பெரியாரிடம் குத்தூசி என்று ஒரு பத்திரிக்கையாளர் இருந்தார். மிக பிரபலமான விமர்சகர். அவரை அடியொற்றி தன் பெயரை சின்னக்குத்தூசி என்று வைத்துக் கொண்டார். இயற்பெயர் தியாகராஜன். (எழுத்தாளர் அசோகமித்திரனின் இயற்பெயரும் அஃதே).
கடைசி 4 மாதங்களாக சின்னக்குத்தூசியை பில்ராத்தில் வைத்து சிகிச்சை செய்துவந்தவர் நக்கீரன் கோபால் தான். கோபால் அவரை தன் தந்தை ஸ்தானத்தில் வைத்து மரியாதை செலுத்தி வந்தார். குடும்பம் ஏதும் இல்லாததால், நேற்று அவர் இறந்த பிறகு அவர் உடல் நக்கீரன் அலுவலகத்தில் கொண்டுபோய் வைக்கப்பட்டிருந்தது. கலைஞர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். கடைசி காலங்களில் கலைஞருடன் ஊடல் கொண்டு முரசொலியில் இருந்து வெளியேறியவர், முரசொலிக்கு மட்டும் தவறாமல் கட்டுரைகள் அனுப்பி வந்தார்.
இவரைப் பற்றி எழுத நிறைய இருக்கிறது. அவற்றில் ஒன்று மட்டும் குறிப்பிட வேண்டும். காஞ்சி காமகேடி சாமியார் ஜெயேந்திரரை 83-ல்(நினைவில் இருந்து எழுதுகிறேன்) ஞாநியுடன் சென்று பேட்டிக் கண்டு, கிடுக்கி பிடி கேள்விகளால் அவர் உண்மை முகத்தை உலகறிய செய்தவர். அது எங்கேயாவது எப்போதாவது கிடைக்கும் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.
சின்னக்குத்தூசியின் மேன்சன் அறை பத்திரிக்கையாளர்களின் பாசறை. அவரை அங்கே சென்று சந்தித்து சந்தேகம் நிவர்த்தி செய்துகொள்ளாத, குறிப்புகள் கேட்காத, உரையாடிக் கொண்டிராத சென்னை பத்திரிக்கையாளர்கள் கிட்டத்தட்ட இருக்கவே முடியாது என்பார்கள்.
திராவிட அரசியலின் குரல்கள் ஒவ்வொன்றாக விடைபெற்று வருகின்றன. அவற்றில் கடைசி குரலாக கலைஞர் இருப்பார். அவரின் மறைவு ஒரு சகாப்தத்தின் மறைவாக இருக்கும். யாரையும் இட்டு நிரப்ப முடியாத இடைவெளியாக அது இருக்கும். இவர்களுக்கு எல்லாம் நாம் செய்யும் மரியாதை, அவர்களின் குரல்கள் ஓங்கி ஒலித்த திராவிடத்தைப் பற்றி தேடி படித்து தெரிந்து கொள்வதுதான்.
1 comments:
Test
Post a Comment