நிஷ்காமிய கர்மம் - ஒரு தர்க்கம்

Posted: Friday, November 26, 2010 | Posted by no-nononsense | Labels: ,
வாலி என்றதும் அவர் இந்தவார விகடனில் எழுதியுள்ள தொடர் ஞாபகம் வருகிறது. கீதை வலியுறுத்தும், கருப்பு சட்டைக்காரர்கள் கண்டனம் செய்யும் நிஷ்காமிய கர்மத்தைப்பற்றி உயர்வுநவிற்சியாக எழுதி மகிழ்ந்திருக்கிறார். துட்டுக்கு பாட்டு என்பதை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு செய்யும் அவரளவில் அதில் பிரச்னையில்லை. அதை குறிப்பிட்ட சாதியினரின் மீது ஏவி விடும்போதுதான் பிரச்னை உண்டாகிறது. உண்டாகி பல பழம் பழக்கங்கள் துண்டானதும் இப்படித்தான்.

ஒரு சில வருடங்கள் முன்பு ரஜினி ரசிகர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்த்தினார். அந்த மேடையில் வைக்கப்பட்டிருந்த தட்டி பலரின் கவனத்தை ஈர்த்தது. காரணம் அதிலிருந்த, ‘கடமையை செய்; பலனை எதிர்பார்’ என்னும் வாசகம். கடமையை செய்; பலனை எதிர்பார்க்காதே என்னும் கீதை வரிகளுக்கு மாறான பொருளில் அமைந்த அது பின்னர் இந்துத்துவ கும்பல்களிடம் விமர்சனத்தையும் சம்பாதித்தது. இங்கேயும் இரண்டு தத்துவக்கோளாறுகளே காரணம். அந்த நிஷ்காமிய கர்மம், சுதர்மம் பற்றிய என் சில கருத்துகளை ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன்.
அதை விரித்து இன்னும் பேச தோன்றுகிறது.

ஆனால் இதுபோன்ற தத்துவவிசார தர்க்கமெல்லாம் தவறியும் காலை வைத்துவிட்டால் உள்ளிழுத்துக் கொள்ளும் பெரும் சுழல். உள்ளே உள்ளதெல்லாம் உண்மையென நம்பச் சொல்லும் வெறும் நிழல். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளாக கொள்ள மட்டுமே நேரமுள்ள ஒரு நேரத்தில் உள்ளபடியே இயலாது. தொடரும் மனநிலைக்கு அது என்றுமே கூட இயலாமல் போகலாம். Who cares? :-) அவரவர் கர்மம்; அவரவர் தர்மம்.

ததாஸ்து!

-0-

எதிர்வினை:

நித்திய + காமிய + கர்ம + அனுஷ்டானம் = ===> " நிஷ்காமிய கர்மம் "
எப்பபொழுதும் + செய்யக்கூடிய + தொழிலில் + கடைபிடிப்பது

அவரவர் செய்யகூடிய தொழிலில்
நீதி , நேர்மையுடன் தொழிலை தர்மம் பிசகாமல் செய்யவேண்டும்
அதுவே நிஷ்காமிய கர்மம் ஆகும்
ஒருவர் அவருடைய செயலில் , முழு மனதோடு , ஈடுபாட்டுடன் , அர்ப்பணிப்பு , மற்றும் நீதி, நேர்மை , தர்மத்துடன் செய்யவேண்டும் என்பதே இதன் கருத்து

என்னை பெறுத்தவரை ,
இங்கு ஜாதி , மதம் இவற்ற்றை பற்றி கவலை கொள்ள தேவை இல்லை ,

சொல்லப்படும் கருத்தே முக்கியம்

வாலி எந்த மதத்தை சொல்கிறார், உயர்வாக குறிபிடுகிறார் , ஏவி விடுகிறார் என்பதை பற்றி
நாம் எடுத்துக்கொள்ள வேண்டாம்

இருத்த போதிலும் வாலி, ரகுமானை என்னய்யா பாடல் வரிகளில் கூட
(தெய்வம் vs தேவதை = நியூ படத்தில் வரும் பட்டு )
என்ன என்பதனையும் , கோபித்து கொண்டதை பற்றியும் குறிபிட்டுள்ளார்

கவிஞர் வாலி,
பல நபர்களை "நிஷ்காமிய கர்மம்" இக்கு எடுத்துகாட்டாக குறிபிட்டாலும்
அதே துறையில் இளையராஜா , ஏசுதாஸ் இவர்களை குறிபிடாமல் விட்டது
என்னக்கு பெரிய ஏமாற்றம்மே

பதில்: அக்கால அனுஷ்டான வைதீகம் முதல் இக்கால அப்டேட்டட் கார்ப்போரேட் வைதீகம் வரை இவ்வாறுதான் நிஷ்காமிய கர்மத்திற்கு பதம் பிரித்து அருஞ்சொற்பொருள் கூறி அதை அப்படியே சிரமேற்கொண்டு வாழ்வில் கடைபிடிக்க வலியுறுத்துகின்றன. அதன் லிடரல் மீனிங் என்னவோ பலரும் மேலோட்டமாக கொண்டிருக்கும் அதே ‘பலனை பற்றி கவலைப்படாமல் கடமையை செய்’ புரிதல்தான். கேட்கவும் கடைபிடிக்கவும் நன்றாக இருக்கும் இது, இக்காலத்தில் சௌகரியமாக, சாய்ந்து அமர்ந்து கொண்டு, சாயா சிப்பியபடி கணினியில் கண் பதித்து வேலை செய்பவர்களுக்காக உபதேசிக்கப்பட்டது அல்ல. சொல்லப் போனால், இவ்வாறான மேலோட்டமான நேரடி அர்த்தங்கள் தரும் புரிதல்களை விட்டு விட்டு பார்த்தால் இந்த நூற்றாண்டுக்கும் இந்த வாசகங்களுக்குமே சம்மந்தமில்லை. இதற்கான வரலாறு வேத காலத்திற்கும் பிந்தைய உபநிடதங்களுக்கு சுலோகம் இயற்றப்பட்ட காலத்தில் இருக்கிறது.

அக்காலத்தில் ஏன் அதற்கான அவசியம் ஏற்பட்டது என்பதற்கு பதில் வைதீகம் வேகமாக பரவ ஆரம்பித்ததிலும், பழங்குடியினரின் மத மாற்றத்திலும், அதற்கு அவசியமான எளிமையான புரிதல்களுக்கு இணக்கமான ஓர் உபதேசம் தேவைப்பட்ட காரணத்திலும் இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப உருவானதே கீதை. கீதையின் வரலாறு பகவானின் அருள்வாக்கில் இருக்கிறது என்று முழுமையான நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு வரலாற்று நோக்கில் முன்வைக்கப்படும் ஆய்வு முடிவுகள் நம்ப கடினமாக இருக்கும். ஆனால் அது மட்டுமே தர்க்க ரீதியான படிநிலைகளுக்கு ஆதாரமான ஒரே அம்சம். மற்றவையெல்லாம் வெறும் நம்பிக்கை என்னும் ஒற்றை பரிமாண புலனறிவை மட்டுமே ஆதாரமாக கொண்ட கருத்தாக்கங்கள்.

நிஷ்காமிய கர்மம் மற்றும் உனக்கு விதிக்கப்பட்ட வேலையை நீயே செய்ய கடவாய் என்னும் வர்ணாசிரம சுவதர்மம் ஆகிய இரண்டும் வைதீகம் தன்னுடைய மேலாட்சியை நிலைப்படுத்திக் கொள்ள கையாண்ட சூத்திரங்கள். இது யாருக்கு விதிக்கப்பட்டது; யாருக்கு பலனளித்தது என்பதெல்லாம் அக்காலத்தில் நீ சூத்திரனாகவோ, பஞ்சமனாகவோ பிறந்திருந்தால் அனுபவத்தில் கண்டிருப்பாய். இன்று அதை பிரத்திடய்சமாக உணர்ந்து கருத்துரைப்பது தன் கருத்தியல் நிலையை வெறும் நம்பிக்கையின் மீது மட்டும் கட்டமைத்துக் கொண்டிருந்தால் சாத்தியமில்லை.

இந்த பரஸ்பர விளக்கங்கள் விவாதமாக வடிவெடுத்தால் அது மேலதிகமாக கீதையையே மையம் கொள்ளும். காரணம் இந்த உபதேசங்களின் மூலம் கீதை. ஆனால், 1) கீதையை நாம் எந்தளவு புரிந்து கொண்டிருக்கிறோம், 2) கீதை இந்திய வாழ்வியலில் கலந்தது எப்போதிருந்து, 3) பரவலாக கீதை என்னும் ஒரு நூல் அறியப்பட்டது எந்த நூற்றாண்டு முதல் 4) கீதைக்கு முதலில் வியாக்கியானம் எழுதப்பட்டது யாரால் 5) அவர் சார்ந்திருந்த சமயம் அல்லது அப்போது நிலவிய சமய சூழல் என்ன .. என்பன போன்று கிளைத்துச் செல்லும் கேள்விகளுக்கு விடை காணாமல், இன்று சலூன் கடைகளிலும், செல்போன் மெஸேஜ்களிலும் படிக்க கிடைக்கும் “எதை கொண்டு வந்தாய் அதை கொண்டு போக” என்னும் — முன்பு சொன்ன அந்த மேலோட்டமான லிடரல் மீனிங் — கீதாசாரங்களில் மட்டும் தேடிக் கொண்டிருந்தால் புரிந்து கொள்ள முடியாது.

ஆக, நாம் நிஷ்காமிய கர்மத்திற்கும் சுவதர்மத்திற்கும் மேலோட்டமான அர்த்தத்தை மட்டும் வைத்து அதன் உட்பொருளை, அது வரலாற்றில் ஏற்படுத்திய மேலாதிக்கத்தையும் வடுக்களையும் உணர்ந்து கொள்ள முடியாது என்பதே என் வாதம். இதில் வாலிக்கும் அவர் எழுதிய நாலு வரி துணுக்குகளுக்கும் சம்மந்தமில்லை.

கீதையின் இவ்விரண்டு அதிகம் விதந்தோதப்படும், அதேசமயம் விமர்சிக்கப்படும் சாரங்களையும் கடுமையாக விமர்சித்தவர், விவேகானந்தர்! விசாரங்களுக்கு பொதுவில் வேதாந்திகளால் வழங்கப்படும் தேன் தடவிய விளக்கங்களை விலக்கி உள்சென்று வரலாற்றின் ஏடுகளில் படிந்திருக்கும் உள்ளார்ந்த அரசியல் குறித்தும் ஓரளவு சிந்திந்த ஆன்மிகவாதி அவர்.

பல நபர்களை "நிஷ்காமிய கர்மம்" இக்கு எடுத்துகாட்டாக குறிபிட்டாலும்அதே துறையில் இளையராஜா , ஏசுதாஸ் இவர்களை குறிபிடாமல் விட்டது என்னக்கு பெரிய ஏமாற்றம்மே


இளையராஜா நிஷ்காமிய கர்மத்தின் வரையறைக்குள் வரமாட்டார். ஒரு வாதத்திற்காக அது உயர்வான தர்மம் என்று வைத்துக் கொண்டால், அந்த தகுதி நிலையில் இளையராஜா இல்லை. வாலி போல செய்யும் தொழிலில் தன் விருப்பு வெறுப்புகளை வெளியே நிறுத்தி ஈடுபடக் கூடியவர் அல்ல அவர்.

உதாரணத்திற்கு விகடனில் வாலி சொல்லியுள்ளதை போல: தான் ஒரு ஆத்திகராக இருப்பினும் சினிமாவுக்காக பாடல் எழுத அமரும்போது அங்கே தனக்கு பணிக்கப்பட்ட சூழ்நிலைக்கு தாள்பணிந்து ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ என்று பாடல் எழுதினார். அந்த உயர்நிலை கர்மம் இளையராஜாவிடம் இல்லை என்பது அவரை பெரியார் படத்திற்கு ஒப்பந்த செய்ய அணுகிய போது வெளிப்பட்டது. கடவுள் இல்லை என்று சொன்னவரின் படத்திற்கு நான் இசையமைக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார்.

ஜேசுதாஸும் சற்று பிடிவாதக்காரர்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் அனுபவஸ்தரான வாலி அறிந்தே இருவரையும் சொல்லாமல் விட்டிருக்கலாம் என்றுதான் நான் நினைக்கிறேன்.

0 comments:

Post a Comment