...........I have a question, what you think about "Caste System in Tamil Nadu" either in people's mind or in the tamil nadu state politician mind.?Please share your view point or your friends view point.I want to see "United Tamil Nadu State" and my vote goes for united Tami Nadu only(I hate the caste system). We all know, our state is fully separated by caste and by politician and people.
Thanks,..........
அன்புள்ள ...,
ஜாதி மட்டுமல்ல மக்களின் உணர்வுநிலையை தொட்டுப் பார்க்கும் எல்லா சமுதாய அவலங்களையும் வெறும் ஓட்டுக்களாக மட்டுமே பார்க்கக்கூடியவர்கள் அரசியல்வாதிகள். இன்றுள்ளவர்கள் தாம் அப்படி என்று இல்லை. எப்போதும் அப்படித்தான். தற்காலத்தில் ஜாதிக் கட்சிகளின் வரவால் அந்த சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஏன் அரசியல்வாதிகள் ஜாதிப் பிரிவினையை ஆதரிக்கிறார்கள்? அது மக்களிடம் எடுபடுகிறது என்பதால் ஆதரிக்கிறார்கள். ஏன் எந்த அரசியல்வாதியும் ஜாதி ஒழிப்பை முன்வைத்து பிரச்சாரம் செய்வதில்லை? ஏனென்றால் வெகுஜன ஆதரவு அதற்கு கிடையாது என்பதால். அதனால் பிரச்னை மக்களிடம் தான் இருக்கிறது. அதனால் அதன் தீர்வும் மக்களிடம் தான் இருக்க வேண்டும்.
ஆனால் அதுவும் அவ்வளவு சுலபம் அல்ல. ஏனென்றால் நீங்கள் தமிழரா, தெலுங்கரா, மலையாளியா என்பதெல்லாம் பிறந்த பிறகு நீங்கள் கற்றுக்கொள்ளும் மொழியை பொறுத்தது. நடுவில் வேறு மொழியை கற்றுக்கொண்ட பின்னால் நீங்கள் எந்த மொழியினர் என்று கண்டறிவது கடினம். எடுத்துக்காட்டாக, ஒரு தமிழர் பெங்களூரில் சென்று வாழ்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அங்கே தமிழ் பேசும் வரைதான் தமிழர் என்னும் அடையாளம் அவர் மீது இருக்கும். அதுவே அவர் சீக்கிரமாக கன்னடம் கற்றுக்கொண்டு விட்டார் என்றால், பிறகு அவரை கன்னடரிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது எளிதன்று. அவரும் தன்னை கன்னடர் என்றே சொல்லிக்கொள்ளலாம்.
ஆனால் ஜாதி பொறுத்தவரை அப்படியல்ல. அதனை நாம் பிறந்த பின்னர் தேர்ந்தெடுப்பது இல்லை. பிறக்கும்போதே இன்னார் இன்ன ஜாதி என்ற முத்திரையுடனே பிறக்கிறோம். அந்த முத்திரை நிரந்தர முத்திரை. எனக்கு வேண்டாம் என்று நீங்கள் ஒதுக்கி வைத்தாலும் அது விடாமல் துரத்தும். ஏனென்றால் அது நீங்கள் வரித்துக்கொண்டது அல்ல. உலகம் உங்கள் மீது சுமத்தியது. பள்ளி, கல்லூரி, வேலை என்று எல்லா இடங்களிலும் அதன் பிடி வலுவாக நீண்டிருக்கிறது. நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அதனுடன் ஒட்டியே வாழ வேண்டியுள்ளது. அந்தளவு அது பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய நாகரிகத்தில் ஆழ வேரூன்றியுள்ளது. அதை நம் காலத்தில் உடனடியாக வேரறுத்து வீழ்த்துவது இயலாத காரியம். காரணம் நம் இருவரைப் போல ஜாதியை விலக்க நினைப்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதுதான்.
அந்த எண்ணிக்கை பெருக என்ன செய்ய வேண்டும்? நம் பிள்ளைகளின் மீது ஜாதியின் நிழல் படியாமல் வளர்க்க வேண்டும். அவர்களின் எண்ணங்களில் அழுத்தமாக ஜாதிக்கு எதிரான கருத்துக்களை விதைக்க வேண்டும். அந்த கருத்து சுற்றியுள்ள ஜாதி ஆதரவு கருத்துச்சூழல்களால் நீர்த்துப்போய் விடாமல் கண்காணிக்க வேண்டும். அதற்கு அவர்களுடைய பகுத்தறிவின் கதவுகளை திறந்து விட வேண்டும். சின்ன வயதிலேயே படிக்கும் பழக்கத்தை ஊட்டி வளர்க்க வேண்டும். அதன்மூலம் வளரும் சுயசிந்தனை அளிக்கும் தெளிவுதான் தான் அவர்களை பழைய மூடத்தனங்களின் கரங்களில் இருந்து காக்கும். இங்கே சுயசிந்தனை, தெளிவு என்னும் வார்த்தைகள் மிக முக்கியமானவை.
இப்படி செய்தால் உடனடியாக ஜாதியின் தளையிலிருந்து விடுபட்டு விட முடியுமா என்றால், இல்லை என்பதுதான் பதில். ஆனால் இந்த மனித சமுதாயத்தை அதை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டோம் என்று அர்த்தம். இப்படி பலராலும் பல திசைகளிலும் எடுத்து வைக்கப்படும் சின்ன சின்ன தப்படிகள், மெல்ல எல்லோரையும் ஒரு குவியம் நோக்கி ஒன்று திரட்டும். அன்று ஜாதிகள் ஒழியும். அதற்கு இப்போது இருந்து முயற்சி செய்தாலுமே பல நூற்றாண்டுகள் ஆகலாம். ஆனால் அதை நோக்கி வேலை செய்கிறோம் என்பதை நமக்கு நாமே உறுதி செய்து கொள்வது மிக முக்கியம். சுயகண்காணிப்பு அவசியம். இது ஒரு சமூக பொறுப்பு. நாம் அதன் ஒரு அங்கத்தினராக நம் பங்களிப்பை இவ்விதம் நம் தலைமுறையில் அளித்து வர வேண்டும்.
பிரச்னை என்னவென்றால், நம் படித்த இளைஞர்கள் எல்லா தீர்வுகளையும் இன்ஸ்டண்டாக எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் கடைபிடிக்கும் ஒரு முற்போக்கு முன்முயற்சி அவர்கள் காலத்திலேயே அதன் பலனை அவர்கள் கண்ணில் காட்டிவிட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இல்லையென்றால் மனதளவில் சோர்ந்து விட்டு விடுகிறார்கள். இந்த மனோபாவம் மாறினாலே மாற்றங்கள் தலைக்க ஆரம்பித்து விடும்.
என்னளவில் எனக்கு தோன்றிய கருத்துக்களை எழுதியுள்ளேன். நன்றி.
0 comments:
Post a Comment