எந்த மாதிரி வேண்டுமானாலும் நவரசங்களை வெளிப்படுத்தி நடிக்கட்டும். ஆனால் சமீபமாக ”இதோ, கமல்ஹாசன் நடிக்கிறேன், பார்” எனும்படி கன்னக்கதுப்புகளில் வித்தக கர்வத்தை தேக்கி வைத்துக்கொண்டு நடிக்கும் நடிப்பு வேண்டாம். இது கமல்ஹாசனின் இயல்பு அல்ல. எல்லோரும் அவரை ஒரேடியாக புகழ்ந்து புகழ்ந்து அவரும் முகஸ்துதிகளை விரும்பி ஏற்றுக்கொண்டு அதை நடிப்பில் வெளிப்படுத்திக் கொள்ள தொடங்கி விட்டாரோ என்று சந்தேகமாக உள்ளது. 70-களில் சிவாஜி கணேசனை இப்படித்தான் பாழ்படுத்தினார்கள். இப்போது கமல் முறை.
ரஜினியையும் சூப்பர் ஸ்டார். எளிமையான மனிதர்.. அப்படி இப்படி என்று உச்சி குளிர வைக்கிறார்கள். ஆனால் அவை யாவும் அவருடைய தனிப்பட்ட குணாம்சங்களை பற்றிய கருத்துக்கள்; பாராட்டுக்கள். அதனால் அவர் அதைக் காப்பாற்றிக்கொள்ள மேலும் மேலும் எளிமையான மனிதராகவும், பெருந்தன்மையானவராகவும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார். இது ஒரு மனிதரை புகழ்வதன் பாஸிடிவான விளைவு. ஆனால் கமலை புகழ்பவர்கள் எல்லோரும் உலக நாயகனே, அறிவுகடலே, சகலகலாவல்லவனே என்று அவரின் திறமையை வாய் வலிக்க புகழ்கிறார்கள். அதனால் அவர் தன் அறிவுஜீவித்தனத்தை தன்னுடைய அத்தனை திரைப்பரிமாணங்களிலும் காட்டிவிட முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது. அது ஒவ்வாமையையே விளைவாக தருகிறது.
ஒரு நகைச்சுவைப் படம் எடுக்கிறோம் என்றால் கிரேசி மோகன் இல்லாத கமலை முன்பெல்லாம் பார்க்க முடியாது. இன்று அதையும் அவரே எழுத நினைக்கிறார். ஹாஸ்யம் எழுவதற்கு அதீத திறமை வேண்டும். எல்லோராலும் இயலக்கூடிய காரியம் அல்ல. அவருடைய எல்லா பாடல்களையும் அவரே பாடி கஷ்டப்படுத்துகிறார். ஒரு வாதத்திற்காக ரோபோவில் கமல் நடித்திருந்தால் அதன் பாடல்களையெல்லாம் குரலை மாற்றி மாற்றி அவரே பாடியிருப்பார் என்றுச் சொல்ல முடியும். அதற்காக கமலுக்கு பாடத் தெரியாது என்று அர்த்தமில்லை. இன்றைய அவர் வயதுக்கு ஏற்றபடி மாற்றம் கண்டிருக்கும் குரலுக்கு தகுந்த பாடல்களை பாடலாம்.
இப்போது நடிப்புடன், கதை-திரைக்கதை-வசனம் எழுதி, டம்மியாக ஒரு டைரக்டரை போட்டு தானே டைரக்சனும் செய்து, பாடல் எழுதி - அதை தானே பாடி பெரும் பிரயத்தனப்பட்டு... முடிவாக சொதப்பிக் கொண்டிருக்கிறார். இதிலிருந்து விடுபட்டு தன்னுடைய பழைய இயல்பான நடிப்புக்கு திரும்புவது அவருக்கும் நல்லது; நமக்கும் நல்லது.
உதாரணமாக வசூல்ராஜா MBBS எடுத்துக்கொள்ளலாம். டைரக்சன் சரண், வசனம் கிரேசி, கதை ஏற்கெனவே வெற்றி பெற்ற கதை. கமலுக்கு வேலை அந்த பாத்திரத்தை அழகாக செய்து கொடுத்துவிட்டு போவது. என்ன அருமையாக செய்திருந்தார். இப்போது பார்த்தாலும் ரசிக்க முடிகிறது. அந்த மாதிரி கமல்தான் தேவை.
0 comments:
Post a Comment