தேகம்

Posted: Sunday, December 26, 2010 | Posted by no-nononsense |
இரண்டு நூல்களை தற்சமயம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒன்று முன்பே சொன்னது போல பல்லவி ஐயரின் சீனா-விலகும் திரை. அதை ஒரே நாளில் படித்து முடித்துவிட வேண்டும் என்னும் என் முயற்சி ஜெயமாகவில்லை. என் நேரம் என்னுடையதாக மட்டும் இல்லாமல் இருப்பதுதான் காரணம்.

மற்றொன்று என்னுடைய சென்னை நண்பன் எனக்கு படிக்க கொடுத்திருக்கும் ‘தேகம்’.


இந்த தேகம் நாவல் தான் சாருநிவேதிதா அண்மையில் எழுதி வெளியிட்டு சர்ச்சைக்குள்ளானது. சர்ச்சை நாவலை சுற்றி அல்ல, அந்த வெளியீட்டு விழாவைப் பற்றி என்பதுதான் வேடிக்கை. வேடிக்கை சாருவுக்கு வாடிக்கை. அது ஒருபுறம் இருக்க, எனக்கு இந்த நாவலை கொண்டு வந்து கொடுத்திருக்கும் சென்னை நண்பன் ஒரு அத்யந்த சாரு ரசிகன். ரசிகன் என்று சொல்ல காரணம் எழுத்தாளர்களுக்கு பொதுவாக வாசகர்கள்தான் இருப்பார்கள். சாரு நிவேதிதாவுக்கு ரசிகர்களும் உண்டு. குறிப்பாக அனைவரும் இளைஞர்கள். எவ்வாறு அப்படி என்பதற்கு விளக்கங்கள் அநாவசியம். அவருடைய எழுத்துக்களை படித்தாலே விளங்கும்.

இவ்வாறாக சாருவின் நூலை கொண்டு வந்து கொடுத்து அது குறித்து என் கருத்தை எதிர்பார்ப்பதில் அவனுக்கு ஒரு ஆர்வம். எனக்கு உண்மையில் சாருவின் நூல்கள் மற்றும் அவருடைய வசீகர எழுத்து நடை குறித்தெல்லாம் எப்போதும் தாழ்வான அபிப்ராயம் கிடையாது. என்னை போன்ற பலருடைய விமர்சனங்களும் அவருடைய குழாயடி அரசியல் மீதுதான். ஒரு கவன ஈர்ப்புக்காக தடாலடியாக யாரையாவது வசைமாரி பொழிவது அவருடைய வழக்கம். எங்கே அடிதடி என்றாலும் அங்கே சென்று வேடிக்கை பார்க்க ஆர்வம் கொண்ட ஒரு கூட்டம் இருக்கும். அப்படி ஒரு கூட்டம்தான் இண்டர்நெட்டில் அவருடைய இணையதளத்தை மொய்த்துக்கொண்டு இருக்கிறது. அவருடைய இணைய எழுத்து மட்டுமே அவருடைய எழுத்துக்கான மதிப்பீடு அல்ல. சரி எழுத்துக்கு வருவோம்.

எழுத்துக்களில் பலவகை உண்டு. காமம் விரவிய erotica-வும் அதில் ஒன்றுதான். மேலும் பலரும் தொடத் தயங்கும் வாழ்க்கையின் பகுதிகளை, நிகழ்வுகளை எழுத என்று யார்தான் முன்வருவது? அந்த வேலையை செய்பவைதான் சாருவின் எழுத்துக்கள். அதில் ஒன்றும் பாதகமில்லை. போலியான மதிப்பீடுகளை வாழ்க்கையின் வழிகாட்டிகளாக கொண்டு வாழ்ந்து வரும் சமுதாயத்தில் இந்த மாதிரி எழுத்துக்கள் ஹராம் என்று ஒதுக்கப்படுவது இயல்பு. அதை இழப்பவர்களுக்கு அதன் அருமை தெரிய இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகலாம். அல்லது ஆச்சாரம் மேலும் வளர்ந்து தெரியாமலே போகலாம்.

ஆனால் இலக்கிய வாசிப்பின் வழி நீ என்ன மாதிரி அனுபவங்களை தரிசிக்க எண்ணுகிறாய் என்பதுதான் ஒரு வாசகனாக நீ தீர்மானித்துக்கொள்ள வேண்டிய விசயம். எனக்கான தீர்மானங்களில் ஹராம் எதுவும் கிடையாது என்பதால் எல்லா எழுத்துக்களும் எனக்கு ஏற்புடையவையே. சாருவை பொறுத்தவரை இணையத்தில் எழுதப்படும் வசை கட்டுரைகளை மட்டும் படிக்காமல் அவருடைய புனைவு எழுத்துக்களையும் வாசித்தால் தான் நான் கூறுவதை உணர முடியும்.

தேகம் நாவலை ஓரிரவுக்குள் முடித்து விட வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டு அதன்படி கிட்டத்தட்ட முடிவை நெருங்கி விட்டேன். மோசமில்லை. வதைகளை பதிவு செய்யும் எழுத்து. இதன் ஆரம்பம் அத்யாயம் எனக்கு apocalypto -வின் ஆரம்பக் காட்சிகளை நினைவு படுத்தியது. ஆனாலும் இது அசல் லோக்கல் வெர்சன். முழுவதும் முடித்ததும் சின்னதாகவாச்சும் ஒரு மதிப்புரை எழுத உத்தேசம். இன்ஸா அல்லாஹ்!

0 comments:

Post a Comment