அன்புள்ள இட்லிவடை,
நாமக்கல் தொகுதியின் தேர்தல் நிலவரம் பற்றி என்னுடைய சில அவதானங்களை அனுப்பியுள்ளேன். ஏற்புடையதாக கருதினால் அதை நீங்கள் இட்லிவடையில் பிரசுரிக்கலாம்.
நன்றி.
அன்புடன்,
ராஜா,
நாமக்கல்.
தொகுதி: நாமக்கல்
முக்கிய போட்டியாளர்கள்:
கொ.மு.க: ஆர்.தேவராஜன்
அ.தி.மு.க: கே.பி.பி.பாஸ்கர்
நாமக்கல் தொகுதியை பொறுத்தவரை அது தனித் தொகுதியிலிருந்து பொதுத் தொகுதியாகி இருப்பதுதான் இந்த சட்டமன்ற தேர்தலின் முக்கியமான சிறப்பம்சம். தொகுதியில் பெரும்பான்மையினராகவும் செல்வாக்கு பெற்றவர்களாகவும் இருக்கும் கொங்கு வேளாள கவுண்டர்களின் நீண்ட நாளைய எதிர்பார்ப்பு இது.
இதில் சாதி ரீதியான மனசாய்வுகள் ஒருபுறம் இருக்க, தனித் தொகுதி என்பதால் உள்ளூரில் அறிமுகமில்லாத தொகுதிக்கு துளியும் சம்மந்தமில்லாத தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ., ஜெயகுமார் போன்றவர்களை அரசியல் கட்சிகள் கொண்டு வந்து நிறுத்திவிடுவது வாடிக்கையாக இருந்தது ஒரு குறையாக இருந்தது. மாநில அரசின் தலைமையை மனதில் கொண்டு வேறு வழியில்லாமல் அவர்களை தேர்ந்தெடுக்கும் ஒரு இக்காட்டான சூழ்நிலை இனிமேல் தவிர்க்கப்படும் என்பது தொகுதி மக்களிடையே பொதுவில் ஏற்பட்டுள்ள ஒரு ஆறுதல்.
இனி தேர்தல் கூட்டணிகள் முடிவாவதற்கு முன்பாக தொகுதியில் நிலவிய கருத்துக்களை ஆராய்வோம்.
சட்டமன்ற தேர்தல்கள் முடிந்து, அடுத்த தேர்தல்கள் வரும்போது எழும் முக்கியமான ஒரு கேள்வி ‘என்ன செய்தார் உங்கள் எம்.எல்.ஏ?’ என்பதாக இருக்கும். ஆனால், நாமக்கல் தொகுதியை பொறுத்தவரை ’யார் உங்கள் எம்.எல்.ஏ?’, ‘எப்படி இருப்பார் உங்கள் எம்.எல்.ஏ?’ என்னும் ரீதியில் தான் கேள்விகள் இருக்கும். அந்த அடுக்கடுக்கான எல்லா கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான் — ‘தெரியாது’ என்பதுதான் அது.
அந்தளவுக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக 2006-ல் நாமக்கல்லில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயகுமார், தொகுதியை அம்போவென விட்டு விட்டார். கடந்த முறையே அவர் மீது இதே போன்ற குற்றசாட்டு இருந்தது. ஆனால் இப்போதைய நிலைமையை எண்ணிப் பார்க்கையில் அதுவே எதேஷ்டம் என்பதாக இருக்கிறது. சென்ற முறை எம்.எல்.ஏ.,ஆக இருந்த பொழுதாவது ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது தொகுதியில் மருந்துக்காவது கண்ணில் பட்டார். ஆனால் 2006-ல் தேர்தல் முடிந்து பெரிதாக ஒரு கும்பிடு போட்டுவிட்டுச் சென்றதோடு சரி. அதற்குப் பிறகு எதற்காகவும் எட்டிப் பார்க்கவில்லை. ஒரு அரசு நலத் திட்ட விழா, ஒரு நல்லது கெட்டது... ம்ஹூம்... எம்.எல்.ஏ.,வை எந்த நிகழ்ச்சியிலும் பார்த்ததேயில்லை. நகைச்சுவைக்காக எம்.எல்.ஏ காணவில்லை என்று போஸ்டர் ஒட்ட வேண்டும் என்று எழுதுவார்கள். அதற்கு நடைமுறை எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டி வாளாவிருந்து விட்டார் எம்.எல்.ஏ ஜெயகுமார்.
இதற்கு லோக்கல் தி.மு.க மத்திய அமைச்சரின் உருட்டல் மிரட்டல்கள் தான் காரணம் என்பார்கள். அவருக்கு டெல்லி அரசியலில் நாட்டம் அதிகமாகிவிட்டது என்றும் சொல்வார்கள். ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமாக இருப்பது, தொகுதி மறுசீரமைப்பில் நாமக்கல் தனித் தொகுதிலிருந்து பொதுத் தொகுதியாக மாற்றப்படும் செய்திகள் வெளியானதுதான். அடுத்தமுறை இங்கே போட்டியிடப் போவதில்லை என்பதால் தொகுதிக்கு ரிட்டர்ன் டிக்கெட் எடுக்காமல் சமர்த்தாக சிக்கனம் பிடித்து விட்டார். இப்போது ஜெயகுமார் ஆத்தூர் (தனி) தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்திருக்கிறார் என்பது ஒரு தகவலுக்காக.
தொகுதிக்கு ஏன் எம்.எல்.ஏ வரவில்லை என்பதெல்லாம் அவருடைய தனிப்பட்ட பிரச்னைகள். தொகுதி நலனை பொறுத்தவரை அவர் பூஜ்ஜியம். அதனால் இம்முறை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியாகிய தி.மு.கவிற்கு எதிராக உள்ளூரில் பெரும் அதிருப்தி அலை நிலவுகிறது. அதனாலேயே காங்கிரசின் விருப்பத் தொகுதிப் பட்டியலில் பல ஆண்டுகளாக இடம்பிடித்துவந்த நாமக்கல்லை இம்முறை காங்கிரஸ் கைகழுவி விட்டது. கேட்டிருந்து, கிடைத்து, ஊருக்குள் ஓட்டுக்கேட்கவும் வந்திருந்தால் ரணகளமாகியிருக்கும்!
தமிழக அரசியல் கட்சிகளின் மாரத்தான் கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருவழியாக முடிந்து தற்போது நாமக்கல்லில் கொ.மு.க.வும், அ.தி.மு.க.வும் போட்டியிடுகிறார்கள் என்பது தெளிவாகியுள்ளது.
கொ.மு.க.வை பொறுத்தவரை அவர்கள் இந்தத் தேர்தலில் தங்களின் சாதி ஓட்டு வங்கியை இரண்டாம் முறையாக நிரூபித்துக் காட்ட வேண்டிய ஒரு ’ஆசிட் டெஸ்ட்’ நிலையில் இருக்கிறார்கள். அதற்கான எல்லா வித சாதகமான அம்சங்களும் இருந்தன — அவர்கள் சென்று தி.மு.க அணியில் சேரும் வரை. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவர்கள் சென்று தி.மு.க கூட்டணியில் இணைந்து சீட் வாங்கிக் கொண்டது கொங்கு வேளாள கவுண்டர்களிடையே மேலிருந்து கீழ் வரை ஒரு அதிருப்தி அலையை உண்டாக்கியுள்ளது.
காரணம் அடிப்படையில் கொங்கு வேளாளர்களுக்கு இணக்கமான கட்சி அ.தி.மு.க.தான் என்பது வெள்ளிடை மலை. அது மாத்திரமல்லாமல், கொங்கு வேளாளர்களின் அடிப்படையான சில கோரிக்கைகளை கூட தி.மு.க அரசு கண்டுகொள்ளாது காலம் தாழ்த்தியது குறித்து அவர்களின் சமுதாயத்தில் ஒரு கோபம் இருந்துவருகிறது. அதனுடன் பொதுவில் தி.மு.க ஆட்சி குறித்து இருக்கும் எதிர்மறையான கருத்துநிலையும் இணைந்துகொள்ள, கொங்கு சமுதாயத்தின் ஒட்டு மொத்த கருத்தோட்டமும் தி.மு.க.வுக்கு எதிராக மாறியிருந்தது.
இந்நிலையில் யார் அதிக சீட் கொடுத்தார்களோ அவர்களிடம் சென்று சேர்ந்துகொண்ட கொ.மு.க. தலைவர்களின் செயல் கொங்கு வேளாளர்களிடையே கசப்புணர்வையே ஏற்படுத்தியுள்ளது. விளைவாக, மணி கவுண்டர் போன்ற அவர்களின் சில தலைவர்கள் கொ.மு.க.வுக்கு எதிர்நிலை எடுத்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்கள். ஏற்கனவே தனி அமைப்பு வைத்துக்கொண்டு தனியாவர்த்தனம் செய்துவரும் தனியரசு அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து ஒரு சீட்டும் வாங்கிவிட்டார். அவருக்கு ஓரளவு பரவலான தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. அதனால் சாதி ரீதியான ஓட்டுக்கள் இம்முறை சிதறவே அதிக வாய்ப்புள்ளது.
அதை ஈடுகட்டும் விதமாக நாமக்கல்லில் கொங்கு வேளாளர்களின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.தேவராஜன் என்பவருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அது எந்தளவு வேலை செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும், கொ.மு.க.வுடன் இணைந்து தி.மு.க உடன்பிறப்புகள் வேலை பார்ப்பதில் நாமக்கல் தொகுதியை பொறுத்தவரை பிரச்னை இருக்காது. இரண்டு கட்சிகளின் மாவட்ட அளவிலான தலைவர்களும், வேட்பாளரும் ஒரே இனம் என்பதோடு, சுற்றி பார்க்க தூரத்து உறவினர்களாக இருப்பார்கள்.
உடன்பிறப்புகளின் இனப் பாசம் ஒருபுறம் இருந்தாலும், வெகுசனமக்களிடம் இத்தேர்தலில் பொதுவில் நிலவும் பணப் பாச எதிர்பார்ப்பு நிறைவு செய்யப்படுமா என்பது கேள்விக்குறிதான். தி.மு.க என்றால் ஓட்டுக்கு காசு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்; உரிமையாக(?) கேட்கவும் செய்யலாம். கொ.மு.கவில் ஓட்டுக் கேட்டு வரும் மாமன், மச்சான், பங்காளிகளிடம் அதை எதிர்பார்க்க முடியுமா?
இது தி.மு.க கூட்டணியின் நிலைமை.
எதிர்புறம் அ.தி.மு.க கூட்டணியில் முதலில் வெளியான பட்டியலில் நாமக்கல் தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அது அப்படியே தொடர்ந்திருந்தால் சிரமம் தான்; கொங்கு வேளாளர்களின் கணிசமான ஓட்டுக்களை இலகுவில் தேவராஜன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டிருந்திருப்பார். ஆனால் திருத்தப்பட்டு வெளியான இரண்டாவது பட்டியல்தான் நாமக்கல் தொகுதியின் கதாநாயகன். (இப்போதெல்லாம் கதாநாயகன், கதாநாயகி என்ற வார்த்தைகளை கட்டுரைகளில் சேர்த்துக்கொண்டால்தான் அதை சமகால அரசியல் கட்டுரை என்றே ஒப்புக்கொள்கிறார்கள்!).
அதன்படி, அதாவது கதாநாயகன் என்று சொன்னேனே அந்த அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட பட்டியலின்படி இந்த ஒட்டு மொத்தக் கட்டுரையையும் ஒரு வரியில் சுருக்கி இப்படி எழுதிவிடலாம் — ’அ.தி.மு.க.வில் உள்ளூரில் பொது மக்களின் செல்வாக்கு பெற்ற கே.பி.பி.பாஸ்கருக்கு சீட் கொடுக்கப்பட்டிருப்பதால் மற்ற எதையும் பரிசீலிக்க அவசியமின்றி ‘அட்வாண்டேஜ் அ.தி.மு.க’ என்று சொல்லிவிடலாம்’.
அ.தி.மு.க.வின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாஸ்கர் உள்ளூரில் நன்கு அறிமுகமானவர். பொதுமக்களின் அபிமானத்திற்கு உரியவர். அதனாலே கட்சிகளை கடந்தும் ஓட்டுகளை பெறும் செல்வாக்கு படைத்தவர். அவருடைய தந்தை நாமக்கல் நகராட்சியில் சேர்மனாக இருந்தவர் என்பதால் பாரம்பரிய அரசியல் அடையாளமும் வாய்க்கப்பட்டவர். அதோடு கடந்த முறை நடந்த உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி சேர்மனாக தேர்ந்தடுக்கப்பட்டு, பின்னர் தி.மு.க.வின் ஆள் கடத்தல் அரசியல் செப்பிடு வித்தையில் பதவியை பறிகொடுத்திருந்தது வேறு அவருக்கு மக்களிடையே ஒரு அனுதாப அலையை சம்பாதித்து கொடுத்திருந்தது. அதனால் அ.தி.மு.க. என்றால் வேட்பாளராக பாஸ்கர் அறிவிக்கப்பட வேண்டும் என்று பொதுவில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
மாறாக, முதலில் வெளியான பட்டியலில் அ.தி.மு.க பெயர் (பாஸ்கர் பெயர்) இடம்பெறாதது தொகுதி மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. எப்போதும் ஒரு சிறிய ஏமாற்றத்திற்கு பிறகு அதில் வரும் மாற்றம் ஆர்பரிப்பை தருவதாக அமையும். பாஸ்கரின் தேர்வும் அப்படி ஒன்றை அளித்துள்ளது என்றுச் சொல்லலாம். இதில் நான் எதையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்பதை ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.
பாஸ்கருக்கு சாதகமாக இருக்கும் இன்னொரு அம்சம் - அவர் உள்ளூர் பிள்ளை என்பது. தேவராஜனின் வேர்களும், உறவுகளும் நாமக்கல்தான் என்றாலும், அவர் பல காலமாக திருச்சியில் நிலைகொண்டுவிட்டவர். அதனால் அசலூர்க்காரர் என்னும் எண்ணப்பூச்சு அவர் மேல் பூசப்படுவதை அவரால் தவிர்க்க முடியாது.
ஆக, நாமக்கல் தொகுதியை பொறுத்தவரை தற்சமயம் வரை முன்பே சொன்னது போல ‘அட்வாண்டேஜ் அ.தி.மு.க’ என்று சொல்லலாம். எனினும், இலவச அறிவிப்புகளைப் பற்றிய எதிர்பார்ப்புகள் - அலசல்கள், ஏற்கெனவே அளித்த இலவச பொருட்களை மனங்கோணாமல் வாங்கி பரணிலாவது கடாசிக் கொண்ட பாங்கு ஆகியவற்றை பரிசீலிக்கும்போது, நம் மக்கள் கடைசி நேரத்தில் எதற்காக எந்த பொத்தானை அமுக்குவார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கே வெளிச்சம். இன்னொரு முறை பாஸ்கர் தோற்பதை காண சகிக்க மாட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.
ஊர் நிலவரம் பற்றி பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த இட்லிவடையாருக்கு நன்றி. (அரசியல் என்று வந்து விட்டாலே வாய்ப்பளிப்போரை விதந்து இட்லியார், வடையார் என்று வாயாற விளித்து வைப்பது - அது நல்லது!).
http://idlyvadai.blogspot.com/2011/03/blog-post_23.html
0 comments:
Post a Comment