கீதை

Posted: Thursday, December 30, 2010 | Posted by no-nononsense | Labels:
ஒன்றை தேடப் போய் சில சமயம் பல நாள்களாக தேடி சலித்த வேறு ஒன்று அகப்படும். இன்று அப்படியாக ஒரு பழைய ரசீதை தேடி என்னுடைய அலமாரியில் முத்து குளித்துக்கொண்டிருந்த பொழுது கீதை சம்மந்தப்பட்ட என்னுடைய பழைய குறிப்புகள் சில அகப்பட்டன. தேடியதை விட்டு விட்டு கிடைத்தவற்றை படித்துக்கொண்டிருந்தேன். அந்தக் குறிப்புகளின் காலம் குறைந்தது ஆறு வருடங்கள் இருக்கலாம். கீதையை மிகத் தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்த ஒரு காலகட்டம் அது.

கீதையை பொறுத்தவரை அது மகாபாரதத்தில் உபதேசமாகும் இடம் மட்டுமன்றி கீதையின் உள்ளடக்கமான பல பரிமாணங்களையும் கருத்தில் கொண்டு பரிசீலிக்கும்போது அது நிச்சயமாக ஒரு இடைசெருகலே என்றுச் சொல்ல முடியும். ஆனால் ஒரு அழகிய இதிகாசத்தின் சுவாரசியத்துக்கு வலு சேர்க்கும் ஓர் அங்கம் அது என்னும் கருத்து மிகையானதில்லை. அது ஒரு அழகிய ஆபத்து. அதே நேரம் பாம்பின் விஷம் மருந்தாவது போல உள்ளத்தின் தெளிவுக்கும் அது ஒரு ஔஷதம் என்பதுதான் அதன் சிறப்பு.

கீதையை தன்னுள் தாளப் பொறுத்திக்கொண்டுள்ள மகாபாரதம் போன்ற இதிகாசங்களை பொறுத்தவரை எஸ்.ரா சொல்வது போல அவை இயல்பும் அதீதமும் கலந்தவை. அந்தக் கலப்பில் எது இயல்பு எது அதீதம் என்றெல்லாம் கண்டறிந்து கொள்வது கடினம். அவ்வாறாக கண்டறிந்து கொள்ள இயலாத ஒன்றுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு வடிவம் தந்து பார்க்க நினைப்பதும் ஒரு குறிப்பிட்ட தத்துவார்த்த விளக்க வகைமைக்குள் அதனை அடையாளப்படுத்த நினைப்பதும், தர்க்க ரீதியாக தோல்வியை சந்திக்க கூடிய ஒரு முயற்சியாக இருந்துவருகிறது. ஆனால் அதனைத்தான் வெற்றிகரமாக வேதாந்திகளின் மரபு செய்துவந்துள்ளது. அவர்களின் வெற்றியின் அடித்தளம் மறுபுறமுள்ள மக்களின் அறியாமையில் உள்ளது.

இதனைப் பற்றி விரிவாக எழுதுவது பல நூற்றாண்டு கால வேதாந்த மரபை பற்றிய ஆய்வாக மாறிவிடக்கூடிய ஒன்றாக ஆகிவிடும். பணத்தின் பின்னால் அலைவது ஓய்ந்து வாசிப்பதற்காக மட்டும் அமரும் ஒரு காலம் கைகூடினால் இவற்றை தர்க்கரீதியாக அணுகி தன்னளவில் விளங்கிக்கொள்ள சித்தம் கொண்டிருக்கிறேன். பார்ப்போம்.

0 comments:

Post a Comment