ஒத்த இசையமைவு பாடல்கள்

Posted: Friday, July 2, 2010 | Posted by no-nononsense | Labels:
பாடல்களில் சில ஒரே மாதிரி ஒலிப்பதால் மட்டுமே அவைகளை காப்பியடிக்கப்பட்டவை என்று கூறிவிட முடியாது. தென்னிந்திய சினிமா இசையமைப்பு பெரும்பாலும் கர்நாடக ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை. அதனால் ஒரே ராகத்தை பயன்படுத்தி போடப்பட்ட பாடல்களெல்லாம் ஒரே மாதிரிதான் ஒலிக்கும்.

உதாரணமாக,

  1. ஆச அதிகம் வச்சி மனச
  2. தென்றல் வந்து தீண்டும்போது
  3. கல்யாண மாலை கொண்டாடும்
  4. மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்
இவையெல்லாமே சிந்துபைரவி ராகத்தைக் கொண்டு மெட்டமைக்கப்பட்டவை. ஆரோகணம், அவுரோகணத்திற்கேற்ப சுதிகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாமே தவிர, அடிப்படையில் ஒரே ஓசை நயங்களைக் கொண்டவை. மேலும், சிந்துபைரவியை எடுத்துக்கொண்டு, அதனுடன் வேறு சில ராகங்களை மிக்ஸ் பண்ணியும் போடப்பட்டவையாக இருக்கும். அதற்காக இவையெல்லாம் ஒன்றையொன்று காப்பியடித்து போட்டவை என்று சொல்லமுடியாது. 

மேலும் ஒரு உதாரணம்,

ராகம்: சுத்த தன்யாசி

  1. மாலையில் யாரோ மனதோடு பேச
  2. நான் காணும் உலகங்கள் யார் காணக்கூடும்
  3. பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ஜஜம்ஜம்ஜம்
இப்படி கூறிக்கொண்டே போகலாம்.

இளையராஜாவின் பெரும்பாலான பாடல்கள் இப்படி கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டவை தாம். அவற்றில் ராஜா புரிந்துள்ள ஜாலங்களைப்பற்றி எழுத ஆரம்பித்தால் எழுதிக்கொண்டே போகலாம். 

ஆனால் சில இளவட்ட, தேங்காமூடி இசையமைபபாளர்கள் மேற்கத்திய பாடல்களை அப்படியே உருவி அதன் சட்டையை மட்டும் மாற்றி இங்கே தன் பெயரில் போட்டுக்கொண்டு விடுகிறார்கள். அதனைத்தான் இசைத் திருட்டு என்பது. 

இதேபோல் இளையராஜாவின் பலப் பாடல்கள் ஹிந்தியில் காப்பியடிக்கப்பட்டன என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு வடக்கத்திய இசைப்பற்றி ஞானம் குறைவு. எனக்கு அதில் ஆர்வமும் இல்லை. காரணம், சாஹித்யம்(lyric) புரியாத எந்த இசையையும் பெரும்பாலும் நான் ரசிப்பதில்லை. சொற்கள் புரியாத ஆலாபனைகளில் உயிரோட்டமில்லை என்பது என் கருத்து.

ஹிந்துஸ்தானி மட்டும் அதில் விதிவிலக்கு. அங்கே மொத்தமே இரண்டு மூன்று வரிகள் தான் சாஹித்யம். மற்றதெல்லாம் சஞ்சாரங்கள் தாம்.

இசையைப்பற்றி நான் கற்றுக்கொண்டிருந்தது இடையில் தடைப்பட்டு விட்டது. எப்படியாவது அதற்கும் ஒரு நேரத்தை கண்டுபிடித்து மீண்டும் தொடர வேண்டும். சில காலமாக பிபி ஏறிக்கொண்டிருப்பதாக உணர்கிறேன். அதை இசை மட்டுமே சமனில் வைத்திருக்க முடியும்.

இன்னொரு விஷயம், நான் இங்கே இசையைப்பற்றி குறிப்பிடுவதெல்லாம், அதனை எப்படி ரசனைப்பூர்வமாக கேட்டு அனுபவிப்பது என்பது பற்றி மட்டுமே. நான் பாடவெல்லாம் முயற்சி செய்வதில்லை என்பதே இத்தமிழ்கூறும் நல்லுலகிற்கு நான் உரைக்கும் நற்செய்தி!

0 comments:

Post a Comment