மதிப்பிற்குரிய திரு.இராமகி அய்யா குறிப்பிடுவது போல அதை எழுதியவர் ஒரு தமிழ்நாட்டு தமிழராய் இருந்தாலும், அதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.
இங்கே தமிழ்நாட்டில் எல்லோரும் தத்தம் குழந்தைகளை LKG -ல் சேர்க்க எந்த மெட்ரிகுலேசன் பள்ளி உகந்தது என்றுதான் பரிசீலிக்கிறார்களே தவிர, தமிழ்ப் பள்ளிகளைப் பற்றி யாரும் யோசிப்பது கூட இல்லை. அப்படி தமிழ்ப் பற்று என்று சொல்லிக்கொண்டு தப்பித்தவறி தன் குழந்தையை கொண்டுபோய் தமிழ்வழிக் கல்வியில் சேர்க்கும் ஓரிருவரும் கேலிப் பொருள் ஆகிறார்கள். அவர்களுடைய குழந்தையின் எதிர்காலத்தை அவர்களே வீணடிப்பதாக பயமுறுத்தப்படுகிறார்கள். (அதில் அர்த்தம் இல்லாமலும் இல்லை என்பதுதான் சொல்லப் போனால் எதார்த்தமும் கூட)
வேறு வழியில்லை, ஆங்கிலப் பள்ளிகளின் கட்டண விகிதங்களை ஈடுகட்ட தம்மால் முடியாது என்பவர்கள் மட்டுமே தமிழ்ப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள். அவர்களால்தான் அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட தமிழ்ப் பள்ளிகள் தற்காலத்தில் இயங்கி வருகின்றன. ஆனாலும் அவற்றில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் கூட நாளுக்கு நாள் குறைந்தே வருகிறது.
தொடர்பு எல்லைக்கு அப்பாலுள்ள ஓரிரு விதிவிலக்கான இடங்களைத் தவிர, இன்று தமிழ்நாட்டின் எந்த கிராமத்திற்குச் சென்றாலும் அங்கே குறைந்தது ஓர் ஆங்கிலப்பள்ளியாவது செம்மையாக இயங்கி வருவதை காணலாம். ஆங்கிலக் கல்வி வியாபாரம் என்பது கடந்த இருபது வருடங்களில் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் விருட்சமென வேர் விட்டிருக்கிறது. தேவை அந்தளவு இருப்பதாலேயே வியாபாரமும் நடக்கிறது.
இதற்கெல்லாம் கழக அரசுகள் தான் காரணமா, இல்லை காங்கிரஸ் அரசு நீடித்திருந்தாலும் இதேதான் நடந்திருக்குமா என்பதெல்லாம் அரசியல் பொருளாதார அறிஞர்கள் ஆராய்ந்து கொள்ளட்டும் என விட்டு விட்டு, இன்னும் மூன்று மாதங்களில் குழந்தையை பள்ளியில் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய நிலையில் உள்ள ஒரு தகப்பனாக என் முன்னுள்ள வாய்ப்புகளை மட்டும் கொஞ்சம் பரிசீலிக்க விரும்புகிறேன்.
தமிழ், ஆங்கிலவழிக் கல்வியின் பலாபலன்களை மனதிற்குள் ஒப்பீடு செய்து பார்க்கிறேன். இன்றோ, நாளையோ அவள் என்ன மதிப்பெண் பெறப் போகிறாள் என்பதல்ல நம் நோக்கம். +2 முடித்த பிறகு அவள் கற்க போகும் கல்வி என்னவாக இருக்கும்; இப்போது எந்தவழிக் கல்வியில் சேர்த்தால், பின்னால் அது அவளுக்கு வழிகளை திறப்பதாக இருக்கும் என்னும் தொலை நோக்கு தான் மனதில் ஓடுகிறது.
தமிழ்வழியில் +2 வரை சிரமமின்றி படிக்கலாம். கூடவே ஆங்கிலம் ஒரு பாடமாக தொடரும். அதற்குப் பிறகு பொறியியலோ, மருத்துவமோ, கணினியியலோ அல்லது உயர் மேலாண்மை படிப்போ எதுவாக இருந்தாலும், அதை அவள் ஆங்கிலவழியில் படித்து முடிப்பதே பின்னால் அவளுக்கு நல்ல வேலையை பெற்றுத் தரும் என்று தோன்றுகிறது. காரணம் இன்று எல்லா வேலை வாய்ப்புகளிலும் ஆங்கிலத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழ்வழியில் படிப்பை முடித்த பல பட்டதாரிகளும் வேலை வாய்ப்பில் ஒரு தகுதியை வேண்டி இன்று ஸ்போக்கன் இங்கிலீஸ் வகுப்புகளின் படியேறி இறங்கிக் கொண்டிருப்பது வெள்ளிடை மலை. காரணம் இங்கே அனைத்து நிறுவனங்களின் நிர்வாகங்களும், அவற்றின் தகவல் பரிமாற்றங்களும், பணியாளர்களுக்கிடையான உரையாடல்களும், சந்திப்புகளும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறுகின்றன. இன்னும் இருபது வருடங்கள் கழித்து வரும் காலத்தில் இதனுடைய வீச்சு இன்னும் அதிகமாக இருக்குமே தவிர குறையாது.
இவ்வாறு இருக்கப் போகும் பணிச்சூழலில், ஆங்கிலம் ரத்தத்தில் ஊறாது போனால் வேலைச்சந்தையில் அவள் பின்தங்க நேரிடும் என்பது எனக்கு பிரத்தியட்சமாக தெரிகிறது. தெரிந்தும், என் தனிப்பட்ட தமிழ் உணர்வு காரணமாக அவளை தமிழ்வழிக் கல்வியில் சேர்த்து பின்னால் பின்தங்க விடத்தான் வேண்டுமா என்னும் கேள்வி எழுகிறது. தானாகவே என் தமிழ் உணர்வு பின்தங்கி நடைமுறை எதார்த்தத்தை ஒட்டி நானும் ஆங்கிலப் பள்ளியின் கதவைத் தட்ட நேர்கிறது.
நமக்கு குழந்தை பிறந்தால் அதை தமிழ்வழிக் கல்வியில் தான் சேர்க்க வேண்டும் என்று நெடுங்காலமாக நான் கொண்டிருந்த லட்சியம், இன்று உண்மையாகவே குழந்தையை பள்ளியில் சேர்க்கப் போகும் ஒரு நாளில் ஒவ்வாத ஒன்றாக மாறித் தெரிகிறது. சிந்தனைவயப்பட்ட நேரங்களில் சரியென்று பட்ட சித்தாந்தம், வாழ்ந்து பார்க்க முனையும்போது பொருந்தா பொருளையே தருகிறது.
என்னைப் போலவேதான் பெரும்பாலான தமிழ்நாட்டு தமிழர்களும் என்று சொல்லமுடியும். மற்றபடி, சில பட்டிமன்றங்களில் நகைச்சுவைக்காக கூறப்படுவதைப் போல குழந்தை “டாடி” ”மம்மி” என்று கூப்பிட்டால்தான் பெருமை என்பதிலெல்லாம் உண்மையில்லை.
குழந்தையை ஆங்கிலவழிக் கல்விக்கு அனுப்புவது தவறு அல்ல. அவள் தமிழ் தெரியாமல் வளர்வதை அனுமதிப்பதுதான் தவறு என்று நான் நினைக்கிறேன். அதற்கான பொறுப்பு அதன் பெற்றோரையே சார்ந்தது. இன்றைய தலைமுறையின் இவ்விதநிலைக்கு அவர்களை மட்டுமே பொறுப்பாக்குவது நம் தவறை நாம் மறுபரிசீலனை செய்துகொள்ளாமல் விடுவதற்குச் சமம்.
இராமகி அய்யா அவர்கள் புலம்பெயர் தமிழர்களின் தமிழ் அக்கறைப் பற்றி விதந்து கூறியிருந்தார்கள். எனக்கிருக்கும் புலம்பெயர் நண்பர்களைப் பொறுத்து யோசிக்குபோது, அங்கேயும் நிலை மாறி வருவதாகவே தோன்றுகிறது. இலங்கையிலிருந்து அண்மை காலத்தில் வெளியேறிய தலைமுறையினர் மட்டுமே தமிழுடன் வாழ்கிறார்கள். அவர்களுக்கு புலத்தில் பிறக்கும் குழந்தைகளோ தமிழைத் தடுமாற்றத்துடன் பேச மட்டும் செய்துகொண்டு, உள்ளூர் பாஷையில் எழுதவும் படிக்கவும் செய்கிறார்கள். இத்தலைமுறையில் குறைவாக இருக்கும் விகிதாச்சாரம், அடுத்த தலைமுறையில் தமிழ்நாட்டு தமிங்கில தமிழரை எட்டிப் பிடிக்கலாம்.
தமிழில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் பிரச்னை இல்லை எனும் நிலை வரும்போதுதான் இன்றைய நிலை மாறும். ஆனால் அதற்கான புறவயச் சூழல் புத்திக்கெட்டியவரை பிரகாசமாக இல்லை. இருப்பினும், கல்விக்கும் அப்பாற்பட்டு நம் பிள்ளைகளுக்கு தமிழ் உணர்வூட்டி, அதை அவர்கள் அடுத்தடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்ல வைப்பதே இன்றையச் சூழலை முன்னிறுத்தி யோசிக்கும்போது ஒரு தமிழராக நம்முடைய தலையாயக் கடமை என்று தோன்றுகிறது. செய்யமுடியக் கூடிய இதையாவது நாம் செய்வோமாக.
0 comments:
Post a Comment