அரசியல் சீர்கேடுகள் - தொடரும் உரையாடல்

Posted: Wednesday, July 7, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
நண்பர்: காசு கொடுத்து விட்டு தோற்று விட்டால் அடுத்த பார்ட்டி நிறைய கொடுத்திருக்கான்னு  அர்த்தம். காசு வாங்கிய மக்களை மிரட்டுதல் நடந்து கிட்டு தான் இருக்கு.  இவங்க aim  பண்றது மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற மக்களை ...


நிச்சயமாக அதுவும் நடக்கத்தான் போகிறது. இப்போதே கவுன்சிலர் எலக்சன் முடிவுகளின் போது அதுபோன்ற தாக்குதல்கள் நடக்கின்றன. ஓட்டு, வியாபாரம் ஆகும்போது பணம் கொடுத்தவன் சண்டைக்கு வராமலா போவான்? 

பொதுப் பணத்த எவ்வளவோ கொள்ளையடிக்கிறானுங்க, அதுல நமக்கும்தான் கொஞ்சம் செலவு பண்ணட்டுமே - என்று ஓட்டுக்கு பணம் வாங்குவதைப்பற்றி பொதுவில் மக்கள் ஒரு சமாதானம் சொல்கின்றனர். வாக்களிப்பதுதான் ஒரு ஜனநாயக ஆட்சிமுறையின் பிரம்மாஸ்திரம்; கடைசி அஸ்திரமும்கூட, அதைத்தான் விலைபேசிக் கொண்டிருக்கின்றோம் என்னும் பிரக்ஞை சிறிதும் இன்றி. வருத்தமாக இருக்கிறது. 

திங்கட்கிழமை அன்று பெட்ரோல் விலையேற்றத்தைக் கண்டித்து பாரத் பந்த் நடைபெற்றது. அது தங்களின் நலனுக்காகத்தான் நடத்தப்படுகிறது என்னும் உணர்வின்றி அதை ஒரு விடுமுறை நாளாக பலரும் கொண்டாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். சிலர் எதிர்கட்சிகளை திட்டிக்கொண்டும் இருந்தனர். அவர்களுக்கு தெரியாது, பெட்ரோலிய பொருட்களின் மீது விதிக்கப்படும் மறைமுகமான வரிவிதிப்புகளின் மூலமாக மட்டும் தாங்கள் எந்தளவு கொள்ளையடிக்கப்படுகிறோம் என்று. இந்திய பெட்ரோலிய சந்தையில் தனியாரை(அம்பானி, எஸ்ஸார், ஷெல்) அனுமதித்த பிறகே பெட்ரோல் விலை அடிக்கடி விலை உயர்வு காண்கிறது என்பதை. 

Petrol & Diesel Prise Rise - NDLF Poster

மக்களுக்கு குறைந்தபட்ச ஜனநாயக சுரணை - அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இருப்பதைப்போல - என்று வருமோ தெரியவில்லை. ஆனால் அதனை நோக்கிய செயல்பாடுகள் அறிவுதளத்தில் மிக அவசியம். அதில் சோர்ந்துவிடக் கூடாது. 
மேலும்...

அரசியல் சீர்கேடுகளுக்கு எதிராக நாம் செய்யக்கூடியது என்ன?

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments

//எத்தனை உதாரணங்கள் கொடுத்தும் எவ்வளவு அப்பட்டமாகவும், மறைமுகமாகவும், நக்கலாகவும், நகைச்சுவையாகவும் திரும்ப திரும்ப எழுதினாலும் அடிப்படை செய்தி என்னவென்றால்  நம்மை ஆளுகிற மற்றும் அதற்கு மாற்றாயிருக்கிற யாருக்கும் மக்கள் நலனில் எந்த அக்கறையும், தொலை நோக்கு பார்வையும் இல்லை என்பதே. இதற்கு நாமெல்லாம் என்ன செய்ய தயாராக இருக்கிறோம் அல்லது தயாராக இருக்கிறோமா என்பதே கேள்வி//

இதற்கு நாமெல்லாம் என்ன செய்ய தயாராக இருக்கிறோம்

உடனடியாக ஒன்றும் செய்யமுடியாது. அதற்காக எதையும் செய்யாமலும் இருந்துவிடக் கூடாது. 

கருணாநிதி-ஜெயலலிதா போன்ற அரசியல் வியாபாரிகளின் ஊழல், ஆடம்பரம், துக்ளக்தனமாக ஆட்சிமுறை பற்றியெல்லாம் மக்களிடம் போதுமான விழிப்புணர்ச்சி இல்லை என்பதே இவை அனைத்திற்கும் காரணம். ஒரு புரட்சிக்கு/மாற்றத்துக்கு வித்திடும் விழிப்புணர்ச்சியை நோக்கி தொடர்ந்து கருத்துக்கள் மொழியப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். விமர்சனங்கள் தைரியமாக முன்வைக்கப்பட வேண்டும். சோர்ந்துவிடக் கூடாது. பேசிப் பேசி என்ன ஆகப்போகிறது என்று சலிப்படையக் கூடாது. 

இது தொடருமானால், இந்த தலைமுறையில் கைகூடாத அரசியல் தூய்மை அடுத்தடுத்த தலைமுறைகளில் எட்டப்படலாம். அதற்கு நம் இன்றைய விமர்சனங்கள் அடித்தளமாக அமைந்து உதவலாம். இதற்கெல்லாம் சரித்திரம் நெடுக பல முன்னுதாரணங்கள் உள்ளன. அதையெல்லாம் எழுதி போரடிக்க விரும்பவில்லை.

சுருக்கமாக: நம்மை போன்ற சமூகத்தின் மேல் அக்கறை கொண்டவர்கள் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து இயங்க வேண்டும். களத்தில் முடியாவிட்டாலும் விமர்சன தளத்திலாவது. 

அல்லது தயாராக இருக்கிறோமா என்பதே கேள்வி

நடப்புகள் மீது விமர்சனப்பூர்வமான கருத்துக்கள் கொண்டவர்கள் நிச்சயமாக தயாராக இருக்கவேண்டும். தெருவில் இறங்க வேண்டாம், கொடி பிடிக்க வேண்டாம், கோஷம் போட வேண்டாம், ரத்தம் சிந்த வேண்டாம். ஆனால் அப்படி ரத்தம் சிந்தி பொதுநன்மைக்காக போராட முன்வருபவர்களுக்கு நம்முடைய ஆதரவை இருந்த இடத்தில் இருந்துகொண்டே நல்கவாவது தயாராக இருக்கவேண்டும். இது ஒரு சிந்திக்க தெரிந்த மனிதராக நம்முடைய கடப்பாடு. 
மேலும்...

அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாடு பற்றி பெரியார்!

Posted: Tuesday, July 6, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாடு பற்றி பெரியார்!



“உலகத் தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம். இது எதற்கு?கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது. காங்கிரசைவிட, இந்த மந்திரிசபை தேவலாம் என்கிறார்கள். இந்த நேரத்தில் ஏன் இந்த கூத்து? கனம் அண்ணாதுரை 1972 இல் பதவிக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிடட்டும்? உலகத் தமிழ்மாநாடு கூடிக் கலைந்த பின் சூத்திரன், சூத்திரனாகத் தானே இருக்கப் போகிறான்? இழிவு ஒழியப் போகிறதா? கண்ணகி சிலையும் கம்பன் சிலையும் எதற்கு? இவர்கள் நமது இனப் பெருமையை ஒழித்தவர்கள் அல்லவா?

- பெரியார் ‘விடுதலை’ 15.12.1967
மேலும்...

அம்பேத்கர் திரைப்படம்

Posted: Monday, July 5, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
ஜூவி கட்டுரையை முன்வைத்து:


அவசியம் படிக்கப்பட வேண்டிய, ஆனால் அதிகம் புறக்கணிக்கப்பட்ட எழுத்துக்கள்/ஆளுமை அம்பேத்கருடயவை. பெரியாரும், அம்பேத்கரும் படிக்காமல் தேசியமும், சமூக நீதியும் பேசவரும் யாரும் கூரை ஏறியே வைகுண்டம் பார்த்து விட்டதாக கூச்சலிடுபவர்கள் என்பது மறுதலிக்க முடியாத உண்மை.

அம்பேத்கர் படம் வெளியிட விடாமல் முடக்கி வைத்துள்ளதன் பின்னுள்ள அரசியல் குறித்து நீண்ட நாட்களாக பொதுவுடமை சிந்தனையாளர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். இப்போதுதான் அதை ஒரு மெயின் ஸ்ட்ரீம் பத்திரிக்கையில் கேட்கிறேன். 


பிற்சேர்க்கை: டிசம்பரில் இப்படம் வெளியாவதாக அறிகிறேன்.
மேலும்...

சாரு நிவேதிதாவின் விகடன் தொடர்

Posted: | Posted by no-nononsense | Labels: 0 comments
சாரு நிவேதிதா மீண்டும் விகடனில் எழுதத் தொடங்கியுள்ளார். இம்முறையாவது பாதியில் கதவை காட்டும்படி எழுதாமல் தப்பிக்கிறாரா என்று பார்க்கலாம். இம்முறை எழுதுவார். காரணம், 10 வருடங்களுக்கு முன்பு கேட்ட சாருவின் கலகக்குரல், கானகத்தின் ஏதோ ஒரு மூலையில் பெரும் குரலெடுத்து ஒலித்து தேய்ந்து மறைந்தே போய் விட்ட கர்ஜனையாக மாறி பலகாலம் ஆகிவிட்டது. இன்று மிஞ்சி இருப்பதெல்லாம் ஆபாசமும், பிழைப்புவாதமும் மட்டுமே. 

ஆனாலும்,

இன்னும் தவிர்க்க முடியாத எழுத்து அவருடையது என்பதில் மாற்றமில்லை. பரிசுத்த வேதாகாம வேதாந்திகளாக வேஷம் கட்டுபவர்கள் அவரை திட்டிக்கொண்டே விடாமல் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
மேலும்...

ஒத்த இசையமைவு பாடல்கள்

Posted: Friday, July 2, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
பாடல்களில் சில ஒரே மாதிரி ஒலிப்பதால் மட்டுமே அவைகளை காப்பியடிக்கப்பட்டவை என்று கூறிவிட முடியாது. தென்னிந்திய சினிமா இசையமைப்பு பெரும்பாலும் கர்நாடக ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை. அதனால் ஒரே ராகத்தை பயன்படுத்தி போடப்பட்ட பாடல்களெல்லாம் ஒரே மாதிரிதான் ஒலிக்கும்.

உதாரணமாக,

  1. ஆச அதிகம் வச்சி மனச
  2. தென்றல் வந்து தீண்டும்போது
  3. கல்யாண மாலை கொண்டாடும்
  4. மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்
இவையெல்லாமே சிந்துபைரவி ராகத்தைக் கொண்டு மெட்டமைக்கப்பட்டவை. ஆரோகணம், அவுரோகணத்திற்கேற்ப சுதிகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாமே தவிர, அடிப்படையில் ஒரே ஓசை நயங்களைக் கொண்டவை. மேலும், சிந்துபைரவியை எடுத்துக்கொண்டு, அதனுடன் வேறு சில ராகங்களை மிக்ஸ் பண்ணியும் போடப்பட்டவையாக இருக்கும். அதற்காக இவையெல்லாம் ஒன்றையொன்று காப்பியடித்து போட்டவை என்று சொல்லமுடியாது. 

மேலும் ஒரு உதாரணம்,

ராகம்: சுத்த தன்யாசி

  1. மாலையில் யாரோ மனதோடு பேச
  2. நான் காணும் உலகங்கள் யார் காணக்கூடும்
  3. பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ஜஜம்ஜம்ஜம்
இப்படி கூறிக்கொண்டே போகலாம்.

இளையராஜாவின் பெரும்பாலான பாடல்கள் இப்படி கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்டவை தாம். அவற்றில் ராஜா புரிந்துள்ள ஜாலங்களைப்பற்றி எழுத ஆரம்பித்தால் எழுதிக்கொண்டே போகலாம். 

ஆனால் சில இளவட்ட, தேங்காமூடி இசையமைபபாளர்கள் மேற்கத்திய பாடல்களை அப்படியே உருவி அதன் சட்டையை மட்டும் மாற்றி இங்கே தன் பெயரில் போட்டுக்கொண்டு விடுகிறார்கள். அதனைத்தான் இசைத் திருட்டு என்பது. 

இதேபோல் இளையராஜாவின் பலப் பாடல்கள் ஹிந்தியில் காப்பியடிக்கப்பட்டன என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு வடக்கத்திய இசைப்பற்றி ஞானம் குறைவு. எனக்கு அதில் ஆர்வமும் இல்லை. காரணம், சாஹித்யம்(lyric) புரியாத எந்த இசையையும் பெரும்பாலும் நான் ரசிப்பதில்லை. சொற்கள் புரியாத ஆலாபனைகளில் உயிரோட்டமில்லை என்பது என் கருத்து.

ஹிந்துஸ்தானி மட்டும் அதில் விதிவிலக்கு. அங்கே மொத்தமே இரண்டு மூன்று வரிகள் தான் சாஹித்யம். மற்றதெல்லாம் சஞ்சாரங்கள் தாம்.

இசையைப்பற்றி நான் கற்றுக்கொண்டிருந்தது இடையில் தடைப்பட்டு விட்டது. எப்படியாவது அதற்கும் ஒரு நேரத்தை கண்டுபிடித்து மீண்டும் தொடர வேண்டும். சில காலமாக பிபி ஏறிக்கொண்டிருப்பதாக உணர்கிறேன். அதை இசை மட்டுமே சமனில் வைத்திருக்க முடியும்.

இன்னொரு விஷயம், நான் இங்கே இசையைப்பற்றி குறிப்பிடுவதெல்லாம், அதனை எப்படி ரசனைப்பூர்வமாக கேட்டு அனுபவிப்பது என்பது பற்றி மட்டுமே. நான் பாடவெல்லாம் முயற்சி செய்வதில்லை என்பதே இத்தமிழ்கூறும் நல்லுலகிற்கு நான் உரைக்கும் நற்செய்தி!
மேலும்...

மணிரத்னம் - முன்முடிவான சில மதிப்பீடுகள்

Posted: Sunday, June 20, 2010 | Posted by no-nononsense | Labels: 0 comments
மணிரத்னம் பற்றிய ஒரு குழு உரையாடலின் மீதான என் கருத்துகள்:

மணிரத்னம் படங்களை ரோஜாவுக்கு முன், ரோஜாவுக்கு பின் என்று பிரித்து பேச வேண்டும். இன்னும் எத்தனை நாளுக்கு நாயகன், மௌனராகம், தளபதி என்று சொல்லிக்கொண்டு இருக்கப் போகிறீர்கள்? அதனால்தான் அன்று கேட்டேன், 2000-க்கு பிறகு வந்த மணிரத்னம் படங்களில் சிறந்த படமாக ஒன்றை கூறமுடியுமா என்று. அலைபாயுதே படம் ஒன்று மட்டும் தேறுகிறது. ஆனால் அதன் வெற்றிக்கு காரணம் 'அன்னகிளி’ ஆர்.செல்வராஜின் கதை வசனமும் ரஹ்மானின் இசையும்தான்.

ரோஜாவுக்கு பிறகு மணிரத்னத்தின் கண்ணெல்லாம் அகில இந்திய சினிமா மார்க்கெட் மீதுதான். ஹிந்திக்கும் தமிழுக்கும் பொருந்துகிறார் போன்ற கலவையான ஒரு பேக்கேஜை எடுத்து கொடுத்து வருகிறார். அது தாமரை இலை தண்ணீர் போன்று ரசிகனின் மனதில் ஒட்டியும் ஒட்டாமல் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.

தமிழ் சினிமா கொண்டாடிய மணிரத்னம், பாம்பே படத்திற்கு பிறகு ஹிந்தி ரத்னம் ஆகி, முழுவதுமாக விலகிச் சென்று விட்டார். இருந்தும் மேட்டுக்குடி அவரை இன்னும் கொண்டாடி வருவது அவர் எடுக்கும் ஒயிட் காலர் படங்களுக்காக. அவர் அழுக்கையோ வியர்வையையோ தரையில் கால் பாவி நடக்கும் மனிதர்களின் வாழ்க்கைமுறையையோ இதுவரை படங்களில் காட்டியதில்லை. அப்படி காட்டப்படும் காட்சிகளும் நுனிப்புல் மேய்ந்ததாக, அதிலும் ஒரு ஒயிட் காலர் நாசூக்குத்தனம் கொண்டதாகவே இருக்கும்.

அவர் தன் படங்களில் சுஜாதா, செல்வராஜ், ரஹ்மான், வைரமுத்து, சந்தோஷ் சிவன், ஸ்ரீராம் என்று தத்தம் துறைகளில் ஜீனியஸாக இருக்கும் நபர்களை பயன்படுத்தி காட்சிகளை சிறப்பித்துக் கொள்கிறார். கதைக்கு இருக்கவே இருக்கிறது இந்திய புராணங்களும் இதிகாசங்களும் அதுவும் போக திருபாய் அம்பானி, எம்ஜிஆர் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகளும்.

மணிரத்னத்தின் படைப்பு திறமை நீர்த்து போய், அவர் ஒரு தேர்ந்த வியாபாரி ஆகிவிட்டார் என்பது எங்களின் குற்றசாட்டு அல்ல; ஆதங்கம்! அதை புரிந்துகொள்ளாமல் இன்னும் 15 (அ) 20 வருடங்களுக்கு முன்பு வந்த அவரின் படங்களின் காட்சிகளை எடுத்து போட்டுக்கொண்டு அவருக்கு கட்சி கட்டிக்கொண்டு இருப்பது எதார்த்தத்தை விலக்கிய ஒரு முன்வரிசை ரசிக மனோபாவத்தையே காட்டுகிறது. அதை விடுத்து, படைப்பை முன்வைத்து அதை விதந்தோதுவதும் விமர்சிப்பதும்தான் அப்படைப்புக்கும் அவரவர் ரசிப்புத் தன்மைக்கும் செய்துகொள்ளும் நியாயமாக இருக்கும்.

இன்று மணிரத்னம் என்ன மாதிரி படைப்புத் திறன்களுடன் பரிமளிக்கிறார் என்பதுதான் பிரச்னை. எனக்கு பாலசந்தரின் 45 வருடங்களுக்கு முன்வந்த நாணல் படம் முதற்கொண்டு 90-கள் வரையான அவரின் பல படங்கள் பிடிக்கும் என்பதற்காக அவர் பிற்காலத்தில் எடுத்த, கல்கி, பார்த்தாலே பரவசம், பொய் போன்ற த்ராபைகளை எல்லாம் சிரமேற்கொண்டு கொண்டாட முடியாது. அந்த காலகட்டங்களில் அவர்கள் யார் என்பதை பொறுத்தே அவரவருக்கான தகுதி நிர்ணயம் ஆகிறது. இதனை கண்களை அகல திறந்து மணிரத்னத்தின் அத்யந்த ரசிகர்களும் எடை போட்டு பார்க்க முயன்றால், அவர்களுக்கும்கூட புரியக்கூடும்.

மணிரத்னம், பக்கம் பக்கமான வசனங்களுடன் நாடகத்தனமாக இருந்த தமிழ் சினிமாவை, குறைவான வசனங்களுடன் கதையை காட்சிப்பூர்வமாக விளக்கச் செய்து மற்றவர்களுக்கு ஒரு முன்னோடியாக தன்னை நிறுவிக்கொண்டவர். அதற்கு இக்காட்சியே நல்ல ஒரு உதாரணம்.

அப்படிப்பட்டவரின் படைப்பாளுமை பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றையும் இதிகாச கதைகளையும் சமகால நிகழ்வுகளையும் மலினப்படுத்தி படம் எடுத்து மார்க்கெட் செய்யும் உத்தியாக எதிர்மறையாக பரிணாமம் கண்டிருப்பதை எப்படி விமர்சிக்காமல் இருக்கமுடியும்? அவர் படங்களில் தொட்டுக்காட்டப்படும் சமூக அவலங்கள் எந்த வகையிலும் அதற்கான தீர்வை நோக்கிய முன் நகரலாக இருந்ததில்லை. காட்சியில் கொஞ்சம் காரத்தைக்கூட்ட பயன்படுத்தப்பட்டவையாகவே இருந்து வந்துள்ளன.

இங்கே பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது போல அங்கொன்றும் இங்கொன்றுமான முத்திரை பதிக்கும் காட்சிகளால்தான் மணிரத்னம் இத்தனை பெயரையும் ரசிகர்களையும் பெற்றார். பெற்றதை தக்கவைத்துக் கொள்ளும்படியான படைப்புகள் தொடர்ந்து அவரிடம் இருந்து வெளியாகவில்லை. ராவணன் விமர்சனங்களை காணும்போது இதுவும் அப்படித்தான் ஆகிவிட்டதாக தோன்றுகிறது.

இவை சுமார் பத்தாண்டு கால மணிரத்னம் படங்களைப்பற்றிய என்னுடைய மதிப்பீடு மட்டுமே. இக்காலகட்ட படங்களில் தனித்தனியாக சில காட்சிகள் சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறதே தவிர, ஒட்டு மொத்தமாக ஒரு படைப்பாளியாக அவர் தோல்வியடைகிறார் என்பதே என் கருத்து.

ராவணன் படம் இன்னும் நான் பார்க்கவில்லை. பார்க்கக்கூடாது என்று எந்த சங்கல்பமும் இல்லை. பார்த்துவிட்டு என் நேர்மையான கருத்துகளை பகிர்ந்துகொள்கிறேன்.
மேலும்...