நண்பனாக முயற்சிப்பவனே!
என்னுடன் எப்போதும் உன்னை ஒப்பிட்டு
ஏன் வீணில் குழப்பிக்கொள்கிறாய்?
என் மீது உனை சூழந்தப் பிரச்னைகளை
ஏன் பொருத்திப்பார்க்க முயல்கிறாய்?
உன்னால் முடியாததால் என்னாலும் முடியாதென
எப்படி உன்னால் எண்ணமுடிகிறது?
உனக்கு புரியாத சூட்சுமங்கள் எனக்கும் புரியாதென
பொதுவில் எவ்வாறு முடிவுசெய்கிறாய்?
என் எண்ணங்களின் அலைவரிசையை உற்றுப் பார்த்தே
உணர்ந்துகொண்டதாக எண்ணத் துணிந்தது எப்படி?
என்னுள் மேலிடும் ஆர்வங்களையெல்லாம்
எளிதில் உனக்கு புரியவைப்பது எப்படி?
உன் சங்கடங்களையும்; என் சௌகரியங்களையும்;
ஒரே தராசில் நிரப்பியளக்க நீ முனைந்தது எங்ஙனம்?
என் ரசனை எனது; உன் ரசனை உனது; இவ்வாறிருக்க,
உன் அசூயைகளை நான் எவ்விதம் பொறுக்க?
கோணலான கோணமொன்றில் நீ பார்த்துவிட்டு
நான் நடப்பது தலைகீழாய் என்கிறாய்!
எனக்கொவ்வா கருத்துக்களாக நீயுரைத்துவிட்டு
எதையும் ஏற்கவில்லையென நிதம் குமுறுகிறாய்!
நட்புக்கு பொருந்தாத நாசூக்குத்தனங்களெல்லாம்
என்னிடம் எதிர்பார்த்து ஏமாறுகிறாய்!
நண்பனாக முயற்சிப்பவனே!
என்னை நானாக நீ பார்க்கும் ஒருநாளில்
நாமும் நட்பாக கூடும்!
ஏட்டு சுரைக்காயை நீசமைக்காத ஒருநாளில்
நாமும் நட்பாக கூடும்!
உன்தலை ஒளிவட்டம் நீவிலக்கும் ஒருநாளில்
நாமும் நட்பாக கூடும்!
எனக்கான அடையாளங்களை நீதிருத்தாத ஒருநாளில்
நாமும் நட்பாக கூடும்!
ஆம், நாமும் ஒருநாள் நட்பாக கூடும்!
0 comments:
Post a Comment