பங்குச்சந்தையில் பணிபுரிய நேர்வதன் விசித்திரங்களில் ஒன்று, அதன் விடுமுறை தினங்கள். இந்தியாவின் இருபெரும் சந்தைகளும் மும்பையில் அமைந்திருப்பதால், நாடு முழுமைக்கும் மஹாராஷ்டிர விடுமுறை காலண்டரை பின்பற்றியே விடுமுறை அறிவிக்கப்படும். அதனால் சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் வேலைக்கு போவதும், வீட்டில் இருப்பதுமாக நிகழும். அப்படித்தான் இன்று ஸ்ரீராம நவமிக்கு விடப்பட்ட விடுமுறைக்கு வீட்டில் உட்கார்ந்துகொண்டு இதனை தட்டச்சிக் கொண்டிருக்கிறேன்.
ஸ்ரீராம நவமி என்றால் என்ன? பக்தராகப்பட்டவர்கள் இதுவரை குறைந்தது நான்கு பேர் என்னிடம் வினவி விட்டார்கள். எதை ஒன்றையும் பின்பற்றுவதற்கு முன்னால் அதைப்பற்றி குறைந்த பட்சமாகவாவது அறிந்து வைத்திருக்க வேண்டாமா என்று கேட்கத்தான் வாய் வருகிறது. இருந்தாலும் ’எட்டில் சனி இருந்துகொண்டு எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருக்கிறான். எனவே வயிற்றைக் கட்டா விட்டாலும் பரவாயில்லை, நீ வாயைக் கட்டியிருப்பதுதான் உன் வம்சத்துக்கே நல்லது’ என்று இந்த சனிப்பெயர்ச்சிக்கு முருகு ராஜேந்திரன் சன் டிவில் மோதிர விரலை ஆட்டி ஆட்டி சொல்லியிருப்பதால், ’எனக்கும் தெரியாது’ என்று கன்னத்தில் போட்டபடி நகர்ந்துகொண்டு விட்டேன்.
ராம நவமிக்கு முந்தைய தினம் குளக்கரை மண்டபத்தில் வழக்கமாக உபன்யாசம் நடக்கும். சில ஆண்டுகள் முன்பு வரை அதனை தவறாமல் கேட்டு வந்திருக்கிறேன். சேலம், திருச்சி என்று வேலைக்காக அலைய நேரிட்ட பிறகு விட்டுப்போன பல விஷயங்களில் இப்படி இலக்கியம், உபன்யாசம் போன்ற கூட்டங்களை தவறவிடுவதும் ஒன்றாகிவிட்டது. நேற்று வேலைமுடிந்து மாலை ஊர் திரும்பிய பிறகும் உலாவ கொஞ்சம் நேரம் மிச்சம் இருந்ததால் குளக்கரை உபன்யாசத்தை சென்று எட்டிப் பார்த்தேன். மண்டபத்தை நெருங்க நெருங்க சுந்தரகாண்டத்தில் இருந்து சுலோகங்கள் காதில் விழுந்த வண்ணம் இருந்தன. உபன்யாசர் மூச்சுப் பயிற்சியில் வல்லவராக இருக்கவேண்டும். இடைவிடாமல் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
உள்ளே சென்று பார்த்த பிறகுதான் தெரிந்தது, இருந்தது அவரையும் சேர்த்து மொத்தமே ஒரு பத்து பேர்தான் என்று. அப்புறம்தான் நினைவுக்கு வந்தது இது சீரியல்களின் ப்ரைம் டைம் ஆச்சே என்று. இந்த நேரம் பார்த்து இதெல்லாம் செய்துகொண்டிருப்பது இவர்கள் தவறா, பக்தர்கள் தவறா என்னும் கேள்விகளுக்குள் எல்லாம் நுழையாமல் கதையை செவி மடுக்க ஆரம்பித்தேன். மிக நன்றாக காட்சிகளை விளக்கிக் கொண்டிருந்தார். இல்லாத கூட்டத்தைப் பார்த்து இவ்வளவு உற்சாகமாக பேசுவது என்பது யாருக்கும் வெகு சிரமமான காரியம். இருந்தாலும், வாங்கிவிட்ட கட்டணத்துக்கு பேசித்தானே ஆகவேண்டும். உள்ளே ஒலியமைப்புகள் சரியாக இல்லாததால் என்னால் ரொம்ப நேரம் இருக்கமுடியவில்லை. அவர் முகம் பார்த்து பேச அவர் முன்னால் யாராவது ஒருவராவது கடைசி வரை இருப்பார்கள் என்னும் நம்பிக்கையுடன் வெளிவந்து, நாமக்கல்லின் அடையாளங்களுள் ஒன்றாகிய அம்பிகாஸுக்கு எதிரே இருக்கும் சுண்டல் கடையில் பூரி மசால் ஒன்று சாப்பிட்டு விட்டு நடையை கட்டினேன்.
00 00
குழந்தை கொஞ்சம் நடக்கவும் பேசவும் ஆரம்பித்த நாள் முதலே வீட்டில் ஆரம்பித்து விட்டார்கள் ”சும்மா அவள் வீட்டில் இருப்பதற்கு கொண்டுபோய் பால்வாடியிலாவது விட்டு வா” என்று. அக்கம் பக்கத்தில் யாரோ கொண்டுபோய் விட்டு விட்டார்கள் என்பதால்தான் இந்த பாடு. நம் வீட்டில் அரைக்கண் இருந்தாலும், அடுத்த வீட்டில் முழுக்கண்ணாக வைத்துக்கொண்டிருப்பதுதான் பெண்களின் சுபாவம். என்றாலும், நான் முற்றிலுமாக அதையெல்லாம் மறுத்து விட்டேன். அவளை நான்கு வயது வரை எங்கேயும் அனுப்புவதாக இல்லை என்று கறாராக சொல்லி விட்டேன். ஆனால் நாளாக நாளாக நம் பிடிவாதத்தால் நம் குழந்தை பின்தங்கிவிடுவாளோ என்று ஒரு பயம் உருவாகிவிட்டது. அதனால் இன்று சென்று தெரிந்த கிண்டர்கார்டனில் ஒரு இடம் பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறேன். (Pre-KG-க்கு அட்மிஷன் தொகை ரூ.5000)
இது ச.பே.புதூரிலேயே இருக்கிறது. குழந்தையை கொண்டுவிட்டு அழைத்து வர மெயின் ரோட்டுக்கு போக வேண்டியதில்லை என்பது இதன் முதல் பெரிய அனுகூலம். நாமக்கல்லில் பெண்கள் தனியாக ரோட்டில் வண்டியில் உலா வருவதை விட ஆபத்தான காரியம் வேறு ஒன்று இருக்கமுடியாது. அதற்கு உகந்த நிலை இங்கே இல்லை. நாம் வண்டியில் செல்லும்போதே சில சமயம் மயிரிழையில் உயிர் தப்பிக்க வேண்டியுள்ளது. சிலர் டிராபிக்குள் செய்யும் சாகசப் பயணங்களையும் வேகங்களையும் காணும்போது நமக்கே முதுகு தண்டு சில்லிடுகிறது. அதனால் நான் என் மனைவியை எல்லை தாண்ட விடுவதில்லை.
இது கொஞ்சம் அதீத முன்னெச்சரிக்கையாக தோன்றலாம். காரணம், டிராபிக் என்றதும் சில நண்பர்கள் பெங்களூர் டிராபிக்கை பேச ஆரம்பித்து விடுகிறார்கள். நாமக்கல் போன்ற சிறு நகரத்தின் சிறிய சாலைகளின் பெரு வண்டிகளின் இடிபாடுகளுக்கிடையே ஊர்ந்து செல்லும் டூ வீலர் டிராபிக்கிற்கும், கார்களில் ஹாரன் அடித்தபடி காத்திருக்கும் பெருநகர டிராபிக்கிற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது. முன்னதில் உயிராபத்து அதிகம். அதனால் முடிந்தவரை முன்னெச்சரிக்கையாக இருப்பதே நல்லது என்பது என் தனிப்பட்ட கருத்து.
அந்த கிண்டர்கார்டனில் இருந்து வெளியே வரும்போதுதான் பார்த்தேன், பரமத்தி ரோட்டில் நான் அடிக்கடி உலாவும் இடத்திலேயே ஒரு பழைய புத்தக்கடை முளைத்திருப்பதை. பழைய புத்தக கடைகளும், பிளாட்பாரக் கடைகளும்தான் பல நல்மாணிக்கங்களை தம்முள் ஒளித்து வைத்திருக்கும் சுரங்கங்கள். இன்று அப்படி அக்கடையில் கிளறியதில் மூன்று புத்தகங்கள் கிடைத்தன.
1. ஜட்ஜ்மென்ட் - குல்தீப் நய்யார்
2. கீதைப் பேருரைகள் - வினோபா
3. குருவே சரணம் - பிரபுநந்த கிரிதர்
இப்புத்தகங்களில் கீதைக்கு வினோபாவின் உரை என்பது எளிதில் கிடைக்காத ஒன்று. கீதா ரகஸியம் என்று திலகர் ஆரம்பித்து வைத்த கீதைப் புகழை பிறகு காந்தியும் வினோபாவும் பெருமளவில் பரப்புரை செய்தனர். எனக்கு இதுவரை காந்தியின் எழுத்துக்கள் மட்டுமே படிக்க கிடைத்தன. திலகர் கிடைக்கவில்லை. இன்று வினோபா கிடைத்து விட்டார்.
இவற்றில் மூன்றாவது புத்தகத்தை இன்றே படித்துமுடித்துவிட்டேன். பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னையில் தொடங்கி அமிர்தானந்தமயி, சாய்பாபா,ரமணர்...வள்ளலார் வரையிலான வாழ்க்கை வரலாறு. விகடன் வெளியீடு. ஏற்கெனவே வேறு வேறு இடங்களில் படித்தவற்றை ஒரு மறுவாசிப்பு செய்த அனுபவம் கிடைத்தது. மற்றவற்றையெல்லாம் ஆற அமரத்தான் படிக்கவேண்டும். விட்டு விட்டு படித்துக்கொண்டிருப்பவையே ஏராளமாக நிலுவையில் உள்ளன.
0 comments:
Post a Comment