அவருடன் ஹோட்டல் அறையில் இருந்தப்பொழுது நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியிலிருந்து ஆசிரியர் ஒருவர் கல்லூரில் மாணவர்களுடன் சந்திப்புக்கு போனில் அழைத்தார். தன்னுடையது நண்பர்களை மட்டும் சந்திக்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் என்றும் சந்திப்புகளுக்கு ஒப்புக்கொள்ள நேரமில்லை என்றும் கூறி ஞாநி மறுத்து விட்டார். மறுமுனையில் பேசிய நபரோ விடுவதாயில்லை, தான் மட்டுமாவது நேரில் சந்தித்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்து ஹோட்டல் அறைக்கே வந்துவிட்டார். வந்தவர் நேரே சாஷ்டாங்கமாக ஞாநி காலில் விழுந்து கண்ணீர் மல்க ஆரம்பித்து விட்டார். அல்லது அப்படி ஒரு பௌயமான த்வனியை அவரின் குரலில் உணர முடிந்தது. பின்னர், ”உங்களை மிகவும் கவர்ந்த அரசியல்வாதி/நடிகர்/எழுத்தாளர் யார்’ என்பது மாதிரி சில கேள்விகளை வந்தவர் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் போன பிறகு எப்படிப்பட்ட விசித்திரமான கேள்விகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது பார்த்தீர்களா என்பதுபோல் புன்முறுவல் புரிந்தார் ஞாநி. இந்த அழகில் வந்தவர் ஒரு நூல் கூட எழுதியிருக்கிறாராம்! நாமக்கல்லில் நாமறியாத எழுத்தாளர்கள் பலரும் இருக்கிறார்கள் போலுள்ளது.
இதை நான் குறிப்பிட்டு எழுதக் காரணம் எழுத்தாளர்களை தெய்வங்களாக கொண்டாடும் சில மனிதர்களுக்கான எடுத்துக்காட்டுக்காக. ஞாநியின் நேர்மையும், தன் கருத்தில் காட்டும் உறுதியும், அதிகாரத்தை நோக்கி சமரசமின்றி கேள்வி எழுப்பும் தீரமும் அவருக்கு ஒரு ஹீரோ அந்தஸ்தை கொடுத்திருந்தால் அதில் தவறும் இல்லை. போலியான பிம்பங்கள் நாயகர்களாக ஆராதிக்கப்படும் சமூகத்தில் சிந்தனையை செழுமைப்படுத்தும் எழுத்தாளர்கள் கொண்டாடப்படுவது நல்ல விஷயம் தான்.
பிறகு ஞாநியை சந்திக்க வேல்சாமி, பெருமாள் முருகன் வந்திருந்தனர். உண்மையில் நான் வேல்சாமியை சந்திக்கவே ஞாநியின் அறையில் காத்திருந்தேன். அதை அறைக்கு வந்த வேல்சாமியிடம் ஞாநி சொன்னதும் அவருக்கு பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது. என்னுடன் ஆவலாக உரையாடினார். ஏனென்றால் வேல்சாமி ஆய்வு ரீதியான எழுத்துக்களில் மிக முக்கியமான ஆளுமை. நான் மிகவும் மதிப்பு கொண்ட ஒரு எழுத்தாளர். ஆனால் உள்ளூரில் அவரை ஒரு முட்டை வியாபாரி என்னும் அளவுக்கு மேல் யாருக்கும் தெரியாது.
பிறகு ஞாநி, வேல்சாமியும் தங்களின் நட்பு ரீதியான உரையாடலை துவக்க, பெருமாள் முருகனும் இணைந்து கொள்ள, சிற்சில இடங்களில் நானும் ஆர்வமாக பங்கெடுக்க, பேச்சுக் கச்சேரி களைகட்டியது. அந்த இடத்தில் நான் என்னை ஒரு புது ஆளாகவே உணரவில்லை. பெரும்பாலும் பெரியார் மற்றும் நடப்பு அரசியல் குறித்து பேசப்பட்டதில் நிறைய புது தகவல்கள் கிடைத்தன. நல்ல ஓர் அனுபவம்.
பிறகு ஞாநி கிளம்பி ராசிபுரம் எஸ்.ஆர்.வி பள்ளிக்குச் சென்று விட்டார்.
0 comments:
Post a Comment