ஆயிரத்தில் ஒருவன் - மேலும் சில கருத்துக்கள்

Posted: Tuesday, January 19, 2010 | Posted by no-nononsense | Labels:
ஆயிரத்தில் ஒருவன் பல மட்டங்களிலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளதை இணையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் காண முடிகிறது. வசூல் நிலவரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சிந்திக்கும்போது என்னைப் பொருத்தவரை இப்படம் ஏற்படுத்தியுள்ள இத்தகைய தாக்கம்தான் அந்த படத்தின் உண்மையான வெற்றி என்று சொல்வேன். இது தமிழ் திரைச்சூழலில் மிகவும் தேவையான ஒன்று.

இங்கே மாற்று சினிமா என்பதே கிட்டத்தட்ட கிடையாது என்று சொல்லலாம். அப்படியே எடுத்தாலும் காஞ்சிவரம் போல அவார்டுக்காகவே எடுக்கப்பட்டு அது குறுகிய வட்டத்தில் மட்டும் ரசிக்கப்பட்டு பெட்டிக்குள் சென்றுவிடுகிறது.

மக்கள் தங்களின் ஒற்றைப் பரிமாண ரசனை ஜாடியில் இப்படத்தைப் போட்டு குலுக்க முற்படுவதுதான் இந்த படத்தை புரிந்துகொள்வதில் உள்ள மிகப் பெரிய பிரச்னை. படத்தின் விஷயகனம் தாங்காது ஜாடி உடைய நேரிடுகிறது. எல்லா கணக்குகளையும் ஒரே சூத்திரத்தைக்கொண்டு விளங்கிக்கொள்ள முடியாது. ரசனையின் பன்முகத்தன்மை என்பதை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இப்படம் ஒரு fantasy genre. அந்த கண்ணோட்டத்தில் அதை எடுத்துக்கொள்ளாமல் லிடரலாக logicalize செய்ய முயன்றால் படம் த்ராபையாகத்தான் தெரியும். என் பேனாவில் நானும் லாஜிக் மையை நிரப்பி எழுதினால் இவர்கள் எல்லோரையும்விட பல மடங்கு அதன் கிழித்து தொங்கவிட்டுவிடுவேன். ஆனால் இது fantasy என்பதை உணர்ந்தே படத்தில் அமர்ந்திருந்தேன் — எப்படி ஒரு காமெடி படத்திற்கு, ஒரு ஹாரர் படத்திற்கு மனதளவில் தயாரான நிலையில் இருப்போமோ அப்படி. அதனால் எனக்கு இக்கதையை உள்வாங்கிக்கொள்வதிலும் ரசிக்க முடிந்ததிலும் எந்த பிரச்னையும் இல்லை.

Fantasy, science-fiction படங்களையெல்லாம் லாஜிக் பார்த்தால் ரசிக்க முடியுமா? ”Pandora கிரகமாவது ஒண்ணாவது யாரிடம் கதைவிடுகிறாய்? எங்கே லாஜிக்?” என்று முதலில் இவர்கள் avatar-ஐத்தான் நிராகரித்திருக்க வேண்டும். ஆனால் உலகில் அதிகம் வசூல் செய்த படமாக அதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ”சோழர்களாம் தனி தீவில் வாழ்கிறார்களாம். நல்ல கதை’ என்று சிரிப்பவர்கள் யாரும் ஜூராஸிக் பார்க் படம் வந்தபோது ”டைனோஸராவது; தனி தீவாவது; அதில் மீண்டும் உயிர்பெறுவதாவது” என்று சொல்லி சிரிக்கவில்லை. விழுந்தடித்து ஓடி ஓடிப் பார்த்தார்கள். ஏனென்றால் அவையெல்லாம் ஆங்கிலப்படங்கள். இது தமிழ்ப்படம். தமிழ்ப்படம் என்றால் அதை நாம் பார்க்கும் கண்ணோட்டமே வேறாக இருக்கிறது. ஆயிரத்தில் ஒருவனை அப்படியே ஆங்கில நடிகர்களை வைத்து ஆங்கிலத்தில் எடுத்து அதை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டிருந்தால் பாராட்டியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். இதைவிட பல மொக்கை டப்பிங் படங்கள் இங்கே கேள்வியின்றி நன்றாக ஓடியிருக்கின்றன.

என்னிடம் இப்படம் புரியவில்லை என்று சொன்னவர்களிடமெல்லாம் எந்த இடத்தில் என்று கேட்டு தெரிந்து கொண்டதில் அவர்கள் அதனுடன் தொடர்புடைய முந்தைய காட்சியை ஊன்றி கவனிக்கவில்லை என்பதே புரிந்தது. அதை நான் விளக்கியதும் ‘அட ஆமால்ல’ என்று சொன்னவர்களே அதிகம். இதற்கு உதாரணாக சொல்ல வேண்டுமானால் இடைவேளைக்கு முன்பு வரும் பித்து பிடித்த நிலையையும், கைதிகளைக்கொண்டு நடத்தப்படும் gladiatorial contest-ஐயும் சொல்லலாம். இதற்கெல்லாம் காரணங்கள் கதைக்குள்ளேயே இருக்கின்றன. ஆனால் கவனிக்க தவறுகின்றனர். இதனால் அக்காட்சி சம்மந்தமே இல்லாமல் புகுத்தப்பட்டது போல தோன்றுகிறது. தவறு அவர்களுடையதேயன்றி படத்தினுடையது அல்ல.

இருப்பதிலேயே பெரிய வேதனை இடைவேளைக்கு பின்பு வரும் பழந்தமிழை ஏதோ தமாஷ் காட்சி போல பலரும் கமெண்ட் அடித்துக்கொண்டிருப்பதும்; அப்படி அடிப்பவர்களெல்லாம் தமிழர்களாக இருக்க நேர்வதும்தான். இத்தனைக்கும் அது அப்படியொன்றும் கடினமான மொழிநடை என்று சொல்லமுடியாது. அப்படி இருந்தாலும் பிறமொழி கலப்பற்றதாகிய அதுதான் நம் மொழியின் தொன்மை எனும்போது, அதில் நாம் பரிகசித்து சிரிக்க என்ன இருக்கிறது? அவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்.

நான் இப்படத்தை மிகவும் விதந்தோதி ஆதரிக்க காரணம் தமிழில் எப்போதாவதுதான் இதுபோன்ற அரிய முயற்சிகள் செய்யப்படுகின்றன. அதையும் நாம் நிராகரித்துவிட்டால் இழப்பு நமக்குத்தானே தவிர மற்றவர்களுக்கு அல்ல.

1 comments:

  1. no-nononsense said...
  2. பாலா, உனக்கு பதில் எழுத இன்றுதான் நேரம் கிடைத்தது.

    படத்தில் இடைவேளைக்கு முன்பாக வரும் மூவரும் பித்து பிடித்த மாதிரி நடந்துகொள்ளும் காட்சியை புரிந்துகொள்வதில் பலருக்கும் சிரமம் இருப்பதை காண்கிறேன். அதன் முன் பின் காட்சிகளை கோர்வைப்படுத்திக்கொண்டால் அக்காட்சியை விளங்கிக்கொள்வதில் சிரமம் இருக்காது.

    பல தடைகளைத் தாண்டி மூவரும் பாழடைந்து கிடக்கும் சோழர்களின் நகரத்தை அடைகிறார்கள். ஓர் அரிய பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திவிட்ட மகிழ்ச்சியில் ஆடிப்பாடி கூத்தாடுகிறார்கள் (உம்மேல ஆசைதான்..). பாடலின் முடிவில் காதை பிளக்கும் பேரோசை கேட்கத் தொடங்குகிறது. அதன் வீச்சை தாங்க முடியாமல் நிலை குலைந்து போகிறார்கள். அதற்குப் பிறகுதான் அந்த பித்து பிடித்த நிலை.

    இவர்கள் அந்த பாழடைந்த நகரத்தினுள் நுழையும் முன் இவர்கள் வருகையை அவதானிக்கும் ஓர் உருவம் நிழலான ஓரிடத்திலிருந்து குதித்து ஓடுவதை கண நேர காட்சியாக காட்டியிருப்பார்கள். அவன் சோழர்களின் ஒற்றன். அவன் சென்று அந்த ராஜகுரு மந்திரவாதி கிழவனிடம் செய்தி சொல்கிறான். உடனே அந்த இடத்திற்கு வரும் ராஜகுரு, அங்கே ஆடிப்பாடிக்கொண்டிருக்கும் மூவரையும் மாந்த்ரீகம் மூலம் புத்தி சுவாதீனம் அற்று போகும்படி கட்டிப்போட்டு ஆட்டுவிக்கிறான். அப்போதுதான் அவர்களின் உடைகளை களைந்து சோதனை செய்யமுடியும். உடைகளை களைந்து சோதனை செய்தால்தான் வந்திருப்பது சோழர்களின் தூதுவனா அல்லது அந்நியனா என்று உடற்ச்சின்னம் மூலம் அறியமுடியும்.

    அப்படியே சோதனை செய்யப்பட்டு, கார்த்திக்கின் முதுகிலுள்ள புலிச் சின்னம் காரணமாக அவர் மட்டும் தனியே பிரிக்கப்பட்டு விசாரணை செய்வதற்காக கட்டித் தொங்கவிடப்படுகிறார். மற்றவர்கள் பொதுவான கைதிகளுடன் கைதியாக சிறைபிடிக்கப்பட்டு அரசன் முன் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

    இதுதான் நீ புரியவில்லை என்று சொன்ன காட்சிகளின் பின்னணி. இப்போது புரியும் என்று நம்புகிறேன்.

    *

    படத்தின் குறைகளை ஓரளவு சரியாக சுட்டிக்காட்டி குமுதம் விமர்சனம் செய்திருந்தது. ஆனால் திரை விமர்சனத்தில் ஆ.வியின் தரம் வர வர ரொம்ப லோக்கலாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் எடுத்த சிவா மனசுல சக்தி, வால்மீகி போன்ற குப்பைகளுக்கு மட்டும் அவர்களுக்கு அவர்களே போட்டுக்கொண்ட மார்க் என்ன! கொடுத்துக்கொண்ட ஆஹா, ஓஹோ ஷொட்டுதான் என்ன! தமிழகத்தின் சிறந்த பத்திரிக்கை இதுதானாம்.... ஆஹா.. ஓஹோ.. பேஷ் பேஷ்!

Post a Comment