நான்: என் மனநிலையை சமநிலையில் வைத்திருக்க உதவக்கூடிய உன்னதமான மனிதர்கள் குறித்தான தேடலை அநேகமாக என்னிடம் அப்படி ஒன்று இருக்கவே வாய்ப்பில்லை எனும்படியான என்னை அவதானிப்போரின் நினைப்புகளுக்கிடையே செய்துவருகிறேன். புத்தகத்தின் உறையை மட்டுமே பார்த்து உள்ளடக்கத்தை முடிவு செய்யும் உலகைப்பற்றி ஒருநாளும் எனக்கு கவலையில்லை.
தோழர்: மனதை சமநிலையில் வைத்துக்கொள்ள மனிதர்களின் வரலற்றை விட இன போராட்டங்கள் பற்றிய வரலாறு சரியான தேர்வாக இருக்கும் என்பது என் கருத்து.
நான்: மன சமநிலைக்கு தேவை மன அமைதி. அந்த அமைதிக்குத் தேவை உள்ளத்தை எழுச்சி கொள்ளச் செய்யும் விஷயங்களில் இருந்து விலக்கு. அதற்கு இனப் போராட்டங்களின் வரலாறு சரியான தேர்வாக இருக்காது என்பது என் கருத்து. இனப் போராட்ட வரலாறுகள் ஒருவித மனவெழுச்சியை அளிக்க வல்லன.
போராட்டங்கள் என்றாலே அரசியல் தாம். போராட்டங்களையும் அவற்றைச் சுற்றி நிலவும் அரசியலையும் வேறுபடுத்திப் பார்க்கமுடியாது. அவற்றின் நெடுக ஊடுபாவி வருவது துரோகமும் துவேஷமும். உதாரணமாக ஈழம் அல்லது பாலஸ்தீன போராட்டங்களை எடுத்துக்கொண்டால் இரண்டிலும் இன அழிப்பு நடந்தாலும், பாலஸ்தீனம் பற்றி உலகம் கொள்ளும் அக்கறையில் ஒரு பாதிகூட உள்ளூர் தமிழர்களிடையே ஈழம் குறித்து கிடையாது. ஈழத் தமிழர்களிடமும்கூட முழுமையாக கிடையாது. இது நம் ஊர் இனப் போராட்ட கதை.
யூதர்கள் ஹிட்லரிடம் எதிர்கொண்ட இன அழிப்பையும், அதிலிருந்து கண்ட மீட்சியும் பெரும் கண்ணீர் கதை. உலகம் உள்ள வரை நினைவில் வைத்திருக்கப் போகும் சரித்திரம். 1948-ல் இஸ்ரேல் உருவாகிறது. ஒரு இன அழிப்பையும், அதற்கு எதிரான ஓட்டத்தையும் போராட்டத்தை எதிர்கொண்ட ஒரு இனம் அதற்குப் பிறகு தாங்கள் சென்று ஆக்கிரமித்துக் கொண்ட வேறு ஒரு இனத்தின் நிலத்தில் நடந்துகொண்ட விதம் தான் என்ன? அதே இன அழிப்பு - நிலத்துக்காக!
இனங்களின் செயல்பாடுகள் அனைத்துமே சுயநலமானவை. இனம் → மதம் → சாதி என்று ஒவ்வொன்று ஒவ்வொரு அடுக்காக செயல்படுகின்றன. இவற்றின் பொதுவான ஒரு தொடர்பு சங்கிலி வர்க்க பேதம் எனலாம். மேலடுக்காக செயல்படும் இனங்கள் ஒவ்வொரு கால கட்டங்களிலும் ஒரு போராட்டத்தை தங்களின் இருப்புக்கான ஆதார தேவைகளை உறுதி செய்துகொள்ள சில போராட்டங்களை செய்திருக்கின்றன. இன்று ஈழத்தில் சிங்களவனுக்கு எதிராக நடக்கும் இனப் போராட்டத்தின் ஆதிகால வரலாறு மகாவம்சத்திலிருந்தே தொடங்குவதாக கொள்ளலாம்.
இனப் போராட்டங்களின் தென்படும் அர்ப்பணிப்பு உணர்வு என்பது குறுகிய எல்லைகளையும் ஆகிருதிகளையும் கொண்டது. ஒருவித மூர்க்கம்தான் போராட்டத்தை தக்கவைக்கிறது. அந்த மூர்க்கம் அஹிம்சை, ஆயுதம் என்று இருவழிகளிலும் இருக்கலாம். இரண்டுமே அதனதன் விதத்தில் படிக்க ஹிம்சைதான்.
போராட்ட வரலாறுகளை எல்லாம் படிக்குங்கால், சுயநலங்களையும் துரோகங்களையும் நினைத்து மனம் குலையவோ அல்லது ஒடுக்குமுறைகளை சினந்து எழுச்சிகொள்ளவோ செய்யுமே தவிர மனம் சமநிலையை அடையாது.
இதில் மாற்று கருத்துகள் இருப்பின் உரையாடலை மேலும் வளர்த்தெடுக்கலாம்.
மனதின் சமநிலை குறித்து ஓர் உரையாடல்
Posted:
Sunday, January 16, 2011 |
Posted by
no-nononsense
|
Labels:
சுயம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment