கோ: ஆனந்தையும், ஷங்கரையும் பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்
இன்று காலை எண்ணியிருந்த வேலையில் இடர் ஒன்று ஏற்பட்டு தள்ளிப்போக, அதனால் கிடைத்திட்ட பொன்னான நேரத்தை சிந்தாமல் சிதறாமல் வீணாக்காமல் தமிழர் கலாச்சாரத்தின்படி திரைப்படம் பார்த்து அதைக் கழிக்கலாமே என்று மேலிடத்திலிருந்து யோசனை வந்தது. அந்த மேலிட மேடத்தையும் அழைத்துக்கொண்டு நாமக்கல் எல்.எம்.ஆர் தியேட்டரை 11 மணியளவில் அடைந்தேன்.
டிக்கெட் எடுத்து உள்ளே சென்றால் எங்களையும் சேர்த்து இருபது சொச்சம் பேர் இருந்தார்கள். அதுவும்கூட கோடை விடுமுறை என்பதால்தான் என்று நினைக்கிறேன். [இருபது பேர்தான் என்று பார்க்காமல் ஏ.ஸியை கர்ம சிரத்தையாக போட்டிருந்தார்கள்]. அதிலும் மூன்று நான்கு காதல் ஜோடிகள் என்பதை காதும் காதும் வைத்தாற் போல் கவனித்து வைத்தேன்.
நானெல்லாம் காதலித்த காலங்களில் (பன்மையேதான்) இப்படி தியேட்டர்களில் கூட்டம் இல்லாமல் போகவும் இல்லை; காதலியுடன் வசதியாக தனித்து அமர்ந்து பார்க்க குஷன் ஷோபாக்கள் போடப்படவும் இல்லை. கூட்டத்திற்கு நடுவே இருளில் படம் பார்ப்பது மாதிரியே நடிப்பது எவ்வளவு சிரமம் என்பதை இங்கே சுத்த சுயம்பிரகாசங்களை போல் வேஷம் போட்டு கமெண்ட் போட தயாராயிருப்பவர்களுக்குச் சொல்லத் தேவையில்லை. அது இஷ்டப்பட்டு கஷ்டப்பட்ட காலம். சரி, மேற்கொண்டு நானே என் வாயை பிடுங்கிக்கொள்ளும் முன்னால் விஷயத்துக்கு வருவோம்.
நாங்கள் சென்றமர்ந்த திரைப்படத்தின் திருநாமகரணம் ‘கோ’! சின்ன வயதில் இருந்து சுபாவின் நாவல்களில் நிறைய நேரத்தை பறிகொடுத்தவன் என்கிற முறையில் இந்த படத்தை பார்க்க எந்தவிதமான முன்தயாரிப்புகளும் அவசியப்படவில்லை. அவர்களுடைய எந்த நாவலும் சோடைபோனதில்லை. உடன் சூப்பர் நாவல் காலத்தில் இருந்து பிடித்துப்போன கே.வி.ஆனந்தின் கூட்டணி எனும்போது அதைப் பார்ப்பது தனிவிருப்பமாக இருந்தது. ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்க 80-களின் இறுதிக்கு அழைத்துச் சென்று இன்னொரு நீண்ட கட்டுரைதான் எழுத வேண்டியிருக்கும். சூப்பர் நாவல் படித்து வந்தவர்களுக்கு அந்த ஆவல் புரியும். சூப்பர் நாவலின் உள்ளடக்கத்தின் கர்த்தாக்கள் சுபா என்றால், அட்டைப் படத்தின் ஹீரோ கே.வி.ஆனந்த். அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது.
கனாக் கண்டேன், அயன் இரண்டிலும் ஒரு கமர்சியல் முழுமை இருந்தது என்றால் அது இவர்கள் மூவரின் த்ரில்லர் நாவல் கள முன் அனுபவம்தான் காரணம். ஒரு த்ரில்லர் நாவலை இரண்டரை மணி நேர திரைக்கதை ஆக்கிவிடும் உத்தியை அயனில் வெற்றிகரமாக செய்துகாட்டியிருந்தார்கள். அதனால் கோ படத்தின் output பற்றி எனக்கு பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இருக்கவில்லை. எப்படியும் கதையை வேகமாக நகர்த்திவிடுவார்கள்; வந்ததும் பார்க்க வேண்டும் என்று ஏற்கெனவே நினைத்திருந்தேன். படம் வெற்றி என்னும் செய்தி பார்ப்பதை கொஞ்சம் தள்ளிப்போட்டது. வெற்றிப் படங்கள் என்றால் சில வாரங்களுக்கு டிக்கெட் விலையில் ஒரு நியாயமும் இன்றி அநியாயம் நடக்கும்.
‘கோ’ படத்தில் விறுவிறுப்பான திரைக்கதை ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு முழம் முழமாக காதில் பூ சுற்றுகிறார்கள். ஆனால் அப்படி பூ சுற்றுவதையும் அலங்காரமாக அபாரமான கேமரா வேலைகள், கச்சிதமான அடுத்தடுத்த காட்சி நகர்த்தல்களை கொண்டு முக்காடிட்டு செய்வதால் பெரிதாக கவனத்தை கவராமல் கடந்து சென்று விடுகிறது. மேலே சொன்ன அதே விஷயம்தான் சுபாவிடம் ஒரு நாவலை எழுதி வாங்கி படமாக்கி முடித்துவிட்டார் ஆனந்த்.
இயக்குநர்கள் புதிதாக ஒரு உத்தியை கண்டறிந்திருப்பதாக தோன்றுகிறது. நாயகனை புதிய களத்தில் இறக்கிவிட்டுவிட வேண்டும். அதுவே படத்திற்கு ஒரு freshness கொடுக்கும். மீதியை காமெடி, பாட்டு, சண்டை என்று fill in the blanks செய்துகொள்ளலாம். அதன்படி இதில் ஜீவா பத்திரிக்கை போட்டோகிராபராக வருகிறார். பல சாகசங்கள் செய்து ஒரு புதிய கட்சியையே ஆட்சியில் அமர்த்துகிறார். உடம்பெல்லாம் சிலிர்க்கிறது. இத்தனை கேனைத்தனமாகவா எதிர்கட்சி அரசியல்வாதி இருப்பார் என்று கோட்டா சீனிவாச ராவை பார்க்கும்போது பரிதாபம் மேலிடுகிறது. என்ன செய்ய, கமர்சியல் சினிமா ஆயிற்றே! அவர் புத்திசாலியாக இருந்துவிட்டால் ஹீரோவை எப்படி ஹீரோத்தனம் செய்ய வைப்பது?
இறகுகள் என்று ஒரு இளைஞர் அமைப்பு. சட்டென்று ஒரு பத்திரிக்கையால் தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் எல்லாம் இடம் பிடித்து ஒரே தேர்தலில் ஆட்சியையே பிடித்து விடுகிறது 28 வயதே ஆன அதன் தலைவர் முதல்வர் ஆகிவிடுகிறார். ஜனநாயகத்தில் இப்படி ஒரு ஷார்ட் கட் இருக்கிறது என்பது இதுவரை தன்னார்வலர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. அதன் நான்காவது தூண்களுக்கும் புரியாமல் இருந்துவிட்டது. என்றாலும், படம் ஜெயிக்கிறது என்றால் நம் ரசனை எத்தனை படி கீழே இருக்கிறது என்பது கண்களுக்கே தெரியவில்லை.
பாடல் ஒன்றுகூட கவரவில்லை. ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு டெம்ப்ளேட் இசையறிவு கொண்டவராக இருக்கிறார் என்றால் அது பழைய செய்தி. அந்த டெம்ப்ளேட்டும் out date ஆகிவருகிறது என்பதுதான் ரசிகர்களுக்கு ஏற்பட்டு வரும் சோதனை. முன்பு கேட்கும்படியாவது இருந்தது.
பாடல் இடம்பெறும் சூழ்நிலைகளும் திணிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. ஒரு காட்சியில் உயிர் தோழி இறந்துவிட்ட துக்கத்தை உடனே டூயட் பாடி ஆற்றிக்கொள்கிறார்கள் நாயகனும் நாயகியும். சகிக்கவில்லை.
நல்லவேளையாக அந்த விரல் தம்பி நடிக்கவில்லை என்பது எனக்கு படம் முழுக்க ஆறுதலாக இருந்ததும் இந்த படத்தை நான் சகித்துக்கொள்ள காரணமாக இருக்கலாம். ஜீவா - பாத்திரத்துக்கு பொருந்திப் போகிறார். மெல்ல எல்லா விதமான பாத்திரங்களையும் செய்யக்கூடிய எல்லோருக்கும் ஏற்புடைய கதையின் நாயகனாக உருவாகி வருகிறார்.
கதாநாயகிதான் இந்த சினிமா அனுபவத்தின் பெரிய சோதனை. உங்களுடைய ரசனை இந்த விஷயத்தில் மட்டும் எப்படி சார் இவ்வளவு பிசகாகிப் போனது என்று கே.வி.ஆனந்தை பார்த்து கேட்க வேண்டும் போல் இருக்கிறது. நான் அவர் உள்வட்டத்தில் இல்லாததால் முடியவில்லை. இருந்தவர்கள் கேட்டார்களா தெரியவில்லை. படத்திற்கே ஒரு திருஷ்டி அந்த ராதா மகள். அது ஏன்தான் அந்த புருவத்தை அப்படி வில்லாக்கி வரைந்திருக்கிறார்களோ. ஒரு நளினமும் இல்லை. யார் கண்டது, இவரையும் சிலருக்கு பிடித்துப் போகலாம். அவர்களில் சிலர் நம்மிடையே கூட இருந்து இதைப் படித்து பொருமிக்கொண்டு இருக்கலாம். தமன்னாவுக்கெல்லாம் ரசிகர்கள் இல்லை?!
ஆனந்த், ஷங்கர் போன்ற இயக்குநர்கள் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். அது கதை-வசனத்தை ஒரு திறமையான எழுத்தாளரிடம் விட்டு விட்டு தாங்கள் தங்கள் வேலையை மட்டும் கவனிப்பது என்பது. அதை எல்லா இயக்குநர்களும் பின்பற்ற முன்வர வேண்டும். த்ராபையான கதைகளில் இருந்து தமிழ் சினிமா தப்பிப் பிழைக்க ஒரு வாய்ப்பாக அது இருக்கும். மாறாக, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று ஒரு ஏழெட்டு உருப்படிகளை தன் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதில் என்ன பெரிய படைப்பூக்கம் இருக்கிறது? இந்த விஷயத்தில் மலையாள சினிமாவுலகம் முன்னோடியானது. இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக பேச வேண்டியுள்ளது. இன்று நேரமில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment