ஈழப் பிரச்சினை காரணமாக தமிழக தமிழன் இந்திய அரசு பற்றி குமைந்து கொண்டிருப்பதாக கூறப்பட்ட கருத்தின்மீது என் உரை:
நண்பர் அழகாக சுருக்கமாக சொல்லி விட்டார். அதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. இது மாதிரி எழுதுபவர்களைப் பார்த்தால் எதன் அடிப்படையில் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று ஆச்சர்யமாக உள்ளது. போர் உக்கிரமாக நடந்து வந்த சூழலில், தினமும் பல்லாயிரம் மக்கள் படுகொலையாகி விட்டதாக செய்திகள் தெரிவித்து வந்த நிலையில் நடந்த தேர்தலிலேயே மக்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை எனும்போது, போரெல்லாம் முடிந்து இலங்கையில் தேர்தல்களும் நடத்தி முடிக்கப்பட்டு, அதிலும், அத்தேர்தலில் இன படுகொலையின் இரு காரண கர்த்தாக்களில் ஒருவருக்கு அங்கேயுள்ள மக்களே வாக்களித்துள்ள சூழலில், இனியும் இங்கே தமிழ்நாட்டில் என்ன பெரிய புரட்சி வெடிக்கப் போகிறது என்று எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.
இந்திய தேசியத்துக்கு எதிரான குரல் தமிழ்நாட்டில் எடுபட வாய்ப்பில்லை. அதற்கான காரணங்கள் தமிழக மக்களின் வாழ்வியல் நிலையில் இதுவரை உருவாகவில்லை. ஈழப் பிரச்சினையில் இந்தியா எடுத்த நிலைப்பாடு இங்கேயுள்ள ஆம் ஆத்மியை எந்த வகையிலும் இந்தியாவுக்கு எதிராக திருப்பாது. நாட்டு நடப்பு குறித்து குறைந்த பட்ச புரிதலாவது இருந்தால் தானே அதெல்லாம் நடக்க.
நெருக்கடியான நேரங்களில் எல்லாம் மௌனம் காத்து கடந்து விட்ட நிலையில் மீண்டும் கடந்த காலத்தை கவனத்தில் கொள்ள சொன்னால் காதில் போட்டுக்கொள்ள யாரிங்கு தயார்? நடந்ததை மறுபரிசீலனை செய்ய தமிழன் பழகியிருந்தால் இங்கே கருணாநிதியும் ஜெயலலிதாவும் மீண்டும் மீண்டும் மாறி மாறி ஆட்சிக் கட்டில் ஏற முடியுமா? மக்களுக்கு இலவச நோய் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. போன தேர்தலில் டிவி கிடைத்தது (இன்னும் எங்கள் ஏரியாவில் யாருக்கும் கிடைக்கவில்லை). இந்த தேர்தலுக்கு செல்போன் கிடைக்குமா என்பதில்தான் மக்களின் கவலையெல்லாம். அப்படி கெடுத்து வைத்து விட்டார்கள்.
இப்படி கட்டுரை எழுதிக்கொண்டிருப்பவர்கள் உண்மையிலேயே தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமானால் இலங்கை பொருட்கள் பகிஷ்கரிப்பை நடத்தலாம். கொழும்பு பெரு முதலாளி கம்பெனிகளின் பிஸ்கட்கள், சாக்லேட்கள் இப்போது சாதாரணமாக தமிழகத்தின் அனைத்து பெரிய மால்களிலும் விற்கப்படுகின்றன. நன்றாக விற்பனையும் ஆகின்றன. அவற்றை வாங்காமல் நிராகரிக்கச் சொல்லி மக்களைக் கேட்டுக்கொள்ளலாம். அக்கடைகளின் முன் போராட்டம் நடத்தலாம். அதை விடுத்து மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிட முயற்சிப்பது நேர விரயத்தைத் தவிர வேறு ஒரு பயனையும் தராது.
0 comments:
Post a Comment