காப்பி-பேஸ்ட் கலைப் படைப்புகள்

Posted: Friday, January 1, 2010 | Posted by no-nononsense | Labels:
ஐரோப்பாவில் மையம் கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் போர் மேகங்கள் ரஷ்யாவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நேரமது. அவர் ஒரு ரஷ்ய ராணுவ அதிகாரி. பெயர் வாஸ்கோவ். ஊரிலிருந்து வெகுதூரத்திலிருக்கும் கானகத்தை ஒட்டிய பகுதியில் ஐந்து இளம்பெண்களைக் கொண்ட குழுவுக்கு துப்பாக்கி பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். அனைவரும் கட்டுப்பாடுகளைப் பற்றி கவலைப்படாத சுட்டிப் பெண்கள். அவர்களை கட்டி மேய்ப்பதற்குள் அவருக்கு போதுமென்றாகிறது.

பயிற்சியின் போது ஒருநாள் அவர்கள் தாங்கள் இருக்கும் காட்டுப்பகுதியில் இரு ஜெர்மானிய நாஜி படைவீரர்களின் நடமாட்டத்தை அவதானிக்கின்றனர். ரஷிய படைக்கலன்களை அழிக்கவே இந்த ஊடுறுவல் என்று வாஸ்கோவ் கணிக்கிறார். ஒளிந்திருந்து கவனித்ததில் அவர்கள் இருவரல்ல; மொத்தம் 18 பேர் என்று தெரிகிறது. எப்படியாவது அவர்களை தடுத்து நிறுத்த திட்டமிடுகிறார். தங்களில் ஒருவரை மட்டும் உதவிக்கு படையை அழைத்து வர திருப்பி அனுப்பிவிட்டு, நாஜிக்கள் கடக்க நினைக்கும் ஓடைக்கு எதிராக மற்ற நான்கு பெண்களுடன் முகாமிட்டு, ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருப்பது போல சலசலப்புகளை ஏற்படுத்துகிறார். அதனைக் கண்ட நாஜிக்கள் பின்வாங்கி சலசலப்புகள் அடங்க காத்திருக்கின்றனர். இதற்கிடையில் தகவல் சொல்ல திரும்பிச் சென்ற பெண் சேற்றுக் குளத்தில் சிக்கி உயிரிழக்கிறாள்.


இதற்கும் மேல் கதைச்சொல்லவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். அதேதான். பேராண்மை படத்தின் கதையேதான். ஆனால் இது அதன் ரஷிய மூலப் படமாகிய “A zori zdes tikhie”. வழக்கமாக ஆங்கிலப் படங்களை சுடுவதுதான் நம் தமிழ் டைரக்டர்களின் வழக்கம். ஜனநாதன் ரஷ்யாவிலிருந்து உருவியிருக்கிறார். ஆனால், அவரின் இடதுசாரி பின்னணியை வைத்து பார்க்கும் போது இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஒரு பொதுவுடமைவாதி முதலாளித்துவ கடைச்சரக்கை நாடியிருந்தால்தான் ஆச்சரியம்.

பேராண்மையை அதன் பின்பாதியின் தெளிவான தமிழ் வசனங்களுக்காக ரசித்துப் பார்த்திருந்தேன். அவசியமில்லாத எந்த ஓர் இடத்திலும் நாயகன் ஆங்கிலம் கலந்து பேசியிருக்கமாட்டான். பேசினாலும் அது ஒரு உறுத்தலாக இல்லாமல் தவிர்க்க இயலாததாக இருக்கும். படமெங்கும் ஒரு தூவலாக காணப்படும் இடதுசாரி சிந்தனைகளும் கருத்துக்களும் இத்தகு லகுவான மொழி காரணமாக பாமரரையும் சென்றடைந்தது என்பதை அப்படம் குறித்து சக நண்பர்களுடன் நிகழ்ந்த சில உரையாடல்களின் போது கவனிக்க முடிந்தது.
குறிப்பாக “எதை கத்துக்கிட்டாலும் எதைப் படிச்சாலும் சர்வதேச அரசியலைப் படியுங்க. பொதுவுடமை அரசியலைவிட சிறந்தது வேற எதுவுமே இல்ல’ என்னும் வசனம் சிலரின் சிந்தனையையாவது தூண்டி, பொதுவுடமை என்றால் என்ன என்று அறிந்துகொள்ள அவர்களில் ஒரு சிலராவது முயல்வார்கள் என்று உறுதியாக நம்பலாம். அந்த ஒரு காரணத்திற்காக ஜனநாதனின் இந்த காப்பி-பேஸ்டையும்கூட மன்னிக்கலாம்.

-o0o-

தமிழில் இப்படி பிறர் மூளையை கடன் வாங்கி அதன்மேல் தன் லேபிளை ஒட்டிக்கொள்ளும் கலாச்சாரத்திற்கு நெடிய வரலாறு உண்டு. அதை ஒப்புக் கொள்ளும் நேர்மை பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. கமல் பெரும்பாலும் இந்த மாதிரி வேலைகளை நிறைய செய்வார். உ.போ.ஒருவனின் பேட்டிகள், புரோமோக்கள் எதிலுமே அவர் இது ஹிந்தியின் ரீமேக் என்று சொல்லிக் கொள்ளவே இல்லை. தன்னுடைய சுய சிந்தனையில் உதித்திட்ட கதைக் கரு போலவே காட்டிக் கொண்டார். (உடனே கமல் ரசிகர்கள் மல்லுக்கு நிற்க வேண்டாம். இதனை நிரூபிக்கும் வீடியோ ஆதாரங்கள் யூடியூபில் நிறைய உண்டு. மேலும் தமிழில் எந்த ஒரு சினிமா நுண்கலையைப் பற்றி பேச நேர்ந்தாலும் கமலை மேற்கோள் காட்ட நேர்வது எந்த விமர்சகனுக்கும் தவிர்க்க இயலாதது. தமிழ் சினிமாவில் கமல் அடைந்துள்ள இடம் அத்தகையது). இது அவரின் மற்ற சில படங்களுக்கும் பொருந்தும்.

சில மாதங்களுக்கு முன்பு ”Planes, Trains and Automobiles” என்னும் ஆங்கிலப்படம் பார்த்தேன். அன்பே சிவம் படத்தின் ஒரிஜினல் அதுதான். படம் முடிந்து சில நிமிடங்கள் ஆகியும்கூட என்னுடைய தன்வயப்பட்ட நிலையில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. வலுக்கட்டாயமாக என் மனைவியை அழைத்து நிறுத்தி அப்படம் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். John candy-இன் மிகையில்லா நடிப்பு மற்றும் கதையை காட்சிப்படுத்திய விதம் படத்துடன் ஒன்றிப் போகச் செய்தது. கதையின் ஹைலைட்டான அம்சமே நாயகர்கள் இருவருக்கும் இடையில் படம் நெடுக தொடரும் முரண்பாடுகளும் வாக்குவாதங்களும்தான். அத்துடன் நூலிழை போல் திரைக்கதை முழுவதும் பின்னிவரும் நகைச்சுவை படத்தை நொடிப் பொழுதும் தொய்வில்லாமல் எடுத்துச் செல்லும்.

ஆனால் அதையே தமிழில் எடுக்கும் போது கதாநாயகனுக்கு காதலி, டூயட், பழிவாங்கல், காதலியின் மணவாளன் தனக்கு நண்பன் என்னும் அனைத்து டிபிகல் தமிழ் மசாலாத்தனங்களும் தேவைப்படுகின்றன. இது மாதிரி உள்ளூர் சூழலுக்கு ஏற்ப செய்யப்படும் localization மூலக்கதையோடு ஒட்டாமல் போய் கருவை சிதைக்கின்றன. இதற்கு பதிலாக, அங்கே கிறிஸ்துமஸ் என்றால் இங்கே தீபாவளி என்பது போன்ற பொருத்தமான - கதையை சிதைக்காத மாறுதல்களை மட்டும் செய்துவிட்டு, மூலக்கதையை அப்படியே இங்கேயும் சொல்லிவிட்டு போகலாம். ஆனால் அதற்கும் ஒரு வித்வத்வம் தேவைப்படுகிறது. இல்லையென்றால் அமீரின் ’யோகி’ போல சொதப்பல் ஆகிவிடும்.

பரவலாக பற்பல குறைகள் இருந்தும் இங்கே பல ரீமேக்குகள் பெரிய வரவேற்பையும் போற்றுதலையும் பெறுகின்றன. நல்ல கதைகள் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், தீராத தேடலையும் இதன் மூலம் அழுத்தமாக உணரமுடிகிறது. எனினும், திறமை இருந்தும் தற்காலத்தின் நுகர்வு கலாச்சாரச் சூழலில் சொந்த சரக்குக்காக மூளையை கசக்கும் பிரயத்தனங்களில் பெரும்பாலும் யாரும் ஈடுபடுவதில்லை. அதற்கு அவர்களின் daily callsheetகலாச்சாரமும் ஒத்துவருவதில்லை. ஒருநாள் வீட்டில் இருந்தாலுமேகூட அந்த ஒருநாளின் கால்ஷீட் சம்பாத்தியமாகிய சில லட்சங்கள் இழப்பு கணக்கில் சேர்க்கப்படுகின்றன. கணக்கு வழக்குகள் இங்ஙனம் கரன்சியை அடியொற்றி தொடரும்வரை பெரிய கலைப் படைப்புகளையோ காவியங்களையோ எதிர்பார்க்கமுடியாது. களவாடிய கதையில் லேபிள் ஒட்டும் கலாச்சாரம்தான் குறையாமல் தொடரும்.

நமது விமர்சனங்கள் ஒரு பக்கம் தொடர்ந்தாலும், தமிழ்ச்சாயம் பூசப்பட்டு விற்கப்படும் சினிமா நல்ல சினிமாவாக இருக்கும்வரை அதில் நமக்கும் பிரச்சினையில்லை. இதுவும் இல்லையென்றால் குப்பனும் சுப்பனும் ஹீரோயிச ஜிகினா ஜிகிடிகளையே சினிமாவாக பார்க்க நேரும் அவலம் காலமெல்லாம் தொடரக்கூடும். அந்த வகையில் அன்பே சிவம், பேராண்மை வகையறாக்கள் தங்களுக்குரிய இடத்தை தமிழ் சினிமாவில் நிர்ணயித்துக் கொண்டுள்ளன.

0 comments:

Post a Comment