கேள்வி: அந்த பழைய பாடல்கள் எல்லாம் இப்போது தான் ( ஒரு குறுப்பிட வயதுக்கு பின்) உன்னால் ரசிக்க முடிகிறது என்பதை ஒப்புகொள்வாயா?இல்லை. சிறு வயது முதலே விரும்பி கேட்கிறேன். அதற்கு நான் என் அம்மாவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அவருடைய இசை ரசனைதான் எனக்கும் தொற்றிக் கொண்டது. எங்கள் வீட்டில் எப்போதும் ஏதாவது பாடல், கேஸட்டுகளிலோ ரேடியோவிலோ ஒலித்தபடியே இருக்கும். எல்லா காலைகளும் ஆல் இண்டிய ரேடியோ திருச்சியின் வர்த்தக ஒலிபரப்புடன் தான் விடியும். அதனால் இயல்பாகவே நல்ல பாடல்கள் என்னால் உள்வாங்கப்பட்டுக் கொண்டே இருந்திருக்கின்றன.
பின்னர் பதின்மங்களில் எனக்கென்று ஒரு ரசனை உருவானபோது சமகால இளையராஜா, ரஹ்மான் இசையால் வசீகரிக்கப்பட்ட அதேவேளை, பழைய பாடல்களையும் தேடி தேடி கேட்டிருக்கிறேன். தேடி என்று இங்கே நான் சொல்லக் காரணம் நாமக்கல்லில் கிடைக்காத சில பாடல்களை பதிவு செய்துகொள்வதற்காக சேலம் லீ பஜார், பழைய பஸ் ஸ்டாண்ட் எல்லாம் அலைந்து திரிந்திருக்கிறேன். அவற்றில் ஒன்று ஜெயகாந்தனின் ‘பாதை தெரியுது பார்’ படத்தில் வரும் ‘தென்னங்கீற்று ஊஞ்சலிலே’ என்னும் பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் இழையும் பாடல். ஓர் அற்புதமான மெலடி.
நாமக்கல்லில் பழைய பாடல்களின் இசைத்தட்டுக்களை(ரெகார்டு) வைத்திருந்தவர்கள் வளையப்பட்டியை சேர்ந்த பழனி என்பவரும், மேட்டுத்தெரு அமுதா ரெகார்டிங் சென்டரின் ஓனராகிய பெரியவர் ஒருவரும்தான். அவர்களை நான் படுத்திய பாடு அரும்பாடு. காரணம் ரெகார்டை எடுத்து ஓடவிடும் பிளேயர் அடிக்கடி மக்கர் செய்யும். அதை சரிசெய்து அதில் ஓடவிட்டு, அதனுடன் இணைந்திருக்கும் அடாப்டர் மூலம் கேஸட் ரெகார்டரில் பதிவு செய்ய வேண்டும். சிரமமான இந்த வேலையை செய்து கொண்டிருப்பதற்குள் நாலு கேஸட்டுகளை பதிவு செய்து கொடுத்து விடலாம். இருந்தாலும் தொந்தரவு தாங்காமல் செய்வார்கள்.
அப்படியெல்லாம் திரவியமாகத் தேடிக் கேட்ட பாடல்களில் 1940-களில் திருச்சி லோகநாதன் தொடக்கம், சுப்பையா நாயுடு, ஏ.எம்.ராஜா, பின்னர் விஸ்வநாதன் காலம் முதல் 70-களின் வி.குமாரின்(எஸ்.பி.பி.க்கு பல நல்ல மெலடிகள் கொடுத்த அதிகம் வெளியே தெரியவராத இசையமைப்பாளர்) மெல்லிசை வரை அடங்கும். எல்லாமே கேஸட்டுகளில் பதிவானவை. பதிவு செய்யப்பட்ட காலகட்டங்களும் 1995 - 2000 வரை இருக்கும்.
அப்போது என் வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கு பல வயர்களும் பல வடிவங்களில் ஸ்பீக்கர்களும் இணைக்கப்பட்ட என்னுடைய மியூஸிக் டேபிள் ஒரு கண் நிறைந்த காட்சியாக இருக்கும்.
இப்படியெல்லாம் அலைந்து திரிந்து பதிவு செய்து கேட்ட நூற்றுக் கணக்கான பாடல் கேஸட்டுகளையெல்லாம் இரு வருடங்கள் முன்பு எடுத்து எறியும்படி ஆனது. 2003-க்கு பிறகு வந்த MP3-களின் காலத்துக்கு பிறகு கேஸட்டுகளையும், கேஸட் பிளேயர்களையும் பாரமரித்து பாதுகாக்க முடியவில்லை. அதுவும் 2004-ல் கம்ப்யூட்டர் வாங்கிவிட்ட பிறகு கேஸட் பிளேயர் இடத்திற்கு இடைஞ்சலாகிப் போனது. இயல்பாகவே கேஸட்டுகளும் ஒரு இருட்டு மூலையில் போடப்பட்டு, கரையான் ஏறி கெட்டுப் போயின. ஒருநாள் மனம் வலிக்க எடுத்தெறிந்தேன்.
கேஸட்டுகளின் கதை இப்படி என்றால், சிறு வயது முதலே நான் ரேடியோக்களின் ரசிகன். அதிகாலை 5.30-க்கு தென் கிழக்காசிய நேயர்களுக்காக ஒலிபரப்பாகும் ‘திரைகடலாடி வரும் தமிழ்நாதம்’ என்னும் ஆல் இண்டிய ரேடியோ ஒலிபரப்பு முதல், பின்னர் 6.15-க்கு பிலிப்பைன்ஸில் இருந்து ஒலிபரப்பாகும் ரேடியோ வேரிதாஸ் ஏஸியா, ரேடியோ பீஜிங், முக்கியமாக சிங்கப்பூரின் ஒலி 96.8 - எல்லாவற்றின் வாசக அமைப்புகளிலும் உறுப்பினனாக பதிவு செய்திருந்தேன். கடிதங்கள் தவறாமல் எழுதுவேன். அப்படியாக ரேடியோ வேரிதாஸில் பணியாற்றிய பாதிரியார் ஜெகத் கஸ்பருடன்(இன்று தமிழ் முழக்க மேடைகளில் பிரபலமாக இருக்கும் கனிமொழியின் நண்பர்) கடிதத் தொடர்பில் இருதேன். (இரவில் 9.15-க்கு தவறாமல் பிபிசியின் தமிழோசை கேட்கும் வழக்கமும் இருந்தது. ஆனால் அதில் பாடல்கள் இடம்பெறாது).
இதுபோக இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்தின் ஒலிபரப்புகள்(சிலோன் தமிழை கற்றது அதன்மூலம்தான்), சக்தி எஃப்.எம் என்று இன்னும் சில. என் மாமா துபாயிலிருந்து எனக்காக வாங்கி வந்து தந்திருந்த ஜப்பான் ரேடியோ ஒன்றுதான் இவை அனைத்திற்கும் எனக்கு துணை. கையில் தூக்கி வைத்துக்கொண்டு காதை ஸ்பீக்கரில் வைத்து நாபை திருகியபடியே இருப்பேன். மேலதிகமாக என்னுடைய சஞ்சாரங்கள் அனைத்தும் சிற்றலை வரிசைகளில்தான் இருக்கும். அங்கே நான் விரும்பிக் கேட்ட சில ஆங்கில ஒலிபரப்புகளும் இருந்தன. எல்லாம் serendipitous ஆக கண்டுபிடித்தவை. இன்னும் நிறைய இருக்கின்றன. எல்லாவற்றையும் எழுதினால் போரடிக்கும். ஏற்கெனவே சிறியதாக எழுத ஆரம்பித்து நீண்டுவிட்டது.
0 comments:
Post a Comment