சுயநிவாரண முயற்சியும் யோகமும்

Posted: Monday, January 31, 2011 | Posted by no-nononsense | Labels: ,
தலைவலி வந்தால் எல்லோரும் என்ன செய்கிறார்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன். சிலர் போர்த்தி படுத்துவிடுகிறார்கள். சிலர் ஜண்டு பாம், விக்ஸ், டைகர் பாம் என்று வித விதமாக தைலம் தேய்த்துக்கொள்கிறார்கள். நானறிந்த சிலருக்கு தலைவலியே வந்ததில்லையோ என்றும் தோன்றுகிறது. அவர்கள் ஒருநாளும் தலைவலிப்பதாக குறைபட்டு நான் கண்டதில்லை. ஆனால் எனக்கு சில காலமாக அடிக்கடி வருகிறது. கண்களை சுற்றிய ஓரங்களிலும் பொட்டிலும்தான் அதிகம் உணர்வேன். கணினி முன்னால் தவம் கிடப்பதால் தான் இப்படி என்று வீட்டில் குறைபடுவார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம். என்னைவிட ஐ.டி மக்கள் தான் அதிகம் கிடக்கிறார்கள். இனி இதெல்லாம் தவிர்க்க முடியாதது.

அப்படி தலைவலி வந்தால் உடனடி வலி நிவாரணியாக நான் நாடுவது
நோவால்ஜின் மாத்திரைகளையே. இது அந்த நேரத்திற்கான தாற்காலிக நிவாரணமாக தொடங்கி பின்னர் ஒரு பழக்கமாக என்னை பீடித்துக் கொண்டுவிட்டது. ஒரு கட்டத்தில் நானே அதை உணர்ந்து, அதற்கு பிறகு வலிக்கும் நேரங்களில் உடனடியாக எல்லா வேலைகளையும் ஒத்தி வைத்துவிட்டு கண்களை மூடி முடிவற்ற ஓய்வை நாடி தூங்கி விடுகிறேன். எனக்கான காரணம் எப்போதும் சரியான தூக்கமின்மை என்பதால், தூக்கம் எனக்கு நிவாரணம் தருகிறது. அதன்மூலம் பழைய மாத்திரை பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்துவிட்டேன் என்றும் சொல்லலாம்.

(யோசித்து பார்த்தால் இது என் பெற்றோரிடம் இருந்து எனக்கு வந்த பழக்கம் என்று தெரிகிறது. என் வீட்டில் சின்ன வயதில் இருந்தே இந்த மாத்திரைகள் ஒரு முழு அட்டையாக தயாராக இருக்கும். அக்கம் பக்கம் வீடுகளுக்கு கூட மாத்திரை சப்ளை நடக்கும்).

பயன்படுத்துவதை குறைத்துக்கொண்டுவிட்ட போதிலும் நான் எப்போதும் கைவ்சம் தலைவலி மாத்திரை வைத்துக்கொண்டிருப்பதையே பாதுகாப்பாக உணர்வேன். வீட்டிலும் அலுவலகத்திலும் என் மேஜையில் அது எப்போதும்
என்னுடன் இருக்கும். ஒரு வாரம் முன்பு அலுவலக நேரத்தில் தலை பாரமாகி கனக்க துவங்க, கைகள் மாத்திரையை தேடின. சுத்தமாக தீர்ந்திருந்தது. பக்கத்து மெடிக்கல் கடையில் ஆள்விட்டு 4 மாத்திரை வாங்கி வரச்சொன்னேன். 4 மாத்திரை 7 ரூபாய்.

*

நாமக்கல்லில் கோட்டை ரோட்டில் கொங்கு கூட்டுறவு மருந்துக்கடை என்ற ஒன்றை துவங்கி இருக்கிறார்கள். அங்கே மருந்துகள் நியாயமான விலையில் கிடைப்பதாக ஊருக்குள் பேச்சு உண்டு. அது உண்மைதான் என்பதை என் தந்தையும் - சீதா மெடிக்கல்லில் 70 ரூபாய்க்கு வாங்கிய மருந்தை இங்கே 10 ரூபாய் குறைவாக 60 ரூபாய்க்கு வாங்கியதற்கான இரு பில்களையும் காட்டி - என்னிடம் நிரூபித்திருந்தார்.
நேற்று அந்த கடைக்கு அம்மாவுக்கான சில மருந்துகள் வாங்கச் சென்றிருந்தேன். அதனுடன் எதற்கும் இருக்கட்டும் என்று 4 நோவால்ஜின் வாங்கினேன். 3 ரூபாய்.

ஆச்சரியத்துடன் அட்டையில் இருந்த MRP பார்த்தேன். ஒரு மாத்திரை தோராயமாக 70 காசுகள். 4 மாத்திரையும் ரூ. 2.80 வருகிறது. ரவுண்ட் ஆஃப் செய்து 3 ரூ வாங்கியிருக்கிறார்கள்.

ஒரே கம்பெனி தயாரிக்கும் ஒரே மாத்திரை கரூரில் 7 ரூபாய். நாமக்கல்லில் 3 ரூபாய் !
இது பெரும்பாலும் உதிரியாக வாங்கப்படும் மாத்திரைகளின் விஷயத்திலேயே நடக்கிறது என்று நினைக்கிறேன். அதிலும் சிறிய அளவில் வைத்திருக்கும் மருந்துக்கடைகளில்தான் அதிகம் நடக்கிறது.

மருந்துக்கடைகளின் விற்பனைப் பொருட்களின் மீது வைக்கப்படும் மார்ஜின் பற்றி கிசுகிசுப்புகள் எப்போதும் உலவுவதுண்டு. ஆனால் அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தது இம்முறைதான். மருந்துக்கடைகளின் லாபவிகிதங்களை ஆராய முற்பட்டால், மயக்கத்தைத் தெளிய வைக்கும் மருந்தை தேடி ஓட வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்.

-0-

மைக்ரேன் தாக்குதலை கண்கூடாக கண்டிருக்கிறேன். அவர் எங்கள் குடும்ப நண்பராகிய 50 வயது பெண்மணி. கனடாவாசி. விடுமுறையில் இங்கே சுற்றுலா வந்திருந்தார். வந்த இடத்தில் வெயிலின் கடுமை ஒத்துக்கொள்ளவில்லை. தலைவலி, வாந்தி, மயக்கம் என்று ஒருநாள் முழுவதும் மிகவும் சிரமப்பட்டுவிட்டார். ஆனால் முன்னெச்சரிக்கையாக மைக்ரேனுக்கான மாத்திரைகளை கையோடு வைத்திருந்ததால் உள்ளூரில் டாக்டர் தேடி அலையவேண்டியிருக்கவில்லை.

இங்கே அது ஒரு பெரிய பாடு. பிரசவத்திற்கும், எலும்பு முறிவிற்கும், காது-மூக்கு-தொண்டை-கண்ணுக்கும் தெருவுக்கு தெரு டாக்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு காய்ச்சல், தலைவலி என்றால் யாரிடம் செல்வது என்று பெரிய குழப்பமாக இருக்கிறது. இதில் என்ன குழப்பம் என்று படிக்கும்போது தோன்றலாம். நாமக்கல்லில் அனுபவபூர்வமாக அதை வாழ்ந்து பார்க்கும்போதே உணர முடியும். ஒரே மாத்திரையை வேறு வேறு பிராண்ட் நேம்களில் பிரிஸ்க்ரைப் செய்தபடி சில பழம்பெரிசு டாக்டர்கள்
பொழுதுபோகாமல் இன்னும் ’பிராக்டிஸ்’ செய்துகொண்டுள்ளன. அவர்கள்தான் இதற்கெல்லாம் இப்பவும் ஒரே அடைக்கலம்.

-0-

யோகம் கற்றுக்கொள்ள பெருவிருப்பமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை ஆன்மிக பம்மாத்துக்கள், ‘ஜெய்குருதேவ்’ கோஷங்கள் இல்லாமல் கற்றுத்தரும் ஆசிரியரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு குழுவை என்னால் இதுவரை கண்டடைய முடியவில்லை. ஈஷா யோகாவில் அப்படியெல்லாம் கிடையாது என்று நீ உறுதி கூறுவாயானால் அவசியம் கலந்துகொள்கிறேன். அதாவது யோகம் மற்றுமே கற்றுத்தர வேண்டும். ஆன்மிக பஜனை பாடுவது, ஊடாக ஜக்கி புகழ் பாடுவது போன்ற வேலைகள் இருக்கக்கூடாது.

இருந்தால் என்ன என்றால் அந்த ’பழத்துக்கு புகைபோடும் வேலையை’ கண்டு எனக்கு கடும் எரிச்சலாக இருக்கும். மன அமைதி கெடும். அந்த அமைதி போனால் கற்றுக்கொள்வதில் நாட்டமும் போய்விடும். இடம், பொருள், ஏவல் பார்க்காமல் எனக்கு ஒவ்வாத இடங்களில் இருந்து உடனடியாக வெளிநடப்பு செய்துவிடுவது என் இயல்பு. அது அநாவசிய சங்கடம். அதனால்தான் தொடர் அழைப்பு இருந்தாலும் எனக்கு ஒத்து வராது என்று தோன்றும் இடங்களில் நான் உள்நுழைவதில்லை. இதில் சில நட்பு வட்டங்களும் அடங்கும்.

ஆனால் ஜக்கியின் உரையை கேட்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் தொடர்ந்து எப்போதும் ஜக்கி, நித்தியானதா போன்ற சிலரின் உரைகளை கேட்கிறேன். முக்கியமாக ஓஷோவின் உரைகளை (யூடியூபில் கிடைக்கின்றன). வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்கள் உட்பொதிந்துள்ளவை அவை. நேற்று கூட மனிதர்களின் அறிவுஜீவித்தனத்தைப் பற்றிய நித்தியானதாவின் உரையை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொண்டிருந்தேன். அற்புதம்!

அவர்களின் பிசங்கங்கள் வேறு
. பிஸினஸ் வேறு. ஆனால், பிரசங்களில் தாங்கள் மனிதர்களிடம் விதைக்கும் தம் மீதான ஈர்ப்புதான் தங்களின் ஆன்மிக பிஸினஸுக்கே அடிப்படை என்பதை அவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள். அதை நாமும் அறிந்துகொள்ளும்போது பிரச்னை அகல்கிறது. அவர்களின் பேச்சையும் எழுத்தையும் ஒரு சுயமுன்னேற்ற நூல் போன்று உள்வாங்கிக் கொண்டால் போதும்.

எதையும் ஒருமுறை பரிசீலித்து பின்னர் சேர்த்தலும் விலக்கலும் ஒரு மனப் பயிற்சியாக இருப்பது நல்லது. எளிய உதாரணத்தில் சொல்லப் போனால் அன்னம் போல.

-0-

//வராமல் எதுவும் பேசக்கூடாது சரியா//

வராமலே எப்படி ‘ஜெய்குருதேவ்’ சொல்ல முடியும்? ஈஷா யோகாவை பக்கம் தலைகாட்டவில்லை என்றால் நான் வேறு எங்குமே சென்று முயற்சிக்கவில்லை என்று நீ நினைப்பது உன் சொந்தக் கற்பனை. Art of living வகுப்பில் சென்று அமர்ந்து இது சரிவராது என்று திரும்பி வந்த கதையை வைத்துதான் சொல்கிறேன். அங்கேதான் இந்த ஜெய்குருதேவ் பஜனை.

யோகம் என்பது ஒரு கலை. அந்தக் கலையை கற்றுத்தர அவசியம் ஒரு குரு தேவைதான். அந்த குருவை வணங்கி கற்றுக்கொள்வதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அவர் வெறும் உருவப்படமாக இல்லாமல் எனக்கு கற்றுத்தரும் ரத்தமும் சதையுமான ஆசிரியராக இருக்கவேண்டும். மாறாக சுவரில் இருக்கும் படத்தை காட்டி அவர்தான் கற்றுத்தருகிறார்.. நாங்களல்ல.. இங்கே கற்றுக்கொள்; அங்கே பார்த்து வணங்கு; அவர்தம் பஜனை பாடு என்றால்.. அதைதான் புகைபோடும் வேலை என்று சொன்னேன்.

சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த சாமியார்களின் துணை இல்லாமலே யோகா கற்றுத்தரும் நிறைய இடங்கள் இருக்கின்றன. அங்கேயெல்லாம் யோகா மாஸ்டர்கள் இருக்கிறார்கள். அம்மாதிரி மாஸ்டர்களை வணங்கி மரியாதை செலுத்தி அவர்களிடம் கற்றுக்கொண்டு தினமும் வீட்டில் பயிற்சி செய்வதுதான் காலம் காலமாக இக்கலையின் அடிப்படை வழிமுறையாக இருந்திருக்கிறது. இப்போதுதான் இதனுடன் ஆன்மிகம், சுயமுன்னேற்ற பிரசங்கம் எல்லாவற்றையும் கலந்து பண்டலாக விற்கிறார்கள்.

ஈஷா யோகாவைப் பற்றி அதில் கலந்து கொள்ளாமலே நான் அவதூறு பேசிவிட்டேன் என்று நினைப்பாயேயானால் அங்கே நடப்பது என்ன என்று விரிவாகத்தான் எழுதேன். நீயும் கிளாஸிற்கு ரொம்ப நாளாக அழைத்துக் கொண்டிருக்கிறாய். என்னாலும் கரூரில் வேலை செய்துகொண்டு கலந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. அதை நீயும் அறிவாய். இன்னும் ஓரிரு மாதங்களில் நான் கலந்துகொள்ளக்கூடிய நிலையில் நாமக்கல்லிலேயே இருப்பேன். அதற்குமுன் எனக்கு இருக்கும் மனத்தடையை அகற்ற வேண்டியது உன் கடமை.


அப்புறம் ஒரு தனிப்பட்ட வேண்டுகோள்: தயவுசெய்து அடுத்தமுறை ஏதாவது பேசும்போதாவது இந்த ‘சேற்றில் செந்தாமரை’ உவமையை மாற்றி வேறு ஏதாவது சொல்லவும். ரொம்ப போர் அடிக்கிறது. எனக்கு ஏன் செந்தாமரை வேண்டும்? சேற்றில் மலராத எத்தனையோ நல்ல மலர்கள் இருக்கின்றன. அவைகளை பறித்து சுடர்கொடியிடம் சூடிக்கொள்ள கொடுத்தால் மலரும் மனமும் மணக்காமலா போய்விடும்?

இதைத்தான் masochism என்பது. உற்றது அற்றது அறிந்திருந்தும் தன் மனதின் திசையில் தன்னை இயங்கவிட்டு தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வது. ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி விண்ணை முட்டி நிற்கும் மரத்தின் உச்சியிலுள்ள பொந்தின் உள்ளே சென்றால் எதிர்படும் அரக்கர்களை வீழ்த்தி கிடைக்கும் கூண்டின் உள்ளிருக்கும் கிளியின் இதயத்துக்குள்தான் நம் உயிரை காக்கும் மருந்து இருக்கிறது என்றால்... வேறு வழியில்லை, அத்தனை சேறு ஆறு கடல் மலைகளையும் தாண்டிச் சென்று வென்று வந்து நீ சொன்ன மாதிரி கரையேறி கால் கழுவிக்கொள்ள வேண்டியதுதான். ஆனால், அவ்வளவு எல்லாம் முக்கியமில்லை, அல்டர்நேட் இருக்கிறது என்றால் ஏன் வீணே நம்மை நாமே வருத்திக்கொள்ள வேண்டும்? ஒன்று
masochist ஆக இருக்கவேண்டும். இல்லையென்றால் வீட்டில் முடங்கிக் கிடப்பதாக அர்த்தம். நல்ல கொள்கைதான் ;-)

0 comments:

Post a Comment