர்நாடக சங்கீதத்தைவிட ஹிந்துஸ்தானி இசை அதிக வரவேற்பைப் பெற்றதற்கு காரணம் அதன் குறைவான சாஹித்யம் மற்றும் நெக்குருக வைக்கும் விஸ்தாரமான ஆலாபனைகள்(ஹிந்துஸ்தானியில் ’ஆலாப்’). ராகங்களும் குறைவே. அதனுடன் ஒப்பிடும்போது கர்நாடக சங்கீதம் பத்து, பதினைந்து ராக உருப்படிகளை ஒன்று சேர்த்துக் கட்டிய பண்டல் போல காணப்படுகிறது.

அதைவிட அதை வெகுஜன ரசனையில் இருந்து விலக்கி வைப்பது அதன் தெலுங்கு கீர்த்தனைகள். கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகளாக சென்னை கர்நாடக இசையின் மையப் புள்ளியாக இருந்துவந்தாலும் இன்னும் தமிழிசையின் பக்கம் தலை சாய்க்க நம் வித்வான்கள் மனம் ஒப்பவில்லை. கேட்டால் இந்த சாஹித்யங்கள் எல்லாம் கர்நாடக இசைக்காகவே அர்பணிக்கப்பட்டவை; புனிதமானவை; தெய்வீகமானவை என்கிறார்கள். கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் வாழ்ந்ததும் இக்கீர்த்தனைகளை இயற்றியதும் 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில். இவர்கள் இயற்றிய தெலுங்கு கீர்த்தனைகள்தாம் இன்றளவும் தெய்வீகமாக கருதப்பட்டு பாடப்படுகிறது. அப்படியானால் இவர்களின் காலத்திற்கும் முன் இருந்த சாஹித்ய வடிவம் யாது? அது சமஸ்கிருதம் என்றால் அதன் தெய்வீகத்தன்மை மற்றும் புனிதத்தை இம்மும்மூர்த்திகள் கெடுத்ததாக ஆகாதா? அதனால் இசையின் அடிப்படை கூறுகள் மாறாமல் ராகத்திற்குள் பொருந்தக்கூடியதாகப் போடப்படும் எல்லா சாஹித்யங்களும் சிறப்பானவையே என்பதுதான் உண்மை.

உன்னால் முடியும் தம்பியின் ஒரு காட்சியில் இளையராஜா இதனைக் கோடிட்டு காட்டியிருப்பார். கச்சேரிக்குப் போகும் வழியில் விபத்தில் மாட்டிய ஒருவருக்கு உதவ சென்றதால் கமல் தாமதமாக கச்சேரிக்கு வருவார். இதனால் கோபமுற்ற தன் தந்தையைப் பார்த்து வழக்கமான சங்கதிகளைத் தவிர்த்து கமல் பாடும் ‘மானிட சேவை துரோகமா” என்பது எந்த இடத்திலும் பிசிறு தட்டாத முயற்சி.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழிசையை முன்னெடுக்க என்றே அண்ணாமலை செட்டியார், கல்கி, இராஜாஜி போன்றோரைப் புரவலராகக் கொண்டு தமிழிசை சங்கம் துவங்கப்பட்டது. ஆனால் அவர்கள் காலத்திற்குப் பிறகு அம்மாதிரி முயற்சிகளில் தீவிரம் காட்டப்படவில்லை. சில வருடங்கள் முன்பு இராமதாஸ் பொங்குதமிழ் பண்ணிசை பெருமன்றம் என்று ஒன்றை முன்னிலைப்படுத்தி தமிழிசை கச்சேரிகள் நடத்தினார். அதன் இன்றைய நிலை என்னெவென்று தெரியவில்லை. தனியாக கேஸட்களில் தமிழிசைப் பாடி வெளியிடும் நம் புகழ்பெற்ற சங்கீத வித்வான்கள்கூட சபா கச்சேரி என்று வந்துவிட்டால் தமிழை தீண்ட தகாததாக பார்க்கும் நிலை இன்றுவரை மாறவில்லை. தமிழிசைக்கான புரவலர்கள் அதிகரித்து, அது தன்னை பக்திக்குள் சிறைப்படுத்திக் கொண்டிருப்பதிலிருந்து வெளிவரும் ஒரு நாளில் இது மாறலாம்.
மேலும்...

தமிழகத்தின் எல்லை தாவாக்கள் & கொல்லிமலை ஒரு சிறு பார்வை

Posted: Sunday, January 3, 2010 | Posted by no-nononsense | Labels: , 0 comments
கொல்லிமலையை ஒட்டி வேறு எந்த மாநிலத்தின் எல்லையாவது இருந்திருந்தால் இப்போது நாம் கற்பனையாக பேசிக் கொண்டிருப்பது நிஜமான விவாதப் பொருள் ஆகியிருக்கும்.

குமரியை கேரளாவும், கோவையை கர்நாடகாவும், கிருஷ்ணகிரியை ஆந்திராவும் உரிமை கொண்டாடுவது போல தமிழ்நாடு அக்கம் பக்கம் மாநிலத்தின் ஏதாவது இடத்தைப் பற்றி சர்ச்சை கிளப்பி இருக்கிறதா? அவ்வப்போது திருப்பதி போச்சே என்று பெருமூச்சு விடுவதோடு சரி. ஆனால் இது தகப்பன் வீடு மாதிரி. மெட்ராஸ் ஸ்டேட்டில் இருந்து பாகப் பிரிவினை செய்து கொண்டுபோன பிள்ளைமார்கள்தான் நம் அண்டை மாநிலங்கள் எல்லாம். எனக்கு கொடுத்த பாகம் மறு கண் சுண்ணாம்பு என்று குறைபட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். மனித இயல்பு.

இதையாவது பங்காளி தகராறு என்று விட்டுக்கொடுத்துப் போகலாம். ஆனால் கச்சதீவை தாரை வார்த்ததைவிட ஒரு இளிச்சவாய்த்தனம் இன்னொன்று இல்லை. கருணாநிதி செய்த தவறு இன்று மீனவர்களை துப்பாக்கி குண்டுகளுக்கு காவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. அசல் முட்டாள்தனம்!

*

கொல்லிமலை இன்றுவரை ஒரு மாசுபடாத மலைப்பிரதேசமாக நீடிக்கிறது. அதற்கு அதன் 72 கொண்டை ஊசி வளைவுகள்தான் கவச குண்டலம். மாற்று வழி போடப்பட்டுவிட்டால் (அ) கொண்டை ஊசிகள் அகற்றப்பட்டுவிட்டால், வரும் பத்தாண்டுகளில் நிலைமை மாறலாம்.

இன்றுவரை மேலே எந்த பெரிய நகரமும் கிடையாது. அப்படியொன்று உருவாக்கப்பட்டு கொல்லிமலை சுற்றுலாதளமாக promote செய்யப்படும் நாள் அதன் அழிவின் தொடக்க நாள். நகர் விரிவாக்கம், மக்களின் அதீத குடியேற்றம் ஆகியன நிகழுமாயின் அங்கேயுள்ள மரங்கள் வெட்டப்பட்டு கானகத்தின் பரப்பளவு குறையும். அதன் விளைவாக நாமக்கல் மழை மறைவு பிரதேசமாகி வறண்டு போகக்கூடும். ஆகவே கொல்லிமலை அதன் இன்றைய வனப்புடன், அறியப்படாத மர்மங்களுடன் தொடர்ந்து அப்படியே நீடிப்பதுதான் நல்லது. ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் ஆகியவற்றின் அன்றைய இன்றைய நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இக்கூற்றின் பின்னாலுள்ள உண்மை புரியும்.

கொல்லிமலையின் அருமை நாமக்கல் மக்களால் இன்றுவரை உணரப்படவேவில்லை என்றே சொல்வேன்.
மேலும்...

காப்பி-பேஸ்ட் கலைப் படைப்புகள்

Posted: Friday, January 1, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஐரோப்பாவில் மையம் கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் போர் மேகங்கள் ரஷ்யாவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நேரமது. அவர் ஒரு ரஷ்ய ராணுவ அதிகாரி. பெயர் வாஸ்கோவ். ஊரிலிருந்து வெகுதூரத்திலிருக்கும் கானகத்தை ஒட்டிய பகுதியில் ஐந்து இளம்பெண்களைக் கொண்ட குழுவுக்கு துப்பாக்கி பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். அனைவரும் கட்டுப்பாடுகளைப் பற்றி கவலைப்படாத சுட்டிப் பெண்கள். அவர்களை கட்டி மேய்ப்பதற்குள் அவருக்கு போதுமென்றாகிறது.

பயிற்சியின் போது ஒருநாள் அவர்கள் தாங்கள் இருக்கும் காட்டுப்பகுதியில் இரு ஜெர்மானிய நாஜி படைவீரர்களின் நடமாட்டத்தை அவதானிக்கின்றனர். ரஷிய படைக்கலன்களை அழிக்கவே இந்த ஊடுறுவல் என்று வாஸ்கோவ் கணிக்கிறார். ஒளிந்திருந்து கவனித்ததில் அவர்கள் இருவரல்ல; மொத்தம் 18 பேர் என்று தெரிகிறது. எப்படியாவது அவர்களை தடுத்து நிறுத்த திட்டமிடுகிறார். தங்களில் ஒருவரை மட்டும் உதவிக்கு படையை அழைத்து வர திருப்பி அனுப்பிவிட்டு, நாஜிக்கள் கடக்க நினைக்கும் ஓடைக்கு எதிராக மற்ற நான்கு பெண்களுடன் முகாமிட்டு, ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருப்பது போல சலசலப்புகளை ஏற்படுத்துகிறார். அதனைக் கண்ட நாஜிக்கள் பின்வாங்கி சலசலப்புகள் அடங்க காத்திருக்கின்றனர். இதற்கிடையில் தகவல் சொல்ல திரும்பிச் சென்ற பெண் சேற்றுக் குளத்தில் சிக்கி உயிரிழக்கிறாள்.


இதற்கும் மேல் கதைச்சொல்லவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். அதேதான். பேராண்மை படத்தின் கதையேதான். ஆனால் இது அதன் ரஷிய மூலப் படமாகிய “A zori zdes tikhie”. வழக்கமாக ஆங்கிலப் படங்களை சுடுவதுதான் நம் தமிழ் டைரக்டர்களின் வழக்கம். ஜனநாதன் ரஷ்யாவிலிருந்து உருவியிருக்கிறார். ஆனால், அவரின் இடதுசாரி பின்னணியை வைத்து பார்க்கும் போது இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஒரு பொதுவுடமைவாதி முதலாளித்துவ கடைச்சரக்கை நாடியிருந்தால்தான் ஆச்சரியம்.

பேராண்மையை அதன் பின்பாதியின் தெளிவான தமிழ் வசனங்களுக்காக ரசித்துப் பார்த்திருந்தேன். அவசியமில்லாத எந்த ஓர் இடத்திலும் நாயகன் ஆங்கிலம் கலந்து பேசியிருக்கமாட்டான். பேசினாலும் அது ஒரு உறுத்தலாக இல்லாமல் தவிர்க்க இயலாததாக இருக்கும். படமெங்கும் ஒரு தூவலாக காணப்படும் இடதுசாரி சிந்தனைகளும் கருத்துக்களும் இத்தகு லகுவான மொழி காரணமாக பாமரரையும் சென்றடைந்தது என்பதை அப்படம் குறித்து சக நண்பர்களுடன் நிகழ்ந்த சில உரையாடல்களின் போது கவனிக்க முடிந்தது.
குறிப்பாக “எதை கத்துக்கிட்டாலும் எதைப் படிச்சாலும் சர்வதேச அரசியலைப் படியுங்க. பொதுவுடமை அரசியலைவிட சிறந்தது வேற எதுவுமே இல்ல’ என்னும் வசனம் சிலரின் சிந்தனையையாவது தூண்டி, பொதுவுடமை என்றால் என்ன என்று அறிந்துகொள்ள அவர்களில் ஒரு சிலராவது முயல்வார்கள் என்று உறுதியாக நம்பலாம். அந்த ஒரு காரணத்திற்காக ஜனநாதனின் இந்த காப்பி-பேஸ்டையும்கூட மன்னிக்கலாம்.

-o0o-

தமிழில் இப்படி பிறர் மூளையை கடன் வாங்கி அதன்மேல் தன் லேபிளை ஒட்டிக்கொள்ளும் கலாச்சாரத்திற்கு நெடிய வரலாறு உண்டு. அதை ஒப்புக் கொள்ளும் நேர்மை பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. கமல் பெரும்பாலும் இந்த மாதிரி வேலைகளை நிறைய செய்வார். உ.போ.ஒருவனின் பேட்டிகள், புரோமோக்கள் எதிலுமே அவர் இது ஹிந்தியின் ரீமேக் என்று சொல்லிக் கொள்ளவே இல்லை. தன்னுடைய சுய சிந்தனையில் உதித்திட்ட கதைக் கரு போலவே காட்டிக் கொண்டார். (உடனே கமல் ரசிகர்கள் மல்லுக்கு நிற்க வேண்டாம். இதனை நிரூபிக்கும் வீடியோ ஆதாரங்கள் யூடியூபில் நிறைய உண்டு. மேலும் தமிழில் எந்த ஒரு சினிமா நுண்கலையைப் பற்றி பேச நேர்ந்தாலும் கமலை மேற்கோள் காட்ட நேர்வது எந்த விமர்சகனுக்கும் தவிர்க்க இயலாதது. தமிழ் சினிமாவில் கமல் அடைந்துள்ள இடம் அத்தகையது). இது அவரின் மற்ற சில படங்களுக்கும் பொருந்தும்.

சில மாதங்களுக்கு முன்பு ”Planes, Trains and Automobiles” என்னும் ஆங்கிலப்படம் பார்த்தேன். அன்பே சிவம் படத்தின் ஒரிஜினல் அதுதான். படம் முடிந்து சில நிமிடங்கள் ஆகியும்கூட என்னுடைய தன்வயப்பட்ட நிலையில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. வலுக்கட்டாயமாக என் மனைவியை அழைத்து நிறுத்தி அப்படம் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். John candy-இன் மிகையில்லா நடிப்பு மற்றும் கதையை காட்சிப்படுத்திய விதம் படத்துடன் ஒன்றிப் போகச் செய்தது. கதையின் ஹைலைட்டான அம்சமே நாயகர்கள் இருவருக்கும் இடையில் படம் நெடுக தொடரும் முரண்பாடுகளும் வாக்குவாதங்களும்தான். அத்துடன் நூலிழை போல் திரைக்கதை முழுவதும் பின்னிவரும் நகைச்சுவை படத்தை நொடிப் பொழுதும் தொய்வில்லாமல் எடுத்துச் செல்லும்.

ஆனால் அதையே தமிழில் எடுக்கும் போது கதாநாயகனுக்கு காதலி, டூயட், பழிவாங்கல், காதலியின் மணவாளன் தனக்கு நண்பன் என்னும் அனைத்து டிபிகல் தமிழ் மசாலாத்தனங்களும் தேவைப்படுகின்றன. இது மாதிரி உள்ளூர் சூழலுக்கு ஏற்ப செய்யப்படும் localization மூலக்கதையோடு ஒட்டாமல் போய் கருவை சிதைக்கின்றன. இதற்கு பதிலாக, அங்கே கிறிஸ்துமஸ் என்றால் இங்கே தீபாவளி என்பது போன்ற பொருத்தமான - கதையை சிதைக்காத மாறுதல்களை மட்டும் செய்துவிட்டு, மூலக்கதையை அப்படியே இங்கேயும் சொல்லிவிட்டு போகலாம். ஆனால் அதற்கும் ஒரு வித்வத்வம் தேவைப்படுகிறது. இல்லையென்றால் அமீரின் ’யோகி’ போல சொதப்பல் ஆகிவிடும்.

பரவலாக பற்பல குறைகள் இருந்தும் இங்கே பல ரீமேக்குகள் பெரிய வரவேற்பையும் போற்றுதலையும் பெறுகின்றன. நல்ல கதைகள் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், தீராத தேடலையும் இதன் மூலம் அழுத்தமாக உணரமுடிகிறது. எனினும், திறமை இருந்தும் தற்காலத்தின் நுகர்வு கலாச்சாரச் சூழலில் சொந்த சரக்குக்காக மூளையை கசக்கும் பிரயத்தனங்களில் பெரும்பாலும் யாரும் ஈடுபடுவதில்லை. அதற்கு அவர்களின் daily callsheetகலாச்சாரமும் ஒத்துவருவதில்லை. ஒருநாள் வீட்டில் இருந்தாலுமேகூட அந்த ஒருநாளின் கால்ஷீட் சம்பாத்தியமாகிய சில லட்சங்கள் இழப்பு கணக்கில் சேர்க்கப்படுகின்றன. கணக்கு வழக்குகள் இங்ஙனம் கரன்சியை அடியொற்றி தொடரும்வரை பெரிய கலைப் படைப்புகளையோ காவியங்களையோ எதிர்பார்க்கமுடியாது. களவாடிய கதையில் லேபிள் ஒட்டும் கலாச்சாரம்தான் குறையாமல் தொடரும்.

நமது விமர்சனங்கள் ஒரு பக்கம் தொடர்ந்தாலும், தமிழ்ச்சாயம் பூசப்பட்டு விற்கப்படும் சினிமா நல்ல சினிமாவாக இருக்கும்வரை அதில் நமக்கும் பிரச்சினையில்லை. இதுவும் இல்லையென்றால் குப்பனும் சுப்பனும் ஹீரோயிச ஜிகினா ஜிகிடிகளையே சினிமாவாக பார்க்க நேரும் அவலம் காலமெல்லாம் தொடரக்கூடும். அந்த வகையில் அன்பே சிவம், பேராண்மை வகையறாக்கள் தங்களுக்குரிய இடத்தை தமிழ் சினிமாவில் நிர்ணயித்துக் கொண்டுள்ளன.
மேலும்...