கமல் வாழ்க்கை வரலாறு நூல்

Posted: Tuesday, August 31, 2010 | Posted by no-nononsense | Labels: ,

Chetan Bhagat-ன் Five point someone மற்றும் கி.லக்ஷ்மணனின் இந்திய தத்துவஞானம் ஆகிய நூல்கள் ஒரு வாரமாக என் வாசிப்பில் இருந்துவருகின்றன. இன்னொரு பக்கம் அபிதான சிந்தாமணி. ஆனால் அது கலைக்களஞ்சியம் என்பதால் கணக்கில் வராது. இவையனைத்தையும் அப்படியே ஓரம்கட்ட வைத்து விட்டு இரண்டு நாள்களாக என்னை தன்னுள் முச்சூடாக இழுத்துக் கொண்டது பத்திரிக்கையாளர் பா.தீனதயாளன் எழுதிய ‘கமல்’ என்னும் கமல்ஹாசனின் வாழ்க்கை வரலாறு நூல். கிழக்கு பதிப்பக வெளியீடு.

கமல் என்னுடைய அபிமான நடிகர் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒரு ஐம்பது ஆண்டுகளாக நாம் பார்த்து வியந்து பொறாமைப்பட்டு ஆகர்ஷிக்கப்பட்டு வெளியே விமர்சித்தாலும் மனதிற்குள் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒரு பன்முக ஆளுமை கமல்ஹாசன். அவர் பெயரை தாங்கியச் செய்தி ஒற்றை வரியேயாயினும் அதனை படிக்காமல் கடந்து செல்வது என்பது தமிழர்களின் வழக்கத்தில் கிடையாது.

அப்படிப்பட்டவரின் வாழ்க்கையை நுணுகி பார்த்து எழுதப்பட்ட நூல் ஒன்று கையில் கிடைக்கும்போது, அதனில் கோர்க்கப்பட்ட சம்பவங்களை மனது உடனுக்குடன் சம்மந்தப்பட்ட படங்களுடன் இணைத்து ஒரு மனச்சித்திரத்தை உருவாக்கியபடி இருக்கும்போது, அந்த அனுபவத்தை விட்டு வெளியே வருவது சினிமா ஆர்வலர்கள் யாருக்கும் எளிதன்று. அது ஒரு joyful experience!

இத்தனை வருடம் சினிமாவில் இருந்து கமல் என்ன சம்பாதித்தார் என்றால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மட்டுமே என்பதைத் தவிர, வேறு ஒன்றுமில்லை என்பதை ஒவ்வொரு சினிமா முயற்சியின் பின்னணியும் நம்மை உணர வைக்கிறது. அவர் ஈட்டிய பணமெல்லாம் சினிமாவைப்பற்றி மேலும் மேலும் படிக்க தெரிந்துகொள்ள மட்டுமே செலவளித்திருக்கிறார். எல்லா முதலீடும் சினிமாவில் மட்டுமே. முடிவாக இதுவரை கண்டதெல்லாம் நஷ்ட கணக்குதான். ஆனாலும் சிந்தனையில் எப்போதும் சூழ் கொண்டிருப்பது சினிமா மற்றும் சினிமா மட்டுமே.

நம் காலத்தின் நிஜ கலைஞன் கமல்! அதனை நாம் அவர் சினிமாவில் எப்படி போராடி தனக்கான இடத்தை அடைந்தார் என்பதை தெரிந்துகொள்ளும்போது மட்டுமே உணர்ந்துகொள்ள இயலும்.

(அவர் மீதான சினிமா விமர்சனங்கள் தனிப்பட்டவை. இந்நூல் கமல் என்னும் தனி மனிதனின் வாழ்க்கையைப்பற்றிய தரிசனம் மட்டுமே)

இதன் வாசிப்பனுபவத்தை இன்னும் விரிவாக பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். நேரம் அனுமதிக்கும்போது நடக்கலாம். அதற்குள் வேறு எண்ண இழை எழுத்தில் குறிக்கிடாமல் இருக்கவேண்டும்.

**

சில கருத்துகளின் மீதான பதில்:


என்னுடைய விமர்சனங்களெல்லாம் கமல் சினிமாக்களின் மீதுதான். கமல் மீது தனிப்பட்ட விமர்சனங்கள் எதுவும் கிடையாது. உண்மையில் பல முற்போக்கான கருத்துக்களில் கமல் எனக்கு ஒரு ஆதர்ஷம். முக்கியமாக இருவரும் பெரியார் கொள்கைகளில் அதிதீவிர ஈடுபாடுடையவர்கள். சமூக மதிப்பீடுகளுக்கான இருவரின் முக்கியத்துவமும் ஷூ காலுக்கு கீழேதான். இப்படி அச்சொட்டாக கமலை அவதானித்து வருவதால் அவரை விமர்சிப்பதிலும் எனக்கான உரிமைகள் தனிப்பட்டே இருக்கும். அதேசமயம் ஏதோ விஜயை வாய் போன போக்கில் காமெடி செய்வதுபோல யாராவது கமலிடமும் வேலையை காட்டினால் அங்கே நான் ரௌத்திரம் பழகுவதும் தவிர்க்க இயலாதது :-) 

இதை நான் முன்பே ஒருமுறை சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். 

*

பள்ளிநாள்களில் நான் பிரபு ரசிகனும் கூட. அரங்கேற்ற வேளை, மை டியர் மார்த்தாண்டன், ராஜா கைய வச்சா, சின்ன மாப்பிள்ளை போன்ற படங்கள் வந்த காலகட்டங்களில் பிரபு என் விருப்ப நடிகர். (இங்கே சின்ன தம்பியை நான் லிஸ்டில் சேர்க்கவில்லை என்பதை கவனிக்க). குறிப்பாக எனக்கு காமெடி கலந்த பிரபு படங்கள் பிடிக்கும். பிற்காலங்களில் அவர் தன் உருவத்துக்கு ஏற்ற வேடங்களை தேர்ந்தெடுத்து நடிக்காமல் ஆக்சன் வலைக்குள் அகப்பட்டுக் கொண்டார். ரசிகர்களையும் மார்க்கெட்டையும் இழந்தார். 

எனக்கு இன்னும் எம்.ஜி.ஆர், சிவாஜி, கலைவாணர் படங்களும்கூட மிகவும் பிடிக்கும். அது என்ன, ரசிகன் என்றால் யாராவது ஒருவருக்குத்தான் இருக்கவேண்டுமா என்ன?

0 comments:

Post a Comment