கண்டக்டர்களும் மனிதர்களே!

Posted: Thursday, April 29, 2010 | Posted by no-nononsense | Labels:
மனிதர்கள் ஏறும் போதும், இறங்கும் போதும் பெரும்பாலும் அந்த நடத்துனர் மனிதர்களாக பார்க்கவில்லையென்றே தோன்றியது. "ஏய் ஏறி வா, ஏறி வா, ஏறி வா!!!, சீக்கிரம், சீக்கிரம், சீக்கிரம் இறங்கு" என்று அனிச்சையாய் வார்த்தைகள் கோப நெருப்பை எச்சிலாய் மனிதர்களின் மனதில் உமிழ்ந்து கொண்டிருந்தது. அதை உள்வாங்கி உணரும் நிலையில் பயணிகள் என அழைக்கப்படும் மனிதர்கள் இல்லை

பல நாட்களாக இதைப்பற்றி எழுத வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக வாரத்தின் பெரும்பாலான நாட்களில் பஸ்ஸில் பயணம் செய்த அனுபவத்தில் சொல்கிறேன்: கண்டக்டர் வேலை அப்படி ஒன்றும் எளிமையானது இல்லை. பொதுவில் கண்டக்டர்களை பற்றி இருக்கும் — எடுத்தெறிந்து பேசி எரிச்சல் படும் நபர்கள் — என்னும் பிம்பமும் சரியானது இல்லை.

ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு டிக்கெட் அடித்து திரும்புவதற்குள் அவர்கள் படும் சிரமம் நாம் பட சம்மதியோம். அதிலும் வேலூருக்கு 7 ரூ டிக்கெட்டுக்கு எல்லோரும் 10 ரூ, 20 ரூ, 50 ரூ என்று எடுத்து நீட்டி மீதி சில்லைரையை நயா பைசா சுத்தம் அவசியம் கேட்டு செய்யும் அழிச்சாட்டியம் உண்மையில் ஓர் அராஜகம். அந்த நேரத்தில் மகாத்மா காந்தியே கண்டக்டராக இருந்தாலும் மடாரென்று மண்டையை பார்த்து ஒன்று போட்டால்தான் என்ன என்றுதான் அவருக்கும் கூட தோன்றும்.

எத்தனை தடவை ’டிக்கெட் டிக்கெட்’ என்று கத்தினாலும் பராக்கு பார்த்துக் கொண்டிருந்து விட்டு, பின்னர் அவர் ஒன்றுக்கு மூன்று முறை தலைகளை எண்ணி பார்த்து, கடைசியாக சீட்டுகளை காட்டச் சொல்லும் போது பல்லிளித்து பணத்தை எடுத்து நீட்டும்போது, எவ்வளவு மகா பொறுமைசாலி என்றாலும் வரும் கோபத்தில் தத்தகாரங்கள் போட்டு தாறுமாறாக திட்டத்தான் தோன்றும்.

இருவர் அமரும் சீட்டுகளில் நூல் பிடித்தார் போல எல்லோரும் ஜன்னலோரம் சென்று ஓரொருவராக அமர்ந்து கொண்டு எழ மாட்டேன்று என்று செய்யும் அடத்தை, அறியாமை என்றோ அப்பாவித்தனம் என்றோ அப்படியெல்லாம் எளிதாக எடுத்துக் கொண்டு விட முடியாது. அந்த இடத்தில் கண்டக்டரானப்பட்டவர் கத்தினால்தான் வேலை நடக்கும்.

முன்னால் டிரைவருக்கு இணையாக ஒரு சீட்; பின்னால் கட்டங் கடைசியாக ஒரு சீட் என்று இரண்டு இருந்தாலும், பெரும்பாலும் பயணிகளுக்கு ஒதுக்கி விட்டு நின்றபடியே வரும் கண்டக்டர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம்.

எப்போதடா தவறு நடக்கும்; கூட்டத்தோடு கூட்டமாக கும்ம வாய்ப்பு கிடைக்கும் என்று கழுகு கண்களோடு கண்டக்டர் மீது பொதுவில் ஒரு வன்மத்தோடு பயணிகள் காத்திருக்கிறார்கள். சில்லரையில்லா காரணத்தால் ஐம்பது பைசா கொடுக்கவில்லை என்றாலோ, இல்லை இந்த பஸ்ஸூக்கு இங்கே ஸ்டாப் கிடையாது என்றாலோ, அல்லது P2P என்பதால் 1 ரூபாய் அதிகமாக வசூலித்தலோ வாயிலிருந்து வரும் வசவுகளை காது கொடுத்து கேட்பவரின் தோல் தடிமனாக இல்லாது போனால் கூனி குறுகி வாழ்க்கை வெறுத்து போக வேண்டியிருக்கும்.

(@#$% மவனே... %$#@ பயலே... உன் பொண்டாட்டி புள்ளைங்க &^#$..., இதெல்லாம் நேற்று ஒரு 1 ரூபாய் பிரச்னையில் கண்டக்டர் ஒருவர் கேட்க நேர்ந்த தூசணங்கள்)

இன்னும் -

உள்ளே நிற்க இடம் இருந்தும் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பம்மாத்து காட்டியபடிதான் வருவேன் என்னும் கல்லூரி இளைஞர்கள்,

போலீஸ்காரர்கள், வக்கீல்கள் போன்ற ஓசி கிராக்கிகள்,

’சார், ரொம்ப ஸ்டிரிக்ட்!’ டிக்கெட் பரிசோதகர்கள்,

நக்ஸல்பாரிகளை விட மோசமான மப்(பு)ஸல்பாரிகள்...,

என்று அனுதினமும் டிரிப் முடித்து கணக்கு முடிப்பதற்குள் கண்டக்டர்கள் சந்திக்கும் பிரச்னைகள் இவ்வளவுதான் என்று இல்லை.

அவர்கள் எல்லாவற்றையும் சமாளிக்கிறார்கள். முடிந்தவரை பொறுமையாக இருக்கிறார்கள். முடியாத பட்சத்தில் இறைஞ்சுகிறார்கள். அதற்கும் மீறி விட்டால் அமைதியாக பஸ்ஸை நிறுத்தி விட்டு இறங்கிக் கொள்கிறார்கள். அதற்கு மேல் அவர்களால் செய்யமுடியக்கூடியது ஒன்றும் இல்லை.

அப்படியென்றால் அநாவசியமாக கத்தி ஏறுக்கு மாறாக பேசுபவர்கள் யாரும் இல்லையா என்றால், இருக்கிறார்கள். ஆனால் நாம் அந்த மாதிரி நபர்களை மட்டுமே குறித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்; ஆனால் அவர்கள் பத்துக்கு இருவர் மட்டுமே. மற்றவர்களை நாம் கவனிக்க தவறுகிறோம்.

மேலும், இதெல்லாம் அடிக்கடி பயணம் செய்பவர்களால் மட்டுமே அவதானிக்க முடியக் கூடிய சில விஷயங்கள். மற்றவர்களுக்கு என்றைக்கோ பார்த்த சம்பவம் மட்டுமே என்றென்றும் பிம்பமாக இருக்கும்.

இது கண்டக்டர்களுக்கு மட்டுமன்று, எல்லா துறையினருக்கும் பொருந்தும்.


ம‌னித‌னாக‌ இருக்கும் வ‌ரை சுக‌மே.... கனவுகளின்றி ஆழ்ந்து தூங்கும் போது ம‌னித‌னாகவே இருக்கிறோம், அதுதான் நிஜ‌முகமும் கூட‌.

தவறு. மனிதனின் நிஜமுகம் அதுவன்று. விழித்திருக்கும் நிலையில் இன்பம், துன்பம், கோபம், குரோதம், விரோதம், இத்யாதி இத்யாதி உணர்ச்சி நிலைகளுக்கு ஆட்பட்ட நிலையில் நிகழும் அவனின் செயல்களே மனிதனின் நிஜ முகம். அது சிலருக்கு சாந்தமாக இருக்கலாம். சிலருக்கு குரூரமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மையான மனித முகம்.

இந்த உணர்ச்சிகள் நீக்கப்பட்ட - ஒரு கோமா நிலையில் - இருக்கும் ஒருவனை முழுமையான மனிதன் என்று மருத்துவமே ஏற்றுக் கொள்வதில்லை எனும்போது, இம்மாதிரி தத்துவ விசாரங்களைப் பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. இது தவறான கருதுகோள்.

- எழுதப்பட்ட இடத்தின் மூலம் தெரியவில்லை. இதனை முன்வைத்து நண்பர்களுடன் நடந்த உரையாடலில் என் கருத்து.

0 comments:

Post a Comment