கடவுளர்களின் லீலா விநோதங்களின் முன்னால் கண்ணதாசனின் காதல் கதைகளெல்லாம் சாதாரணம். அதனால் தன்னை இறைவன் என்று அவர் சொல்லிக் கொண்டதினால் மட்டுமே இழுக்கு நேர்ந்து விட்டதாக கருத வேண்டியதில்லை. மேலும், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி அவருடைய குடும்பத்தாரிடமிருந்தோ அல்லது அவர் பெருந்தலைவராக இருந்த காதல் பெண்களிடமிருந்தோ(நான் காதல் பெண்களின் பெருந்தலைவன்!) எந்த புகாரும் இல்லாத நிலையில், அதை கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்துவது அநாவசியம்.
அவர் வாழ்ந்த வாழ்க்கைமுறை, சிலர் வகுத்துக் கொண்டிருக்கும் வாழ்வியல் ஒழுக்க கோட்பாடுகளுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். அதற்காக அவருடைய பன்முக ஆளுமையை வியக்காமல் விதந்தோதாமல் இருக்க இயலாது. இங்கே டாக்டர் அவர்களும் அதனைத் தான் குறிப்பிடுகிறார்கள்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ நூலை வெகு அண்மையில்தான் வாசித்து முடித்தேன். அதில் கண்ணதாசனுடனான தன் அனுபவங்களை மட்டும் சில அத்தியாயங்களுக்கு விரித்து எழுதியிருக்கிறார். ஜெயகாந்தனின் பட்டவர்த்தனமான விமர்சனங்களை நாம் அறிவோம். அவருக்கு சரியென்று படுவதையும் தவறு என்று தோன்றுவதையும் முகதாட்சண்யம் இன்றி முழங்கி விடுவார். அவரும் கூட அதில் கண்ணதாசனின் ஆளுமையை போற்றியே எழுதியிருக்கிறார். அதில் சில வரிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
“கவிஞர் கண்ணதாசன் சதா நேரமும் கனவுகளில், கற்பனைகளில், கவிதா சன்னிதானத்தில்தான் இருப்பார் என்று எவரேனும் நினைத்தால் அதைவிடத் தப்பபிப்ராயம் வேறு இருக்க முடியாது.அவர் எப்போதும் ஏதேனும் திட்டங்கள் போட்டுக் கொண்டிருப்பார். பொருளாதாரப் பிரச்சினைகளில் மூழ்கியிருப்பார். வியாபாரச் சள்ளைகளில் சிக்கிக் கொண்டிருப்பார். அவை அரசியல், சினிமா, பத்திரிக்கை சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும்.இந்தச் சூழல்களில் இருந்து தப்பித்துக்கொள்ள அவருக்கு துணையாய் இருந்தது மது மயக்கந்தான்.கவிதை எழுதுவதுகூட அவருக்குத் துணையாய் இருந்ததில்லை”“...இப்படிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைக்கு இரையாகிப் போன ஒரு மனிதரிடத்துத் தமிழும் கவிதையும் வந்து தங்கி இளைப்பாறியது எனக்குப் பேராச்சரியத்தைத் தந்தது.இவருக்கு நிலையான, உயர்வான, உன்னதமான வாழ்க்கை அமைய வேண்டும்’ என்ற நல்லெண்ணத்தால் இவருக்காக நான் பிரார்த்தனை செய்ததும் உண்டு. வேறென்ன செய்ய?இதையெல்லாம் நான் அவரிடம் நான் குறையாகவோ குற்றமாகவோ காணவில்லை. ஒரு மனிதனிடம் இத்தகைய இயல்புகள் இருக்க காரணமாய் அமைவது ஒரு சமூகத் தன்மையின் விளைவுதான்”
இப்படி அவருடைய நல்வாழ்க்கை குறித்த கவலைதான் ஜெயகாந்தனுக்கும் இருந்தது. கண்ணதாசனின் அரசியல் நிலைப்பாடுகள் என்று நிரந்தரமாக இருந்ததில்லை என்ற போதிலும், கண்ணதாசனைப் பொறுத்தவரை அவரைப்பற்றிய நூல்களைப் படிக்கும்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்ட மாதிரி தெரியவில்லை. அவருடைய அசட்டுத்தனங்களையும் தாண்டிய ஆளுமையே எல்லோரையும் வசீகரித்திருக்கிறது.
- கண்ணதாசனின் தனிப்பட்ட பழக்கங்களை முன்வைத்த விவாதத்தில் என் வாதம்: அகத்தியர் குழுமம்
0 comments:
Post a Comment