வாய் நாற்றம், காமக் கழிவு போன்ற வார்த்தைகள் வெகுசனவெளியில் பயன்படுத்தத் தக்கன அல்ல. இதையே கமல் ஒரு நூலாக வெளியிட்டு அதில் தன் கருத்துகளை கவிதைகளாக்கி இருந்தால், அங்கே வார்த்தைகளைப்பற்றிய வாதங்களுக்கு இடமில்லாமல் கருத்துக்களை மட்டும் முன்வைத்து விவாதிக்கலாம். ஆனால் சினிமா என்பது U சான்றிதழ் பார்த்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் இடம். கொஞ்சம் கவனம் தேவைதான். செக்ஸ் கல்வி அவசியம்தான் என்றாலும் அதற்கும் ஒரு வயது வரம்பு இருக்கிறதல்லவா.
ஆனால் கவிபாடியதே குற்றம் என்னும் கூக்குரல்களின் அறியாமை பற்றி முன்பே சொன்னதுபோல் பரிதாபம் தான் உண்டாகிறது. அங்க அவயங்களையும் கொங்கைகளையும் பற்றி பழந்தமிழ் பாடல்களில் இல்லாத வார்த்தையாடல்களையா இனி வரும் கவிஞர்கள் பாடிவிட முடியும்? ஆண்டாளின் பாடல் ஒன்றை இதற்கு முன்பே வேறு ஒரு உரையாடலில் உதாரணம் காட்டியிருக்கிறேன். கமல் பாடியதும் பரமன் குறித்துதான்; ஆண்டாளும் செய்தது அதுவேதான். அறியாதவர்கள் கூச்சலிடுகிறார்கள். அறிந்தவர்கள் அடுத்த வேலையை பார்க்கிறார்கள்.
நேற்று ஒரு புராணக் கதை படித்தேன். சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவம் புரிந்த ரகசியம் குறித்தான ஆகம குறிப்பு அது. கதையைப் படித்து முடித்தவுடன் கண நேரத்துக்கு கண் அவிந்து போனது. ஈஸ்வரோ ரக்ஷது!
-0-
-0-
வாலி, வைரமுத்தெல்லாம் இப்படி பொட்டிலறைந்தாற் போல பொசுக்கென்று வார்த்தை போட்டு எழுதி வம்பில் மாட்டிக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும் இவற்றை எப்படி தேன் தடவித் தரவேண்டும் என்று. அவர்கள் பாடலிலேயே முன்னுதாரணங்களும் உண்டு.
கமலை பொறுத்தவரை, அவர் மீது இருக்கும் பகுத்தறிவு அடையாளம் காரணமாக அவர் என்ன செய்தாலும் பேசினாலும் பக்தர்கள் உலகம் உற்று பார்க்கிறது. வாதத்தால் வீழ்த்த இயலாது என்பதால் உணர்வுரீதியான மோதல்களை முன்னெடுக்கிறது. இப்படி ஒரு திறமைசாலி, ஒரு அறிவுஜீவி கடவுள் இல்லையென்று நம் நம்பிக்கைக்கு எதிராக பேசுகிறாரே என்னும் கவலையில் அவர்களுக்கு உள்ளூர குரல் கம்முகிறது. அதை மறைத்துக்கொண்டு கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொள்கிறார்கள்.
-0-
இங்கே கருத்து சுதந்திரத்தை விஞ்சி நிற்பது மத மேலாதிக்கம். அமெரிக்காவில் ஏசுவை விமர்சித்து சினிமா எடுத்துவிட முடியும். இங்கே ஒரு வசனம் கூட அதிகப்படியாக வைத்துவிட முடியாது. எதையும் தர்க்கரீதியாக அணுகும் போக்கு ரத்தத்திலேயே கிடையாது. அது சாமியோ, சாமியாரோ, அல்லது நடிகரோ.. கண்கள் மூடிக்கொள்ளும்; கரம் ஷேவிக்கும்.
-0-
இங்கே கருத்து சுதந்திரத்தை விஞ்சி நிற்பது மத மேலாதிக்கம். அமெரிக்காவில் ஏசுவை விமர்சித்து சினிமா எடுத்துவிட முடியும். இங்கே ஒரு வசனம் கூட அதிகப்படியாக வைத்துவிட முடியாது. எதையும் தர்க்கரீதியாக அணுகும் போக்கு ரத்தத்திலேயே கிடையாது. அது சாமியோ, சாமியாரோ, அல்லது நடிகரோ.. கண்கள் மூடிக்கொள்ளும்; கரம் ஷேவிக்கும்.
0 comments:
Post a Comment