மணிரத்னம் - முன்முடிவான சில மதிப்பீடுகள்

Posted: Sunday, June 20, 2010 | Posted by no-nononsense | Labels:
மணிரத்னம் பற்றிய ஒரு குழு உரையாடலின் மீதான என் கருத்துகள்:

மணிரத்னம் படங்களை ரோஜாவுக்கு முன், ரோஜாவுக்கு பின் என்று பிரித்து பேச வேண்டும். இன்னும் எத்தனை நாளுக்கு நாயகன், மௌனராகம், தளபதி என்று சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறீர்கள்? அதனால்தான் அன்று கேட்டேன், 2000-க்கு பிறகு வந்த மணிரத்னம் படங்களில் சிறந்த படமாக ஒன்றை கூறமுடியுமா என்று. அலைபாயுதே படம் ஒன்று மட்டும் தேறுகிறது. ஆனால் அதன் வெற்றிக்கு காரணம் 'அன்னகிளி’ ஆர்.செல்வராஜின் கதை வசனமும் ரஹ்மானின் இசையும்தான்.

ரோஜாவுக்கு பிறகு மணிரத்னத்தின் கண்ணெல்லாம் அகில இந்திய சினிமா மார்க்கெட் மீதுதான். ஹிந்திக்கும் தமிழுக்கும் பொருந்துகிறார் போன்ற கலவையான ஒரு பேக்கேஜை எடுத்து கொடுத்து வருகிறார். அது தாமரை இலை தண்ணீர் போன்று ரசிகனின் மனதில் ஒட்டியும் ஒட்டாமல் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.

தமிழ் சினிமா கொண்டாடிய மணிரத்னம், பாம்பே படத்திற்கு பிறகு ஹிந்தி ரத்னம் ஆகி, முழுவதுமாக விலகிச் சென்று விட்டார். இருந்தும் மேட்டுக்குடி அவரை இன்னும் கொண்டாடி வருவது அவர் எடுக்கும் ஒயிட் காலர் படங்களுக்காக. அவர் அழுக்கையோ வியர்வையையோ தரையில் கால் பாவி நடக்கும் மனிதர்களின் வாழ்க்கைமுறையையோ இதுவரை படங்களில் காட்டியதில்லை. அப்படி காட்டப்படும் காட்சிகளும் நுனிப்புல் மேய்ந்ததாக, அதிலும் ஒரு ஒயிட் காலர் நாசூக்குத்தனம் கொண்டதாகவே இருக்கும்.

அவர் தன் படங்களில் சுஜாதா, செல்வராஜ், ரஹ்மான், வைரமுத்து, சந்தோஷ் சிவன், ஸ்ரீராம் என்று தத்தம் துறைகளில் ஜீனியஸாக இருக்கும் நபர்களை பயன்படுத்தி காட்சிகளை சிறப்பித்துக் கொள்கிறார். கதைக்கு இருக்கவே இருக்கிறது இந்திய புராணங்களும் இதிகாசங்களும் அதுவும் போக திருபாய் அம்பானி, எம்ஜிஆர் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளும்.

மணிரத்னத்தின் படைப்பு திறமை நீர்த்து போய், அவர் ஒரு தேர்ந்த வியாபாரி ஆகிவிட்டார் என்பது எங்களின் குற்றசாட்டு அல்ல; ஆதங்கம்! அதை புரிந்துகொள்ளாமல் இன்னும் 15 (அ) 20 வருடங்களுக்கு முன்பு வந்த அவரின் படங்களின் காட்சிகளை எடுத்து போட்டுக்கொண்டு அவருக்கு கட்சி கட்டிக்கொண்டு இருப்பது எதார்த்தத்தை விலக்கிய ஒரு முன்வரிசை ரசிக மனோபாவத்தையே காட்டுகிறது. அதை விடுத்து, படைப்பை முன்வைத்து அதை விதந்தோதுவதும் விமர்சிப்பதும்தான் அப்படைப்புக்கும் அவரவர் ரசிப்புத் தன்மைக்கும் செய்துகொள்ளும் நியாயமாக இருக்கும்.

இன்று மணிரத்னம் என்ன மாதிரி படைப்புத் திறன்களுடன் பரிமளிக்கிறார் என்பதுதான் பிரச்னை. எனக்கு பாலசந்தரின் 45 வருடங்களுக்கு முன்வந்த நாணல் படம் முதற்கொண்டு 90-கள் வரையான அவரின் பல படங்கள் பிடிக்கும் என்பதற்காக அவர் பிற்காலத்தில் எடுத்த, கல்கி, பார்த்தாலே பரவசம், பொய் போன்ற த்ராபைகளை எல்லாம் சிரமேற்கொண்டு கொண்டாட முடியாது. அந்த காலகட்டங்களில் அவர்கள் யார் என்பதை பொறுத்தே அவரவருக்கான தகுதி நிர்ணயம் ஆகிறது. இதனை கண்களை அகல திறந்து மணிரத்னத்தின் அத்யந்த ரசிகர்களும் எடை போட்டு பார்க்க முயன்றால், அவர்களுக்கும்கூட புரியக்கூடும்.

மணிரத்னம், பக்கம் பக்கமான வசனங்களுடன் நாடகத்தனமாக இருந்த தமிழ் சினிமாவை, குறைவான வசனங்களுடன் கதையை காட்சிப்பூர்வமாக விளக்கச் செய்து மற்றவர்களுக்கு ஒரு முன்னோடியாக தன்னை நிறுவிக்கொண்டவர். அதற்கு இக்காட்சியே நல்ல ஒரு உதாரணம்.

அப்படிப்பட்டவரின் படைப்பாளுமை பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றையும் இதிகாச கதைகளையும் சமகால நிகழ்வுகளையும் மலினப்படுத்தி படம் எடுத்து மார்க்கெட் செய்யும் உத்தியாக எதிர்மறையாக பரிணாமம் கண்டிருப்பதை எப்படி விமர்சிக்காமல் இருக்கமுடியும்? அவர் படங்களில் தொட்டுக்காட்டப்படும் சமூக அவலங்கள் எந்த வகையிலும் அதற்கான தீர்வை நோக்கிய முன் நகரலாக இருந்ததில்லை. காட்சியில் கொஞ்சம் காரத்தைக்கூட்ட பயன்படுத்தப்பட்டவையாகவே இருந்து வந்துள்ளன.

இங்கே பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது போல அங்கொன்றும் இங்கொன்றுமான முத்திரை பதிக்கும் காட்சிகளால்தான் மணிரத்னம் இத்தனை பெயரையும் ரசிகர்களையும் பெற்றார். பெற்றதை தக்கவைத்துக் கொள்ளும்படியான படைப்புகள் தொடர்ந்து அவரிடம் இருந்து வெளியாகவில்லை. ராவணன் விமர்சனங்களை காணும்போது இதுவும் அப்படித்தான் ஆகிவிட்டதாக தோன்றுகிறது.

இவை சுமார் பத்தாண்டு கால மணிரத்னம் படங்களைப்பற்றிய என்னுடைய மதிப்பீடு மட்டுமே. இக்காலகட்ட படங்களில் தனித்தனியாக சில காட்சிகள் சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறதே தவிர, ஒட்டு மொத்தமாக ஒரு படைப்பாளியாக அவர் தோல்வியடைகிறார் என்பதே என் கருத்து.

ராவணன் படம் இன்னும் நான் பார்க்கவில்லை. பார்க்கக்கூடாது என்று எந்த சங்கல்பமும் இல்லை. பார்த்துவிட்டு என் நேர்மையான கருத்துகளை பகிர்ந்துகொள்கிறேன்.

0 comments:

Post a Comment