இரு நாட்கள் முன்பு பழைய புத்தகக் கடை ஒன்றில் குல்தீப் நய்யார் எழுதிய ‘The Judgment" இன் தமிழ் பதிப்பு கிடைத்தது. அதை கையில் எடுத்தது முதல் கீழே வைக்கவிடாமல், அதன் வேகமும் விறுவிறுப்பும் என்னை உள்ளிழுத்துக் கொண்டது.
எமர்ஜென்ஸி பற்றி இதற்கு முன் திராவிட தலைவர்களின் உரைகளில் சிறு குறிப்புகளாக அறிய கிடைத்த தகவல்களைத் தவிர, பெரிதாக ஒன்றும் இதுவரை எனக்கு படிக்க கிடைக்கவில்லை. அதுவும்கூட மிசா சட்டத்தில் உள்ளே இருந்த தங்களின் தீரத்தை பறைசாற்றிக்கொள்ளும் விதமான உரைகளுக்கிடையே, ஒரு ஊறுகாய் அளவிற்குத்தான் எமர்ஜென்ஸி பற்றிய தகவல்களை பதிவு செய்திருக்கிறார்கள்.
துக்ளக்கை தொடர்ந்து வாசிப்பதால் சோ சில சமயம் எமர்ஜென்ஸி நேரத்தில் தான் எப்படியெல்லாம் தணிக்கை அதிகாரியை மண்டை காய விட்டேன் என்பதை அவருக்கேயுரிய அங்கதத்துடன் எழுதியிருந்ததை படித்திருக்கிறேன். அவருடைய அங்கதமே விஷயத்தின் தீவிரத்தை உறைக்கச் செய்யாமல் மேலெழுந்தவாரியாக அமைந்து விட்டது. அதனால் எனக்கு எமர்ஜென்ஸி பற்றி மனதில் இருந்த சித்திரம் ஒரு 144 அளவிலேயே இருந்தது. அக்குறையை இப்புத்தகம் தீர்த்து வைத்துள்ளது. நய்யார் அக்காலகட்டத்தின் நிகழ்வுகளை ஒரு குறுக்கு வெட்டு தோற்றத்துடன் பதிவு செய்துள்ளார்.
என்ன மாதிரி ஆள், இந்த சஞ்சய் காந்தி..! இவ்வளவு வானளவு அதிகாரத்தை ஆகக்கூடிய அனைத்து அராஜகங்களையும் நிகழ்த்தி ஒரு தனி நபரால் கைக்கொள்ள முடிகிறது என்றால், அதையெல்லாம் மௌனமாக அனுமதித்த, விதந்தோதிய அவருடைய அம்மையாரின் பதவி பெருவிருப்பத்தை [வெறி என்று இந்திராவைப் பார்த்துச் சொல்ல ஏனோ மனம் வரவில்லை. காரணம், சராசரி இந்தியர்களுக்கேயுரிய நேரு குடும்ப விசுவாச ரத்தமாக இருக்கலாம் :-) ] என்ன என்று சொல்ல? இந்திரா காந்தி பற்றி என் மனதில் இத்தனை நாளும் ஏடுகள் கட்டி வைத்திருந்த ஒரு உறுதியான பிம்பம், இன்று முற்றிலும் நிறம் மாறிவிட்டது! இன்று இருக்கும் பதவி வெறி பிடித்த நாலாந்தர அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அன்றே அவர் நடந்து கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது.
நினைத்த வடிவங்களுக்கு அரசியல் சட்டங்களை மாற்றுவதும், அதிகாரத்தின் அசுர பலத்தை சந்தேகப்படும் அனைத்து மனிதர்களின் மீதும் ஏவி விடுவதுமாக ஒரு சர்வாதிகாரியாக வாழ்ந்திருக்கிறார். இல்லை.. இல்லை.. சர்வாதிகாரியின் அம்மாவாக வேடிக்கைப் பார்த்திருக்கிறார்! இப்படி இரும்புக்கரம் கொண்டு ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்ததினாலேதான் தானோ, என்னவோ, இவரை இந்தியாவின் இரும்பு பெண்மணி என்கிறார்கள்!
சஞ்சய் காந்தியின் அடிபொடிகளாக நய்யார் சுட்டிக்காட்டும் பன்சிலால், சுக்லா வகையறாக்களைப்பற்றி படிக்கும்போது இன்றிருக்கும் ஜனநாயக கேலிக்கூத்து அரசியலுக்கும் அன்றைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது புரிகிறது. அதிலும் பன்சிலால் மாநிலத்திலும் மத்தியிலும் வெகுசாமார்த்திய அரசியல் நடத்தி வந்திருக்கிறார்.
அப்புறம் சஞ்சய் காந்தியின் அந்த குடும்ப நலத் திட்டம் எவ்விதம் அமல்படுத்தப்பட்டது; அதற்கு ஆள் பிடிக்க ஒவ்வொரு அரசு அதிகாரிக்கும் எது மாதிரியெல்லாம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது; மற்றும் துர்க்மன் கேட் பகுதியில் குடிசைகளை அகற்றும் பணியில் 150 பேர் கொல்லப்பட்டது ஆகியவற்றையெல்லாம் படிக்கும்போது சஞ்சய் காந்தி இன்னுமொரு முகம்மது பின் துக்ளக் என்றுதான் எண்ண தோன்றுகிறது. நல்லவேளையாக அவர் ரொம்பநாள் அரசியலில் நீடிக்கவில்லை!
நய்யார் குறிப்பாக லாரன்ஸ் பெர்ணான்டஸ் மற்றும் சினேகிதா ரெட்டி ஆகிய இருவரின் சிறை டைரியின் சில பகுதிகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். தலைமறைவு வாழ்க்கையில் இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸைப்பற்றிய தகவல்களைக் கேட்டு அவரின் சகோதரரை எப்படியெல்லாம் துன்பப்படுத்தினார்கள் என்பதும், அதே ஜார்ஜ் பெர்ணாண்டஸின் நட்பு வட்டத்தில் இருந்தார் என்பதற்காக சினேகிதா ரெட்டியை படுத்திய பாடுகளும் ஒரு சோற்று பதமாகவே இருக்கமுடியும். இதுமாதிரி தேசம் முழுவதும் எத்தனை எத்தனை கைதுகள்; அவற்றின் பின்னால் மறைந்திருக்கும் எத்தனை எத்தனை கதைகள் என்பதெல்லாம் என்றும் வெளிவரப் போவதில்லை.
ஆனால் எல்லா அரசியல்வாதிகளின் நிழலாகவும் இப்படி யாராவது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இருந்து வருகிறார்கள் என்பதுதான் நிதர்சனம். காரணம் இந்திராவுக்கு ஒரு சஞ்சய் காந்தி என்றால், எதிர்தரப்பில் மாற்றாக முன்நின்ற மொரார்ஜிக்கு ஒரு காந்தி பாய் தேசாய்! இருவருக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதை நாம் அவர்கள்
காங்கிரஸுக்கு எதிரான கட்சிகள், இப்படி பல துன்பங்களை அனுபவித்து, எமர்ஜென்ஸியை வெற்றிகரமாக எதிர்கொண்டு 1977-ல் தாங்கள் பெற்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளாமல், மீண்டும் ஆட்சியை மக்கள் இந்திராவிடமேஅளிக்கும்படி ஒற்றுமையில்லாமல் நடந்து கொண்டது, இன்று மட்டுமல்ல அன்றும் கூட எதிர்தரப்பு அரசியல் என்பது வெறும் சந்தர்ப்பவாத அரசியலாகத்தான் இருந்திருக்கிறது என்பதையே உணர்த்துகிறது. மாற்று அரசியலை முன்வைத்த தலைவர்கள் ஜேபியுடன் மறைந்து விட்டார்கள். அல்லது காங்கிரஸ் அப்படி யாரையும் வளர விடவில்லை. பின்னால் வந்த பிஜேபி முன்வைப்பது மத ரீதியான பயமுறுத்தல். அதை மாற்று அரசியலில் சேர்த்து விவாதிக்க முடியாது என்றும் நம்புகிறேன். அதனால்தான் அதனால் எல்லா திசைகளிலும் காலூன்ற முடியவில்லை.
நய்யார் ஓரிடத்தில் இப்படி எழுதுகிறார்.
மத்திய ராஜ்ய அமைச்சர் ஷா நவாஸ் கான் முஸாபர் நகர் குறித்து ஓர் அறிக்கையைப் பிரதமருக்கு அனுப்பினார். அதில் போலீஸார் வேண்டுமென்றே எப்படி கொடுமையாக நடந்து கொண்டார்கள் என்பது பற்றிய விவரங்கள் இருந்தன. அந்த அறிக்கை மிகைப் படுத்தப் பட்டிருப்பதாகக் கூறி விட்டார் திருமதி காந்தி.அந்த அறிக்கையின் பிரதி பக்ருதீன் அலி அகமதிடம் தரப்பட்டது. அதைப் பார்த்த போது அவர் அதிர்ச்சி அடைந்தார். அதுப் பற்றி பிரதமருக்கு ஆட்சேபனை தெரிவித்ததோடு, தம்முடைய டயரியிலும் அவர் எழுதி வைத்தார்.
ஆனால் நய்யார், அது என்ன சம்பவம் என்று விளக்கவில்லை. எமர்ஜென்ஸி கொடுமைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்த பக்ருதீன் அலி அகமதுவையே கோபப்படுத்தி விட்ட அந்த முஸாபர் நகர் சம்பம் என்ன என்பது குறித்து அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
மொத்தத்தில் இந்த புத்தகம் சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றின் ஒரு முக்கியமான காலகட்டத்தை அப்படியே நம் கண்முன் நிறுத்துகிறது. விளைவாக சிற்சில மனச்சித்திரங்கள் முற்றிலும் கலையவும், மாற்றி அமையவும் செய்கின்றன.
0 comments:
Post a Comment