(தொடர்கிறேன் ...)
இளையராஜாவை பிடிக்காதவர்களும் தமிழகத்தில் உண்டா? இசையை பொறுத்தவரை அவருடைய அருமை பெருமைகளை விளக்கித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் நிலையில் செவியுள்ளோர் இல்லை. அவரை கேட்டு லயிக்காத ஆளுமில்லை; நாளுமில்லை. அவரும்கூட இதுவரை எந்த விதமான தமிழகப் பிரச்னையிலும் கருத்துச் சொன்னதில்லை. ஒகேனக்கல் போராட்டத்தில் தமிழ் திரை உலகமே குவிந்து தன் உணர்வுகளை வெளிப்படுத்திய மேடையில் கூட அவர் பாதம் பதியவில்லை. தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. ஈழத் தமிழர்கள் பிரச்னையிலும் கூட ஒரு கருத்தை கூட உதிர்த்ததில்லை. ஒட்டு மொத்தமாக எந்த வித மக்கள் பிரச்னையிலும் ஆர்வம் காட்டாமல் இசையமைப்பதில் மட்டும் ஈடுபட்டு வருகிறார்.
நாளை இளையராஜா சாகக் கிடக்கிறார் என்றால், நிச்சயமாக அவருக்காக பிரார்த்தித்துக் கொள்ளும் உள்ளங்கள் இன்று ரஜினிக்கு இருக்கும் அளவுக்கு இருக்கும். உடனே, “ஆ! அவர் என்ன தமிழர்களுக்கு செய்து கிழித்து விட்டார்? எங்களோடு ஒரு முறையாவது ஈழ/தமிழக தமிழர்களுக்காக தெருவில் இறங்கி போராடியிருப்பாரா? நிவாரண நிதி கொடுத்திருப்பாரா? அவருக்காக போய் வேண்டிக் கொள்கிறீர்களே, உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா..” என்று ஏதாவது இயக்கத்தார் கேட்டால் எவ்வளவு விசித்திரமாக இருக்கும்?
இளையராஜாவை கொண்டாடவும், அவரின் நலன் விரும்பவும் அரசியல் காரணம் எதற்கு? கேட்கும் பொழுதெல்லாம் நரம்பெங்கும் வியாபித்து, உணர்வுகளை மீட்டி, நுண்ணுணர்வான இன்பத்தை நாளும் அளித்து மகிழ்விக்கும் ஒரு தன்னிகரற்ற இசைக்கலைஞனாக அவரைக் கொண்டாடினால் போதாதா? அதுவும்கூட பணத்திற்காக இசைக்கப்பட்ட பாடல்கள் தானே? பணத்தை வைத்து கலையை மதிப்பிட முடியாது என்பதை இளையராஜாவை முன்வைத்தும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் பிறகு எதைக்கொண்டும் விளக்க முடியாது.
அதுபோலதுதான் ரஜினி தமிழர்களிடையே சம்பாதித்து வைத்திருக்கும் நேசமும், அபிமானமும். ஒருவகையில் அபிமானம் என்பதும்கூட அநாவசியம்தான். அவருக்காக பிரார்த்திக்க மனிதாபிமானம் ஒன்று மட்டுமே கூட போதும். அதுவும் இல்லையென்றால், இப்படி வார்த்தை ரவுடியிஸம் செய்யாமல் சும்மாவாவது இருக்கலாம்.
‘பகைவர்க்கும் அருள்வாய் நன்னெஞ்சே’ என்றான் பாரதி. ரஜினி யாருக்கும் பகைவரும் இல்லை. சில காலமாக அவர் அவராக இருக்க முயல்வதாக தெரிகிறது. அவரை அப்படியே விட்டு விடுவதுதான் விவேகம். மீண்டும் பொதுதளத்தில் செயல்பட்டால் மீண்டும் விமர்சிக்கலாம். ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பவரிடம் ஏன்?
நேற்று ஏதோ தொலைக்காட்சியில் ‘தர்மத்தின் தலைவன்’ படம் ஓடிக்கொண்டிருந்தது. நான் டிவி பார்ப்பதே அரிது என்பது ஒருபுறம் இருக்க, அதிலும் பகல் நேரத்தில் சினிமா பார்ப்பது என்பதெல்லாம் என் வாழ்வில் நடவாத காரியம். ஆனால் அந்தப் படத்தில் ரஜினியின் பேராசிரியர் கேரக்டர் என்னை கட்டிப்போட்டது. என்னமா பண்ணியிருக்கார் மனுசன் என்று ரசித்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஏற்கெனவே பார்த்ததுதான் என்றாலும் சிறிதும் அலுக்கவில்லை. ‘அட பாவமே, இவர் நடிப்பை நாம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் இதே வேளையில் தானே, இவருக்கு டயாலிஸிஸும் நடந்து கொண்டிருக்கும்’ என்று அப்போது இயல்பாக எனக்குள் ஒரு பச்சாதாபம் ஏற்பட்டது. அப்படித்தானே பலருக்கும்?
-0-
ரஜினியின் எளிமை போன்ற தனிப்பட்ட பண்பு நலன்கள் பற்றியெல்லாம் எனக்கு பெரிதாக கருத்து இல்லை. அது உண்மை என்றால் நல்ல விஷயம். இல்லையென்றாலும் அதில் பெரிதாக புகார் இல்லை. அவர் பணம்; அவர் தேர்வு. நாம் விவாதிக்க வேண்டியதெல்லாம் அவரின் பொதுதளத்திலான செயல்பாடுகள் மட்டும்தான்.
ரஜினி பெங்களூர் சென்று தன் பழைய ஏழை நண்பர்களை இன்றும் சந்திக்கிறார் என்றால், அவரும் அங்கே இருந்து வந்தவர் தானே? அப்புறம் அங்கே சென்றுதான் தன் பழைய நண்பர்களை சந்திக்க முடியும். இதை கமலை முன்வைத்து ஒப்பிட்டு பார்த்தால் நன்கு புரியும்.
கமல் பிறக்கும் போதே நிலச்சுவான்தார் மகன். பழக்க வழக்கங்களும் அதற்கேற்ற அந்தஸ்திலேயேதான் இருந்தன. அதைவிட்டால் நண்பர்கள் எல்லாம் சினிமா சம்மந்தப்பட்டவர்கள் தாம். அதனால் கமல் தன் நண்பர்களுடன் உறவாட வேண்டும் என்றால் சினிமாவுக்கு உள்ளேயோ, அல்லது தன் சரி அந்தஸ்திலேயோ தான் செய்து கொள்ள வேண்டும். பார்த்தால், கமல் கர்வத்துடன் நடந்து கொள்வது போல் தோற்றம் தரும்.
அதுவே ரஜினி, தன் அந்தஸ்திலிருந்து வெகு கீழேயுள்ள பழைய சிநேகிதர்களைத்தான் பால்ய நட்புக்காக நாடிச் சென்றாக வேண்டும். அது அவர் உருவாகி வந்த சூழல். ஒருவேளை இதைத்தான் எளிமை என்கிறார்களோ தெரியவில்லை.
இரண்டுமே அவரவர் சூழ்நிலைகளை பொறுத்து தன்னால் அமைந்த விஷயங்கள். மற்றவையெல்லாம் ஆளுக்கு தகுந்த மாதிரி உலகம் கொடுக்கும் பட்டங்கள்.
கருத்து வேறுபாடு பற்றி பொருட்டில்லை. எல்லோரின் அபிப்ராயங்களும் ஒரே மாதிரி இருந்துவிட முடியாது. ஆனால் பாஸ்கர் எந்த இடத்தில் என் கருத்தில் இருந்து மாறுபடுகிறான் என்பதை அறிந்து கொள்ள ஆவல். நேரம் இருக்கும் போது கண்டிபபாக எழுதவும்.
எப்போதும் கருத்துக்களை எழுத்தில் பதிவு செய்து வைப்பது மிகவும் முக்கியம். யாருக்காவது அது ஒரு சின்ன வெளிச்சத்தை, அல்லது குறைந்தபட்சம் சின்ன தகவலைத் தருவதாக அமையலாம்.
-0-
அதோடு - வழுக்கை மண்டையை காட்டிக்கொண்டு, நரைத்த தலையுடன் மீடியா முன் உலா வரும் தைரியம் எந்த நடிகருக்கு உண்டு? எம்.ஜி.ஆருக்கே இருந்ததில்லை. ரஜினியின் எளிமை உண்மை என்றால் நல்ல விஷயம் என்றுதான் நானும் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர் நண்பர்களை சந்திப்பதை மட்டும் எடுத்துக்காட்டி ‘ஆஹா பாரீர் எளிமை’ என்று சிலர் பேசுவதில்தான் நான் மாறுபடுகிறேன்.
ஒரு உதாரணத்துக்கு pala oorkalil வாழ்ந்தாலும் பள்ளித்தோழர்களை சந்தித்து கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்க விரும்பினால் நாமக்கல் வந்து தரையில் காலை பதித்துதானே தீர வேண்டும்? ;-) ரஜினிக்கும் அப்படித்தான். ரஜினி போன்று தலைக்குப் பின்னால் ஒளிவட்டங்களை சுமந்து திரியும் பிரபலங்களுக்கும், எப்போதும் மீடியாவின் அதிகபட்ச வெளிச்சத்தில் இருந்துவரும் வி.ஐ.பி.க்களுக்கும் அதிலிருந்து விலகி ஓடி, தன்னை பழைய சிவாஜிராவ்வாக மட்டும் எண்ணி பேசி நண்பர்களை சந்திப்பது மட்டும்தான் வடிகாலாக இருக்க முடியும். It's their need. அதை அவர்கள் அவர்களுக்காகச் செய்கிறார்கள் என்பதால்தான் சொல்கிறேன், அதை என்னால் எளிமை கேட்டகரியில் சேர்க்க முடியாது என்று. பட்டியலில் உள்ள மற்ற பண்புகள் உண்மை எனில் எனக்கும் ஏற்புடையவையே.
அபிமானத்தை அரசியல்படுத்தாதீர்கள் (தொடர்ச்சி...)
Posted:
Tuesday, May 31, 2011 |
Posted by
no-nononsense
|
Labels:
சமூகம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment