கார்த்திகை தீபம் - சில நினைவுகள்

Posted: Tuesday, December 1, 2009 | Posted by no-nononsense | Labels:
இன்று கார்த்திகை தீபம் என்று நினைவேயில்லை. வேலை முடிந்து ச.பே.புதூரில் பஸ்ஸை விட்டு இறங்கி நடக்க நடக்கத்தான் வீடெங்கும் ஏற்றப்பட்டிருந்த தீபங்களின் அணிவகுப்பைக் கண்டேன். ஒருவேளை தீபாவளியே தானோ என்னும் அளவிற்கு அவ்வப்போது பட்டாசு சத்தங்கள் கேட்டபடியே இருந்தன. வீட்டிற்கும் வந்ததும் என் வருகைக்காக தயாராக இருந்த என் மகளுடன் தீபாவளி முடிந்து மிச்சம் மீதியிருந்த பட்டாசுகளை கொளுத்தி முடித்தேன். இப்பொழுது என்னைத் தவிர அனைவரும் விளக்குப் போட கோவிலுக்குச் சென்றிருக்கிறார்கள்.

கார்த்திகை தீபத்தை நம் ஊரில் கூம்பு என்றுதான் பொதுவாக அழைப்பார்கள். ச.பே.புதூர் பிள்ளையார் கோவில் முன்பு கூம்பு எனப்படும் பெரிய நெருப்புக் கொளுத்தப்படும். கூம்பில் கொண்டு போய் போடு என்று கூறி என் ஆயா என்னிடம் சோளக்கட்டு வருடா வருடம் கொடுத்து விடுவார். அப்படியொருமுறை கூம்பில் வீச சோளக்கட்டு எடுத்துச் செல்லும்போது விளையாட்டாக அதனுள் இரண்டு ஊசி பட்டாசையும் மறைத்து வைத்து கொண்டு போட்டுவிட்டேன். சிறிய பட்டாசுதான் என்பதால் வெடி சத்தம் மட்டுமே கேட்டது. நெருப்பு பொறியெல்லாம் பறக்கவில்லை. ஆனால் சரியாக அடையாளம் கண்டுபிடித்து மணி வாத்தியார், பிடித்து வைதுவிட்டார். கூட படித்த பெண்கள் முன் அச்சம்பவம் நடந்ததால் பெரிய இன்சல்ட் ஆகி அவரை பல நாள் பழிவாங்க நினைத்திருந்தேன். பிறகு மறந்துவிட்டது.

கூம்பு கொளுத்துமிடத்தில் ச.பே.புதூரின் இளவட்டங்கள் அனைவரும் கூடுவார்கள். அவனவனுக்கென்று ஓர் ஆள் இருக்கும். அவள் பின்னால் சுத்துவதும், ஆளில்லாதவன் அவனுக்கு கம்பெனி கொடுப்பதும் வழக்கமான ஒன்று. (சரவணனும், நானும் அப்படி திரிந்திருக்கிறோம். ஆனால் யார் பின்னால் என்றெல்லாம் கேட்கக் கூடாது. பெயர்கள் நீங்கள் அறிந்தவைதான் என்பதால் பரம ரகசியம் ).
கூம்பு முடிந்ததும், அங்கிருந்து கிளம்பி செகண்ட் ஷோ சினிமா போவோம். பெரும்பாலும் சிவசக்தி அல்லது முருகனாகத்தான் இருக்கும். (சேலம் ரோட்டு தியேட்டர்களுக்கு சினிமா போவது எல்லாம் அப்போது பெரிய விஷேஷமான ஒன்று. அடிக்கடி நடக்காது). அதில் ஓடுவது ஏதாவது பழையப் படமாகத்தான் இருக்கும். ஆனால் தியேட்டர் நிறைந்து விடும். எந்த போரான படமாக இருந்தாலும் இடைவேளை நேரம் ஜாலியாக இருக்கும். வெளியே கிடைக்காத சில தின்பண்டங்களெல்லாம் இந்த மாதிரி டூரிங் டாக்கீஸில் தான் கிடைக்கும். இடைவேளைக்கு பிறகு சில நேரம் தியேட்டரிலேயே தூங்குவதும் நடக்கும்.

படம் முடிந்து இரண்டு மணியளவில் பதுங்கி பதுங்கி வீடு திரும்பினால், பல்லைக் கடித்துக்கொண்டு அப்பாவா அல்லது பாவமாக அம்மாவா, யார் கதவைத் திறக்கப் போகிறார்கள் என்று மனதிற்குள் பட்டிமன்றமே நடக்கும். பெரும்பாலும் அம்மாதான் திறப்பார் என்பதால், பெரிய பிரச்சினை வந்ததில்லை. ஆனால் அடுத்தநாள் காலை 6 மணிக்கே மணி சார் டியூஷன் வைத்திருப்பார். அதற்கு எந்த வகையிலும் டிமிக்கி கொடுக்கவே முடியாது. காரணம் அவர்தான் இரவு நாம் போட்ட ஆட்டத்தையெல்லாம் குறித்து வைத்திருக்கிறாரே..! எப்படியோ தூங்கி வழிந்து டியூஷன் சென்று சமாளித்து, இரவு பார்த்த சைட்களின் ஆடை அலங்காரங்களைப் பற்றி வெளியூர் நண்பர்களிடம் கதைத்து கலாய்த்து காலம் கடத்திய அந்த நாட்களெல்லாம், போயே போச்சு!!

0 comments:

Post a Comment