இன்று வேலை முடிந்து வீடு வந்து சேர்ந்து வழக்கம்போல் செய்திகளின் குவியல்களை அகழ ஆரம்பித்தவனின் கவனத்தை மூன்று கொலைகள் கவர்கின்றன.
1. சற்று முன்னர் ரிஷி இங்கே பகிர்ந்து கொண்டிருந்த - மனு வாங்கிக் கொண்டிருந்த பீகார் எம்.எல்.ஏ ஒரு பெண்ணால் குத்திக் கொல்லப்பட்ட செய்தி. இது பாலசந்தரின் அச்சமில்லை அச்சமில்லை படத்தை எனக்கு நினைவுபடுத்தியது. அதிலும் இதேபோலத்தான் தன்னை ஏமாற்றிய அரசியல்வாதி கணவன் ராஜேஷை சரிதா மனு வாங்கும் கூட்டத்தில் குத்திக் கொல்வார்.
2. இரண்டாவது, பாகிஸ்தானிலுள்ள பஞ்சாபின் கவர்னர் சல்மான் தஸீரின் கொலை. இந்த கொலையும்கூட ஒரு வகையில் எனக்கு இந்திரா காந்தி படுகொலை சம்பவத்தை நினைவு படுத்துவதாகவே அமைகிறது. அவரைப் போலவே இவரும் தன்னுடைய பாதுகாவலரால்தான் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
இவரை நான் கடந்த ஒரு வருடமாக ட்விட்டரில் பின் தொடர்ந்தும் படித்தும் வருகிறேன். பாகிஸ்தானிய அரசியல்வாதிகளுக்கிடையே சற்று விவரம் தெரிந்த ஆசாமி இவர். சமயம் கிடைக்கும் போதெல்லாம் காத்திருந்தது போல இந்தியாவின் மீது கறாரான விமர்சனங்களை வைப்பார். அதை நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பதல்ல பிரச்னை. அவரின் வாதங்களிலுள்ள அறிவுத்திறன் வியக்கும்படி இருக்கும். பாகிஸ்தானின் சற்று முற்போக்கான அரசியல்வாதி என்றும் அவரைச் சொல்லலாம். அந்த முற்போக்குத்தனம் தான் அவர் உயிரையும் காவு வாங்கியுள்ளது.
இவர் கொல்லப்பட்டதன் காரணம் இஸ்லாமிய அடிப்படைவாத சட்டங்களில் மாறுதல் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருந்தார். இஸ்லாமிய கோட்பாடுகளின் பெயரால் பலரும் தண்டிக்கப்படுவதை எதிர்த்தார். அது போதாதா அவர் மேல் ரகசிய பட்வா வந்திறங்க!
3. மூன்றாவது கொலை ஆந்திராவில் நடந்திருக்கிறது. ஆந்திராவின் இரண்டு பிரபலமான ரவுடிகளின் கதையைத்தான் ரத்தசரித்திரம் என்று சினிமாவாக எடுத்தார்கள். அதன் நாயகன் பரிதாலா ரவி ஏற்கெனவே இறந்துபோனது பழைய கதை. ரவியின் கொலைக்கு காரணமாக ஒருமித்த குரலில் சொல்லப்பட்ட அவனின் எதிர்கோஷ்டி தலைவன் சூரியை இன்று கொன்று விட்டார்கள்.
இந்த பலி வாங்கும் படலத்தின் அடுத்த பலியாக ஜெகன்மோகன் ரெட்டி இருக்க அதிக வாய்ப்புண்டு என்று சொல்கிறார்கள் !
ஏன் என்பதன் முன்கதைசுருக்கத்தின் முழு விவரங்களையும் கீழேயுள்ள சுட்டிகளை சுட்டித் தெரிந்து கொள்ளலாம். உண்மைத்தமிழன் என்னும் பதிவர் விரிவாக எழுதியுள்ளார்.
இதையெல்லாம் படிக்கும்போது நம்ம ஊர் ரவுடியிஸம் எவ்வளவோ தேவலாம் என்றிருக்கிறது. ஒருவேளை தமிழ்நாடு உண்மையிலேயே அமைதிப் பூங்கா தானோ!
0 comments:
Post a Comment