இரண்டு நாட்களாக க.நா.சு வின் ’பொய்த்தேவு’ கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. க.நா.சுவின் விமர்சன கட்டுரைகளை நிறைய படித்துள்ளேன். கணையாழியில் அவர் போட்டுவந்த டாப் டென் நூற் பட்டியல்களை சேகரித்து வைத்துள்ளேன். ஆனால், அவர் புதினங்கள் எதையும் இதுவரை வாசித்ததில்லை. பொதுவாக என் வாசக தேர்வுகள் அபுனைவாகவே(non-fiction) இருக்கும். அதில் படிக்க குறித்து வைத்துள்ளதையே இன்னும் படித்துமுடிக்க முடியாமல் இருப்பதால், புனைவுகள் பக்கம் நான் செல்வதே இல்லை. என்றாலும், பாலாஜி போன்ற தீவிர புனைவிலக்கிய ஆர்வலர்களுடன் உரையாட நேரும்போது புதின ஜூரம் நம்மையும் இயல்பாக தொற்றிக் கொண்டு விடும். அவனுடைய சிபாரிசின் பேரில் பொய்த்தேவை நூலகத்தில் இருந்து எடுத்து வந்துள்ளேன். இரண்டொரு பக்கங்களை தாண்டுவதற்குள்ளாகவே க.நா.சு வின் எழுத்து நடை வசீகரித்து விட்டது. அதற்காகவே முழுதும் படித்து முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன்.
க.நா.சு போல இன்னொரு விமர்சக ஜாம்பவான் சி.சு.செல்லப்பா. அவரின் ’வாடிவாசல்’, நான் படிக்க குறித்து வைத்துள்ள must read புதினங்களில் ஒன்று.
*
க.நா.சு வின் மருமகன் பாரதிமணி ஓர் அனுபவ களஞ்சியம். டெல்லியில் பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகள் வகித்து ஓய்வு பெற்றுவிட்ட அவர், உயிர்மை இதழில் அவ்வப்போது எழுதிவரும் கட்டுரைகளுக்கு பெரும் வாசகர் கூட்டம் உண்டு. அவைகள் தொகுக்கப்பட்டு ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியுள்ளது. நான் வாங்க குறித்து வைத்துள்ள அந்த புத்தகத்தை உங்களுக்கும் பலமாக சிபாரிசு செய்கிறேன்.
பாரதிமணியை பல படங்களில் முதலமைச்சராக, நீதிபதியாக, அப்பாவாக பார்த்திருக்கலாம். பாரதி திரைப்படத்தில் பாரதியாரின் அப்பாவாக நடித்ததினாலேயே மணி, பாரதிமணி ஆனார்.
*
நேரம் கிடைக்கும்போது இனி இதுபோல் பார்த்த, கேட்ட, படித்த விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன். எல்லாவற்றுக்கும் நேரம் துணை செய்ய வேண்டும்.
மற்ற நண்பர்களும் அவர்களின் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டால் உபயோகமாக இருக்கும். தமிழில்தான் என்று இல்லை. ஆங்கிலத்திலும் எழுதலாம். அது ஆங்கில புத்தகமாகவும் இருக்கலாம்.
“The things I want to know are in books; my best friend is the man who'll get me a book I ain't read.”
- Abraham Lincoln
0 comments:
Post a Comment