Diet Plan

Posted: Monday, October 26, 2009 | Posted by no-nononsense | Labels:
நண்பர்களே,

”உடல் வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே’ என்பது திருமூலர் வாக்கு. அதை இக்காலத்திற்கேற்ப மாற்றினால் “உடல் வளர்த்தேன்; உண்டி வளர்த்தேனே” என்பது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். (இங்கே உண்டி என்பது தொந்தியை குறிக்கிறது என்பதறிக. இலங்கைத் தமிழ் வழக்கு!). காரணம் உடற் எடையும், பருமனும் நாம் சற்றே சுதாரிப்பதற்குள் கூடி விடுகிறது. அதற்கு நமது தவறான உணவு பழக்கமும் உடற்பயிற்சியின்மையும் தான் காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்.

உடற்பயிற்சி செய்ய முதலில் மனசும் பிறகு உடம்பும் வளைய வேண்டும். அது ஒருபுறம் இருக்க, நமது உணவு பழக்கம் தவறானது என்றால் சரியான உணவு பழக்கம் (balanced diet) என்பதுதான் என்ன? இது நான் சமீப காலமாக விடை தேடி வரும் கேள்வி.

நான் அறிந்த மருத்துவர்கள் இருவரிடம் அவர்களை சந்திக்க நேர்ந்தபோது இதே கேள்வியைக் கேட்டேன். ஆனால் என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்பது பற்றி விலாவரியாக சொல்லிக் கொண்டிருந்தார்களேத் தவிர என்ன சாப்பிட வேண்டும் என்பது குறித்து நேரடியான பதில் கிடைக்கவில்லை. இதற்கிடையே சில மாதம் முன்பு எடையை குறைக்கிறேன் பேர்வழி என்று மூன்று வேளையும் சப்பாத்தி மட்டும் சாப்பிட்டு உடலின் சமநிலை குலைந்து பிறகு அதையும் விட்டு விட்டேன்.

நேற்று காலை கிரௌண்டுக்கு வருமாறு நண்பர்கள் அழைத்திருந்ததால் அன்று நாம் விளையாடி அதே இடத்திற்குச் சென்றேன். அங்கே இலவச உடற் பரிசோதனை முகாம் நடந்து கொண்டிருந்தது (Sponsor: NTLOA). மற்றவர்கள் வர இன்னும் நேரமிருந்ததால் அதுவரை நேரம் கடத்த முகாமை பார்வையிட்டபடி வலம் வந்தேன். BP test, ECG எல்லாம் தனித்தனி அறைகளில் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றின் முன்பும் நீண்ட வரிசை. அவற்றையெல்லாம் கடந்து கடைசியாக ஒரு மரத்தடியில் ஒற்றை நாடியாக ஒரு உருவம் தனியாக சேரில் அமர்ந்திருந்தது. மேலே ஓர் அட்டையில் ’dietician’ என்று எழுதியிருந்தது. ஆனால் சுற்றி ஒருவருமில்லை. சரி, நாமாவது ஆதரவு கொடுப்போமே என்று அவரிடம் சென்று என் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தேன்.

அவர் தந்த பதில் என் ஞாபகத்திலிருந்து: காலையில் சப்பாத்தி. அதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சேர்க்காத ஏதாவது டிஷ். மதியம் நல்ல சாப்பாடு. பிறகு மாலையில் முளை கட்டிய பயிரை வேக வைத்து சாப்பிடலாம். உடன் ஏதாவது liquid எடுத்துக்கொள்ள சொன்னார்; குறிப்பாக பால் என்று நினைக்கிறேன். இரவு வெஜிடபிள் சாலட் மற்றும் தோல் நீக்கப்படாத பழங்கள்(மட்டும்). இதை மாற்றமில்லாமல் மூன்று மாதம் எடுத்துக்கொண்டால், ஆரோக்கியத்திற்கு கேடில்லாமல் உடல் எடை குறையுமாம். அதற்கு பிறகு டயடீஷியனை மீண்டும் சந்தித்து டயட்டில் தேவையான மாற்றங்களை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றார். நான் கேட்ட what is a balanced food என்ற கேள்விக்கான பதில் இது இல்லை என்ற போதும், டயட் பற்றி ஒரு ஐடியா கிடைத்தது.

எனினும், இப்படி ஒரு மெனுவைக் கொண்டு போய் எல்லோருக்காவும் சமைக்கும் அம்மாவிடம் கொடுத்து ’காலையில் சப்பாத்தி, மதியம் சாதம், மாலை பயிரு ஸ்நாக்ஸ், இரவு சாலட் செய்து கொடு’ எனச் சொல்வது குடும்ப வன்முறையாகவே தோன்றுகிறது. கூட்டுக் குடும்பத்தில் வாழும் சராசரி இந்தியனால் காலையில் குடும்பத்துக்கான பொது சமையலை சாப்பிட்டு, சாப்பிட்டதில் கொஞ்சம் மதியத்துக்கும் போட்டுக்கொண்டு வேலைக்கு ஓடுவது மட்டுமே நடைமுறை சாத்தியம். மற்றபடி இந்த ’prescribed diet plan’ எல்லாம் காதுக்கு எட்டினாலும் வாய்க்கு எட்டுவதில்லை.

0 comments:

Post a Comment