அபிமானத்தை அரசியல்படுத்தாதீர்கள்

Posted: Monday, May 30, 2011 | Posted by no-nononsense | Labels:
ரஜினியின் சுகவீனத்தை முன்வைத்து -->

வெகுசன பரப்பில் பிரபலமாக இருக்கும் மனிதர்கள் மீது பொதுவாக நன்றி, பெருமை, பக்தி, விசுவாசம், அபிமானம் போன்ற பல வித உணர்ச்சிகள் பொது மக்களிடம் ஏற்படுவதுண்டு.

  1. நேதாஜி, பிரபாகரன் போன்றோரின் அர்ப்பணிப்பு மீது நன்றியும், பெருமையும்,
  2. பாபாஜி, சத்யபாபா போன்றவர்கள் மீது பக்தியும்,
  3. எஜமானர்களிடம் விசுவாசமும்,
  4. ரஜினி, டெண்டுல்கர் போன்றோரின் கலை, விளையாட்டுகளின் மீது அபிமானமும்,

    ... அவரவர் ரசனைக்கு ஏற்ப ஏற்படுவது இயல்பு.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகள். இவர்களில் யாருக்கு உடல் நலிவடைந்து போனாலும் அவர்களின் பாதிப்புகள் உள்ள மனிதர்களிடம் அவர்களுக்காக பிரார்த்தனை நடப்பதும் வழக்கமான ஒன்றுதான். அது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றும் கூட.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, ரஜினி ஒரு மிகப் பெரிய ஐகான். பலருக்கும் ஆதர்சமான கலைஞர். அவருடைய அத்யந்த ரசிகர்களையும் தாண்டி எல்லா தளங்களிலும் தனக்கான அபிமானிகளை கொண்டிருப்பவர். தன்னுடைய அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டி ஒரு கலைஞனாக ஒரு பெரிய ஜனத்திரளின் எண்ணங்களுடனும் உணர்ச்சிகளுடனும் ஊடு பாவி இருப்பவர். அதன் காரணமாக இயல்பாகவே அவரின் உடல் நலிவு என்பது அந்தப் பெரிய ஜனத்திரளுக்கு தனிப்பட்ட சோகம் தான். அது நிழலோ, நிழமோ, யார் ஒருவரும் தான் நெருக்கமாக உணரும் மனிதரின் நலனுக்காக பிரார்த்திப்பது இயல்பான விசயம் தான். இதற்கு அரசியல் காரணங்கள் அவசியமில்லை.

நாளை டெண்டுல்கருக்கு இதே போல் ஒரு நோயுற்ற நிலை என்றால், அதற்காக இந்தியாவே பிரார்த்திக்கும். இப்போது ரஜினி மீது வைக்கும் குற்றச்சாட்டுகளையே வேறு வார்த்தைகளில் அப்போது டெண்டுல்கர் மீதும் சுமத்த முடியும். ஆனால் பிரதிபலன் பாராது, முகம் தெரியாது பிராத்தனையில் ஈடுபடும் உள்ளங்களுக்கு அரசியல் காரணங்கள் பொருட்டல்ல. அவர்களை பொறுத்தவரை டெண்டுல்கர் அவர்களவில் தெரிந்த மனிதர். தற்சமயம் உடல் நலமில்லாமல் இருக்கிறார். அவர் நலம் நாடி, அவர்கள் ஒரு நிமிடம் தங்கள் இஷ்ட தெய்வத்திடம் வேண்டிக் கொள்வது தன்னிச்சையானது. தன்னுடைய ஆட்டத்தால் அவர் தங்களை மகிழ்வித்துள்ளார் என்பது மட்டும்தான் அவர்கள் இடையேயான ஒரு மாய உறவு. உறவு நேரடியானது அல்ல என்ற போதிலும், பிரார்த்தனை தூய்மையானது என்பதில் எள்ளளவும் கேள்வி எழ முடியுமா?

டெண்டுல்கர் காசு வாங்கிக் கொண்டு தானே விளையாடினார் எனலாம். நடந்து முடிந்த ஐ.பி.எல்.,லில் நூற்றுக்கணக்கான ஆட்டக்காரர்கள் காசுக்காகத்தான் விளையாடினார்கள். ஆனால் கெயில் மட்டும் அனைவரின் அபிமான ஆட்டக்காரராகவும் ஆனது எப்படி? பார்வையாளர்களின் உணர்ச்சிகளை நர்த்தனமாட வைக்கும் நிகரற்ற பொழுதுபோக்கை அளித்து, லட்சக்கணக்கானோர் மனதில் இடம் பிடித்து விட்டார். அது காசை விட பெரிய விஷயம்.

எப்போதும் கலையும், விளையாட்டும், திறமையும் தங்களுக்கான இடத்தை மக்களின் மனதில் நிர்ணயித்துக் கொண்டு விடுகின்றன. அதைத்தான் அபிமானம் என்கிறோம். இன்னபிற புறக்காரணிகள் தனியானவை. தனித்து விவாதிக்க தக்கவை. ஒற்றை பரிமாண கோணத்தில் ஒரே சாடியினுள் எல்லா கருத்துக்களையும் ஒருசேரப்போட்டு குலுக்கி வடிவம் காண முயலும் வேலை சரியான வெளிப்பாட்டை(output) அளிக்காது என்பதை அறியாமலே, அல்லது அறிந்து கொள்ள விரும்பாமலே செய்யும் வேலை.

ரஜினியின் சினிமா பாணியில் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். அவருடைய அரசியல் முதிர்ச்சியின்மை பற்றி கடுமையான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவை அவரின் உடல் நலனில் இருந்து மிகவும் வேறு தளம் சார்ந்தவை. அவருடைய நலன் நாடி நடக்கும் பிரார்த்தனைகளுடன் அரசியலை கலப்பது துவேசமானது.

நாம் ஒருவரின் சினிமா மற்றும் அரசியலுடன் கருத்து வேறுபாடு கொள்கிறோம் என்பதற்காகவே அந்த மனிதரின் உடல் நலனில் இரக்கம் கொள்ள வேண்டியதில்லை என்றில்லை. அப்படி ஒரு நேயத்துடன் காட்டப்படும் அக்கறையை அவதூறு செய்யவும் வேண்டியதில்லை.

டயானா விபத்தில் இறந்த போது உலகெங்கும் மக்கள் சோகம் பூண்டார்கள். அஞ்சலி செலுத்தினார்கள். அவரின் அழகோ, ஆளுமையோ ஏதோ ஒன்று டயானாவை தேசம் கடந்து மக்கள் பரப்பில் பிணைத்திருந்ததை அச்சமயம் உணர முடிந்தது. அது தனிப்பட்ட அஞ்சலி. அவரின் adultery மீதான விமர்சனம் என்பது வேறு.


இந்த அபிமானம் X விமர்சனம் தெளிவு எளிய மனிதர்களிடையே கூட பரந்து பட்ட அளவில் பகுத்துணரப்படும் நிலையில், இந்த இயக்கக்காரர்களால் மட்டும் ஏன் பிரித்து புரிந்து கொள்ள முடியவில்லை? இதைப் புரிந்து கொள்ள இயலாதவர்களால் எப்படி பெரிய சிந்தாந்த சிடுக்குகளை சிக்கல் அவிழ்க்க முடியும்? அவிழ்க்க முடியும் என்று எப்படி அவர்களின் பின்தொடர்பாளர்கள் நம்புகின்றனர்?

அபிமானம் வேறு. அரசியல் சார்பு நிலைகள் வேறு. இரண்டு தரப்பினரும் அவரவரின் அறிதல் நிலைகளையும், அவரவருக்கு கிடைக்கும் தகவல்களையும், அவற்றை தன் மனச்சாய்வுடன் ஒப்பிட்டு ஏற்படுத்திக் கொள்ளும் கருத்தைப் பொறுத்தே நிலைப்பாடுகளை எடுக்கிறோமே தவிர, இரு தரப்பிலும் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை.


ரஜினி யாருக்கும் தீங்கு செய்ததாகவோ, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாகவோ புகார் இல்லை. பிறகு ஏன் ரஜினியின் தனிப்பட்ட உடல் நலிவில் அவரின் அபிமானிகளால் காட்டப்படும் அக்கறையில், பிரார்த்தனையில் வன்முறையை நிகழ்த்த வேண்டும்? இந்த முதிர்ச்சியற்ற கருத்து-முன்விரோத-வன்மம், அதை செய்யும் இயக்கத்தை தான் மக்களிடம் இருந்து மேலும் மேலும் அந்நியப்படுத்தி வைக்கும். மக்களின் உணர்வு நிலையிலான செயல்பாடுகளை புரிந்து கொண்டு, அதற்கு எதிராக கருத்து திணிப்பு வேலை எதையும் செய்யாத இயக்கங்கள் மட்டுமே அமைப்பு ரீதியாக பலப்பட முடியும்.


கவுண்டமணி - தமிழ்நாட்டின் மிக பிடித்தமான நகைச்சுவை நடிகர். ரஜினி போலவே தமிழ் சினிமா மூலம் கணிசமாக செல்வம் சேர்த்தவர். அத்தனையும் தமிழ் ரசிகன் மறைமுகமாக அள்ளித்தந்தப் பணம். ஆனால், ஒருநாளும் அவர் ஈழம் உள்ளிட்ட எந்த ஒரு அரசியல் போராட்டங்களிலும் கருத்து ரீதியாககூட தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. வெளிப்படையாக தன்னுடைய ஆதரவை நல்கியதில்லை. நாளை ஒருவேளை அவர் நோய்வாய்ப் பட்டாலோ, இறந்துபட்டாலோ எழும் வருத்தங்களையும், அஞ்சலிகளையும் கண்டு இவர் என்ன சேகுவாராவா, பிடல் காஸ்ட்ரோவா? தேச விடுதலைக்கு பாடுபட்டாரா? அவரைப் பற்றி கவலைப்பட அவர் குடும்பம் இருக்கிறது. போங்கய்யா, உங்கள் உறவினர்களை பற்றி கவலைப்படுங்க - என்பார்களா இயக்கக்காரர்கள்?


செய்ய மாட்டார்கள். இங்கேயுள்ள தமிழ் தேசிய இயக்கங்களுக்கு பல காலமாக ரஜினிதான் ஊருக்கு இளைத்து கிடக்கும் பிள்ளையார் கோவில் ஆண்டி. அவர் எதுவும் சொன்னாலும் குற்றம். சொல்லவில்லையென்றாலும் துரோகி பட்டம். அவர் ஏன் சேகுவாரா ஆக வேண்டும் என்னும் கேள்விக்கு தகுந்த பதில் உண்மையில் இல்லை என்பதுதான் உண்மை. ஒரு கலைஞராக தனக்குப் பின்னால் பெரிய கூட்டம் வைத்திருக்கிறார் என்பதற்காக அவர் எல்லா அரசியல் நிகழ்வுகளின் மீதும் அக்கறை கொண்டு கருத்துச் சொல்ல வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? தார்மீக ஆதரவை தகுந்த அளவில் அவர் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார் என்ற போதிலும், அவர் ஏன் சேகுவாரா ஆகவில்லை என்பதுதான் இயக்கக்காரர்களின் ஒரே பிரச்னை போலும்.


ரஜினி, பாலகுமாரன் இடையே நடந்த உரையாடல் இங்கே நேற்று படிக்கக் கிடைத்தது. அதில் அனுபவப்பூர்வமான ஒரு கருத்தை ரஜினி பகிர்ந்து கொண்டிருந்தார்: ஓரளவு பிரபலமாகி விட்டதும், “உனக்கு அது தெரியாதா? இதை இன்னும் கற்றுக் கொள்ளவில்லையா, இதுவும் தெரியாதா?! ... பிறகு எப்படி நீ இந்தளவு வெற்றி பெற்றாய்? குருட்டு அதிர்ஷ்டமா” என்று தன்னை சூழ்ந்து கொண்டு பலரும் விமர்சித்ததாகவும், அதையெல்லாம் கடந்து வர பெரிய பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டியிருந்ததாகவும் கூறியிருந்தார்.


இப்போது படுக்கையில் கிடக்கும் நிலையில் வீசப்படும் இக்கட்டுரை போன்ற தூசனைகளின் போதும் காய்ந்த மரமாகவே கல்லடிப் படுகிறார். கல்லடிக்கு தகுதியானவராக தன்னை முன்னிறுத்தி வந்த பொழுதுகளை அவர் கடந்துவிட்ட நிலையிலும், அவர் மீது கல்லை எறியும் கைகளின் இலக்கு மட்டும் இன்னும் மாறவேயில்லை. மிக எளிதான இலக்கு என்பதோடு, குறுக்குவழியில் கிடைக்கும் விளம்பரமும் பெரிய ரீச் கொண்டது அல்லவா?


மக்களின் அபிமானம் என்பது அவர்களுக்கு ஈடுபாடுள்ள எந்த துறையில் வேண்டுமானாலும் அதில் அவர்களை கவர்ந்த நபர்களிடம் ஏற்படலாம். அவர்களின் நலனில் அக்கறை கொள்ளவும், நோய் காலங்களில் கவலைப்படவும், பிரார்த்தனை செய்யவும் செய்யலாம். அம்மாதிரியான தனிப்பட்ட உடல் நலன் சார்ந்த மனிதாபிமான அக்கறைகளின் மீதெல்லாம் கருத்து பாசிச போக்கை கையாண்டு வந்தால், கையாள்பவர்கள் எந்த சித்தாந்தத்தை முன்வைத்து தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முயல்கிறார்களோ, அது தவறான நபர்களால் முன்னெடுக்கப்படுகிறது என்றே அர்த்தமாகிறது.

ஆக, இது மிகவும் வன்மமான கட்டுரை என்பது என் கருத்து. விமர்சனமும் வன்மமும் வேறுபடும் புள்ளி - அந்த விமர்சனம் எந்த சூழலில் முன்வைக்கப்படுகிறது என்பதில் இருக்கிறது. தற்சமயம் ரஜினியின் சர்ச்சையை கிளப்பும் திரைப்படம் எதுவும் ரிலீஸாகி இருக்கவில்லை. அவர் தன்னை அரசியலில் இருந்து துண்டித்துக் கொண்டும் உள்ளார். அவர் உடலும் நலிவுற்றுக் கிடக்கிறது. இந்நிலையில் அவரின் நலன் வேண்டி நடக்கும் பிரார்த்தனைகளின் மீது கருத்து வன்முறை நிகழ்த்துவது விசமமானது.

இப்போதும் சொல்கிறேன். ரஜினி மீது எனக்கும் நிறைய விமர்சனம் உள்ளது. ஆனால் அது சரியான காரணங்களின் அடிப்படையில் ஆரோக்கியமான தளத்தில் செய்யப்படுவதாக இருக்க வேண்டும். பழைய காழ்ப்புணர்ச்சிகளுக்கு முழாம் பூசி பொருத்தமற்ற தருணத்தில் அலங்காரமான கேள்விகளால் உமிழப்படும் வன்மமாக இருக்கக்கூடாது. எளிய மனிதர்களின் அபிமானத்தின் மீது மூர்க்கமான ஒரு தாக்குதலை நடத்தியுள்ளது இக்கட்டுரை. ஆகவே, முழுமையாக நிராகரிக்கத் தக்கது.


மாற்றுக் கருத்துக்கள் தகுந்த எடுகோள்களுடன் முன்வைக்கப்பட்டால் மட்டும் மீண்டும் எதிர்வினையாற்ற உள்ளேன்.

0 comments:

Post a Comment